சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை

இந்திய அரசுப் புலனாய்வுத்துறை சமீபகாலமாக தமிழ்ச்சிற்றிதழ்களை கூர்நோக்குக்கு உட்படுத்தியதை சிற்றிதழ் வாசகர்கள் அறிந்திருப்பர். பூடக மொழியில் வெகுசில பிரதிகளே அச்சிட்டு நாலுபேர் கண்ணில் படாமலேயே வினியோகிக்கப்பட்டு வரும் இந்த இதழ்கள் தீவிரவாதிகளின் செய்தி ஊடகங்களாக இருக்கலாமென்ற ஐயம் ஏற்படவே அனைத்து இதழ்களையும் கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தியபோது மேலும் குழப்பம் ஏற்பட்டது.ஆகவே திரு.கெ.எஸ்.பார்த்தசாரதி ஐபிஎஸ் [புலனாய்வுத்துறை ஆணையர், ஓய்வு] முனைவர்.வல.சுப.அதியமான் [தமிழ்த்துறை தலைவர், மனோன்மணியம் பல்கலை, ஓய்வு] மற்றும் திரு ‘பூதத்தான்’ [இதழாளர், இலக்கிய விமரிசகர்] ஆகியோர் அடங்கிய ஒரு மூவர் குழுவை அமைத்து இவற்றை ஆராய்ந்தது

குழு சென்ற 22-4-2007 அன்று தன் இறுதியறிக்கையினை சமர்ப்பித்தது. அறிக்கை மூன்று பகுதிகள் அடங்கியது. முதல்பகுதியில் இலக்கியச்சிற்றிதழ் என்றால் என்ன, தமிழில் அதன் வரலாறு என்ன என்பவை அடங்கியது. இரண்டாம் பகுதி தமிழ் இலக்கியச் சிற்றிதழின் இலக்கணங்கள் என்னென்ன என்று ஆராய்ந்து அவற்றை அடையாளம் கண்டுகொள்ளும் விதம் குறித்தது. மூன்றாம் பகுதி தமிழிலக்கியச் சிற்றிதழ்களை எவ்வண்ணம் கட்டுப்படுத்துவது, கண்காணிப்பது என்பது பற்றியது. இவ்வறிக்கை புலனாய்வுத்துறையால் ஏற்கப்பட்டு 1-1-2008 முதல் அமுலுக்கு வந்திருக்கிறதென்பதை வாசகர்கள் அறிவார்கள்.

**

மேலைநாடுகளில், குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில்தான் சிற்றிதழ்கள் உதயமாயின என்கிறது அறிக்கை. அங்கே ஆரம்பகாலத்தில் அச்சிட்ட இதழ்களே குறைவாக இருந்தன. ரயிலில் செல்கையிலும் அரங்குகளில் காத்திருக்கையிலும் ஒரு இதழைவைத்து முகத்தை விசிறிக்கொள்வது சீமான்கள் மற்றும் சீமாட்டிகளின் கௌரவத்துக்கு உரிய விஷயமாக இருந்தது. நாளடைவில் தானியங்கி மின்னச்சு இயந்திரம் உருவானபோது இதழ்கள் பெருகி ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் கடும்பனிக்காலத்திலும் இதழ்களால் விசிறத்தலைப்பட்ட்ட போதுதான் ‘மாற்று இதழ்’ என்ற எண்ணமானது முளைவிட்டது.

