ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நெருக்கடிநிலைக்காலகட்டத்தில் கேரளத்தில் கொல்லப்பட்ட மாணவர் ராஜனின் தந்தை ஈச்சர வாரியர் எழுதிய ‘ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள்’ என்ற நூலை அறிமுகம் செய்திருக்கிறார்.
கேரள அரசியல் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த நிகழ்ச்சி இது. கொல்லப்பட்ட இளைஞரின் தந்தையின் பிடிவாதமான நீதிதேடல் இப்போது ஒரு சமகாலத் தொன்ம அந்தஸ்தை அடைந்துள்ளது.
ராஜன் ஓர் இடதுசாரித் தீவிரவாதக் குழுவில் இருந்தார். இடதுசாரிகளை ஒடுக்கும்படி அரசு ஆணையிட்டதற்கேற்ப போலீஸார் இளைஞர்களைப் பிடித்து வதைத்துத் தகவல்களைக் கறந்தனர். அதில் ராஜன் மரணமடைந்தார். அவரது தந்தை தன் மகனின் மரணத்துக்கு நீதி கேட்டு அரசையும் நீதிமன்றத்தையும் நாடினார். ஆனால் எந்தப் பயனும் விளையவில்லை.
ஏனென்றால் ராஜன் கொல்லப்பட்டது அரசின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக. எல்லா அரசுகளும் அடக்குமுறை மேல்தான் அமர்ந்திருக்கின்றன. அடக்குமுறையின் அளவும் அதற்கான மீளும் வழிகளும்தான் அரசுக்கு அரசு வேறுபடும். இந்திய அரசியலமைப்பில் உள்ள மீளும் வழிகள் எல்லாம் அடைபட்ட காலகட்டம் நெருக்கடி நிலைக்காலம்.
ராஜன் கொல்லப்பட்ட காலகட்டத்தில் வங்கத்திலும் பீகாரிலுமாகக் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் இளைஞர்களைக் கொன்று அழித்தது இந்திய அரசு. அவர்களில் முக்கால்வாசிப்பேர் நிரபராதிகளாகவே இருப்பார்கள். எவருக்கும் நியாயம் வழங்கப்பட்டதில்லை. அரசைப் பொறுத்தவரை ராஜன் அவர்களில் ஒருவர்.
கொடுமைதான், ஆனால் உலகின் எந்த அரசும் இதைவிட மேலானதல்ல என்பதும் உண்மை. சொந்த மக்களைக் கொன்று குவிக்காத அரசுகளே இல்லை. குறைவாகக் கொல்வது நல்ல அரசு, அவ்வளவுதான். இன்று பயங்கரவாத எதிர்ப்பின் ஒரு பகுதியாக இந்த அடக்குமுறை உலகநாடுகளெங்கும் இன்னும் அதிகரித்துள்ளது.
ராஜன் கொலையை வைத்து ஷாஜி என். கருண் இயக்கிய பிறவி என்ற திரைப்படம் வெளிவந்தது. வணிக ரீதியாகவும் வெற்றிபெற்ற கலைப்படம் அது. ஈச்சர வாரியராக நடித்த பிரேம்ஜி சிறந்த நடிப்புக்கான தேசிய விருது பெற்றார்.
ராஜனைக் கொலைசெய்ய ஆணையிட்டவராகக் கருதப்பட்ட காவல் அதிகாரி ஜெயராம் படிக்கல் பொதுச்சமூகத்தின் புறக்கணிப்புக்கும் கசப்புக்கும் ஆளானார். அவரது வாழ்க்கையை மையமாக்கி ‘ஆவநாழி’ என்ற படம் வெளிவந்தது. டி.தாமோதரன் எழுத ஐ.வி.சசி இயக்கிய படம். ஜெயராம் படிக்கலாக [இன்ஸ்பெக்டர் பல்ராம்] மம்மூட்டி நடித்திருந்தார். அது பெரும் வெற்றிபெற்று ஜெயராம் படிக்கலுக்கு மீண்டும் ஒரு சமூக இடத்தைப் பெற்றுத்தந்தது. அந்தப்படம் தமிழில் கடமை கண்ணியம் கட்டுபாடு என மறு ஆக்கம் செய்யப்பட்டது.
