அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் சமீபத்திய பயணக்கட்டுரைகளைப் படித்தபின்னரே எனக்கு இவ்வளவு சமணக் கோயில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ராஜஸ்தானில் பிறந்து வளர்ந்த ஒரு ஜைன நண்பருக்கே குஜராத்தில் இவ்வளவு சமணக் கோயில்கள் இருப்பது தெரியவில்லை!
சில கேள்விகள். தமிழ்நாட்டில் சமண மதம் 2000 ஆண்டுகள் முன்பே இருந்ததாக அறியப்பட்டாலும் ஏன் கர்நாடகத்தில் கூடக் காணப்படும் சமணக் கோயில்களைப் போன்ற ஒன்றும் இல்லாமல் போனது? இந்தியாவில் மற்ற எந்தப் பிரதேசங்களில் இத்தகைய சிறப்பான சமணக் கோயில்கள் மிகுதியாக உள்ளன?
அன்புடன்,
ஓப்லா விஷ்வேஷ்
அன்புள்ள விஸ்வேஷ்,
இந்தியாவில் சமணம் இன்று கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் போன்று சிற்சில மாநிலங்களிலேயே செல்வாக்குடன் உள்ளது. தென்னகத்தில் சொல்லும்படியாக இல்லை. அதற்கான வரலாற்றுக் காரணங்களுடன் மட்டுமே இவ்விஷயத்தைப் பார்க்கவேண்டும்.
இன்றைய ஆய்வாளர்களில் கணிசமானோர் சமணம் என்றுமே ஒரு வெகுஜன மதமாக இருக்கவில்லை என்றும், கடந்தகாலத்திலும் அது ஓர் அறிவுஜீவி மதம் மட்டுமே என்றும் சொல்கிறார்கள். சமணர்களாக இருந்தவர்கள் சமண அறிவுஜீவிகள் மட்டுமே. பொதுமக்கள் தங்கள் குலதெய்வ மற்றும் நாட்டார் தெய்வ வழிபாட்டுக்குள் இருந்தபடி சமணர்களுக்கு ஆதரவளித்தனர். பெரும்பாலும் மன்னர்களாலும் படித்த வணிகர்களாலுமே சமணம் ஆதரிக்கப்பட்டது. அவர்கள் சமணத்துறவிகளையும் அவர்களின் அமைப்புகளையும் பேணினார்கள். ஆகவே சமணர்களின் ஆலயங்கள் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டன.
மன்னர்களில் சமணமதத்தைச் சார்ந்தவர்கள் பலர் இருந்தனர். ஆனால் சமண மதத்தைப்பேணி, அம்மதத்தின் கட்டுமானங்களை அமைத்தவர்களில் அதிகம்பேரும் இந்து மன்னர்களே. அதற்கான காரணத்தை மார்க்ஸிய வரலாற்றாய்வாளரான டி.டி.கோஸாம்பியின் ஆய்வுமுறையைக் கொண்டு புரிந்துகொள்ள முடியும். சமணம் சமரசப்போக்குள்ளது. பல சிந்தனைகளை இணைத்துக்கொள்ளும் வலுவான மையச்சிந்தனையோட்டம் கொண்டது. ஆகவே அது அன்று பாரதம் முழுக்க ஒருவருக்கொருவர் பூசலில் இருந்த இனக்குழுக்களை இணைத்துப் பொதுவெளிக்குக் கொண்டுவந்தது. குடிமைச்சமூக உருவாக்கத்துக்கு அது மிக உதவியாக இருந்தது. மன்னர்கள் அடக்குமுறை இல்லாமல் அமைதியான முறையில் தங்கள் நாடுகளைக் கட்டமைத்துக்கொள்ள முடிந்தது. குடிமைச்சமூகம் உருவாவது வணிகத்துக்கு உகந்தது. ஆகவே பெருவணிகர்கள் சமணத்தைப் பெருமளவுக்கு ஆதரித்தனர்.
பின்னர் உருவான பக்தி இயக்கத்தால் வைணவமும் சைவமும் வளர்ச்சி அடைந்தபோது சமணத்தின் இடம் குறுக ஆரம்பித்தது. மக்கள் குலதெய்வ வழிபாட்டுடன் சைவ, வைணவ பெருமத வழிபாடுகளைச் சேர்த்துக்கொண்டனர். சமணத்தின் கடுமையான நெறிகளும், நுணுக்கமான தத்துவ தளமும் அவர்களுக்கு ஏற்கனவே அன்னியமாக இருந்தன. சைவமும் வைணவமும் குலதெய்வங்களையும் நாட்டார்தெய்வங்களையும் தங்களுக்குள் இணைத்துக்கொண்டு விரிவடைந்தபோது அவையே மக்களுக்கு இன்னமும் உவப்பான மதங்களாக இருந்தன.
