மதுரை நாடு – ஓர் ஆவணப்பதிவு

 

[The Madura Country -A manual J..H..Nelson.Asian Educational Services New Delhi, Madras, 1989]

இந்தியாவில் நேரடியாக ஆங்கில ஆட்சி வேரூன்றிய நாட்களில் ஆங்கில அதிகாரிகள் இந்திய நிலவியல் சமூக பொருளியல் சூழலைப் புரிந்துகொள்ள கடுமையான முயற்சிகள் எடுத்தனர். அவற்றை முறையாகப்பதிவுசெய்து அடுத்து வருபவர்களுக்காக விட்டுச்சென்றனர். அடுத்த கட்டத்தில் இப்பதிவுகளை தொகுத்து ஆவண நூல்களாக [manual] மாற்றும் பணியை அதிகாரிகள் செய்தனர். இப்பதிவுகள் இன்று பதினாறு, பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டு இந்திய இந்திய அரசியலைப் புரிந்துகொள்வதற்கு உதவும் முதன்மையான ஆதாரங்களாக உள்ளன. இவை அவர்கள் தங்களுக்குள் எழுதிக்கொண்டவை ஆதலால் பொதுவாக பிரச்சார நோக்கமற்ற நேர்மையான பதிவுகளாக உள்ளன.

இப்பதிவுகளை செய்த இவ்வதிகாரிகள் முறையான வரலாற்றுக் கல்வியும் மொழிப்பயிற்சியும் கொண்டவர்கள். அவர்களுக்கு தகவல்களை சேர்க்கவும் தொகுக்கவும் பெருமளவில் குமாஸ்தா மற்றும் உதவியாளர் உதவிகளும் அரசாங்க ஆவணங்களை நேரில் பார்வையிடும் வசதிகளும் இருந்தன. அனைத்துக்கும் மேலாக இவர்களுக்கு லத்தீன் தெரிந்திருந்தமையாலும் பிரெஞ்சு, போர்ச்சுக்கல், ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழிகள் கையெட்டும் தொலைவில் இருந்தமையாலும் இவர்களுடைய வரலாற்று நூல்கள் சாதாரணமாக தமிழில் வளவளவென்றும் மிகைப்படுத்தியும் பக்கச்சார்புகளுடனும் எழுதப்படும் வரலாற்று நூல்களைப் போல அல்லாமல் செறிவான மொழியில் நுட்பமான தகவல்களுடன் அமைந்துள்ளன.

மதுரை ஆட்சியராக இருந்த ஜெ.எச்.நெல்சன் [ஜேம்ஸ் ஹென்றி நெல்சன்] 1868-ல் எழுதி வெளியிட்ட மதுரை நாடு- ஆவணப்பதிவு என்ற நூல் இன்றுவரை மதுரையை அறிவதற்கான முதன்மை ஆதாரத்தொகுப்பாக உள்ளது. இதன் ஆசிரியரான நெல்சன் சென்னை ஆட்சப்பணியில் பணியற்றியவர். [எஸ்குயர் ஆ·ப் மெட்றாஸ் சிவில் செர்வீஸஸ்] கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியில் பெல்லோ ஆக இருந்தவர். இந்நூல் ஐந்து பாகங்களாக ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்டது.

முதல் பாகத்தின் முதல் அத்தியாயம் மதுரையின் நில அமைப்பு சார்ந்த தகவல்களை விரிவாகச் சொல்கிறது. இரண்டாவது அத்தியாயம் மதுரை பகுதியின் கனிவளம் குறித்தது. மூன்றாம் அத்தியாயம் தட்பவெப்ப பதிவு மற்றும் மழையளவு குறித்தது. நான்காம் அத்தியாயம் மதுரை பகுதியின் சுகாதாரச் சிக்கல்கள் கொள்ளை நோய்கள் மற்றும் மருத்துவப் பிரச்சினைகள் சாந்தது.

