ஜக்கி- ஓர் ஐயம்

இதை எழுதுவது சரியா என்று தெரியவில்லை. நீண்ட யோசனைக்குப் பின் இதை எழுதுகிறேன். தவறிருந்தால் ஜெமோ என்னை மன்னிப்பாராக.

சில நாட்களுக்கு முன் ஜெமோவின் கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா? கட்டுரையைப் பற்றி ஈசாவின் அதி தீவிர விசுவாசி ஒருவருடன் விவாதிக்க நேர்ந்தது. அவரின் சில வாதங்களை இவ்வாறு தொகுக்கலாம்.

01 . ஜெமோவும் ஈஷா வகுப்புகளில் பயின்றவர்தான். அவரும் ஈஷா வகுப்புகளால் பயனடைந்தவரே. அதை அவர் வெளிப்படையாக சொல்வதில்லை. மரபின் மைந்தன் முத்தையாவும் இதை அறிவார்

02 . ஜெமோ ஈஷா கூட்டங்களில் சிறப்பு நிலையை (special preference / VIP status) எதிர் பார்த்தார். அவர் எல்லோருடனும் சமமாக நடத்தப்பட்டதாலேயே அவர் ஈஷாவிலிருந்து வெளியேறினார். இப்போது ஈஷாவைத் தாக்குகிறார்.

இதில் உள்ள அபத்தங்களை நான் சுட்டிக் காட்டி விவாதித்தேன்.

நேற்று சென்னை சென்றிருந்த போது ஈஷாவில் தீவிரமாகப் பங்கேற்பவர் ஒருவர் இதே வாதங்களை முன் வைத்தார்.

இதைப் பற்றி ஜெமோ எதாவது எழுதி இருக்கிறாரா என்று தேடினேன். நான் தேடிய வரை இல்லை.

நான் கூறிய எதிர் வாதங்களை இவ்வாறு தொகுக்கலாம்.

01 . ஜெமோ ஈஷா வகுப்புகளில் பங்கேற்றதாக எங்கேயும் கூறவில்லை. இதைத் தவிர வேறு ஏதும் என்னால் கூற முடியாது.

02 . ஜெமோ ஈஷா தொடர்பு உண்மையாக இருந்தால் கூட, அதற்கும் அவர் எழுதிய கட்டுரைகளுக்கும் (‘நவீனகுருக்கள்,மிஷனரிகள்’,’கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?’) எந்த சம்பந்தமும் இல்லை.

03. ஜெமோ ஈஷா பற்றி மட்டும் பேசவில்லை. அவர் பொதுவாக அனைத்து நவீன சாமியார்களைப் பற்றிப் பேசுகிறார்.

04 . ஜெமோ ஜக்கியைப் பற்றியோ, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பற்றியோ தவறாக ஏதும் கூறவில்லை. அவர்களால் நடத்தப்படும் அமைப்புகளைப் பற்றிப் பேசுகிறார்.

மீண்டும் மீண்டும் ஈஷாவுடன் தொடர்புடையவர்களால் மேற் சொன்ன குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால் அதை பற்றி குழுமத்தில் எழுதலாம் என்று நினைத்து இதை எழுதுகிறேன். மற்றபடி வம்பளக்கும் நோக்கம் ஏதும் இல்லை. :-)

சிற்றோடை

அன்புள்ள சிற்றோடை

1. நான் ஈஷா யோக மையத்தின், அல்லது அதனுடன் தொடர்புள்ள ஏதேனும் மையத்தின் எந்த நிகழ்ச்சியிலும், எந்தக் கூட்டத்திலும் இன்றுவரை கலந்துகொள்ளவில்லை. அதற்கான தேவை ஏற்படவில்லை. ஒரே ஒரு முறை மனைவிமக்களுடன் ஈஷா மையம் சென்றிருக்கிறேன். அது ஈஷா மையத்தில் உள்ள நண்பர் மரபின் மைந்தன் முத்தையா உட்பட எந்த நண்பருக்கும் தெரிவிக்கப்படவில்லை. சும்மா ஒரு குடும்பசுற்றுலாப்பயணத்தின் பகுதியாகச் சென்றேன். வேடிக்கை பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டேன். ஜக்கி அவர்களை நேரில் பார்த்ததில்லை.

2. ஈஷா அமைப்பை அல்லது ஜக்கி அவர்களை நான் எங்கும் எதிர்விமர்சனம்செய்ததில்லை. முக்கியமான காரணம் அவர்களின் அமைப்பின் செயல்பாடுகள் பற்றி எனக்கேதும் தெரியாது என்பதே. நான் அவர்கள் பிரச்சார நூல்களில் சொல்லும் தியானமுறைகள் பற்றிய என் அவதானிப்புகளை மட்டுமே சொல்லியிருக்கிறேன் அவற்றைச் சொல்ல எனக்குத் தெரியும் என்பதனால். அதாவது நான் கருத்துச்சொன்னது வெளியே தெரியும் அந்த அமைப்பின் செயல்பாடுகளைப்பற்றி மட்டுமே.

3. ஜக்கி அவர்களின் தனிப்பட்ட ஆளுமை, அவர் தன் மாணவர்களுக்கு அளிக்கும் தனிப்பட்ட போதனை பற்றி நான் எதுவும் சொன்னதில்லை – எனக்கு ஏதும் தெரியாது. தெரிந்த சிலரை மட்டும் வைத்து அது புறக்கணிக்கதல்ல என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவே நான் எழுதியிருக்கிறேன்.

4. இந்து மதத்தின் மூன்று அடுக்குகள் ஒன்று அதன் பழங்குடிவழிபாட்டுத்தளம், இரண்டு அதன் பெருமதமரபு,மூன்று அதன் தத்துவ- யோக மரபு.இந்த மூன்றாம் மரபைப்பற்றிப் பேசும் அறிஞர்களும் ஞானிகளும் இல்லாமலாகி விட்ட சூழலில், அப்படி ஒன்று இருப்பதே மக்களுக்குத்தெரியாமல் இருக்கும்சூழலில், ஜக்கி போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதே என்எண்ணம்

5. நான் ஜக்கி அவர்களை சந்திக்கும் தேவை இருப்பதாக உணரவில்லை. 1992க்குப்பின் நான் வேறு எந்த குருநாதர்களையும் தேடிப்போனதுமில்லை, சந்தித்ததும் இல்லை. நான் என்குருவை அப்போதே கண்டுகொண்டவன், வெகுதூரம் அவருடன் சென்றும் விட்டவன்.

ஜெ

[ இணைக்குழுமத்தில் இருந்து. குழும விவாதத்தில் முத்தையாவும் இதை உறுதிசெய்ததோடு அமைப்புடன் நேர்தொடர்பில் இல்லாதவர்கள் சொல்லுவதற்கு அமைப்பு பொறுப்பேற்க வேண்டாம் என்றும் எழுதியிருந்தார்] .

முந்தைய கட்டுரைபார்பாரிகா
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 28 – சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்