ஆகவே வணிகர்களும் மன்னர்களும் சைவ, வைணவ மதங்களை இன்னமும் பயனுள்ளவையாக கண்டிருக்கலாம். அவர்களின் ஆதரவு இல்லாமலானபோது மெல்ல மெல்ல சமணம் ஆதரவிழக்க ஆரம்பித்தது. ஆனால் எந்தக்காலத்திலும் சமணம் இந்தியாவின் எப்பகுதியிலும் இந்திய மன்னர்களால் ஒடுக்கப்படவில்லை. எங்கெல்லாம் மன்னர்கள் பெருவணிகர்கள் ஆதரவு இருந்ததோ அங்கெல்லாம் அது நீடித்தது.
தென்கர்நாடகத்தில் விஜயநகர நாயக்கர் அரசின் கீழே இருந்த பல சிறு மன்னர்கள் பதினேழாம் நூற்றாண்டுவரைக்கும்கூட சமண ஆதரவாளர்களாக இருந்தனர். அவர்களால் அங்கே சமணம் அழியாமல் நீடித்தது. மகாராஷ்டிரத்திலும் குஜராத்திலும் ராஜஸ்தானிலும் இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் சமணம் பேரழிவுக்கு உட்பட்டாலும் பின்னர் வந்த மகாராஷ்டிர பேஷ்வாக்களின் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களும் பெருவணிகர்களும் சமணத்தைப் பேணினர். விஜயநகர அரசு பெரும்பாலும் வைணவச்சார்பு கொண்டது. பேஷ்வாக்களின் அரசு பெரும்பாலும் சைவச்சார்பு கொண்டது. ஆனால் இடிக்கப்பட்ட சமண ஆலயங்கள் அவர்களின் காலகட்டத்தில் திரும்பக் கட்டப்பட்டன.
விஜயநகர அரசும், பேஷ்வாக்களின் அரசும் பிரிட்டிஷ் அரசு வரும் வரை நீடித்த பகுதிகளில் சமணக் கோயில்கள் மீண்டும் கட்டப்பட்டு இன்றும் உள்ளன. அவற்றை ஒட்டி சமணர்களின் சமூகமும் உள்ளது. இன்று சமணர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் பெருவணிகர்கள் மட்டுமே. உழவர்களும் பிற அடித்தட்டு மக்களும் சைவ, வைணவப்பெருமத மரபுக்குள் சென்றுவிட்டனர். குறிப்பாக வைணவம் வட இந்தியாவில் ஒரு பெரும் சக்தி. இந்தியாவே கிருஷ்ணா ராமா என கோஷமிட்டுக்கொண்டிருக்கிறது என்றால் மிகையல்ல.
பக்தி இயக்கம் தமிழகத்தில்தான் ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பமாகியது. அதன்பின் இங்கே ஆண்ட மன்னர்கள் அனைவருமே சைவர்கள் அல்லது வைணவர்கள். இங்கே சமணத்தை ஆதரித்த மன்னர்கள் என எவரும் இருக்கவில்லை. ஆகவே காலப்போக்கில் சமணம் ஆதரவிழந்தது.
தமிழ்நாட்டில் இன்று உள்ள சமண இடங்களை நான்கு வகைகளாகப் பிரித்து கொள்ளலாம்.
1. இந்தியாவெங்கும் சமணர்கள் பெரிய கோயில்களைக் கட்ட ஆரம்பித்தது ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான். அதேகாலத்திலேயே சமணம் தமிழ்நாட்டில் பின்வாங்க ஆரம்பித்துவிட்டது. ஆகவே இங்கே வடநாட்டில் உள்ளதுபோலப் பெரும் ஆலயங்கள் கட்டப்படவில்லை. அக்காலத்தில் சமண மையங்களாக இருந்தவை சமண முனிகள் தங்கிய இயற்கைக்குகைகள்தான். அங்கே அவர்களுக்காகக் கல்லில் படுக்கைகள் வெட்டிக்கொடுப்பது மன்னர்கள் மற்றும் வணிகர்களின் வேண்டுதலாக இருந்தது. அவ்வாறு சமணப்படுக்கைகள் அமைந்த இடங்கள் பள்ளிகள் எனப்பட்டன.
அப்படிப்பட்ட பள்ளிகள் தமிழ்நாட்டில் ஏராளமான இடங்களில் உள்ளன. மதுரையைச்சுற்றியுள்ள எட்டுகுன்றுகள், புதுக்கோட்டைப் பகுதியில் உள்ள குடுமியான் மலை போன்றவற்றை முக்கியமானவை எனச் சொல்லலாம். இந்தப்பள்ளிகளில் பல இடங்கள் பல்கலைகளாக இருந்தவை. உதாரணம் குமரிமாவட்டத்தில் உள்ள சிதறால் மலை, கோயில்பட்டி அருகே உள்ள கழுகுமலை போன்ற ஊர்கள். இங்கே மலைகளில் சமணச்சிற்பங்கள் உள்ளன.
