வரலாறும் கதையும்

அன்புள்ள ஜெ,

‘கூடவே இன்னொன்றும் தோன்றியது. ஏன் குமாரபாலரை நாம் அறிந்ததே இல்லை? ராஜராஜ சோழனை ஏன் குஜராத்திகள் அறியவே இல்லை? ஹானிபாலை, நெப்போலியனை அறிந்திருக்கிறோம். சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த முக்கியமான பிழைகளில் ஒன்று, எந்த வித வழிகாட்டுநெறிகளும் இல்லாமல் பாடத்திட்டங்களைத் தீர்மானிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டமை. குறுகிய பிராந்தியவாதமும் இனவாதமும் அரசியல் நோக்குடன் நம் குழந்தைகள் மனங்களில் திணிக்கப்பட வழிவகுத்தது அது.’

 

http://www.jeyamohan.in/?p=24655

மிகச் சரியான அவதானிப்பு.

அமர் சித்திரக் கதைகள் இதற்கு ஒரு மிகச் சிறந்த மாற்று. இந்தியாவின் பல பிரதேசங்களையும், மன்னர்களையும், வீரர்களையும், கலைஞர்களையும் சாதனையாளர்கள் பற்றியும் அருமையான புத்தகங்களை ஆதாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். இவற்றைப் படித்துதான் ராணா கும்பாவையும், லாசித் புர்கனையும், யசோதர்மனையும், ராணி துர்காவதியையும், சாலிவாகனனையும் நான் அறிந்து கொன்டேன் (ராஜராஜ சோழன் பற்றியும் உண்டு, ஆனால் துரதிருஷ்டவசமாக, பொன்னியின் செல்வன் கதையின் அடிப்படையில் அதைப் போட்டிருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து அவர்களுக்கு அட்வைஸ் செய்தவர்களின் லட்சணம் அப்படி).

மும்பையைச் சேர்ந்த ஒரு சி பி எஸ் சி பள்ளி ஆசிரியை இவற்றைத் தன் வரலாற்று வகுப்பில் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார். மாணவர்களும் மிகவும் விரும்பினார்கள். அந்தப் பரிசோதனையின் அடிப்படையில் பாடத்திட்டத்திலேயே இவற்றை வைக்கவேண்டும் என்று சி பி எஸ் சி போர்டுக்குப் பரிந்துரை செய்தார். ஆனால் வரலாறு “துல்லியமாக” இருக்க வேண்டும், இப்படி கதைகளாக இருக்கக் கூடாது என்று சொல்லி நிராகரித்து விட்டார்கள். அவர்கள் சொன்ன இன்னொரு காரணம் இந்தப் புத்தகங்களில் உள்ள வாளிப்பான உடல் கொண்ட பெண் சித்திரங்களைப் பார்த்து (“hour glass figures” – அவர்கள் சொன்னது) மாணவர்கள் மனசு கெட்டுப் போகும் என்பது.

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள ஜடாயு,

ஒரு கோணத்தில் நீங்கள் சொல்வது சரிதான். இந்திய வரலாற்றை சுவாரசியமான கதைகளாக மாணவர்களுக்குக் கொடுப்பது அவர்கள் ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள வழிவகுக்கும். இந்திய வரலாற்றின் பெரும்பகுதி இன்னமும் நமக்கு அன்னியமாகவே இருக்கும் நிலையை மாற்ற அது உதவக்கூடும்.

ஆனால் இதை மொழிக்கல்வியின் ஒரு பகுதியாக, பண்பாட்டுக்கல்வியாக துணைநூல் வடிவில் மட்டுமே கொடுக்கவேண்டும். வரலாற்றுப்பாடமாக அல்ல. ஏனென்றால் வரலாறு என்பது கதை அல்ல.

வரலாற்றுக்கும் கதைக்குமான வேறுபாடு தெரியாமல் இருப்பதென்பது இன்றும் நம்முடைய பண்பாட்டுத் தளத்தில் மிகப்பெரிய சிக்கல்களை உருவாக்குவதாக உள்ளது. கதை என்பது ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில் காரண காரிய உறவுடன் தொகுக்கப்பட்ட நிகழ்வுகள். வரலாறு அப்படி அல்ல. கறாரான வரையறையின்படி பார்த்தால் வரலாறு என்பது புறவயமான தகவல்களின் காலவரிசையிலான ஒழுங்கமைப்பு மட்டுமே — மேலதிகமாக வரலாறு பற்றி இருக்கும் கோட்பாடுகள் எல்லாமே இந்தப் பொதுவரையறைக்கு மேல் கட்டப்படுபவையே.

நாம் நம் மரபில் இத்தகைய புறவயமான வரலாற்றை எழுதும் முறைமையைக் கொண்டிருக்கவில்லை. நாம் எழுதி , கைமாறி வந்துள்ள வரலாறு என்பது கதைகள்தான். புராணங்களாகவும் தொன்மங்களாகவும்தான் நாம் வரலாற்றைப் பேணி வந்திருக்கிறோம். ஆகவே இன்னமும் கூட நமக்கு வரலாற்றெழுத்து என்பது சரிவரப் பிடிகிடைக்காத ஒன்றாகவே இருக்கிறது.

நம்முடைய தேசிய வரலாறு என்பது வெள்ளையர்களால் எழுதப்பட்டு நமக்கு அளிக்கப்பட்டது. காரணம் கிரேக்கப் பொற்காலம் முதல் புறவயமான வரலாற்றெழுத்து மரபு அவர்களிடம் இருந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் அது பல தளங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு வளர்ந்தது.