‘சாதாரண’ மக்கள் அறியாமல், அறிந்தாலும் வாங்க முடியாமல், வாங்கினாலும் படிக்க முடியாமல் இவற்றை நடத்த ஆரம்பித்தார்கள். சாதாரண இதழ்களுக்கு நேர் மாறாக இவை இருக்கவேண்டுமென்பதே விதி. படங்களுக்குப் பதில் முன்னட்டையிலேயே அச்செழுத்துக்கள் தொடங்குதல், இளம்பெண்களுக்குப் பதில் தாடை தொங்கும் தாத்தாக்களின் படங்களை அச்சிடுதல் போன்ற பல உத்திகள் கடைப்பிடிக்கப்பட்டன. பத்திகள் இல்லாமல் மொத்தமாக அச்சிடுதல், ஒருவரியே ஒரு பக்கம் வரை நீள விடுதல், ஒவ்வொரு சொல்லையும் வேறுபொருளில் பயன்படுத்துதல் [உதாரணமாக ‘இனிமையான’ என்றால் ‘மேலோட்டமான’ என்று அர்த்தம்] விசித்திரமான புதிய சொற்களை உருவாக்கி பயன்படுத்துதல், மிக நீளமான மேற்கோள்களைப் பயன்படுத்துதல், சிலசமயம் அம்மேற்கோளை பிறமொழிகளில் அமைத்தல் போன்றவற்றுடன் மிக அதிகமான விலையும் அமைத்துக்கொண்டு இவ்விதழ்கள் தங்களை பாதுகாத்துக் கொண்டன.

இவ்விதழ்கள் இவற்றை வாங்கியோ இரவல்பெற்றோ கையில் வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் வேறுவகையானவர்கள் என்ற இடத்தை உறுதிசெய்தன என்பதே இவற்றின் சமூகப்பங்களிப்பு என்று அறிக்கை குறிப்பிடுகிறது. சமூகத்தில் ஒருவருக்கு இடத்தை பெற்றுத்தருவதற்கு பலவகையான சடங்குகள் உலகமெங்கும் உள்ளன. ஒரேவகையாக முடிவெட்டிக் கொள்ளுதல், ஒரேவகை உடைகள் அணிதல் என அவை பல்லாயிரம். அதேபோல ஒருவரை சமூகத்திலிருந்து வெளியே அகற்றி நிறுத்தவும் பல வகைச் சடங்குகள் உள்ளன. சென்றகாலங்களில் சாத்தான் வழிபாடு, நரமாமிசம் தின்னுதல் என பல முறைகள் இருந்திருக்கின்றன என்று குறிப்பிடும் அறிக்கை சிற்றிதழ்களில் இவற்றின் கூறுகள் பலவித மாற்றங்கள் அடைந்து குறியீட்டு ரீதியாக உள்ளே உறைந்துள்ளன என்று விளக்குகிறது.

தமிழில் ஆனந்தவிகடன் என்ற இதழ் வணிக இதழாக பெருவெற்றி அடைந்தமையே சிற்றிதழை உருவாக்கியது என்கிறது அறிக்கை. ஆனந்தவிகடனில் கல்கி, துமிலன், தேவன், எஸ்.வி.வி போன்று ஏராளமான எழுத்தாளர்கள் நகைச்சுவையாக எழுதினார்கள். அவற்றை பல்லாயிரம் பேர் வாங்கிப் படித்து வந்தனர். அப்போது திருவல்லிக்கேணியில் வாழ்ந்து வந்த மதுரைமாவட்டம் வத்தலக்குண்டுக்காரரான சி.சு.செல்லப்பா என்பவர் இம்மாதிரி பொதுப்போக்குகளை வெறுப்பவராக இருந்தார். மனிதர்கள் பற்களைக் காட்டி ‘ஹஹஹ’ என்ற ஒலியை எழுப்பி குலுங்குவதன் காரணமே அவருக்குத் தெரியாது. ஆகவே அந்த விளைவு வாசகர்களில் முற்றிலும் நிகழாதவண்ணம் ஒரு இதழை ஆரம்பிக்க அவர் முடிவுசெய்தார். தன் இதழில் படங்களே வராது என்பதைக் காட்டும் முகமாக அதற்கு அவர் ‘எழுத்து’ என்று பெயரிட்டார். 1958ல் தொடங்கிய இவ்விதழே தமிழ்ச் சிற்றிதழ்களின் விதை

