ஜெயமோகன் சார்,
தங்களின் ராஜா ரவி வர்மா பதிப்பை இப்பொழுது தான் படித்தேன். எங்கள் வீட்டில் அதே சரஸ்வதி படம் உள்ளது. மிகவும் அழகாகவும் தெய்வீகமாகவும் இருப்பதாகவே உணர்கிறேன். ஆனால் விவேகனந்தர் அதை பற்றி கூறியது ஞாபகம் வந்தது. தங்களின் பார்வைக்காக பின்வருமாறு. இது “ஈஸ்ட் அண்ட் வெஸ்ட்” கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது.
As regards ourselves, we need not, of course, at any rate for the present, go in for collecting works of art as they do; but should we, or should we not, at least preserve those which we possess from going to ruin? It will take up a long time yet to become as good and efficient as they are in the arts of painting and sculpture. We were never very skilful in those two departments of art. By imitating the Europeans we at the utmost can only produce one or two Ravi Varmas among us! But far better than such artists are our Patuas (painter) who do the Châlchitras (Arch shaper rames over the images of deities, with Paurânika
pictures.) of our goddesses, in Bengal. They display in their work at least a boldness in the brilliancy of their colours. The paintings of Ravi Varma and others make one hide one’s face from shame! Far better are those gilded pictures of Jaipur and the Chalchitra of the goddess Durgâ that we have had from old times.
மதிப்புடன்,
ராஜ்
அன்புள்ள ராஜ்,
சுவாமி விவேகாநந்தர் மட்டுமல்ல நடராஜ குருவும் இதையே சொல்லியிருக்கிறார். கிட்டத்தட்ட இதுவே என்னுடைய கருத்தும். ராஜா ரவிவர்மா இந்திய சித்திரக்கலையின் சிறந்த உதாரணங்களில் ஒருவரல்ல. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நமக்கு ஐரோப்பிய வகையான ஓவியக்கலை மேல் வந்த மோகத்துக்கு அவர் ஓர் உதாரணம், அவ்வளவுதான். அவரது ஓவியங்கள் அக்காலத்தில் நமக்கு நம்மாலும் வெள்ளைக்காரன் போல் வரைய முடியும் என்ற எண்ணத்தை உருவாக்கின.
ரவிவர்மாவின் உருவங்கள் பெரும்பாலும் பிழையான சரிவிகிதங்கள் கொண்டவை. தவறான காட்சி சித்தரிப்புகள் கொண்டவை. வரலாற்று ரீதியாகவும் புராணரீதியாகவும் அவை காலப்பிழை கருத்துப்பிழை நிரம்பியவை. நான் ஏற்கனவே சொன்னதுபோல பார்ஸி நாடகங்களைப் பார்த்து வரையப்பட்டவை அவை.
ரவிவர்மா: யசோதாவும் கண்ணனும்
1848ல் திருவனந்தபுரம் அரசகுலத்துடன் உறவுள்ள கிளிமானூர் அரசகுலத்தில் பிறந்தவர் ரவிவர்மா. அரச அசபையில் இருந்த டச்சு ஓவியர்களிடம் எண்ணைச்சாயத்தைக் கையாளும் முறையைக் கற்றுக்கொண்டார். 1873ல் வியன்னாவில் நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் அவர் வரைந்த ஓவியங்களுக்குச் சிறப்புப் பரிசு கிடைத்தது. அத்துடன் அவர் ஓர் ஓவியராக புகழ்பெற்றார்.
ராஜா ரவிவர்மா ஓவியராக பெற்ற புகழுக்கு சில வரலாற்றுக்காரணங்கள் உள்ளன. அன்று இந்தியாவில் முப்பரிமாண ஓவியமுறை இருக்கவில்லை. கண்களால் காண்பதுபோல வரைவதை நம் ஓவிய மரபு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. முப்பரிமாணம் சிற்பங்களுக்குரிய இயல்பாகவே கருதப்பட்டது. நம் ஓவிய மரபு என்பது கோலங்கள் போடும் முறையில் இருந்து உருவம் கொண்டது. வண்ணப்பொடிகளால் ஓவியங்களை தரையில் வரையும் முறை கோலங்களில் இருந்து பிறந்தது– அது இன்றும் களமெழுத்து என்னும் பேரில் கேரளத்தில் ஒரு அனுஷ்டான கலையாக உள்ளது [சடங்குகலை]
அவனீந்திர நாத் தாகூர்:வங்கபாணி ஓவியம்
அதன்பின் அவ்வுருவங்கள் சுவர்களில் வரையப்பட்டன. அவற்றில் கூறவரும் செய்தியே முக்கியமாகக் கருதப்பட்டது– கண்ணால் காணும் காட்சியின் தருக்கம் பெரிதாக எண்ணபப்டவில்லை. உதாரணமாக கண்ணன் கோவர்த்தன மலையை குடையாகப்பிடிக்க அதன்கீழே மாடுகளும் மக்களுமாக பெரும் கிராமமே திரண்டிருக்க வானில் தேவர்களும் சுற்றிலும் காடும் கடலும் சூழ்ந்திருக்கும் காட்சி ஒரே படச்சட்டத்தில் வரையப்பட்டது.
