[முந்தைய தொடர்ச்சி]
மரபை எதிர்த்தும் உடைத்தும் திரித்தும் எழுதும் நவீனத்துவ எழுத்துக்கள் உருவானபோது அதுவரை வந்த கதைச்சரடுகள் கண்ணாடிப்பிம்பம் போல தலைகீழாக்கப்பட்டுத் தொடர்ந்தன. தி ஜானகிராமனின் ‘மோகமுள்’ளை[[1962] ஒருவகைத் தாய்தெய்வப்பாடல் என்றால், சுந்தர ராமசாமியின் ‘ஜெஜெ சில குறிப்புகளை’ [1984]ஒருவகை வீரகதைப்பாடல் என்றால், நீங்கள் சற்று சிந்திக்காமலிருக்கமாட்டீர்கள். பலவகையான கதைவடிவங்கள் பரிசீலிக்கப்பட்ட காலம் இது. அப்பரிசீலனைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நாவல் என்றார்கள் .சிறியவடிவங்களை சிறுகதை என்றார்கள். கதையற்ற வடிவங்களும் இவ்வகைமையில்சேர்க்கப்பட்டன.
அவ்வாறாக புராதன கதைப்பாடல்கள் பழங்காலத்தில் காப்பியங்களாகி நடுக்காலகட்டத்தில் புராணங்களாகி நவீன காலகட்டத்தில் நாவல் வடிவம் கொண்டன. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நடுவில் நாவல் வடிவம் சிதறி அழிந்தது என்று சொல்லலாம். தமிழைப்பொறுத்தவரை நாவல் வடிவின் சிதறலை நிகழ்த்த ஆரம்பித்த படைப்பு சுந்தர ராமசாமியின் ‘ஜெ ஜெ சில குறிப்புகள’ அவ்வுடைசல்களை வைத்துக் காப்பியங்களின் வடிவை உருவாக்கிய ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ [ 1997] உண்மையில் அத்துண்டுகளை அதிகமான அகலத்துக்கு விசிறுவதன் மூலம் அவ்வுடைவை மேலும் அதிகமாக்கியது. உடைத்து சிதறடித்தால்மட்டுமே அள்ளமுடியக்கூடியவற்றை அது குறிவைத்தது எனலாம். சிக்கலான முன்பின்னான கதைப்பின்னல் என்ற அம்சம் மூலம் அதன் பிறகு வந்த அவரது நாவல்கள் அனைத்துமே நாவல் என்ற வடிவின் ஒருங்கிணைவை அழித்தன. யுவன் சந்திரசேகர் , எஸ் ராமகிருஷ்ணன், சு. வேணுகோபால் போன்றவர்களின் நாவல்களும் இதையே செய்தன. இவ்வழிவின் அழகியலை பொதுவாக மேலைநாட்டில் பின் நவீனத்துவம் என்றார்கள். எனினும் தமிழில் அப்படி ஒரு தனிப்போக்கு உருவாகவில்லை என்றே கூறவேண்டும்.
இக்காலகட்டத்தில் வெளிநாடுகளை விளைநிலமாகக் கொண்டு தமிழில் கணிப்பொறித்துறை வளர்ச்சி பெருமளவில் ஏற்பட்டது. பிற தளங்களில் வளர்ச்சி மந்தித்து நின்ற தமிழ்ச்சமூகத்தில் கணிப்பொறிவளர்ச்சி உருவான வேகம் ஆச்சரியமூட்டுவதே. இரண்டாயிரத்து நாற்பதுகளில் தமிழில் அச்சு ஊடகம் முற்றிலும் இல்லாமலாகியது. நாளிதழ்கள், நூல்கள், கல்விச்சாதனங்கள் அனைத்தும் மின்னணுமயமாயின. இதற்கான சமூக , பொருளியல் காரணங்கள் பல இருந்தாலும் ஒரு வேடிக்கையான முக்கியக் காரணத்தையும் சுட்டிக்காட்டவேண்டும். உரிமம் பெறாமல் மென்பொருட்களைப் போலியாக தயாரித்தோ பிரதியெடுத்தோ பயன்படுத்தும் வழக்கம் மூலம் மின்னணுத் தொடர்புறுத்தலின் செலவு அச்சு ஊடகத்துடன் ஒப்பிடுகையில் கற்பனைசெய்ய முடியாத அளவுக்குக் குறைவாக ஆனது. அதாவது மின்னணு ஊடகம் ஏழைகளுக்குரியதாக ஆயிற்று, அச்சு ஆடம்பரக் கலைப்பொருளாக ஆயிற்று. 2055 வரைகூட பண்டைப்பெருமைகொண்ட தமிழினி பதிப்பகம் [வி.சரவணன்] ஜெயமோகன் நாவல்களை சிறிய எண்ணிக்கையிலான கலைப்பொருள் சேகரிப்பாளர்களுக்காகப் பெரும் விலையில் அச்சில் வெளியிட்டு வந்தது. மின்னணு ஊடகம் மூலம் உருவான இலக்கியவடிவத்தை மின்நவீனத்துவம் என்று குறிப்பிட்டனர்.
