அருகர்களின் பாதை 29 – ஜாலார்பதான்

நேற்று மாலையில் நான்குமணிக்கெல்லாம் ஜாலார்பதான் நகரை வந்தடைந்துவிடலாமென்றுதான் திட்டமிட்டிருந்தோம். சவாய் மாதோப்பூரில் இருந்து ஜாலார்பதான் இருநூற்றைம்பது கிமீ தூரம். அதிகம்போனால் ஐந்து மணிநேரம். ஆனால் நாங்கள் ஏழுமணிநேரம் பயணம்செய்ய நேர்ந்தது. இருட்ட ஆரம்பித்தபின்னர்தான் ஜாலார்பதான் ஊருக்குள் நுழைந்தோம்.

வழியில் கோட்டா நகரைத் தாண்டினோம். ராஜஸ்தானின் இப்பகுதி வளமானது. சம்பல் ஆறு, இரு கரையும் நிரம்ப நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. பிரம்மாண்டமான இரு கால்வாய்கள் விளிம்பு தொட்டு நீலநீர் ஓட விரைந்து சுழித்துச் சென்றன. இறங்கிக் குளிக்க முத்துக்கிருஷ்ணன் ஆசைப்பட்டாலும் பயணத்திட்டத்தைச் செறிவாக வைத்துக்கொண்டிருந்தமையால் தவிர்த்துவிட்டோம்.

ஜாலார்பதான் ஒரு நடுத்தர ஊர். ஒரு காலத்தில் இந்த ஊர் ஒரு பெரும் புனிதநகரமாக இருந்திருக்கிறது. ஜால்ராபட்டணம்- மணிகளின் நகர்- என்ற பேரின் மரூஉதான் இதன் இன்றைய பெயர். சந்திரபாகா என்ற ஆற்றின் கரையில் உள்ளது. சந்திரவாஹினி. நிலவாக ஒழுகிச்செல்பவள்

நேராக சமண ஆலயத்தை விசாரித்து வந்துசேர்ந்தோம். சாந்திநாதர் ஆலயம் சாலையோரமாக இருந்தது. வெளியே ஒரு பெரிய கல்யாணச் சத்திரம்போல வழவழப்பான பெரிய திண்ணைகளுடன் இருந்தது. ஆனால் உள்ளே மிகப்பெரிய கோயில் இருந்தது. நாங்கள் உள்ளே சென்றபோது ஒரு காவலர் தடுத்தார். பயணிகள் காலை பதினொரு மணி முதல் மாலை ஐந்து மணி வரைக்கும்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றார். எங்கள் பயணத்தைப்பற்றிச் சொன்னபோது அனுமதித்தார்கள்.

சிவந்த கற்களால் ஆன நாகர பாணிக் கோயில். நூற்றுக்கணக்கான சிறிய கோபுரங்கள் செண்டு போல குவிந்து உருவான கோபுரம் உயரமானது. உச்சியில் வட்டமான கலசம் போல சிகரம். அடுக்குகள் முழுக்க சிற்பவேலைப்பாடுகள். சிவப்புக்கல்லின் அழகு முழுமையாகத்தெரியும் கட்டிடக்கலை.

அதைப்பார்க்கையில் சிவப்புக்கல் மட்டுமே கோயிலுக்கு உகந்தது என நினைக்கும் மாயையில் இருந்து தப்பவே முடியவில்லை. அந்தி வெளிச்சத்தில் கோயிலின் சிவந்த கோபுர விளிம்புகள் தாமிரத்தாலானவை போல மின்னின. சட்டென்று புதுத்தளிர்விட்ட மாமரம் போல பிரமை அளித்தது ஆலயம்.

கோயிலுக்கு முன்னால் சில ஆண்டுகளுக்கு முன்னால் திருப்பணி செய்திருக்கிறார்கள். இரு பெரிய யானைச்சிலைகளை சுதையில் கட்டி வைத்திருக்கிறார்கள். கோயில் முகப்பில் சீன பகோடாக்களைப் போல ஆஸ்பெஸ்டாசில் ஒரு கூரையும் அமைத்திருக்கிறார்கள். கோயிலின் கலையழகை மறைக்கும் ரசனையில்லாத அமைப்புக்கள் அவை.

கோயில் அறங்காவலர் வந்து எங்களிடம் பயண விவரங்களைக் கேட்டறிந்தார். தங்குமிடம் பற்றிக் கேட்டோம். பக்கத்தில் தர்மசாலை இருக்கிறது, அங்கே தங்கலாம் என்றார். நாங்கள் தர்மசாலைக்குச் சென்றால் அங்கே இருந்த சின்னப்பையன் அறை மட்டும்தான் இருக்கிறது, மெத்தை ரஜாய் எதுவும் இல்லை என்றான்.

திரும்ப சாந்திநாத் கோயிலுக்கு வந்து அறங்காவலரிடம் சொன்னோம். ”அவன் சின்னப்பையன், தெரியாமல் சொல்லிவிட்டான், அறைக்குள் எல்லாம் இருக்கிறது என்று சொல்லுங்கள், இல்லையேல் ஓட்டலில் என்செலவில் உங்களுக்கு அறை போடுகிறேன்” என்றார். தேவையில்லை என்று மீண்டும் தர்மசாலைக்கே வந்தோம். அங்கே பையனின் அப்பா இருந்தார். அவர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தார்.


