மத்தகம்,ஊமைச்செந்நாய், கடிதங்கள்

ஜெயமோகன்,

நலமா?
ஆஸ்திரேலியப் பயணம் நல்ல விதமாக இருக்குமென்று நினைக்கிறேன். மத்தகம் படித்துவிட்டேன். முடிவு என் கண்களை கலங்கச் செய்து விட்டது. அந்த உணர்வுகளை முழுதாய் வடிக்க எனக்கு வார்த்தைகள் சிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தன் கால்களைத் தூக்கி பரமனை தன் மேல் ஏற அனுமதிக்கும் போது கேசவனின் மன நிலை என்னவாக இருந்திருக்குமோ அந்த நிலை நமக்குள்ளும் ஒருநொடி உருவாகி நம்மையும் தாக்கத்தான் செய்கிறது.

யானை மிகவும் பலம் பொருந்திய விலங்கு, இருந்தும் அவை மனிதருக்குக் கட்டுப்பட்டு இயங்கும் தன்மை எனக்கு மிகுந்த வியப்பைத் தரும். அனால் அவை தாங்கள் விரும்பினால் மட்டுமே மனிதருக்குக் கட்டுப்படுகின்றன. ஆனால் மனிதன் கொண்டியங்கும் குணமும் இயல்பும் பல நேரம் விசித்திரமானது.  அந்த குரூரம் , கொடுமை அந்த யானைப் பாகன் வழியாக படம் பிடித்துக் கட்டப்பட்டுள்ளது.விலங்குகள் எப்பொழுதும் தூய்மையானவை. தங்கள் போக்கிலேயே    வாழ்கின்றன.  அவை மற்ற விலங்குகளை துன்புறுத்துவதில்லை. உணவுக்காகவோ, உடலத் தேவைக்காகவோ அல்லது தங்களைப் பாது காத்துக் கொள்ளவோ மட்டுமே தாக்குகின்றன(விதிவிலக்கு இருக்கலாம்). மனிதன் மட்டுமே மற்றவர்களை எதோ ஒரு விதத்தில் தாக்கிக் கொண்டிருப்பதின் மூலமே தான் இருப்பதை நிலை நிறுத்திக்கொள்ள விழைகிறான்.

யானை நடந்து வரும் தோரனையை தாங்கள் விவரித்திருந்த விதம்  அந்த காட்சி நடந்து கொண்டிருந்த இடத்திற்கு என்னையும் அழைத்து சென்று விட்டது. திருவட்டாரில் இருந்து திருவனந்தபுரம் கிழக்கேக் கோட்டை வரைக்கும் செல்லும் பாதை மிக அழகைப் படம் பிடித்து காட்டப்பட்டு இருந்தது  .

நான் சில மாத காலங்கள் திருவனந்தபுரத்தில் பணி செய்து கொண்டிருந்தேன். அக்காலங்களில் நான் நாகர்கோயில் – திருநெல்வேலி வழியாகத்தான் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று வருவது வழக்கம். அப்போதெல்லாம் குழித்துரையும், கழியக்காவிளை வழியாகவும் தான் பயணம் செய்தாக வேண்டும். இப்பொழுது மீண்டும் ஒரு யானைப் பாகனாக அதே வழித்தடத்தில் பயணித்தது போல் இருந்தது.

நாம் புழங்கிய இடம் அல்லது கடந்து சென்ற இடங்கள் கதைக்களமாய் அமைந்து இருக்கும் படைப்புகளை படிக்கும் பொழுது அந்த அனுபவம் அந்தப் படைப்பை உள்வாங்கிக் கொள்ள மேலும் ஒரு ஈர்ப்பாக அமைந்து விடுகிறதோ? இதே அனுபவம் ‘உடையார்’ இல்  தஞ்சை பெரிய கோயில் படித்து போதும் அமைந்ததுண்டு.

தவறு செய்தல் மனித இயல்பு. நான் இங்கு குறிப்பிட்டவற்றில் தவறுகள்  இருக்கலாம், தவறு செய்தல்தான் ஒன்றைச் சரியாகச் செய்வதற்கு வாய்ப்பாய் அமைகிறது. எனினும் என் தவறுகளைப் பொருத்து ஆள்க. (சுட்டிக் காட்டபடும் பொழுது கண்டிப்பாக திருத்திக் கொள்ளவேன்).

நன்றி,
தங்கள் வாசகன்,
சுந்தரவடிவேலன்.

உங்கள் நலம் அறிய விருப்பம் சார் ,  ஊமைச்செந்நாய் சிறுகதை யை வாசித்தேன். அப்படியே புரட்டி போட்டு விட்டது சார் அதன் முடிவு; அதன் முடிவுக்கு பிறகு மறுபடியும் உடனே வாசித்தேன். முழுக்க குறீட்டு தளத்தில் இயங்கிபோகிறது கதை.மானின் கண்கள்,யானை தோய்த்த துணி, அந்த யானை கூட ; அவனின் உணர்வு எப்படி சொல்வது அது என்ன சார் தன்மானமா ? லட்சியவாதம் அல்லாத  தன்மானம் இல்லாத தன்மானமா அந்த முடிவு; நிறைய ஒலிகள் படித்து  நீண்ட நேரம்   ஆகியும்உள்ளே  ஒலித்து கொண்டே உள்ளது. சொல்ல முடியாத ஒலிகள்
முற்றிலும் வேறு விதமான உணர்வை கொடுக்கிறது ;
உங்கள் ஆரம்ப கால சிறுகதைகளை கடந்த தற்கு பிறகு தற்போதைய படைப்புகளை அணுகலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் யானை போற பாதை -பின் தொடருவது கடினம் என்று புரிகிறது
உங்களுக்கும்  போர்வர்ட் செய்த  முத்துலிங்கம் அவர்களுக்கு ம்ம்   என்னுடைய மதிப்பான  நன்றிகள்


Regards
dineshnallasivam

முந்தைய கட்டுரைபுல்வெளிதேசம் 6,கன்பெரா
அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம்,7- கலிபோலி