**
நண்பர்களே, பரிமாறப்படும் தட்டு உணவின் இயல்புகளைத் தீர்மானிக்கும் வேடிக்கை எப்போதும் இலக்கியத்தில் நிகழ்கிறது. கதைப்பாடல் வடிவம் முழுக்க முழுக்க பாடிக் கேட்கப்பட்டது. ஆகவே கட்டற்ற நீளமும் மீண்டும் மீண்டும் சொல்லும் தன்மையும் உரத்த உணர்ச்சிகளும் அதற்கு இருந்தது. உடன் வாசிக்கப்படும் வாத்தியங்களே அதன் வடிவைத் தீர்மானித்தன. துள்ளலுக்குத் துடி ,தூங்கலுக்கு முழவு என . பின்பு ஏட்டில் எழுதப்பட்டதுமே காப்பியங்கள் உருவாயின. ஓலையின் வடிவம் கவிதையின் வடிவத்தைத் தீர்மானித்தது. அதிகபட்சம் பதினாறு சொற்கள் கொண்ட வரிகளாகத் துண்டிக்கப்பட்டுக் கீழ்கீழாக அடுக்கப்பட்ட கவிதை வடிவம் உருவாயிற்று. அதுகூட பின்பு நான்கு நான்கு வரிகள் கொண்டதாகக் கிடைமட்டத்திலும் துண்டாக்கப்பட்டது. தாளும் அச்சும் உருவானபோது உரைநடை பிறந்தது. படைப்புகளுக்குத் தலைப்புகள் , பத்திகள், அடிக்குறிப்புகள், அத்தியாயங்கள் , கதைப் பகுதிகள் என புதியவடிவச் சிறப்புகளை அச்சு உருவாக்கியது. குறிப்பாக நாவல் என்பது அச்சுக்கலையின் சிருஷ்டி என்றே சொல்லலாம்.
நாவல் அச்சுக்கலையின் சாத்தியங்களைப் பலவாறாகப் பயன்படுத்திக் கொண்ட ஒர் இலக்கிய வடிவம். அதன் புதிய சோதனைகள் பலவும் அச்சு ஊடகம் தாளில் உருவாக்கிய காட்சிவடிவச் சாத்தியங்களில் இருந்து உருவானவை என்பதை நாம் இப்போது காண்கிறோம். நாவல் ஆரம்பத்தில் அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டது. பின்பு அத்தியாயங்கள் இல்லாமல் எழுதப்பட்டது. பத்திகள் இல்லாமலும், ஒரேவரியாகவும் , தனித்தனிக்குறிப்புகளாகவும், அகராதி வடிவிலும் இன்னும் பல்வேறுவடிவிலும் அது எழுதப்பட்டது. ஆனால் அதன் அத்தனை சாத்தியங்களும் புத்தகம் என்ற பருவடிவின் எல்லைக்குள்ளேயே நின்றன. மின்னணு யுகம் ஆரம்பித்த்போது அவ்வெல்லை மீறப்பட்டது. மின்னணு ஊடகங்களில் உருவான இலக்கிய வடிவங்களையும் அவை உருவாக்கிய அடிப்படை மாற்றங்களையும் சுட்டவே மின்நவீனத்துவம் என்ற சொல் புழக்கத்துக்கு வந்தது.