ராஜனைக் கொலைசெய்தவர் என நம்பப்பட்ட காவலர் புலிக்கோடன் நாராயணன் சமூகப்புறக்கணிப்பால் மன உளைச்சல் அடைந்து குடிநோயாளியாக ஆனார். அவருக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு கிடைத்தாலும் அவரது குடும்பம் புறக்கணிப்பின் நிழலிலேயே இருந்தது. தன் செயலைத் தொடர்ந்து நியாயப்படுத்திக்கொண்டே இருந்தார்.
ஜெயராம் படிக்கல் வாழ்நாள் இறுதியில் ஆன்மீகச் சொற்பொழிவாளராக உருவானார். ஆனாலும் கடைசிவரை அவரை அந்த நிழல் துரத்தியபடியேதான் இருந்தது.
ஆனால் அரசியல்வாதிகள் தப்பித்துக்கொண்டார்கள். கெ.கருணாகரன் அதிகநாள் இந்தக் குற்றத்தின் சுமையை தாங்க நேரவில்லை. இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியை சேர்ந்த முதல்வரான சி.அச்சுதமேனன் கொஞ்சம் கூடக் குற்றம்சாட்டப்படவில்லை.
ஏனென்றால் மக்களுக்கு ஒன்று தெரியும். இந்த அரச வன்முறை மக்களின் மௌன ஆதரவுடன்தான் நிகழ்கிறது. நக்சலைட்டுகள் வேட்டையாடப்பட்டபின் கேரளத்தில் காங்கிரஸ்தான் வென்று அரசமைத்தது. ஆகவே தங்கள் மௌன ஆணையைச் செயல்படுத்தும் அரசியல்வாதிகளைத் தங்கள் பிரதிவடிவங்களாகவே மக்கள் நினைத்தார்கள்
மக்களின் கோபம் ஏன் போலீஸ்காரர்கள் மேல் வந்தது என்றால் அவர்கள் செய்ததை மக்கள் தனிப்பட்ட பாவச்செயலாக எடுத்துக்கொண்டார்கள். கெ.கருணாகரன் பொதுவான ஒரு கொள்கைமுடிவை எடுத்தார், ஆகவே அவர் குற்றவாளி அல்ல. ஆனால் புலிக்கோடன் அவரது கையாலேயே ராஜனைக் கொன்றார். ஆகவே அவர் பாவி.
இந்த முரண்பாட்டை விரிவாகவே யோசிக்கவேண்டும். என்னைப்பொறுத்தவரை ஒரு தீவிரமான புனைகதை வழியாகவே இந்த நுட்பமான மனநாடகத்தைத் தொட்டு விளக்கமுடியும்.
நெருக்கடிநிலைக்கால அரசியல் படுகொலைகளில் ராஜன் கொலை மட்டுமே இன்றும் சமூக மனசாட்சியை உலுக்குவதாக, அடிப்படை அறக்கேள்விகளை கேட்கச்செய்வதாக உள்ளது. அதற்குப்பின்னர் கேரள காவல்துறை அரசியல் கைதிகளைக் கையாளும் விதம் முழுமையாகவே மாறியது. எளிதில் தப்பிவிடமுடியாதென்ற அச்சம் அவர்களிடம் உருவாகியது. இப்போது தெருப்படுகொலைகள் செய்த மார்க்ஸிய -ஆர்.எஸ்.எஸ்.அரசியல் தொண்டர்கள்கூடக் காவலர்களால் மிக மரியாதையுடன் கையாளப்படுகிறார்கள். ராஜன் கொலையின் ஒட்டுமொத்த சாதக விளைவு அது எனலாம்.
அதைச் சாதித்தது ராஜனின் தந்தை ஈச்சரவாரியர் மொழியைக் கையாளத்தெரிந்தவராக, இலக்கியமறிந்த பேராசிரியராக இருந்தார் என்பது மட்டுமே.