இந்தப்பயணத்தில் நான் செய்த முக்கியமான விடுதல் என்பது சப்பாத்துகள்தான். கால்களுக்கு வெறும் செருப்பணிந்த ஒருவரை கட்சிலும் ராஜஸ்தானிலும் பார்ப்பது மிக அரிது. பிச்சைக்காரர்கள்கூட கிழிந்துபோன பழைய சப்பாத்துகளைத்தான் அணிந்திருக்கிறார்கள். அதற்கான காரணத்தை அங்கே சென்றபின்னர்தான் உணர்ந்தோம்.
வெறும்செருப்பு அணிந்திருப்பதனால் கால்கள் வரிவரியாக வெடித்துவிட்டன. குதிகால்கள் கத்தியால் கீறப்பட்டவை போல இருந்தன. காலையில் கழிப்பறை சென்றதும் கால்களை வெந்நீரில் கொஞ்சநேரம் வைத்து எடுத்தால்தான் நடக்க முடியும். இந்தப் பாடத்தை இனிமேல் எந்தப்பயணத்திலும் மறக்கக்கூடாதென நினைத்துக் கொண்டேன்.
ஆனால் என் முந்தைய பயணங்கள் எதிலும் நான் சப்பாத்துகள் அணிந்ததில்லை. எனக்குக் கால்களை மூடிவைப்பதே பிடிக்காது. உடல்முழுக்க எதையோ சுற்றிக்கட்டிவைத்த உணர்ச்சி ஏற்படும்.
வெடித்த கால்களைக் கழுவிக்கொண்டிருக்கும்போது சட்டென்று இரவில் கண்ட கனவு நினைவுக்கு வந்தது. கனவல்ல, கனவுத்தொகை. இந்தப்பயணத்தில் என்றெல்லாம் கொஞ்சம் முன்னாலேயே தூங்கிவிடுகிறேனோ அன்றெல்லாம் கனவுகள்தான். நேற்று ஒன்பது மணிக்கே படுத்துவிட்டேன். கனவில் நான் வரிசையாகப் பாதங்களுக்கு மலரிட்டு வழிபட்டபடியே வருகிறேன். பாதங்கள் மட்டும், மனிதர்கள் இல்லை. புகைக்குள் மறைந்தவர்கள்போல. அப்படிச்சொல்லமுடியாது, அவர்களைப் பார்க்கமுடியவில்லை, அவ்வளவுதான்.
ஒரு மெல்லிய சிலிர்ப்புடன் நினைவுகூர்ந்தேன், அவை எல்லாமே நித்ய சைதன்ய யதியின் பாதங்கள். அவை கனத்த முரட்டுப்பாதங்கள். நான் எத்தனையோ முறை அந்தப்பாதங்களைத் தொட்டு வணங்கியிருக்கிறேன். அப்போது அவரது பாதங்களைப் பார்ப்பது ஒரு மனக்கிளர்ச்சியை உருவாக்கும். நம் மரபில் பாதங்கள் ஒரு பெரும் குறியீடு. மாணவன் குருவின் முன் தன்னுடைய எல்லா அகங்காரங்களையும் கழற்றிவைத்துச் சரணடைவதன் அடையாளம் அடிபணிவது. அடியேன் அடியவர் என்ற சொல்லாட்சிகள் அவ்வாறு உருவானவையே. அத்துடன் அவை குரு நடந்து கடந்த தொலைவுகளின் அடையாளங்களும் கூட.