ஐரோப்பியர் நம்மைப்பற்றி எழுதிய வரலாறுகள் முன்முடிவுகளும் உள்நோக்கங்களும் சேர்ந்து விளைவிக்கும் பொய்களும் திரிபுகளும் நிறைந்தவை. அவற்றைக் கண்டு நாம் கொதிக்கிறோம். மறுத்து நூல்களை எழுதுகிறோம். ஆனால் அப்படி எழுதும் நூல்களில் மிகச்சில தவிர்த்து பெரும்பாலானவை பொதுவான வரலாற்றெழுத்தின் தளத்தில் நகைப்புக்கிடமான முதிரா முயற்சிகளாக வீழ்ச்சியடைகின்றன.

ஏனென்றால் சரியான வரலாற்றுப்பார்வையும், உண்மையான உணர்வூக்கமும், கடும் உழைப்பின் விளைவான தகவல்களும் இருந்தாலும் முறையான வரலாற்றெழுத்து முறைமை இல்லாமல் நம்மவர்கள் ‘கதைசொல்ல’ ஆரம்பிப்பதனால்தான்.

ஓர் உதாரணம் சொல்கிறேன். ஜான்ஸி கோட்டையில் ஓர் இடத்தில் கீழே முப்பதடி ஆழத்தில் உள்ள ஒரு பாதையைக் காட்டி இங்கிருந்து அந்தப் பாதையில் செல்லும் குதிரை மீது ராணி லட்சுமிபாய் குதிப்பார்கள் என எழுதி வைத்திருக்கிறார்கள். இது லட்சுமிபாயின் அதிகார பூர்வ வரலாற்று நூல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட தகவல். இந்தத் தகவலை இந்தியா பற்றி பரிவுடன் எழுதும் வரலாற்றாசிரியரான ராய் மாக்ஸ்ஹாம் அவர்களே தன்னுடைய ‘இந்தியாவின் மிகப்பெரிய வேலி’ நூலில் நக்கலாக சுட்டிக்காட்டியிருந்ததை வாசித்தேன். இந்த ஒரு ‘கதை’ யே லட்சுமிபாயின் ஆளுமையின் தீவிரம், தியாகம் எல்லாவற்றையும் மிகைப்படுத்தப்பட்ட கட்டுக்கதையாக மாற்றிவிடுகிறது.

இந்தப் பிரச்சினை நம்மவருக்குத் தெரியவில்லை. தமிழ் மன்னர்களின் வரலாற்றை எழுதுபவர்களோ பண்டைய புராணங்களைப் போலவே எழுதி வைத்து நம் வரலாற்றையே கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள். கொஞ்சம் அறிவியல் சார்ந்த நோக்கை விரும்புகிறவர்கள் வேறு வழியே இல்லாமல் உள்நோக்கம் கொண்ட ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களை ஆதாரமாகக் கொள்ள நேர்கிறது.

ஆகவே கதையையும் வரலாற்றையும் பிரித்துத் தெளிவுபடுத்தி நம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதே நல்லது. கதை சுவாரசியமாக இருக்கலாம். வரலாறு தட்டையான தகவல்வெளியாகத் தோன்றலாம். ஆனால் வரலாற்றெழுத்தின் முறைமைக்குள்ளேயே பெரும் சுவாரசியம் ஒன்று உள்ளது. உதிரி உதிரியாகத் தகவல்களைத் திரட்டுவது, அவற்றைக் கொண்டு ஒரு வரலாற்றுச்சித்திரத்தை ஊகிப்பது, அந்தச் சித்திரத்தை உரிய தகவல்களுடன் தர்க்க பூர்வமாக நிறுவிக்காட்டுவது ஆகிய செயல்கள் அடிப்படியான ஆர்வத்தை மட்டும் உருவாக்கிக்கொண்டால் பெரும் மன எழுச்சியை அளிப்பவை. அதுதான் வரலாற்றாய்வின் உண்மையான சுவாரசியம், அதைத்தான் நாம் நம் கல்விநிலையங்களில் கற்றுத்தரவேண்டியிருக்கிறது.

நாம் இன்றுகூட வரலாற்றெழுத்தை பழகிக்கொள்ளவில்லை. சமீபகாலத்து வரலாறுகூட நமக்குக் கதைகளாகவே கிடைக்கிறது. கட்டபொம்மன் பற்றி, வள்ளலார் பற்றி ஏன் எம்.ஜி.ஆர் பற்றிக்கூட ‘கதைவிடாத’ ஒரு நல்ல வரலாற்றுநூல் நம்மிடம் இல்லை. இருப்பவை எல்லாமே கதைகள், புராணங்கள் தான். இந்த மனநிலையில் அடிப்படையான மாற்றம் இன்று தேவை. அதை நாம் கல்விநிலையங்களில் உருவாக்கவேண்டும். அதற்கு வரலாற்றை அதன் முறைமை [methodology] சார்ந்து கற்றுக்கொடுத்தாகவேண்டும்.

அதற்கு அமர்சித்ர கதா போன்றவை உதவாது. சொல்லப்போனால் நேர் எதிரான விளைவுகளைக்கூட உருவாக்கலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 30 – நீண்ட பயணம்
அடுத்த கட்டுரைவீட்டில்