மேலைநாட்டு சிற்றிதழ்களை முன்னுதாரணமாகக் கொண்ட ‘எழுத்து’ எல்லா பக்கங்களிலும் பொடி எழுத்துக்களால் நிறைந்து பலவகை சோதனைகளை செய்து காட்சியளித்தது. இதில் மூன்றுவகையான படைப்புகள் பிரசுரமாயின. வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் நாலைந்து கட்டுரைகளை தனித்தனியாக எழுதி ஒன்றுக்குள்ஒன்றாகச் சேர்த்து நீளமான கட்டுரைகளை உருவாக்கினர். பிரமிள் போன்றவர்கள் நாலைந்து வகையான சொற்றொடர்களை தனித்தனியாக எழுதி அவற்றை கண்டபடி ஒன்றாக்கி மேலும் தீவிரமான கட்டுரைகளை எழுதினர். நகுலன் போன்றவர்கள் நாலைந்துவகை சொற்களை ஒன்றாக குலுக்கிக் கலந்து எழுதியவை கவிதைகள் எனப்பட்டன.

‘எழுத்து’ வழிநின்று பற்பல சிற்றிதழ்கள் வெளிவர ஆரம்பித்தன. இவை நிதிச்சுமையால் நின்றுபோனாலும்கூட மீண்டும் மீண்டும் அவை வெளிவந்தமைக்குக் காரணம் இவற்றை நடத்துபவர்களுக்கு பிறரை, குறிப்பாக நண்பர்களை, கடுமையாக வசைபாடுவதற்கு உரிமை இருக்கிறது என பரவலாக அங்கீகரிக்கப்பட்டமையே.மேலும் இவர்கள் ஒரே ஒரு இதழ் மட்டும் கொண்டுவந்து நிறுத்திவிட்டாலும்கூட மிஞ்சிய வாழ்நாளெல்லாம் புறக்கணிக்கபப்ட்ட போராளிகளாகவும் மதிக்கப்படாத அறிஞர்களாகவும் உணர்ந்து தமிழ்ச் சமூகத்தை வசைபாடுவதற்கான தார்மீக உரிமையையும் பெறுகிறார்கள். ‘இலக்கியவட்டம்’ ‘சூறாவளி’ ‘கசடதபற’ ‘சதங்கை’ ‘வண்ணமயில்’ ‘படிகள்’ ‘வைகை’ ‘பிரக்ஞை’ ‘புதியதலைமுறை’ ‘நிகழ்’ ‘அ·’ ‘ழ’ போன்ற ஏராளமான சிற்றிதழ்கள் வந்திருக்கின்றன

**

இரண்டாம் பகுதியில் அறிக்கையானது இன்றைய தமிழ்ச் சிற்றிதழ்களின் இலக்கணங்களென்ன என்பதை ஆராய்கிறது. இவ்விலக்கணங்கள் உள்ள ஒரு இதழே இலக்கியச்சிற்றிதழாகும். பிற பிரசுரங்களை கூர்நோக்குக்கு ஆளாக்க வேண்டிய தேவை உண்டு. இவ்விலக்கணங்களை பிறர் போலிசெய்ய இயலாதென்பதும் குறிப்பிடத்தக்கது [பகுதி அ]

1. ஒரு இலக்கியச் சிற்றிதழ் எண்பதுகளுக்கு முன்பு என்றால் கடினமான தாளில் ஸ்கிரீன் பிரிண்ட் செய்யப்பட்ட பெயரும் படமும் கொண்டிருக்கும். இப்போது வண்ண அச்சும் வழவழப்பான தாளும் இருந்தாலும் எழுத்துக்கள் மெழுகில் செய்யப்பட்டு தீயருகே போய்வந்தவை போல இருக்கும். படங்கள் கண்டிப்பாக விபரீதமாகவே காணப்படும். உதாரணமாக ஒரு சிற்றிதழ் அட்டையில் உள்ள முகத்தில் மூக்குக்கு கீழே வாய் இருந்தால் அது சிற்றிதழ் அல்ல, கால் அல்லது கை இருப்பின் அது சிற்றிதழ். கீழே உள்ள எழுத்துக்கள் வெறும் எழுத்துக்களாகவே சாதாரண மனிதர்களுக்கு பொருள்பட வேண்டும். உதாரணமாக ‘இனவரைவியலெழுத்தின் இயக்கமுறைமையியல் பொருள்கோடல்கள் மற்றும் தகைமைகள்’