இதை ஓர் அடிமைமனநிலை என்று சொல்லத்தான் எனக்கு சுந்தர ராமசாமி கற்பித்திருந்தார். அவர் எனக்களித்த வலுவான புறவயத்தருக்கம் எப்போதும் என்னிடம் உள்ளது. உண்மையில் இது ஓர் அடிமை மனநிலையேதான். அடிமை என்ற மனநிலையே அடி என்பதில் இருந்து வந்ததுதான். ஆனால் சுதந்திரத்துக்கு ஒரு மதிப்பிருப்பது போலவே அடிமைத்தனத்துக்கும் ஓர் மதிப்புண்டு. அதுவும் ஒரு ஆதாரமான மானுட மனநிலையே. குறிப்பாக அறிவுத்தளத்தில். சொல்லப்போனால் சுதந்திரமாக இல்லாதவன் நல்ல அடிமை அல்ல, அடிமையாக இருப்பதற்கான முடிவை அவன் எடுப்பதற்கே சுதந்திரம் தேவை அல்லவா? அடிமைத்தனமும் சுதந்திரமும் ஒன்றை ஒன்று சமன்செய்யும் இரு ஆதார விசைகள்.
அடிமைத்தனம் என்பது பரிபூரணமான ஒப்புக்கொடுத்தல். சொல்லும்போது அது எளிதாக இருக்கிறது, உண்மையில் அது சாதாரணமானதல்ல. நம் ஆளுமையில் எப்போதுமே எச்சரிக்கை உணர்வும் எதிர்ப்புணர்வும் இருக்கிறது. அது நமக்கு இயற்கை அளித்த கொடை. நம் பாதுகாப்புக்காக, நம்முடைய உயிர்வாழ்தலுக்காக உள்ள ஆதார உணர்ச்சி அது. திசைப்பிரக்ஞை போல. அதை இழப்பதென்பது இயல்பாக நிகழாது. திட்டமிட்டு, பயின்று, உளப்பூர்வமாக மெல்லமெல்ல நாம் நம்மிடமிருந்து அவற்றைக் கரைத்தழிக்கவேண்டும். அதன்பின்னரே உண்மையான ஒப்புக்கொடுத்தல் நிகழமுடியும்.
அது நிகழ்ந்தபின்னர் நாம் ஒன்றை உணர்வோம், ஒப்புக்கொடுத்தல் என்பது ஒரு பிரம்மாண்டமான சுதந்திரத்தை அளிக்கிறது. நாம் எப்போதும் சுமந்தலையும் நம் சுயத்தை, நம் ஆளுமை என்ற பாரத்தை நம்மிடமிருந்து நாம் இறக்கிவைத்து இலகுவாகிறோம். பறக்க ஆரம்பிக்கிறோம். இந்த அடிமைத்தனத்தை, அதன் சுதந்திரத்தை நாம் மீண்டும் மீண்டும் ஆழ்வார், நாயன்மார் பாடல்களில் காண்கிறோம். அவை அடிமையின் பெரும் சுதந்திரத்தின் களிப்புக்கொண்டாடல்கள்.
என் வரையில் நித்யாவிடம் என் ஒப்புக்கொடுத்தல் எனக்கென்ன அளித்தது? நான் மட்டுமே சொல்லிக்கொள்ளக்கூடிய, அல்லது அந்த அளவுக்கு என்னருகே வந்த இன்னொருவரிடம் சொல்லக்கூடிய பல விஷயங்கள் உண்டு. புறவயமாக ஒன்றைச் சொல்கிறேன். நித்யா அளவுக்கு எந்த மனிதரையும் நான் கவனித்ததில்லை. நித்யாவின் ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு பாவனையையும் நான் முற்றாக உள்வாங்கியிருக்கிறேன். அவரது அத்தனை நூல்களையும் கற்றிருக்கிறேன். இருபதாண்டுகளாக அவரை ஒவ்வொரு நாளும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். படிப்பவர்களுக்குத் தெரியும், பலமணிநேரம் படித்தாலும் சில நிமிடங்கள்தான் ஆழ்ந்த கவனம் நிலைக்கிறது என. அது முத்துச்சிப்பி திறக்கும் கணம். அப்போது உள்ளே செல்வதுதான் நம்மில் நம் உறுப்பாக வளர்கிறது.