இது தொல்பழங்காலம் முதலே உள்ள முறைதான். உதாரணமாக சாஞ்சி சிற்பத்தில் ஞானம்பெற்றபின் தன் தாயிடம் பிட்சை ஏற்க வரும் புத்தர் பிரம்மாண்டமாக நிற்க, பிச்சை அளிக்கும் தாயும் அந்த அரண்மனையும் சதுக்கமும் படைகளும் எல்லாம் அவரது முழங்காலுக்கும் கீழாகவே இருக்கிறார்கள்.
ரவி வர்மா
இந்தியக்கலை என்பது தத்துவத்தின் கலைவெளிப்பாடு. அதில் கலைஞனின் தனிப்பட்ட வெளிப்பாட்டுக்கு இடமில்லை. அது ஒரு தத்துவ – ஞான தரிசனம் மெல்ல மெல்ல அடையும் பரிணாமத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது. அதன் கூறுகள் அனைத்துமே தத்துவத்தின் குறியீட்டுவடிவங்கள்தான். இந்த உண்மையை மேலைநாட்டில் சொல்லி நிறுவியவர் இலங்கையைச் சேர்ந்த கலை விமரிசகரான ஆனந்தக் குமாரசாமி.
அவனீந்திர நாத் தாகூர்:வங்கபாணி ஓவியம்
அதுவரைக்கும் மேலைநாட்டினர் கண்களுக்கு இந்தியக்கலை என்பது பண்படாத ஒன்றாகவே தோன்றியது. முப்பரிமாணத்தை உருவாக்கும் திறனில்லாத ஒருவகை அரைப்ழங்குடிக் கலையாக அதை எண்ணியவர்களே அதிகம். கொஞ்சம் ‘மேலே’ வந்தவர்கள் இந்தியக்கலை என்பது வெறும் அலங்காரக்கலை மட்டுமே என்றும் கலைஞனின் ஆன்மவெளிப்பாட்டுக்கு இடமில்லாதது என்றும் சொன்னார்கள்.
இச்சூழலில் ஐரோப்பியக்கலையின் நகலான ராஜா ரவிவர்மாவின் கலை அவர்களுக்கு உவப்பானதாகத் தோன்றியது. அதன் வடிவம் வெனிஸ் மரபைச் சேர்ந்தது. அதன் கருப்பொருள் இந்தியாவைச் சேர்ந்தது. அந்தக்கருப்பொருள் ஐரோப்பிய ரசனைக்காக ‘சமைக்கபப்ட்டிருந்தது’. அதாவது இப்போது அருந்ததி ராயும், அரவிந்த் அடிகாவும் செய்யும் அதே வேலை.
அந்த கலையை அங்கீகரிப்பது ‘உருவாகிவரும்’ இந்தியக்கலையை வளர்ப்பது என்று ஐரோப்பியர்கள் கருதினார்கள். அதற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தார்கள். ஆகவே ரவிவர்மா பரிசுகளையும் பட்டங்களையும் பெற்று இந்தியாவில் ஒரு முக்கியமான முன்னோடியாக– சொல்லப்போனால் இந்திய ஓவியக்கலையை உருவாக்கிய பிதாமகராக– தோற்றமளிக்கலானார்.
தன் வாழ்நாளின் பிற்பகுதியில் மும்பைக்குக் குடிபெயர்ந்த ரவிவர்மா அங்கே ஒரு ஆப்டோன் அச்சகத்தை நிறுவி தன் ஓவியங்களை ஏராளமாக அச்சிட்டு வெளியிட்டார். அவை இந்தியா முழுக்க பரவி அவரது ஓவியமுறைக்கு வெகுஜன அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன. அவரது ஓவியங்களுக்கு நகல்களும் உருவாயின. அவரது ஓவியமுறையே இந்தியாவின் மையநீரோட்ட ஓவியமுறையாக இன்றுவரை நீடிக்கிறது.
1906ல் ரவிவர்மா மரணமடையும்போது ஒரு மாபெரும் முன்னோடியாகவே எண்ணப்பட்டார். பாரதியைப்போன்ற சுதேசிக்கவிஞர்கள் கூட ரவி வர்மாவை இந்திய ஓவியக்கலையின் பிதாமகனாகவே எண்ணினார்கள். பாரதி ரவிவர்மாவைப்பற்றி எழுதிய கவிதை அந்த மனநிலையின் சிறந்த சான்றாகும். இச்சூழலில்தான் சுவாமி விவேகானந்தரின் அந்த விமரிசனங்கள் வெளியாகின என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
அதிருஷ்டவசமாக வங்காளத்தின் ஓவிய மறுமலர்ச்சிக்காலகட்டம் மிக வேகமாக ரவிவர்மா யுகத்தைக் கடந்துவந்தது. ஐரோப்பிய ஓவியங்க¨ளை நகல்செய்வதை உதறி அஜந்தா ஓவியங்களை முன்மாதிரியாகக் கொண்ட ஒரு ஓவிய மரபு அபனீந்திர நாத் தாகூர் போன்றவர்களால் உருவாக்கபப்ட்டது. இந்த அலையை ‘ இந்திய ஓவியத்தின் வங்க மரபு ‘ என்று இன்று குறிப்பிடுகிறார்கள்.