மின்நவீனத்துவத்தின் முதல் சோதனை நாவலில் நிகழ்ந்தது. உள்சுட்டிகள் மூலம் பக்கவாட்டில் திறந்து பலதிசைகளில் கொடிவீசிச் செல்லும் அதி[செறிவு]நாவல் என்ற வடிவம் மேலைநாட்டில் 1995ல் பிறந்தது.ஆரம்பத்தில் அது சிறிய ஆர்வத்தைமட்டுமே உருவாக்கியது. முதல் அதிநாவலான இரா.முருகன் எழுதிய ‘சைபர்னெட் குரல்கள்’ [2013] திண்ணை இணைய இதழில் வெளிவந்தது.அன்று அது ஒரு வேடிக்கையாகவே கருதப்பட்டது. அச்சு ஊடகம் முற்றாக ஒழிந்த பிறகும் கூட மின் ஊடகங்களில் வெகுகாலம் அச்சுமுறை உருவாக்கிய இலக்கிய வடிவங்களே வந்தபடி இருந்தன. நடைமுறை மாற்றங்கள் அழகியலில் பிரதிபலிக்க வெகுநாளாகும். உதாரணமாக மரம் பயன்படுத்தப்படுவது நின்று நூறாண்டுகள் கழித்தும் வீட்டுப்பொருட்கள் மரச்சாமான்கள் போலவே இருந்தன.
இதுவே நாவலுக்கும் நிகழ்ந்தது. கல்வித்துறை நூல்களின் வடிவம் மாற ஆரம்பித்தது. உட்சுட்டிகள் அவற்றில் மிகமிக அவசியமாயின. அவை கலைக்களஞ்சியம் மற்றும் பிறநூல்களை நோக்கித் திறந்தன. அவற்றை சிறுவயது முதலே வாசித்துப்பழகிய ஒரு தலைமுறை உருவானபோது பழங்கால நாவல்களின் நேரடியான முன்னகர்வுதான் அவர்களுக்கு சிரமம் தருவதாக இருந்தது. அனைத்து நூல்களும் உட்சுட்டிகளின் திறப்புகள் மூலம் முன்னகர்வனவாக ஆயின. அதையொட்டி நாவலின் வடிவமும் நடைமுறையில் மாறியது. பழைய நாவல்வடிவம் முற்றாக வழக்கொழிந்தது. அதிசெறிவு நாவல் வடிவம் மேலும்மேலும் செறிவுகொண்டது. 2065ல் விஷ்ணுபுரம் நாவலை ஆர்.ஜீவரத்தினம் சுட்டிகள் மூலம் செறிவுபடுத்தி அதிநாவல்வடிவுக்குக் கொண்டுவந்தது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பெரிய நாவல்கள் அனைத்துமே அப்படி உருவமாற்றம் பெற்றன. ஏறத்தாழ எல்லாச் சொற்களிலும் சுட்டிகளுடன் பல்லாயிரம் அடுக்குகள் திறந்துசெல்லும் மாபெரும் அதிநாவலான ‘சின்னவெங்கடேசன்’ எழுதிய ‘பாய்விரிக் கடல்’ [2072] அதிநாவல் என்றவடிவின் உச்ச நிறைவுப்புள்ளி. 2088 ல் ‘யாழ் சிவபாலன்’ எழுதிய ‘வெண்குரல்கள்’ தமிழில் உருவான முதல் மின்கதை எனலாம். அதன் பின்பு அவ்வடிவம் தமிழில் வேரூன்றியது.
ஏறத்தாழ ஐம்பது வருடம் மின்கதை தமிழில் மிகமிகச் செல்வாக்கான இலக்கியவடிவமாக இருந்தது. மின்கதையின் முக்கியமான சிறப்பம்சம் அது தன் முந்தைய வடிவங்களில் இருந்த முக்கியமான இயல்பொன்றை ரத்துசெய்துகொண்டது என்பதே. கதையைக் குட்டிக்கதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என்றெல்லாம் பகுக்கும் எல்லை அழிந்தது. ஒரு கதையில் வாசகனே அதன் நீளத்தைத் தன் சுட்டித்தெரிவுகள் மூலம் தீர்மானிக்கிறான் என்பது இவ்வடிவில் உள்ள சிறப்பு. மின்கதை என்ற வடிவின் அடிப்படை விதி 1982ல் லெஸ்லி ஃபீட்லர் என்பவரால் பின்நவீனத்துவக் கோட்பாடாக முன்வைக்கப்பட்ட அவதானிப்பின் மறுவடிவமே. அதாவது எல்லா கதைகளும் சொல்லப்பட்டு விட்டன. இனிமேல் கதைகளை மீண்டும் சொல்வதுமட்டுமே சாத்தியம் என்ற விதி .மின்கதை உண்மையில் கதை சொல்வதில்லை. சொல்லப்பட்ட கதைகளின் பேரடுக்கில் இருந்து துணுக்குகளை எடுத்துக் கதைகளைப் புதிது புதிதாகக் கோர்க்கிறது. கதைக்கூறுகளின் இணைவுகளினாலான ஆட்டமே மின்கதை எனலாம்.