ஒரே அறையில் எல்லாரும் தங்கினோம். தரையில் எட்டு மெத்தைகளை வரிசையாகப்போட்டுப் படுத்தோம். நான் கட்டுரை எழுதினேன். குளிர்ந்த நீரில் குளித்தாகவேண்டும். காலையில் குளிப்பதைவிட மாலையில் குளிக்கலாம் எனச் சென்று கண்ணைமூடிக்கொண்டு குளித்துவிட்டேன்.

எப்படியும் குளிக்கும் எண்ணம் இல்லாத நண்பர்கள் ஓர் இரவுநடை சென்று வந்தனர். செல்லும் வழியில் சூரியனார் கோயில் இருப்பதாகச் சொன்னார்கள். இரவில் சிறந்த விளக்கொளி அமைக்கப்பட்டிருப்பதனால் கோயில் அற்புதமாக இருப்பதாகச் சொன்னார்கள்.

நான் கோயிலைப்பார்க்க விரும்பியமையால் நண்பர்களுடன் மீண்டும் கிளம்பிச்சென்றேன். இரவின் குளிரில் நடந்துசென்றது மனதை நிறைவில் ஆழ்த்தும் அனுபவமாக இருந்தது. கோயில் அருகே சென்றதுமே ஓர் பரவசம் ஏற்பட்டது. மின்னொளியில் பொன்னாலானது போல ஜொலித்தபடி நின்றிருந்தது ஆலயம்.

கலைப்பொருள் ஒன்று நம்மை ஒவ்வொரு முறை தோற்கடிக்கும்போதும் நாம் பெரும் பரவசத்தையே அடைகிறோம். ஜாலார்பதான் எங்கள் திட்டப்படி முக்கியமான ஊர் அல்ல. திரும்பும் வழியில் கோட்டா இருப்பதனால் இந்த ஊரைச் சேர்த்துக்கொள்ளலாமென முடிவெடுத்தோம். ஆனால் எங்கள் மொத்தப் பயணத்திலும் மிகச்சிறந்த ஆலயம் இதுதான். கட்டிட அமைப்பில், சிற்ப அமைப்பில், பிரம்மாண்டத்தில், முழுமையில். என்னை என்னவென்று நினைத்தாய் என்று பாரதமே கண்முன் எழுந்து நிற்பது போலிருந்தது.

இந்தப் பேராலயம் பதம்நாத் மந்திர் என அழைக்கப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டில் சௌகான் ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம் அலாவுதீன் கில்ஜி ஆட்சியில் இடிக்கப்பட்டது. நெடுங்காலம் கைவிடப்பட்டுக் கிடந்தபின்னர் பதினான்காம் நூற்றாண்டில் ஜெய்ப்பூரின் ராஜபுத்திர மன்னர்களால் மீண்டும் கட்டப்பட்டது.

96 அடி உயரமான கோபுரத்துக்கு முன்னால் உள்ள மண்டபம் மேல்பக்கம் இடிந்த நிலையில் இருந்ததை அன்றைய கட்டிடக்கலைப் பாணியில் புதுப்பித்திருக்கிறார்கள். முகலாய கட்டிடக்கலைப் பாணியில் வளைவான கும்மட்டம் அதே சிவந்த கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. முகப்பின் இரு சிறிய கோபுரங்களும் முகலாய பாணியில் அமைந்தவை. ராஜபுதன முகலாய பாணிகள் மிக வெற்றிகரமாகக் கலந்து அழகிய கட்டிடமாக இன்று இந்த ஆலயம் நகர் நடுவே உள்ளது.

ஏராளமான சிற்பங்கள் மலரின் அல்லியடுக்குகள் போலச் செறிந்த முகமண்டபம் ஒரு மாபெரும் கலைக்கூடம். தோரணவளைவுகள், அடுக்குத் தூண்கள், எங்கும் சிற்பம். பலகாலம் கைவிடப்பட்டு மேலே நீர் ஒழுகக் கிடந்தமையால் சிற்பங்கள் மழுங்கியிருக்கின்றன. அதுவும் ஓர் கலையம்சமே எனத் தோன்றியது. காலத்தை அவை நினைவூட்டிக்கொண்டே இருந்தன.

இவ்வாலயத்தின் சுற்றுச் சுவர்களை இந்தியாவின் முக்கியமான கலைக்கூடம் என்றே சொல்ல வேண்டும். பேரழகு கொண்ட சிற்பங்கள். பூமாதேவியை ஏந்திய பூவராகன் சிலை, மடியில் சரஸ்வதியை ஏந்திய பிரம்மனின் சிலை, சித்தி தேவியுடன் அமர்ந்திருக்கும் வினாயகர் சிலை, இரு கரங்களிலும் சக்கரங்களுடன் நிற்கும் சூரியன் சிலை என ஒவ்வொரு சிலையும் ஒரு பெரும் படைப்பு.