இரண்டாம் பாகம் மதுரை பகுதி மக்கள் இனங்கள், சாதிகள், தாவரங்கள், மிருகங்கள் குறித்தது. முதல் அத்தியாயம் பொதுவாக சாதிகளைப்பற்றி பேசிவிட்டு இரண்டாம் அத்தியாயத்தில் வேளாளர் முதலிய வேளாண் சாதிகளைப்பற்றியும் மூன்றாம் அத்தியாயத்தில் செட்டி முதலிய வணிக சாதிகளைப்பற்றியும் நான்காம் அத்தியாயத்தில் வடுகர்கள் முதலிய குடியேற்ற சாதிகளைப்பற்றியும் ஐந்தாம் அத்தியாயத்தில் மிருகங்களைப்பற்றியும் ஆறாம் அத்தியாயத்தில் செடிகொடிகளைப்பற்றியும் விரிவாக பேசுகிறார் நெல்சன்

மூன்றாம் பாகம் மதுரைபகுதியின் அரசியல் வரலாறு குறித்தது. முதல் அத்தியாயம் பண்டைய பாண்டியர்களைப் பற்றி பேச ஆரம்பிக்கிறது. இரண்டாம் அத்தியாயம் கூன்பாண்டியனுக்கு பிறகு உருவான அரசியல் நிலைமைகளைப் பற்றிய விவரணையுடன் தொடங்குகிறது. மூன்றாம் அத்தியாயம் நாயக்கர் காலத்தை விசுவநாத நாயக்கரில் இருந்து தொடங்கி விரிவாகப் பேசுகிறது. நான்காம் அத்தியாயம் மூன்றாம் விசுவநாத நாயக்கரின் ஆட்சி குறித்தது. ஐந்து ஆறு ஏழாம் அத்தியாயம் ‘மாபெரும்’ திருமலை நாயக்க மன்னனைப் பற்றியது. எட்டாம் அத்தியாயம் திருமலை மன்னரின் மறைவுக்குப்பின் 1682 வரையிலான நாயக்க ஆட்சியைப் பற்றியது. தொடர்ந்த ஒன்பது பத்து பதினொன்றாம் அத்தியாயங்களில் தன் காலம் வரையிலான மதுரைப் பகுதியின் அரசியலை நுட்பமான தகவல்களுடன் சொல்கிறார் நெல்சன்.

நாலாம் பகுதி மதுரை நாட்டின் பொருளியல் வரலாறாகும். இதில் முந்தைய ஆட்சியாளர்களின் குறிப்புகளையும் கிழக்கிந்திய கம்பெனிப் பதிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு வரிவசூல், பாசனம், வரட்சி, வணிகச் சிக்கல்கள் குறித்த விரிவான தரவுகளை நெல்சன் அளிக்கிறார். ஐந்தாம் பகுதி உதிரி தலைப்புகளினால் ஆனது. கல்வி நிர்வாகம் குறித்த தரவுகள் இதில் உள்ளன. ஏராளமான அட்டவணைகளும் அக்கால நில அளவை வரைபடமும் உள்ளது.

*

நெல்சனின் நூலின் மிக முக்கியமான சிறப்பியல்பு இதன் ஆங்கில நடையாகும். வழக்கமான ஆவணப்பதிவுகள் மிக சம்பிரதாயமான நடையில் சலிப்பூட்டும்படி இருக்கும். நெல்சனின் நடை தேர்ந்த புனைவெழுத்தாளனுக்கு உரியதுபோல் இருப்பதனால் இந்த நூலை பல பகுதிகளில் நிறுத்த முடியாத ஆர்வத்துடன் படிக்க வேண்டியிருக்கும். ஒரு தகவலுக்காக இதை புரட்ட ஆரம்பித்து பலநூறு பக்கங்களுக்கு படித்துச் செல்வது என்னைப் போலவே பலருக்கும் நிகழலாம்.