இவை தொல்லியல்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளன. என் நண்பரான சரவணக்குமார் அதிகம் அறியப்படாத சமண மையங்களை அறிமுகம்செய்து விக்கி வரைபடத்தில் ஏற்றுவதைப் பெரும்பணியாகச் செய்துவருகிறார்.
2. சமணர்கள் இல்லாத ஊர்களில் சமண ஆலயங்கள் கைவிடப்பட்டுக் கிடந்தன. பல ஆலயங்கள் காலப்போக்கில் இந்து ஆலயங்களாக உள்ளூர்க்காரர்களால் வழிபடப்பட்டன. திருநெல்வேலி ஸ்டேட் மானுவல் எழுதிய எச்.ஆர்.பேட்ஸ் அப்படி வள்ளியூர், பணகுடி பகுதிகளில் பல சமண ஆலயங்கள் சமணர்கள் எவருமில்லாத காரணத்தால் பாழ்பட்டுக்கிடப்பதைக் குறிப்பிட்டிருக்கிறார். பல கோயில்கள் இன்று உள்ளூர் தெய்வங்களின் ஆலயங்களாக உள்ளன. அப்படி ஏராளமான சமண ஆலயங்கள் தமிழகத்தில் உருமாறிய வடிவில் உள்ளன.
நாகர்கோயிலில் உள்ள நாகராஜா கோயில், திருநந்திக்கரைக் கோயில் போன்றவை சமணக் கோயில்கள்தான். அவற்றில் தூண்களில் அருகர்களின் புடைப்புச்சிற்பங்கள் உள்ளன. அவ்வாறு ஏராளமான ஆலயங்கள் உள்ளன.
3. வழிபாடில்லாமல் கைவிடப்பட்ட நிலையிலோ அல்லது எஞ்சும் ஓரிரு சமணர்களால் ஓரளவு பேணப்படும் நிலையிலோ பல சமண ஆலயங்கள் தமிழகத்தில் உள்ளன. உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ள அப்பாண்டநாதர் கோயில் அப்படிப்பட்ட சமண ஆலயங்களில் முக்கியமானது. பெரிய கோயில். சமணர்களால் நன்றாகப் பராமரிக்கவும் படுகிறது. ஆனால் அங்கே வழிபட வருபவர்கள் மிகக்குறைவு. ஈரோடு அருகே உள்ள விஜயமங்கலம் சமணக்கோயில், அரச்சலூர் சமணக்கோயில் போன்றவை முக்கியமானவை.
4. சமண வணிகர்கள் ஓரளவுக்கு எஞ்சிய இடங்களில் சமணம் நீடித்தது. அவற்றுக்குப் பிற்கால நாயக்க மன்னர்கள் கூட ஆதரவளித்திருக்கிறார்கள். மிகச்சிறந்த உதாரணம் திண்டிவனம் அருகே உள்ள மேல்சித்தமூர் ஆலயம். தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய சமண ஆலயம் இதுவே. பதினைந்தாம் நூற்றாண்டில் நாயக்கர்களால் கட்டப்பட்ட கற்கோயில். பிற்காலத்தில் விரிவாக்கிக் கட்டப்பட்டது. அற்புதமான சிற்பங்கள் கொண்டது. மேல்சித்தமூரில் சமண பட்டாரக மடமும் உள்ளது. இந்த மடத்தால் மேல்சித்தமூர் வரலாறு என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமண வழிபாடு, சமண ஆலயங்களைப்பற்றி எழுதிய அறிஞர்கள் பலர் உண்டு. மயிலை சீனி வெங்கடசாமி ‘சமணமும் தமிழும்’ என்ற முன்னோடி நூலை எழுதினார். வெ.வேதாச்சலம் எழுதிய ’எண்பெருங்குன்றம்’ மதுரையைச்சுற்றியிருக்கும் எட்டு சமண மலைகளைப் பற்றி விளக்கும் நூல். செ.இராசு கோவை, ஈரோடு மாவட்ட சமண ஆலயங்களைப்பற்றி எழுதிய ’கொங்கு நாடும் சமணமும்’ முக்கியமான நூல்.
தமிழ்நாட்டில் வழிபாடு நிகழும் சமண ஆலயங்களுக்கான ஒரு பெரிய பட்டியலை இந்த இணையத்தொடுப்பில் காணலாம்.
மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் சமணத் தலங்கள் நிறைய உள்ளன.
ஜெ
மேல்சித்தமூர் ஆலயம் http://www.youtube.com/watch?v=TfC_E8MjhwA