சங்க இலக்கியம் வாசிக்க…

சார் நலமா?

இந்த வார இறுதியில் சுதா-ஸ்ரீநிவாசன் இல்லத் திருமண விழாவுக்காக, சென்னை செல்கிறோம். சில நாட்களாக சுசீலாம்மா பரிசளித்த வையாபுரிப்பிள்ளையின் ‘சங்க இலக்கியம்’ வாசித்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் புரியவில்லை என்றாலும், அந்த மொழி நன்கு பரிச்சயம் ஆகும் வண்ணம் திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருக்கிறேன். விளக்க உரை போலில்லாமல், முக்கியமான வார்த்தைகளுக்கு மட்டும் அர்த்தம் தரும் வகையில் ஏதாவது நூல் இருக்கிறதா? தமிழ் அகராதியை வைத்து சங்க இலக்கியத்தைப் புரிந்துகொள்ள முடியுமா? அதே சமயம் திணை, துறை போன்றவை பற்றிய அறிமுகமும் தேவை. உங்கள் பரிந்துரையை எதிர்பார்த்திருக்கிறேன்.

ஆனந்த் உன்னத்

அன்புள்ள ஆனந்த்

செவ்வியல் என்பது சில பொது இயல்புகளைக் கொண்டது. இவ்வாறு சொல்லலாம்

1. அது எப்போதும் நுட்பமாகவும், மென்மையாகவும், பூடகமாகவும் சொல்லவே முயலும். ஒருபோதும் தீவிரமாக, மிகையாக, வெளிப்படையாகப் பேசாது. ஆகவே செவ்வியல் ஆக்கத்தைப் புரிந்துகொள்ள அது சொல்வதென்ன என்று பார்ப்பதைவிட உணர்த்துவது என்ன என்று பார்ப்பது முக்கியமானது. அதற்காக அந்தப் படைப்பை கூர்ந்து கவனிப்பதும், அது அளிக்கும் இயற்கை மற்றும் பண்பாட்டு உட்குறிப்புகளைப் புரிந்துகொள்ள முயல்வதும் தேவை.

2. செவ்வியல் என்பது சில பொதுவடிவங்களை, பொதுமொழியை எப்போதும் உருவாக்கிக் கொள்கிறது. ஒவ்வொரு ஆக்கத்திலும் தனித்தன்மை மிக்க கூறுமுறையோ வடிவமோ இருப்பதில்லை. அந்தப் பொதுவடிவம் மற்றும் பொது மொழியமைப்புக்குள் ஒவ்வொரு கவிஞனும் நுட்பமாகத் தன்னுடைய கற்பனையைச் செலுத்தி அதை விரிவாக்கம் செய்கிறான். அந்த விரிவாக்கத்தை [improvisation] அடையாளம் கண்டு ரசிப்பதே செவ்வியல் ரசனையில் முக்கியமானது. இதை செவ்வியல்கலைகளான இசை, நடனம் அனைத்திலும் காணலாம். சங்க இலக்கியங்களில் உள்ள திணை, துறை போன்ற அமைப்பும் சரி; கைவளை கழல்தல், பசலைபடர்தல் போன்ற கூறுமுறைகளும் சரி பொதுவானவை. அவை எப்படி ஒவ்வொரு கவிதையிலும் கையாளப்பட்டிருக்கின்றன என்பதே கவனிக்கத்தக்கது.

3. செவ்வியல் ஒரு பெரிய குறியீட்டுத்தளத்தையே உருவாக்குகிறது. அதன்பின் அந்த குறியீட்டுத்தளத்துக்குள் நின்றுகொண்டு வாழ்க்கையை அதைக்கொண்டு பேசுகிறது. நேரடியாக வாழ்க்கையைப் பேசுவதில்லை. சங்க அக இலக்கியத்தில் நாம் ஒருபோதும் வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களைக் காணமுடியாது. ஐந்து திணைகள், அவற்றில் உள்ள பொருட்கள் போன்றவை ஒரு குறியீட்டு வெளியை உருவாக்குகின்றன. அவற்றைக்கொண்டு அக்கவிதைகள் வாழ்க்கையை பேசுகின்றன. அந்தக் குறியீடுகளை நம் அனுபவத்தைக் கொண்டு நாம் வாழும் வாழ்க்கைத்தளத்துக்கு விரிவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது.

இந்த நோக்கில் மெல்லமெல்லத்தான் சங்க இலக்கியம் சார்ந்த ரசனையை உருவாக்கிக்கொள்ள முடியும். வாசிப்புடன் விவாதமும் அதற்கு உதவும். ஆகவே சங்க இலக்கியங்களைக் கற்க நேரடியாக சங்க இலக்கிய நூல்களை அணுகுவதைக் காட்டிலும் சங்கப்பாடல்களை ஒட்டி எழுதப்பட்டுள்ள ரசனைசார்ந்த நூல்களை அணுகுவதே உதவியானது.

நான் இருவகை நூல்களை சிபாரிசு செய்வேன். ஒன்று தமிழின் முக்கியமான இலக்கியவாதிகள் சங்க இலக்கியம் பற்றி எழுதிய நூல்கள். உதாரணமாக, கு.அழகிரிசாமி பழந்தமிழ் இலக்கிய ரசனை சார்ந்த சில நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் சங்க இலக்கியம் பற்றிய ரசனைகள் உள்ளன. இலக்கியத்தேன், தமிழ் தந்த கவியின்பம், தமிழ் தந்த கவிச்செல்வம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். நா.பார்த்தசாரதி சங்க இலக்கிய ரசனைநூல்களை எழுதியிருக்கிறார்.

இரண்டு, தமிழறிஞர்கள் எழுதிய அறிமுக நூல்கள். உதாரணமாக மு.வரதராசன் எழுதிய முல்லைத் திணை, நெடுந்தொகை விருந்து, குறுந்தொகை விருந்து, நற்றிணை விருந்து, நற்றிணைச் செல்வம், குறுந்தொகைச் செல்வம், சங்க இலக்கியத்தில் இயற்கை போன்ற நூல்கள் அறிமுக வாசிப்புக்கு உகந்தவை. நூலகங்களில் கிடைக்கும்.

சங்க இலக்கிய அறிமுக வாசிப்புக்கு அதிக விளக்கங்கள் இல்லாமல் எளிமையாகப் பத்தி பிரித்து, பதம் பிரித்து அளிக்கப்பட்டுள்ள புலியூர்க்கேசிகன் உரைநூல்களே சிறந்தவை என்பது என் எண்ணம்.

ஜெ

முந்தைய கட்டுரைபுகைப்படங்கள்
அடுத்த கட்டுரைகீழ்வாலை, பள்ளூர், சத்தியமங்கலம்