பிற இலக்கிய வடிவங்களைப்போலவே மின்கதையும் பரிமாறப்பட்ட தட்டினால் வடிவமைக்கப்பட்டது. அதாவது வாத்தியம், ஏடு, காகிதம் போல கணிமென்பொருள் அப்பணியை ஆற்றியது. முதலில் கதை எழுதுவதற்கான மென்பொருட்கள் பல உருவாகிவந்தன. தமிழில் 2069ல் அப்துல் ரகுமான் வேடிக்கையாக உருவாக்கிய ‘பாட்டி’ என்ற மென்பொருள் இணைய உலகில் உள்ள கதைக்கூறுகளை நிரல்படுத்தி கதைமுடைவுக்கான ஏராளமான சாத்தியங்களை எழுத்தாளனுக்கு உருவாக்கியளிக்கும் எளிய விளையாட்டுப்பொருளாக அறிமுகமாயிற்று. அதைப்பற்றி அக்காலகட்டத்தில் பல நகைச்சுவைக் கதைகள் உலவிவந்தன. அதைக்கொண்டு அரசாங்க வரவுசெலவு அறிக்கையைக் கதையாக மாற்றி ‘ராம்கி-ராமு ‘ உருவாக்கிய வேடிக்கைகதை மிகவும் பிரபலம். ஆனால் ‘பாட்டி’ ஒரு பெரும் புரட்சியின் முன்னோடி. பத்துவருடங்களில் முன்னூறுக்கும் மேற்பட்ட மென்பொருட்கள் சந்தைக்கு வந்தன. ‘கதையன்’ ‘சஞ்சயன்’ ஆகியவை இவற்றில் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியவை. இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளனுக்கு பேனா எவ்வளவு முக்கியமோ அந்நிலை மென்பொருட்களுக்கு வந்தது. ‘பாய்விரிக் கடல்’ உண்மையில் ‘வேதாளம்’ மென்பொருளின் படைப்பு என்றால் மிகையல்ல.
மென்பொருட்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட கதைகளைப் படிப்பது சிக்கலாக ஆனபோது 2081ல் சி. விக்டர் சுவாமியப்பன் உருவாக்கிய ‘கண்ணாடி’ என்ற வாசிப்பதற்கான மென்பொருள் சந்தைக்கு வந்தது. மூன்றுவருடங்களுக்குள் அதன் இருபத்தைந்தாவது திருத்திய பதிப்பு வந்தது. இலக்கியத்திறனாய்வில் கணிப்பொறி சார்ந்த கலைச்சொற்கள் அதிகமாக ஆயின. இலக்கியத்தின் வடிவம், அர்த்தம் இரண்டுமே முழுக்க முழுக்க கணிப்பொறியியல் சார்ந்தவை என்ற வாதம் ஐசக் கால்டர்ன் என்பவரால் முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே ழாக் தெரிதா முன்வைத்த மொழியியல் குறைத்தல்வாதம், நாம் சாம்ஸ்கியின் நரம்பியல்குறைத்தல்வாதம் போலவே இதுவும் ஒரு பரபரப்பை உருவாக்கி விரைவிலேயே மறுக்கப்பட்டது. ஆனால் மின்கதை என்றவடிவம் கதைமென்பொருட்களின் காரணமாக உருவானது என்றால் அது உண்மையே.