2. சிற்றிதழ்களின் பெயரும் வேறுபட்டிருக்க வேண்டும், பலவகையான வாசிப்புகள் அவற்றுக்கு சாத்தியமாக வேண்டும். இக்குழுவானது தமிழ்ச்சிற்றிதழ் பெயர்களை மூன்று தமிழாசிரியர்கள் அடங்கிய குழுவுக்கு வாசிக்கக் கொடுத்து பொருள் பெற்றபோது எட்டுவகை பொருள்கள் கிடைத்தன என்பதை குறிப்பிடவேண்டும். முக்கியமான இதழ்களின் பெயர்களுக்கு இக்குழு ஏற்றுக் கொண்ட அர்த்தங்கள் கீழ்க்கண்டவாறு. காலச்சுவடு= கால்+ அச்சு+வடு. காலில் அச்சுவடிவமாக உள்ள வடு. தீராநதி = நதியின் தீரம். அமிர்தா= இது ஒரு வினாச்சொல்.அல்லது எதையோ கேட்கும் சொல். உயிர்மை= உயிர்+மை, அதாவது விந்து. மகோன்னதம், சூட்சுமம், அக்ஷரம், சுரோணிதம் போன்ற சம்ஸ்கிருதப் பெயர்களே முதல் தெரிவு.

3. சிற்றிதழின் முதல் இதழ் முன்னுரை ஒரு மாபெரும் வரலாற்றுப்புரட்சிக்கான அறைகூவல்களைக் கொண்டிருக்க வேண்டும். தமிழ் வாசிப்புச்சூழலின் மாசு, படைப்புச்சூழலின் சோர்வு, அரசியல் சூழலின் மந்தம், சுற்றுச்சூழலின் கேடு முதலிய இருபதுக்கும் மேற்பட்ட சீர்கேடுகளை களைவதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆசிரியர் குழுவில் எட்டுக்கும் மேற்பட்டவர்கள் சொல்லபப்ட்டிருகக்வேண்டும்

4 .முதல் இதழ் முதலே சந்தா கேட்டு கெஞ்சி ,மன்றாடி, மிரட்டி, ஆதங்கப்பட்டு, வெந்து, நொந்து,வைது குறிப்புகள் வெளியாக வேண்டும்.சந்தா அளிப்பவர்களுக்கு புத்தகம் பரிசளிப்பது, சந்தாதாரர்களின் கவிதைகளை பிரசுரிப்பது போன்ற வாக்குறுதிகளை அளிக்க வேண்டும்.

5. பின் வரும் இதழ்களில் ஆசிரியர் குழு சுருங்கி ஒரே மனிதரில் வந்து நின்றாகவேண்டும்

6. அஞ்சலிக் கட்டு¨ரைகள் அனைத்திலும் தமிழ் வசைபாடப்பட்டிருக்க வேண்டும்

7.கடைசி இதழில், அனேகமாக இது இரண்டாமிதழ், தமிழ் கலையிலக்கியச் சூழலின் சுரணையின்மை குறித்த ஆவேசமான சொற்களுடன் ‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என்ற பொன்மொழியும் இடம்பெற வேண்டும்

**

சிற்றிதழ்களின் உள்ளடக்கத்தைப்பற்றி ஒரு பொது இலக்கணத்தை குழு உருவாக்கியிருக்கிறது. அவையாவன [பகுதி ஆ]

1. ஐரோப்பிய அமெரிக்க இலக்கியங்களைப் பற்றிய கட்டுரைகள்,ஐரோப்பிய அமெரிக்க அரசியல் போக்குகள் பற்றிய கட்டுரைகள், ஐரோப்பிய அமெரிக்க திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகள்,ஐரோப்பிய அமெரிக்க கவிதைகளின் மொழியாக்கங்கள், ஐரோப்பிய அமெரிக்க கதைகளின் மொழியாக்கங்கள், ஐரோப்பிய அமெரிக்க கோட்பாடுகளைப்பற்றிய விளக்கக் கட்டுரைகள், ஐரோப்பிய அமெரிக்க விவாதங்கள், மற்றும் மேற்குறிப்பிட்ட விஷயங்களைப்பற்றிய கடிதங்களும் சண்டைகளும் எண்பதுவிழுக்காடு இடத்தை அடைத்துக் கொண்டிருக்கவேண்டும்