சாதாரணமாக ஆவண நூல்களில் நூலாசிரியரின் தனிப்பட்ட ஆளுமை சார்ந்த மதிப்பீடுகள் இருப்பதில்லை. ஆனால் இந்நூலில் நெல்சன் தனிப்பட்ட குரல் ஒலிக்கவே பேசுகிறார். நூலின் ஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மைக்கு இது ஒரு காரணம். Stupid போன்ற பதங்களும் நகைச்சுவை கொண்ட அவதானிப்புகளும் சாதாரணமாக வருகின்றன. ‘சாளரங்கள் குறித்த உயர்வான அபிப்பிராயம் இந்திய கட்டிட வல்லுநர்களிடம் இல்லை’ போன்ற வரிகள் புன்னகைக்க வைப்பவை.

இதில் இரண்டு தளங்கள் உள்ளன. ஒன்று நெல்சனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இயல்பாக நூலில் கலந்துள்ளன. அக்கால இந்திய நகைகளை ‘அழகோ நுட்பமோ இல்லாத உலோகப்பொருட்கள்’ என்று அவர் சொல்கிறார். கட்டிட அமைப்புகளை ‘காற்றும் வெளிச்சமும் இல்லாத அழகு நோக்குடன் கட்டப்படாத அமைப்புகள்’ என்கிறார். அதேசமயம் இதில் அளிக்கப்படும் தகவல்களுக்கு அவர் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார். ஏசுசபை பாதிரியார்களின் அறிக்கைகளை மேற்கோள் காட்டும்போது கூட தனிப்பட்ட முறையில் அதை உறுதிசெய்துகொள்ள முயல்கிறார்.

இப்போது அரசு வெளியிடும் ஆவணப்பதிவுகள் பலரால் பல சமயங்களில் எழுதப்பட்டவற்றின் தொகுதிகளாக உள்ளன. ஆகவே அவற்றை நூலாக கொள்ள முடியாது. ஆவணத்தொகைகளாக மட்டுமே அவை இருக்கும். பல பகுதிகள் தேவையில்லாத நீட்டலுடன் இருக்க பல பகுதிகள் உரிய தகவல்கள் கூட இல்லாமல் சுருங்கிக் கிடக்கும். கடந்த முப்பதுவருடங்களாக தமிழ்நாட்டில் இத்தகைய ஆவணப்பதிவுகளை அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சார சாதனமாக மாற்றி பொய்யான மிகைப்படுத்திய தகவல்களை குவித்து வைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் மேலோங்கியிருக்கிறது. இன்றைய அரசு ஆவண வெளியீடுகள் பாதியளவே நம்பத்தக்கவை என்று ஆய்வாளர்கள் சொல்லியதை நினைவுகூர்கிறேன். நெல்சனின் நூல் தனிப்பட்ட குரலாக ஒலிப்பதனால் நம்பகத்தன்மைடன் வாசிப்பு சுவையும் கொண்டதாக உள்ளது.

நெல்சனின் நடையின் சிறப்பியல்பே சரசரவென வரும் அவரது தனிப்பட்ட அவதானிப்புகள்தான். ”போலிப்பாவனை கொண்ட பிராமணன் [Pharisaical] சட்டங்களே இல்லாத மறவன், கஞ்சத்தனமான செட்டி, சுயநலவாதியான வெள்ளாளன், மந்தமான நாயக்கன், தந்திரமாய் பதுங்கும் கள்ளன் [skulking] நிலைகொள்ளாத குறவன், கூறுகெட்ட பறையன் [licentious] ஆகியவையே கூரிய அவதானிப்பின் மூலம் தெளிவாக பிரித்தறியத்தக்க இச்சாதிகளின் உள்ளார்ந்த இயல்புகள்” [பாகம் I, பக்கம் 16] என்று அவர் எழுதிச்செல்லும்போது அதில் அன்றைய ஆதிக்கவாதியின் பார்வை தெரியும் அதே நேரத்தில் தனிப்பட்ட அவதானிப்பு மூலம் உருவாகும் செறிவான மொழியையும் காணலாம்.