மின்கதையை உருவாக்கிய இன்னொரு முக்கியமான காரணி அன்று உருவாகியிருந்த தகவல்வைப்பு எனலாம். அதற்கு முந்தைய காலகட்டங்களுடன் ஒப்பிடுகையில் அது மிகமிக அதிகமானது. 2020களிலேயே தமிழ் இணையதளங்களின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தாண்டியிருக்கிறது. 2050 ல் அனைத்து அறிதல்முறைகளும் முற்றிலும் கணிப்பொறிமயமானபோது இது இருபதுமடங்காக அதிகரித்தது. இவை ஒவ்வொன்றும் பிரம்மாண்டமான தகவல்வைப்பு கொண்டவை. 2036ல் சிங்காரவேல் சுந்தரலிங்கம் இவையனைத்தையும் ஒரே தகவல்வைப்புநிலையாகத் தொகுக்கும் திட்டமொன்றைக் கொண்டுவந்தார். 2038ல் அது முடிவுற்றது. 2068ல் ஒரு கட்டுரையில் சாம் சுந்தர்சிங் குறிப்பிட்டபடி அன்றைய தமிழ்த் தகவல் வைப்பானது இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய திடநூலகமான லண்டன் மியூசியம் நூலகத்தினைவிட நாற்பத்தியெட்டாயிரம் மடங்கு பெரிது.
இந்தத் தகவல்வைப்பைக் கணநேரத்தில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்கள் வந்தபோது நூல் என்ற அமைப்பே மாறியது. எழுதப்படவேண்டிய சொற்றொடர்களை அல்லது கருத்துக்களைப் புதிதாக உருவாக்குவதற்குப் பதிலாக தகவல்வைப்பில் இருந்து சுட்டினால் மட்டும் போதும் என்ற நிலை உருவானது. ஒரு கட்டுரை என்பது பல்லாயிரம் சுட்டிகளினால் மட்டுமே ஆனதாக இருக்கலாம் என்றானது. தமிழில் 2078ல் இல.சா. சண்முகசுந்தரம் இப்படி ஒரு கட்டுரையை திண்ணை இணையதளத்தில் வேடிக்கையாக உருவாக்கினார். பத்து வருடங்களுக்குள் அதுவே எழுத்துமுறையாக மாறியது. மிக அபூர்வமாக நிபுணர்களால் மட்டுமே நேரடியான கருத்துக்களும் சொற்றொடர்களும் உருவாக்கப்பட்டன.கற்பனைத்திறன் அல்லது சிந்தனைத்திறன் அல்லது படைப்புசக்தி என்பது புதிய இணைவுகளையும் தொகுப்புகளையும் உருவாக்குவதே என்றானது. இது ஒரு மிகப்பெரிய விடுதலையாக மாறியது. கட்டியெழுப்புதல் என்ற பொறுப்பு இல்லாமலானபோது கற்பனையின் முன்னோக்கிய தடையற்ற பாய்ச்சலே படைப்பு என்று ஆயிற்று.
மின்கதையின் மூன்றாவது காரணியானது காட்சி ஊடகம் கேள்வி ஊடகம் இரண்டும் வாசிப்பு ஊடகத்துடன் இரண்டறக் கலந்ததாகும். 2013 லேயே ‘அம்பலம் ‘ இணைய தளத்தில் ‘சுஜாதா ‘ எழுதிய கதை ஒன்று (காகிதச்சங்கிலிகள்) ஒரு சிறு தகவல்வைப்பில் சேமிக்கப்பட்ட முந்நூறு காட்சிப்படங்கள் மற்றும் ஒலிகளுடன் சுட்டிகள் மூலம் இணைக்கப்பட்டு மூன்று ஊடகங்களும் கலக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏறத்தாழ ஐம்பது வருடம் அது இயல்பாக நிகழவில்லை. வாசிப்புக்குரிய மென்பொருட்கள் தரமாக வர ஆரம்பித்த பிறகே இது நிகழ்ந்தது. ஒரு மின்கதையில் எல்லாச் சொற்களும் ஒலியாகவும் காட்சிகளாகவும் இயல்பாக மாறும் தன்மை கொண்டவை. அதன் தெரிவை வாசகன் விருப்பத்துக்கு ஏற்ப அந்த மென்பொருள் நிகழ்த்துகிறது. 2093 ல் நிஜக்காட்சித்தன்மை கொண்ட ஒளிஊடகங்கள் உருவானபோது காட்சிச்சூழலை வாசகன் இருக்கும் அறையையே நிரப்புவதாக அமைக்க முடிந்தது. கடல் என்றசொல் வாசகனை கடல்நடுவே இருக்கச் செய்தது. ஆர்டிக் என்ற சொல்லில் அவன் பனியில் நடுங்கினான்.