நித்யாவுடன் நான் இருந்த எல்லா நாட்களும் எல்லாக் கணங்களும் அத்தகைய உச்சகணங்களால் ஆனவை. அந்த அளவுக்கு ஒரு கல்வி வேறெப்போதுமே சாத்தியமல்ல. நான் என் வாழ்நாளில் ஒட்டுமொத்தமாகப் படித்த எல்லா நூல்களும் எல்லாக் கல்வியும் அத்தனை பயணங்களும் அத்தனை அனுபவங்களும் அளித்த அறிதல்களைவிட நித்யாவுடன் இருந்த நாட்கள் அளித்த அறிதல் அதிகம். அது உச்சகட்டக்கல்வி மட்டுமே நிகழ்ந்த தருணங்களின் மணியாரம். பெருகிக்கொட்டும் அருவியை துளி சிந்தாமல் நான் முழுக்க உள்வாங்கிக்கொண்டேன். அது சாத்தியமானது அந்த அர்ப்பணிப்பால்தான். அது என் வாழ்க்கையை வெற்றிபெறச்செய்தது என இப்போது உணர்கிறேன். குருவுக்குப் பாத வணக்கம்.
இந்த சமணத்தலங்கள் முழுக்க அருகர்களின் பாதத்தடங்களைக் கல்லில் பொறித்து வைத்திருக்கிறார்கள். பல பாதத்தடங்கள் இரண்டாயிரம் வருடப்பழக்கம் கொண்டவை. சில பாதத்தடங்களுக்கு அவற்றுக்குரியவர்களின் பெயரடையாளம் உள்ளது. பெரும்பாலானவற்றுக்கு இல்லை. அப்பாதங்கள் சென்ற தொலைவுகளே முக்கியம், அவர்கள் அல்ல. அத்தனை பாதங்களும் நித்யாவின் பாதங்களாகத் தெரிகின்றன. அத்தனை பாதங்கள் வழியாகவும் நடந்தது ஒரே பயணம். இந்தியா ஒரு ஆசிரியப்பெருங்கடல் என்றார் ஓ.வி.விஜயன் அவரது குருசாகரம் என்ற நாவலில். சாகரம் ஒன்று, அலைகள் தனிமனிதர்களாக வருகின்றன. குருநாதர்கள் தோன்றிக்கொண்டே இருக்கும் இந்த மண்ணுக்கும் வணக்கம்.
[ரண்தம்போர் கோட்டை]
இன்று காலை கிளம்பி அருகே உள்ள ரண்தம்போர் புலிகள் சரணாலயத்துக்குச் சென்றோம். நேற்றுதான் சவாய் மாதோப்பூர் வந்தோம்.அங்கே தங்கலாம்தான், ஆனால் நாங்கள் பார்க்கவேண்டிய புராதனச் சமண ஆலயம் ரண்தம்போர் கோட்டைக்குள்தான் இருந்தது. ஆகவே சரணாலய வழியில் எங்காவது தங்கலாமென இந்த ஓட்டலைத் தேர்ந்தெடுத்தோம். காலையில் எழுந்து ஏழுமணிக்கெல்லாம் ரண்தம்போர் காட்டுக்குள் சென்றுவிட்டோம்.
ராஜஸ்தானில் உள்ள மிகப்பெரிய வனச்சரணாலயம் இதுதான். வறண்ட நிலத்தில் ஓடும் பனஸ், சம்பல் என்னும் இரு ஆறுகளினால் உருவான காடு. நான்கு பக்கமும் பெரிய மலைகள், நடுநடுவே மணல்குன்றுகள். பெரும்பாலும் குட்டை மரங்கள். ஓடைகளை ஒட்டிப் பெரிய மரங்கள் வளர்ந்துள்ளன. சடைத்திரிகள் போல கொடிகள் இழிந்த பெருமரங்கள் முழுக்க குரங்குகள்.