தாகூர் குடும்பத்தில் 1871 ல் பிறந்த அவனீந்திரர் நெடுங்காலம் வாழ்ந்து 1951ல்தான் மறைந்தார். ஆகவே பலவகையான ஓவிய முறைகளைக் கற்று அவற்றை நவீன ஓவிய மரபுக்குள் கொண்டுவந்து சேர்க்க அவரால் முடிந்தது. அவனீந்திரநாத் தாகூர் இளம்வயதிலேயே சுவாமி விவேகானந்தரின் சொற்களால் ஊக்கப்பட்டுத்தப்பட்டவர். தன் இருபத்தைந்தாவது வயதில் அஜந்தாவுக்குச் சென்றது அவரது வாழ்க்கையின் ஒரு திருப்புமு¨னை. இந்திய ஓவியக்கலை என்பது ஒரு வளர்ச்சியடையாத சவலை அல்ல என்பதை அவர் உணர்ந்தார். ஐரோப்பாவுக்கு நிகராகவே வேறு ஒரு தளத்தில் முழு வளர்ச்சி அடைந்த ஒரு பெரும் ஓவிய மரபு நமக்கும் இருப்பதை கண்டுகொண்டார்
அவனீந்திரநாத் தாகூர் மூன்று இந்திய ஓவிய மரபுகளை இணைத்தார் என்கிறார்கள். அஜன்ந்தா போன்ற சுவரோவிய மரபு, மொகல்மற்றும் ராஜ்புத் சிற்றோவியங்களின் ஓவிய மரபு, வழிபாட்டுக்கான ஓவியக்கோலங்களின் மரபு. அவற்றில் இருந்து ஒரு இந்திய நவீன ஓவிய மரபை உருவாக்கி எடுப்பதுதான் அவரது வாழ்நாள் தேடலாக இருந்தது.
மேலை ஓவியமரபு என்பது பொருள்மையநோக்கு– உடல்மைய நோக்கு கொண்டது என்றும் இந்திய ஓவியமரபு ஆன்மீகமைய நோக்கு கொண்டது என்றும் அவனீந்திரர் கருதினார். அவ்வாறாக அவர் இந்திய ஓவியக்கலைமரபின் அடிபப்டையான தத்துவத்தின் கலைவெளிப்பாடு என்ற மையத்தைத் தொட்டார். அவரது மாணவர்களான நந்தலால் போஸ், ஜாமினி ராய், காளீபாத கோஷால் போன்றவர்கள் அவரது நோக்கை பலவாறு முன்னெடுத்துச் சென்றார்கள். கல்கத்தா ஓவியக்கல்லூரியில் ஆசிரியராக இருந்த எர்னஸ்ட் பின்பீல்ட் ஹாவெல் அவனீந்திரநாத் தாகூரால் ஊக்கமூட்டப்பட்டு வங்க ஓவிய முறையை மாணவர்களிடையே கொண்டுசென்றார்
வங்க முறை வழியாக இந்தியாவுக்குரிய ஒரு நவீன ஓவிய முறைமை ஓரளவேனும் உருவாகியது. நவீன ஓவிய அலை அறுபதுகளுக்குப் பின்னர் உருவாவது வரை அதுவே இந்திய ஓவியத்தின் முகமாக நீடித்தது. இந்திய ஓவியத்தின் இன்றைய முகம் உருவானதில் சுவாமி விவேகானந்தருக்கு உள்ள பங்கு முக்கியமானது
அரசியல், இலக்கியம், தத்துவம், கலை என எல்லா தளத்திலும் சுவாமிஜிக்கு இருக்கும் முன்னோடிப்பங்களிப்பு பெரும் பிரமிப்பை அளிப்பது. ஒவ்வொரு துறையிலும் நம் தேசிய பெருமிதத்துக்கும் தேசிய அடையாளத்திற்குமே அவர் முக்கியத்துவம் கொடுத்தார். நாம் நம்மை கண்டடைவதில் நம் மரபை மீட்டுருவாக்கம்செய்து நவீன யுகத்தை எதிர்கொள்வதில் ஆற்றவேண்டிய பணிகளை அடையாளம் காட்டினார்
சுவாமிஜியை எண்ணி இத்தருணத்தில் மனம் பணிகிறது
ஜெ
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 30, 2009