இதை இன்று நாம் இவ்வாறு விளக்கலாம். நாய் என்ற சொல்லை வெறுமே எழுதுவதற்குப்பதிலாக அச்சொல் இதுவரை பயன்படுத்தப்பட்ட அத்தனை வடிவங்களும் முறைகளும் சேமிக்கப்பட்டுள்ள தகவல்வைப்புநிலையில் காணப்படும் அச்சொல்லின் சாத்தியங்கள் மட்டும் எழுத்தாளனால் சுட்டப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது அச்சொல் உருவாக்கும் முடிவற்ற அர்த்தங்கள் மற்றும் உணர்வுகளில் அப்படைப்பாளியால் மென்பொருள் மூலம் தெரிவுசெய்யப்பட்டவை மட்டும் அதனுடன் சுட்டிகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. வாசகன் தன் மென்பொருள் மூலம் அதில் சிலவற்றை விரிவாக்கம் செய்துகொள்கிறான். நாயை அவன் பார்க்கவும் கேட்கவும் கூட முடியும். இப்படி ஒரு ஆக்கத்தில் உள்ள அனைத்துச் சொற்களையும் அதன் அடுத்தடுத்த நீட்சிகளையும் தகவல்வைப்பு அளித்தது. மின்கதையின் அடுத்த பரிணாமம் எதிர்பார்க்கக் கூடியதே. மனித மொழியாலான சொற்களுக்குப்பதிலாக மென்பொருட்களால் அடையாளம் காணக்கூடிய மின்குறிகளே போதும் என்றானது. பின்பு மின்குறிகளை செறிவுபடுத்தும் முறைவந்தது. 2130களில் மனித இலக்கியத்தில் மனிதமொழியின், எழுத்துக்களின் பயன்பாடு முற்றிலும் இல்லாமலாயிற்று.
2040களிலேயே மனிதமொழிகளுக்கு இடையேயான மொழியாக்கம் மென்பொருட்களால் மிக இயல்பாகச் செய்யப்பட்டு இலக்கியத்தின் மொழிவேறுபாடுகள் அழிந்துவிட்டிருந்தன. இலக்கியத்தின் மொழியடையாளம் வெறும் கலாச்சார அடையாளமாகவே இருந்தது. நாய் என்ற சொல் எந்தமொழியிலும் மென்பொருட்களால் உடனடியாக வாசிக்கப்பட்டுவிடும்.ஆனால் பைரவவாகனன் என்ற பொருளானது தமிழ் அடையாளம் கொண்டதாக இருந்தது. தமிழ் இலக்கியம் என்பது குறிகளைப் பொருள்கொள்ளும் முறையில் உள்ள ஒரு தமிழ்த்தன்மை மட்டுமே என்ற நிலை உருவாகியிருந்தது. அதாவது இப்படிச் சொல்லலாம். இருபதாம் நூற்றாண்டில் மொழியை வெளிமொழி -அகமொழி [ லாங்- பரோல் ] என்று பிரித்திருந்தனர். ஒலிக்குறிப்புகளாலோ எழுத்துக்களாலோ வெளிப்படுத்தப்படும் சொற்கள் வெளிமொழி. அதை பொருள்படுத்தும் அகக்கட்டமைப்பு அகமொழி. 2040களில் மொழியாக்க மென்பொருட்கள் மூலம் வெளிமொழிகள் கலந்து உலகமெங்கும் ஒன்றாக ஆயிற்று. ஆகவே அகமொழி தன் தனித்தன்மையுடன் எஞ்சியது.