[இந்தர்கர்]
காடுமுழுக்க மயில்கள் கூட்டம் கூட்டமாக உலவக்கண்டோம். நீல நிறக்கழுத்துள்ளவை, பச்சை நிறக்கழுத்துள்ளவை. மரங்களில் ஏறி அமர்ந்த மயில்கள் பூக்கொய்யும் பெண்கள் போலத் தோன்றுகிறார்கள் என்ற சங்க இலக்கிய வர்ணனை நினைவுக்கு வந்தது. காலை நல்ல குளிராக, ஒளியுடன் பொன்தூசி சுழல சிறுபூச்சிகள் ஒளிர்ந்து மறைய காரைச் சூழ்ந்திருந்தது. நேற்றைய நகரத்தின் அத்தனை மாசுகளையும் எங்கள் நினைவுகளில் இருந்து அருவிபோல அடித்துக்கொட்டிக் கழுவிச்சென்றது புலரி.
ரண்தம்போரின் பழைய பெயர் ராணாஸ்தம்பபுரா. ராணாவின் வெற்றித்தூண் இருந்த ஊர் எனப் பொருள். முதலாம் பிரிதிவிராஜ் சௌகான் காலம் முதல் இந்த ஊர் சமணர்களின் முக்கியமான தலமாக உள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தசேனசூரி என்ற சமணமுனிவர் இந்த ஊரை அவரது ஜினஸ்தலமாலிகா என்ற நூலில் சமணர்களின் முக்கியமான புனிதத்தலமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கோட்டை கிபி 944இல் நகில் ஜாட்களால் கட்டப்பட்டது. நகில் ஜாட் சாதியினர் நாகவன்ஷி என்ற மன்னரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். தொன்மையான நாகர்குலத்தவர். அவர்களில் ராஜா சஜ்ராஜ் சிங் நகில் முக்கியமானவர். நகில் ஜாட்டுகள் சந்திரகுப்த மௌரியர் காலத்திலேயே அவரது சிற்றரசர்களாக இப்பகுதியை ஆண்டுவந்திருக்கிறார்கள். அவர்களுக்குச் சந்திரகுப்த மௌரியர் அளித்த ஒரு கொடையைப் பற்றி அவரது கல்வெட்டு அடங்கிய நினைவுத்தூண் ஒன்று இங்கே கண்டடையப்பட்டுள்ளது.
நீண்டபுகழுடன் இக்கோட்டை நெடுங்காலம் இருந்தது. ராஜபுத்திர மன்னரான பிரிதிவிராஜ் சௌகான் இந்தக் கோட்டையைக் கைப்பற்றி ஆண்டார். 1192இல் அவரிடமிருந்து முகம்மது கோரி இக்கோட்டையைக் கைப்பற்றினார். சௌகான் காடுகளில் ஒளிந்துகொண்டு போராடினார். மீண்டும் அவர் கோட்டையைக் கைப்பற்றிக்கொண்டார்.
டெல்லி சுல்தான் இல்டுமிஷ் 1226இல் மீண்டும் கோட்டையைத்தாக்கித் தோற்கடித்தார். அவரிடமிருந்து மீண்டும் சௌகான்களால் கோட்டை கைப்பற்றப்பட்டது. தொடந்து டெல்லி சுல்தான்கள் இக்கோட்டையைக் கைப்பற்றப் போராடிக்கொண்டே இருந்தனர். ஏனென்றால் இது ராஜஸ்தானின் வளமான பல நிலப்பரப்புகள் மீது ஆதிக்கம் செலுத்தும் கோட்டையாக இருந்தது. சுல்தான்கள் கோட்டையைப் பலமுறை கைப்பற்றியபோதும் கைவசம் வைத்திருக்க முடியவில்லை, கோட்டையைச் சுற்றியிருந்த காடும் அதைச்சுற்றிய பாலைவனமும்தான் காரணம்.
கடைசியாக ஒரு முக்கியமான நிகழ்வு கோட்டையின் தலையெழுத்தை மாற்றியமைத்தது. 1299இல் கோட்டையை ஆண்ட முதலாம் ஹமீர் தேவ் என்ற மன்னர் அலாவுதீன் கில்ஜியின் தளகர்த்தரான முகம்மது ஷா என்பவருக்கு அடைக்கலம் கொடுத்தார். முகமது ஷா அலாவுதீன் கில்ஜியின் நெருக்கமான உறவினர்.
