அருகர்களின் பாதை 30 – நீண்ட பயணம்

ஜாலார்பதானில் இருந்து நேராக சென்னைக்கே திரும்பிவிடுவதாக முடிவெடுத்தோம். முடிந்தவரை நேராக சென்னையைச் சென்றடைவதாக திட்டம். ஆனால் ஒரு மகத்தான பிழை செய்தோம். இரு வழிகள் கண்ணுக்குப்பட்டன. ஒன்று இந்தூர் வழியாக பெங்களூர் வந்து சென்னைக்கு. இன்னொன்று போபால், நாக்பூர் வழியாக ஹைதராபாத். இருவழிகளையும் இணையத்தில் தேடிப்பரிசீலித்தபின் போபால் வழியைத் தேர்வுசெய்தோம். போபால் மத்தியப்பிரதேசத்தின் தலைநகரம். அவ்வழியாக நான்குவழிப்பாதை இருக்கும், வேகமாக வந்துவிடலாமென்று நினைத்தோம்.

மாலையில் போபால் வந்து சேர்ந்தபோதுதான் ஒன்று தெரிந்துகொண்டோம், போபால் ஹைதராபாத் பாதை இன்னும் நான்குவழிப்பாதை ஆகவில்லை. வாஜ்பேயி காலத்திலேயே இந்தூர் பாதை தங்கநாற்கரமாக ஆகிவிட்டது.அந்த ஆட்சி போனபின்னர் வட இந்தியாவில் இந்த நான்குவழிப்பாதை என்பது அப்படியே தேங்கி நிற்கிறது. பெரும்பாலும் அதே

போபால் நாக்பூர் வழி நம்மூர் கிராமச்சாலைகளைப் போல் இருந்தது. குண்டுகுழிகள் மண்டிய சிதிலமான பாதை. அதில் லாரிநெரிசல். இடுப்பொடிய மண்டை அடிபட கிணற்றுக்குள் விழுந்துகொன்டே இருப்பது போல அச்சாலையில் வந்தோம். ஒரு மாநிலத்தின் மையமான தேசிய நெடுஞ்சாலை இந்த அளவு கேவலமாக இருக்கும் என்பதைக் கற்பனையே செய்யமுடியாது. மொத்த மத்தியப்பிரதேசத்திலும் டிராக்டர் செல்லக்கூடிய சாலைகள் மட்டுமே இருக்கின்றன. இந்த அளவுக்குப் பொதுவசதிகள் சீரழிந்த இன்னொரு மாநிலம் என்று மேற்கு வங்கத்தை மட்டுமே சொல்ல முடியும்.

போபாலில் இருந்து நாக்பூர் வருவதற்கு நாங்கள் திட்டமிட்டிருந்ததை விட ஐந்து மணிநேரம் அதிகமாகிவிட்டது. அங்கிருந்து ஹைதராபாத் வந்தோம். இரவு முழுக்கப் பயணம் . நாங்கள் எங்கள் பயணத்திட்டத்தில் ஒருபோதும் இரவு முழுக்கப் பயணம்செய்யக்கூடாது என்பதை ஒரு விதியாகவே வைத்திருந்தோம். ஆனாலும் வேறு வழியில்லை.

தம்பி பிரசாத் நல்ல ஓட்டுநர், தூக்கம் சலிப்பு எல்லாம் கிடையாது. நாட்கணக்கில் தூங்காமல் லாரியில் சென்ற அனுபவம் உள்ள பையன். என்ன பிரச்சினை என்றால் குத்துப்பாட்டு கேட்பான். செவிதுளைக்கும் தாளம், ஆபாசமான வரிகள். பாலுறவுக்கான ஏக்கம் , கோரிக்கை, மன்றாட்டு, பாலுறவு விளக்கம்.- மொத்தமே அவ்வளவுதான். பாலுறவைப்பற்றிய வர்ணனை இல்லாத குத்துப்பாட்டு உண்ட?