ஏறத்தாழ நூறுவருடங்கள் கழித்து மொழிவடிவின் நேரடிப் பயன்பாடு இல்லாமலானபோது உண்மையில் இந்தக் கலாச்சார அடையாளம் மேலும் மேலும் வலிமை பெற்றது. ஏனெனில் மொழியின் தனித்தன்மையானது தன்னுடைய சுய வலிமையால் மட்டுமே தன்னை நிகழ்த்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே அகமொழி மேலும் மேலும் செறிவுபெற்று தனியாக விலகும் தன்மை கொண்டது. மொழிபெயர்ப்பு மென்பொருட்களின் காலம் முடிந்து அகமொழியை மொழியாக்கம் செய்யும் மென்பொருட்களுக்கான தேவை உருவானது. இதை ஒரு விந்தை என்றே சொல்லவேண்டும். இதை நிகழ்த்தியது மின்கதையே. ஒரு தமிழ் மின்கதையை அகமொழியை மொழிபெயர்க்கும் ‘சஞ்சயன்’ , ‘புணை’ போன்ற மென்பொருட்களின் துணையின்றி ஓர் அராபியன் படிக்கமுடியாது என்ற நிலை உருவாயிற்று. சமூகரீதியாகவும் இதை விளக்கவேண்டும். உலகசமூகம் தொழில்நுட்பம் மூலம் இணைந்தகாலகட்டம் 2040கள் என்றால் தங்கள் தனித்தன்மைகளை தக்கவைக்கும்பொருட்டு சமூகங்கள் முற்றாகதுண்டித்துக் கொண்டு மூடிக்கொண்ட காலகட்டம் 2130 கள்.
2136ல் ‘கண்ணபிரான்’ எழுதிய ‘நிலை’ என்ற மின்கதையை அவ்வடிவின் உச்சகட்ட சாதனை என்று சொல்லலாம். முற்றிலும் மின்குறிகளால் ஆன அதிசெறிவு மிக்க கோடிக்கணக்கான சுட்டிகளின் தொகை என்று இதைச்சொல்லலாம். இலக்கியத் திறனாய்வாளர் குணசேகரன் தாரமங்கலம் சொல்லிய ஓர் உவமை வேடிக்கையானது. இருபதாம் நூற்றாண்டின் கலைவடிவங்களை வைத்துப் பார்த்தால் அது ஏறத்தாழ நாலாயிரம் திரைப்படங்கள், எழுநூறு நாவல்கள், லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், பலலட்சம் பாடல்கள், பல்லாயிரம் இசைக்கோலங்கள் , மற்றும் பல்லாயிரம் கதைகளுக்கு நிகரானது. கண்ணபிரான் என்ற பொது அடையாளத்தில் மதுரை பல்கலையைச்சேர்ந்த எண்பது இலக்கிய ஆசிரியர்கள் சேர்ந்து நான்குவருட உழைப்பின் பயனாக உருவாக்கிய ஆக்கம் இது. 2170 களில் மெல்ல மின்கதை என்ற வடிவம் வழக்கொழிய ஆரம்பித்தது. அடுத்தது நுண்கதைகளின் யுகமாக இருந்தது.
**
மின்கதைகள் வழக்கொழியக் காரணமாக அமைந்தது வழக்கம்போல பரிமாறப்பட்ட தட்டின் மாற்றமே. 2083ல் ஒருங்கிணைந்த ஆப்ரிக்க அரசு விஞ்ஞானி அபெ மாகெம்பெ புலன்களின் வழியாக அல்லாமல் நுண்ணலைகள் மூலம் நேரடியாக மூளையில் தகவல்பதிவுகளை நிகழ்த்த முடியும் என்பதைக் கண்டுபிடித்தார். நரம்பு நோய்களுக்கான எளிய கதிரியக்கச் சிகிழ்ச்சைமுறையாக இது உருவாக்கப்பட்டது. மூளையில் புற ஸீட்டாக் கதிர்களைச் செலுத்தி தேர்வுசெய்யப்பட்ட நியூரான்களை மட்டும் அழிக்க முடியும் என்பது முதல் கண்டுபிடிப்பு. இது மனச்சிக்கல்கள் போதைப்பழக்கங்கள் ஆகியவற்றை தடுக்கும் சிறந்த முறையாக இருந்தது. 2097ல் இன்னொரு ஒருங்கிணைந்த ஆப்ரிக்க அரசுவிஞ்ஞானியான சாம் அகுலே மூளை நியூரான்களில் புறஸீட்டாக் கதிர்கள் மூலம் விரும்பிய அளவுக்கு மட்டும் மின்னூட்டத்தை அளிக்கும் கருவியைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் மனித மனத்தில் உணர்ச்சிகளை வெளியே இருந்து உருவாக்க முடிந்தது. தகவல்தொடர்பில் நடந்த மகத்தான பாய்ச்சல் இது. மனிதன் மொழியை, எழுத்தை கண்டுபிடித்ததற்குச் சமானமானது.