மிகச்சிறந்த சித்தரிப்பாளராக நெல்சன் இந்நூலில் வெளிபடுகிறார். நாயக்கராட்சிக்காலத்து ஆட்சிக்குழப்பங்களை மிகத்துல்லியமாக நாவல் போல சித்தரித்துக் காட்டுகிறார். 1910ல் ராமநாதபுரத்தில் வந்த பஞ்சமும் அதன் காட்சிகளும் பிரமிக்க வைப்பவை. அதைத் தொடர்ந்து வந்த கனமழை, ஒருநாள் அம்மழை விட்டு உருவான ஆழ்ந்த அமைதி, அதன் பின் அடித்த மாபெரும் புயல், அதில் கிராமங்கள் அழிந்தது, ஒவ்வொரு கண்மாயாக நிறைந்து உடைத்து அடுத்ததை உடைக்கப் புறப்பட்டது போன்ற காட்சிகள் மனக்கிளர்ச்சி ஊட்டுபவை. அதேபோல கிழவன் சேதுபதியின் நாற்பத்தேழு மனைவிகளும் அவரது சிதையிலேயே எரிக்கப்பட்ட காட்சி அரண்டுபோகச்செய்வது.

நெல்சனின் நூலின் வரலாற்றுப் பகுதியே மேலும் முக்கியமானது. அதில் பாண்டியர் வரலாறு இன்று மேலும் தகவல்களுடன் மிக விரிவாகப் பேசப்பட்டு விட்டது. ஆனால் நாயக்கர் காலச் சிக்கல்களைப் பற்றிய அவரது சித்தரிப்பு இன்றும் மிக முக்கியமான கவனத்துக்கு உரியது. சத்தியநாத அய்யரின் ‘மதுரைநாயக்கர் வரலாறு’ போன்ற புகழ் மிக்க நூல்களுக்கு அடித்தளமாக அமைந்த நூல் இதுவே.

தட்பவெப்ப நிலைப்பதிவுகளும் பொதுவாசகனுக்கு ஆர்வம் தருபவை. ஏறத்தாழ பத்துவருட சீரான இடைவெளியில் மதுரையில் பஞ்சமும் வரட்சியும் உடனே மீண்டும் புயலும் வந்தபடி இருப்பதைக் காணலாம்.

சாதிகளை இனங்களாக கண்டு உடற்கூறுகளை பதிவுசெய்ய ஆங்கிலேயர் எடுத்த முயற்சி [சென்ற இடமெங்கும் ஐரோப்பியர் இதைச் செய்திருக்கிறார்கள். பொதுமைப்படுத்தல் அவர்களுடைய சிந்தனையில் ஊறியது. அதையே முன்னர் காட்டிய மேற்கோளில் கண்டோம். இதன் விளைவுகளை ‘ரவாண்டா ஹோட்டல்’ என்ற திரைப்படத்தில் பார்கலாம்] இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகமும் ஏசு சபை பாதிரியார்களின் கடிதங்களைச் சார்ந்து எழுதப்பட்ட இந்நூலில் அப்பகுதிகள் மொழிபெயர்க்கப்படாமலேயே கொடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு முக்கியமான குறை. மெல்லிதாக வெளிப்படும் மதக்காழ்ப்பு இன்னொரு குறை. உதாரணமாக இந்துக்கள் தங்கள் குருநாதர்களின் [பிராமணர்கள்] மலத்தையும் சிறுநீரையும் புனித நாட்களில் சாப்பிடுகிறார்கள் என்பது போன்ற தகவல்களை பாதிரிமார் சொல்ல நம்பி எழுதிவைத்திருக்கிறார் நெல்சன்.

ஆனாலும் நம்மை நாமே அறிய உதவும் நுட்பமான தகவல்களின் பெரும் தொகுப்பு இந்த நூல்.

மதுரா கண்ட்ரி மானுவல் – இணையநூலகம்


முதற்பதிவு /மறுபிரசுரம் Jul 5, 2007

முந்தைய கட்டுரைகாதல், காமம் -ஓர் உரையாடல்
அடுத்த கட்டுரைகுமரியும் குலதெய்வமும், கடிதம்