இரவில் கார் வளைந்து வளைந்து வந்து கொண்டே இருந்தது. நாக்பூர் தாண்டி கொஞ்ச தூரம் நல்ல சாலை. பிறகு மீண்டும் உடைசல் சாலை. மீண்டும் கொஞ்சம் நால்வழிச்சாலை. குறைந்தபட்சம் மகாராஷ்டிராவில் சாலைகளைப் போடும் சாயலாவது தெரிகிறது. மத்தியப்பிரதேசம் இந்தியாவில்தான் இருக்கிறதா என பாரதமாதாவின் பக்தர்களான பாரதிய ஜனதா கட்சியினரைத்தான் கேட்கவேண்டும்.

இதுவரை நான் செய்த பயணங்களிலேயே இப்போது செய்துகொண்டிருக்கும் இந்தப் பயணம்தான் நீண்டது. ஜாலார்பதானில் இருந்து ஆரம்பித்து எங்கும் நிற்காமல் தொடர்ச்சியாகப் பயணம். திங்கள் மதியம் நாகர்கோயில் சென்று சேர்வேன் என நினைக்கிறேன். அப்படியென்றால் அது இரண்டு இரவுகளும் மூன்று பகல்களும் தொடர்ச்சியாக, எங்கும் ஓய்வெடுக்காமல் செய்யும் பயணமாக இருக்கும்.

ஜாலார்பதானில் இருந்து நாக்பூர் வரை ஓரு பகல். நாக்பூரில் இருந்து ஹைதராபாத் வரை ஒரு இரவு. ஹைதராபாத் முதல் ஓங்கோல் வரை மீண்டும் ஒரு பகல். சென்னையைச் சென்றடைய இரவு ஒரு மணி ஆகும். அங்கிருந்து மதுரை செல்ல விடிந்து விடும். பகல் முழுக்கச் சென்றால் நாகர்கோயில். கிட்டத்தட்ட முக்கால்வாசி இந்தியாவைத் தொடர்ச்சியாகக் கீறிக்கடந்து செல்கிறேன். ராஜஸ்தான், மகாராஷ்டிரம், ஆந்திரா, தமிழ்நாடு என நான்கு மாநிலங்கள் வழியாக.

ஒருவகையில் இந்தப்பயணம் ஆச்சரியமானதுதான். சென்ற பத்தாண்டுகளுக்கு முன் இப்படி ஒரு பாய்ச்சலை நிகழ்த்த முடியாது. இப்போது வசதியான கார்கள் வந்துவிட்டன. சாலை வசதிகள் வந்துவிட்டன. ஆனாலும் சமீபத்தில் பல நாடுகளில் செய்த பயணங்களின் அடிப்படையில் பார்த்தால் நம் நாட்டில் சாலைப்போக்குவரத்து வசதிகள் இன்னமும் மிக ஆரம்ப நிலையிலேயே உள்ளன என்பதே உண்மை. பாரதிய ஜனதா அரசு அதில் கவனம் செலுத்தி பெரும் நிதியையும் ஒதுக்கியது. அதன்பின் வந்த காங்கிரஸ் அரசுகள் அத்திட்டங்களை அந்தரத்திலேயே விட்டு விட்டன.

இன்று நான்குவழிப்பாதைத் திட்டங்கள் ஊழலில், நிர்வாகச்சிக்கல்களில் சிக்கிச் செயலிழந்த நிலையில் கிடக்கின்றன. பல இடங்களில் நான்குவழிப்பாதை வேலைகள் அப்படியப்படியே கைவிடப்பட்டுத் தூசு மண்டிய பெரும் குழிகள் எஞ்சுகின்றன. போடப்பட்ட நான்குவழிப்பாதைகள் கூடக் கொஞ்சதூரம் நான்கு வழியாகவும் பின்னர் ஒற்றை வழியாகவும் கொஞ்ச தூரம் குண்டும் குழியுமான மண்பாதையாகவும் கிடக்கின்றன.