2. தமிழ்த் திரைப்படங்களைப்பற்றி நுண்மாண் நுழைபுலம் நோக்கி எழுதப்பட்ட விரிவான ஆய்வுக்கட்டுரைகளும் அவற்றுக்குமேல் விவாதங்களும் கடிதங்களும் மிஞ்சிய இடத்தில் பாதியை நிரப்பியிருத்தல் வேண்டும்

3. இந்திய ஆங்கில இதழ்களில் இருந்து மறு ஆக்கம் செய்யபப்ட்ட அரசியல் கட்டுரைகளும் அவற்றின் மீதான கருத்துரைகளும் ஐந்து விழுக்காடு இடத்தை பெறலாம்

4. இருபது கவிதைகள் இரண்டுபக்கங்களுக்குள் திணிக்கப்பட்டோ அல்லது இதழ் எங்கும் கீரைவிதைபோலத் தூவப்பட்டோ காட்சியளிக்கலாம்

5. தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகள் இடமிருப்பின் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளப்படலாம். அவற்றுக்கு தொடர்பில்லாத கோட்டுச்சித்திரங்கள் அவசியம். அவை கொடூரமான கோடுகளால் ஆனவையாக இருக்கவேண்டும்.

6. கண்ணுக்குத்தெரியாத எழுத்தில் ஒருசொல்லும் புரியாத நூல் மதிப்புரைகள் அரைப்பக்க அளவில் போடப்படலாம்

7. அவ்விதழே நடத்தும் விழாக்களைப்பற்றிய குறிப்புகளை கறுப்புமைக்கறை போன்ற படங்களுடன் அச்சிட இரு பக்கங்கள் ஒதுக்கப்படலாம்

8. ஆசிரியர் பிறரை வசைபாடவும் தன் மீதான வசைகளுக்கு பதிலிறுக்கவும் இருபக்கங்கள் வரை ஒதுக்குதலும் மரபே.

9. ‘இன்னபிற’ வகையில் சூழியல் முதல் நிலவியல் வரை எதையும் போட அனுமதி உண்டு

ஆனால் ஒரு இலக்கியச் சிற்றிதழில் ஒருபோதும் இருக்கக் கூடாதவையென சில உண்டு என்று குழு வகுக்கிறது [பகுதி இ ]

1. தமிழ் பண்பாடு குறித்த ஆய்வுகள், பழந்தமிழ் இலக்கியம் கலை குறித்த கட்டுரைகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டாகவேண்டும்

2. இந்தியதத்துவ, மத ,அழகியல் மரபுகளைப்பற்றிய பேச்சுக்கள் அடாதவை

3. ஒரு சிற்றிதழ் மறந்தும்கூட நாட்டார் கலையிலக்கியங்களைப்பற்றிய ஆய்வுகளை பொருட்படுத்தலாகாது

4. தமிழ் வாழ்க்கையைப்பற்றிய பொதுவான பதிவுகளையும் ஆய்வுகளையும் முடிந்தவரை தவிர்த்தல் நன்று

**

மூன்றாவதாக தமிழ் சிற்றிதழ்களை எப்படி கட்டுப்படுத்துவது என குழு பரிந்துரைசெய்துள்ள வழிமுறைகளாவன. [பகுதி ஈ]

1. தமிழ்ச் சிற்றிதழ்களை சிற்றிதழ்களை வைத்தே கட்டுப்படுத்த முடியும். வைரஸை வைரஸே கட்டுப்படுத்த முடியும் என்பது போல. அச்சிற்றிதழுக்கு எதிரிச் சிற்றிதழ் கண்டிப்பாக இருக்கும். எதிரிச் சிற்றிதழ் இல்லாத சிற்றிதழ் சிற்றிதழே அல்ல என்பதை பகுதி அ வில் ஒரு துணை வகுப்பாகச் சேர்க்கவும். அவ்வெதிரிச் சிற்றிதழைக் கண்டுபிடித்து அதை கூர்ந்து நோக்கி முந்திய சிற்றிதழை உளவு பார்த்தல் எளிது. இச்சிற்றிதழை அச்சிற்றிதழால்.