2110 களில் கருவிகள் மூலம் மூளையில் நேரடியாகவே கருத்துக்களையும் எண்ணங்களையும் பதிவுசெய்தார்கள். தொடக்கத்தில் இது குற்றவாளிகளிடம் நல்ல எண்ணங்களை வலுக்கட்டாயமாக பதிவு செய்யும் முறையாக இருந்தது. உளநோயாளிகளுக்கும் பயன்பட்டது. 2018 டர்பன் பல்கலை விஞ்ஞானிகள் மூளையிலுள்ள நியூரான்களில் பதிவாகியுள்ள செய்திகளை பகுத்துப் பதிவுசெய்யும் மூளைப்பகுப்பு முறைமையை உருவாக்கினார்கள். இருபதுவருடங்களுக்குள் மனித மூளையின் அனைத்துத் தகவல்பதிவுகளையும் கணிப்பொறியில் பிரதியெடுக்க இயலும் என்ற நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு கணிப்பொறியில் உள்ள அனைத்துத் தகவல்களையும் முறைப்படுத்தி நேரடியாகவே மனித மூளைக்குள் பதிவு செய்ய முடியும் என்பதும் சாத்தியமாயிற்று. செய்திகளை நேரடியாக மூலைக்கு கொண்டுசெல்லும் கருவிகள் பலவிதமாக மாற்றமடைந்தன. புறஸீட்டா கதிர்களை உமிழும் ஒரு கருவிக்கு முன்னால் பலமணிநேரம் நின்று மூளைத்தகவல்பதிவை செய்யவேண்டியிருந்த நிலை இருபதுவருடங்களில் மாறி மூளைக்குள் செலுத்தப்பட்டஒரு மிகமெல்லிய பிளாட்டின ஊசியின் மறுநுனியில் கணிப்பொறியின் தொடர்பு தரப்பட்டதும் ஒரு வினாடிக்குள் அனைத்து தவல்களும் உரிய நியூரான்களில் பதிவுசெய்யப்படும் நிலை உருவானது.
மேலும் பத்தாண்டுகளில் நெற்றிமையத்தில் செலுத்தப்படும் அதிஸீட்டா கதிர்களினாலான ‘ஊசி’ மூலம் அப்பதிவு நிகழ்த்தப்பட்டது. ஆரம்பத்தில் இது ஆய்வாளர்கள் மத்தியில் நிகழ்ந்தது. பின்பு இளம் குழந்தைகளுக்கு உலகவாழ்க்கையின் அடிப்படைகளைக் கற்றுக்கொடுக்கும் முறையாக வளர்ந்தது. கல்வியில் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டபோது உடனடியாகக் கலையிலக்கியத்திலும் பரவியது. பல்லாயிரம் வருடங்களாகத் தகவல் தொடர்புக்கு அவசியமாக இருந்த ஒன்று (அதாவது ஊடகம்) இல்லாமலாயிற்று. ஓலை, தாள், வானொலி, தொலைக்காட்சி, கணிப்பொறி, நுண்கணிப்பொறி என வளர்ந்துவந்த அந்த அம்சம் வழக்கொழிந்தது. ஆரம்பகாலத்தில் மூளையுடன் சிறிய அறுவை சிகிழ்ச்சை மூலம் இணைக்கப்பட்ட வாங்கி மூலம் நுண்ணலைகள் பெறப்பட்டன. பின்பு அதைக் காதுக்குப் பின் ஒரு சிறிய பொட்டுபோல ஒட்டினால் போதும் என்றநிலை உருவாயிற்று. கதிர்பரப்பு மையத்துடன் அந்தப் பொட்டுவழியாக நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கும் மூளைகள் தாங்கள் விரும்பியதை அவ்விருப்பம் மூலமே தெரிவித்து அக்கணமே அடையமுடியும் என்ற நிலை உருவாகியது
[மேலும்]