ஆனால் என்னைப் பல நிமிட நேரம் பிரமித்து விழிமலர நிற்கச்செய்தது போக நரசிம்மர் சிலை. இத்தகைய சிலைகள் தமிழகத்தில் மிகமிகக் குறைவு. மாயாதேவியைப் புணர்ந்த நிலையில் உக்கிரமாக நிற்கிறார் நரசிம்ம மூர்த்தி. அகோரத் தோற்றம். திறந்த வாயும் சிலிர்த்த பிடரியும் உந்திய கண்களும் நீண்ட நாக்குமாக அகோரத் தோற்றம். நான்கு தடக்கைகளில் ஒரு கை மாயையின் தலைக்கொண்டையைப் பற்றியிருக்கிறது. இன்னொரு கை அவள் கையைப் பிடித்திருக்கிறது. ஒரு கை அவளை அணைத்திருக்க இன்னொருகை ஒருமை முத்திரை காட்டுகிறது.

மாயாதேவி என்பது மாயையின் பெண்ணுருவம். மாயையைப் பெண்ணாக உருவகிப்பது எல்லா இந்து மத மரபுகளிலும் வழக்கமே. மாயை என்றால் நாம் ஐம்புலன்களாலும் உள்ளத்தாலும் அறிவாலும் அறியும் இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சக்காட்சியேதான். அது பேரழகு கொண்டது. முடிவிலாத ஜாலங்களுடன் நம்மை அதனுள் மயக்கி அணைத்து வைத்திருப்பது. மயக்குவதனால் அது மாயை.

அத்வைத மரபு மாயையை பிரம்மத்தை ஜீவர்கள் கண்டு மயங்கும் நிலை என உருவகிக்கிறது. அதாவது மாயை பிரம்மத்தை மறைக்கும் திரை. ஆனால் வைணவர்களுக்கு, குறிப்பாக வல்லபாச்சாரியாரின் சுத்தாத்வைத வைணவ மரபைச் சேர்ந்தவர்களுக்கு, மாயையும் பெருமாளின் லீலாவடிவமே. பிரம்மத்தின் ஓர் விளையாட்டு அவள். ஜீவர்கள் பெருமாளை அவரது அதி உக்கிரமான பூரண நிலையில் அறிய முடியாதாகையால் பிரம்மம் தன்னை மாயையாக வெளிப்படுத்துகிறது. அதுவும் பிரம்ம சொரூபமே. அத்வைதிகளைப்போல மாயையைப் பழித்தல் அவர்களுக்கில்லை.

இந்தச் சிலை அகோரப் பேரழகு கொண்ட பிரம்மம், அதி உக்கிரமாக மாயையுடன் கூடிய நிலையில் தன்னைக் காட்டுவதைச் சித்தரிக்கிறது. இரண்டும் ஒன்றே என அந்த விரல் முத்திரை சுட்டுகிறது. தத்துவமும் ஆன்மீகமும் கலைவடிவம் கொள்ளும்போதே உச்சகட்ட செவ்வியல் ஆக்கங்கள் உருவாகின்றன. இது அப்படிப்பட்ட பெரும் படைப்பு.

பார்க்கப்பார்க்க ஆழ்மனதுள் நுழைந்து நம் கனவுக்குள் ஞானத்தை நிறைப்பது இந்தச்சிற்பம். வஜ்ரயோகினி என்ற மாயையைப் புணர்ந்த நிலையில் இருக்கும் வஜ்ரதர புத்தர் திபெத்திய வழிபாடுகளில் முக்கியமானவர். பூட்டான் பயணத்தில் கண்ட அச்சிலைகளைப் பற்றி முன்னர் எழுதியிருக்கிறேன். அவற்றை இந்தச் சிலை நினைவூட்டியது.

கோயிலைப் பார்த்தபின்னர் சந்திர பாகா ஆற்றின் கரைக்குச் சென்றோம். அங்கே இரு கோயில்கள் இடிந்த நிலையில் இருந்தன. எஞ்சியிருந்த நாலைந்து சிலைகள் மிக அழகானவை. அருகே உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குள் சாமுண்டி பத்தடி உயரமான சிலையாகக் கோயில் கொண்டிருந்தாள். எலும்புக்கூடான பேய்த்தோற்றத்தில் கபால மாலையுடன் நிற்கும் அற்புதமான சிலை. முற்றிலும் பின்னப்பட்டுப் பல துண்டுகளாகச் சிதறிக்கிடந்தது.


ஜாலார்பதான் தொடர்ந்து அகழ்வு செய்யப்பட்டுவரும் ஒரு ஊர். இங்கே இருபதுக்கும் மேல் கோயில்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. பதினொன்றாம் நூற்றாண்டு சுல்தான் படையெடுப்பால் அழிக்கப்பட்டபின் இந்த ஊர் முன்பு போல மீண்டெழவே இல்லை. சூரியர் கோயில் மட்டும் இன்று மீண்டும் முளைத்தெழுந்து பேரெழிலுடன் நின்று கொண்டிருக்கிறது.

மேலும்…

படங்கள் இங்கே

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 28 – சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 30 – நீண்ட பயணம்