2. ஒரு சிற்றிதழை தடைசெய்தல் முட்டாள்தனமானது. ஏற்கனவே அவர்களே நிறுத்துவதற்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பார்கள். தடையை கொண்டாடி, தியாகிப்பட்டம் பெற்று, வரலாற்றில் இடம்பெற முயல்வார்கள். சில வருடங்களில் அவ்விதழின் எல்லா பக்கங்களும் அச்சில் வரும்

3. சிற்றிதழ் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட முடியாது. அதை நடத்துபவர்களை தேடிக் கண்டடைவதற்கு விரிவான தேடுதல்வேட்டை தேவைப்படும். கண்டடையப்படுபவர் அத்தேடுதல்வேட்டைக்கு ஆன செலவுக்கு தகுதியானவரல்ல என அரசு சொல்லிவிடும்.

4. சிற்றிதழ்கள் மீது அவதூறு செலுத்த முடியாது. சிற்றிதழ்கள் பற்றிய எல்லா செய்திகளும் அவதூறுகளே. ஆகவே எல்லாயவதூறுகளும் செய்திகளும் ஆகும்.

5. ஆகவே சிற்றிதழ்களை அழிக்க எளிய வழிகள் சில உள்ளன. அச்சிற்றிதழுக்கு மிகக்கடுமையான நடையுள்ள மிக நீண்ட கட்டுரைகளை தொடர்ந்து அனுப்புவது மிகச்சிறந்த வழி. அவர்கள் அதைப்போட்டதும் அதேபோன்ற வாசகர்கடிதங்களையும் அனுப்பலாம். பொதுவாக சிற்றிதழ்கள் அதிக வாசகர்கடிதங்கள் வரும் விஷயங்களை மேலும் மேலும் பிரசுரம்செய்யும். இவ்வாறு முகத்தில் கீரி குசுவிட்ட நாய் போல அச்சிற்றிதழை எதுவும் புரியாமல் மிரள மிரள விழித்தபடி எங்காவது நிற்க வைத்து விடலாம்

6 அச்சிற்றிதழின் நடத்துநர்களில் ஒருவரது ஆக்கங்களை மட்டும் புகழ்ந்து வேறு இதழ்களில் ஒரு சில கட்டுரைகளை வெளியிடலாம்.

7. அச்சிற்றிதழுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள சில விருதுகளை வழங்கலாம்

**

முடிவுரையில் குழு சில கருத்துக்களை தொகுத்துக் கொடுத்துள்ளது

சிற்றிதழ்கள் , அடிப்படைப் பிரச்சினைகளைப்பற்றி அவற்றால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்கள் விவாதிக்காமல் தடுக்கும் தன்மை கொண்டவையாதலால் அவை சமூக அமைதிக்கு பெரும்பங்காற்றுகின்றன என்றே குழு கருதுகிறது. மேலும் சிற்றிதழ்களில் ஈடுபடுவர்கள் அப்பணி தடுக்கப்பட்டு வேறு வேலைகளுக்குச் செல்ல நேர்ந்தால் உருவாகும் சமூக, பொருளியல் இழப்பும் அதிகம். பொதுவாக சிற்றிதழ்கள் வருவது நல்லது என்பதே குழுவின் கருத்தாகும். அது மேலும் சிற்றிதழ்கள் வராமல் தடுக்கும் இயற்கை அரண் ஆகச் செயல்படுகிறது.

[முதற்பிரசுரம் ஏப்ரல் 2010. மறுபிரசுரம்]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 40
அடுத்த கட்டுரைராலே கரோலினா சந்திப்பு