உண்மையில் பயணத்தை இந்த அளவுக்குச் சிக்கலானதாக ஆக்குவது கைவிடப்பட்டுக் கிடக்கும் இந்த நாற்கரச்சாலை வேலைகள்தான். மன்மோகன் சிங் அரசின் கையாலாகாத்தனத்துக்கு இந்த சாலைத்திட்டங்களின் தேக்கநிலை அல்லாமல் வேறு உதாரணமே தேவையில்லை. இந்தியா போன்ற விரிந்து பரந்த ஒரு தேசத்தில் சாலைகளின் முக்கியத்துவத்தை எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

காரின் சிறிய ஒரு வட்டத்துக்குள் எட்டுப்பேர் இத்தனை நேரம் இருப்பது சாதாரண அனுபவம் அல்ல. தூங்கி வழிந்தோம். கொஞ்ச நேரம் தீவிர இலக்கிய விவாதம் செய்தோம். கொஞ்சநேரம் பாட்டு கேட்டோம். ஹைதராபாத் நகருக்குள் நுழைவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் கூகிள் உதவியுடன் குறுக்கு வழி தேடப்போய் ஏதேதோ பொட்டல்காடுகளில் வழி தவறி அலைந்தோம். புதியையும் வெயிலையும் வழிவிட மறுக்கும் லாரிகளை வசைபாடி, நெரிசலான ஆந்திரத் தெருக்கள் வழியாகப் தூசுமேகங்களை ஊடுருவி சென்று கொண்டே இருக்கிறோம்.

மதியம் ஆந்திர ஓட்டல் ஒன்றில் சோறு சாப்பிட்டோம். சோறும் சாம்பாரும் சாப்பிட்டு இரண்டு வாரம் ஆகிறது. சீனு ‘சோறுங்கிறது ஒரு உணவில்ல சார், சாமி’ என்று பரவசத்துடன் சொன்னார். அருண்மொழியை ஃபோனில் அழைத்து சமையல் மெனுவைச் சொன்னேன். அருண்மொழி நல்ல மலையாளச் சமையல் செய்வாள். சிவப்பு சம்பா அரிசிச் சோறு, காளன், ஓலன், அவியல், துவரன், உப்பேரி, பருப்பு, சாம்பார், ரசத்துடன் ஒரு சாப்பாடு அங்கே தயாராக இருக்கும்.

இந்தியா என்ற அனுபவத்தை அப்படித்தானே கொண்டாட முடியும், சொந்த வீடு போல இனிய இந்தியப்பகுதி வேறு உண்டா என்ன?

அருகர்களின் பாதை 29 – ஜாலார்பதான்

அருகர்களின் பாதை 28 – சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்

அருகர்களின் பாதை 27 – சங்கானீர், ஜெய்ப்பூர்

அருகர்களின் பாதை 26 – பிக்கானீர்

அருகர்களின் பாதை 25 – லொதுர்வா, ஜெய்சால்மர்

அருகர்களின் பாதை 24 – ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு

அருகர்களின் பாதை 23 – ரணக்பூர், கும்பல்கர்

ருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா

அருகர்களின் பாதை 21 – அசல்கர், தில்வாரா

அருகர்களின் பாதை 20 – தரங்கா, கும்பாரியா

அருகர்களின் பாதை 19 – படான், மேஹ்சானா, மோதேரா

அருகர்களின் பாதை 18 – டோலாவீரா

அருகர்களின் பாதை 17 – கிர்நார்

அருகர்களின் பாதை 16 – பலிதானா, ஹஸ்தகிரி, தலஜா

அருகர்களின் பாதை 15 – அகமதாபாத்,லோதல்

அருகர்களின் பாதை 14 – சூரத், தாபோய்

அருகர்களின் பாதை 13 – அஜந்தா

அருகர்களின் பாதை 12 – எல்லோரா

அருகர்களின் பாதை 11 – மகாஸ்ருல், தௌலதாபாத், எல்லோரா

அருகர்களின் பாதை 10 – லென்யாத்ரி, நானேகட்

அருகர்களின் பாதை 9 – கார்லே, ஃபாஜா, ஃபெட்சா

அருகர்களின் பாதை 8 – கோலாப்பூர், நந்திகிரி, கட்ரஜ்

அருகர்களின் பாதை 7 – ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ்

அருகர்களின் பாதை 6 – மூல்குந்த், லக்குண்டி, டம்பால், ஹலசி

அருகர்களின் பாதை 5 – ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர்

அருகர்களின் பாதை 4 – குந்தாதிரி, ஹும்பஜ்

அருகர்களின் பாதை 3 – மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா

அருகர்களின் பாதை 2 – சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி

அருகர்களின் பாதை 1 – கனககிரி, சிரவண பெலகொலா

 

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 29 – ஜாலார்பதான்
அடுத்த கட்டுரைவரலாறும் கதையும்