அலாவுதீன் கில்ஜியின் ஏராளமானஅந்தப்புரப் பெண்களில் இளம் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கும் இளைஞரான முகமது ஷாவுக்கும் காதல் ஏற்பட்டது. அது அலாவுதீன் கில்ஜிக்குத் தெரிந்ததும் அவர் சினம் கொண்டு அவர்களைக் கொல்ல ஆணையிட்டார். காதலர்கள் தப்பி பல ஊர்களில் அபயம் தேடி அலைந்தார்கள். அலாவுதீன் கில்ஜியை அஞ்சிய மன்னர்கள் எவரும் அவர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை.
கடைசியாக அவர்கள் ஹமீர் தேவ் அரசவைக்கு வந்தனர். அவரிடம் அடைக்கலம் கோரினார்கள். தன்னை நம்பி வந்தவர்களைக் கைவிடுவது ராஜபுத்திர வீரமல்ல என்று எண்ணிய ஹமீர்தேவ் அவர்களுக்கு அபயம் கொடுத்தார். அலாவுதீன் கில்ஜி தூதர்களை அனுப்பி எச்சரித்தாலும் அவர் அபயம் கொடுத்தவர்களைக் கைவிடத் தயாராகவில்லை. பெரும் படையுடன் தானே தலைமை தாங்கி தெற்கே வந்த அலாவுதீன் கில்ஜி ஒரு வருடம் முற்றுகையிட்டு கோட்டையைக் கைப்பற்றினார்.
ஹமீர் தேவ் சௌகான் கொல்லப்பட்டார். முகமது ஷா சிறைப்பிடிக்கப்பட்டு அலாவுதீன் கில்ஜி முன் கொண்டு வரப்பட்டார். ‘உனது கடைசி ஆசை என்ன?’ என்று கேட்டார். ‘உன்னைக் கொன்றுவிட்டு ஹமீர் தேவின் மகனை அரசனாக்குவதுதான்’ என்று அவர் பதில் சொன்னார். முகமது ஷாவும் அவர் காதலியும் கழுவேற்றிக் கொல்லப்பட்டு கோட்டைவாசலில் தொங்கவிடப்பட்டார்கள்.
ராணா கும்பாவாலும் ராணா பிரதாப் சிங்காலும் கைப்பற்றப்பட்ட இக்கோட்டை கடைசியாக ஜெய்ப்பூர் சமஸ்தானத்துடன் இருந்தது. 1955இல் இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட காடாக அறிவிக்கப்பட்டது. 1973இல் அருகே உள்ள பிற வனப்பகுதிகள் இணைக்கப்பட்டு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சரணாலயத்துக்குள் உருவாக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய ஏரிகளால்தான் இது விலங்குகள் வாழ்விடமாக நீடிக்கிறது. கோடைக்காலத்தில் மலைஊற்றுகள் வற்றும்போது இந்த ஏரிக்கரைகளில் தங்கி மிருகங்களைப்பார்க்க வாய்ப்பு இருப்பதனால் கோடைகாலமே இங்கே அதிகமாகப் பயணிகள் வரும் காலகட்டம்.
ரண்தம்போர் காட்டுக்குள் இருக்கிறது ரண்தம்போர் கோட்டை. மலையுச்சியில் கல்கிரீடம் போலத் தெரிய ஆரம்பிக்கும் இந்தக் கோட்டையைப்பார்ப்பது மன எழுச்சியூட்டும் அனுபவம். பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை 700 அடி உயரத்தில் மலையுச்சியில் உள்ளது. சிவந்த பாறைக்கல்லால் கட்டப்பட்டது. காலை நேரத்தில் அந்தப் புராதனமான, கைவிடப்பட்ட கோட்டையின் அகலமான கற்படிகளில் ஏறிச்செல்வது இறந்த காலத்தின் குகைக்குள் இறங்கி மூழ்கிச்செல்வதுபோலத் தோன்றச்செய்தது. ஓங்கிய கோட்டைச்சுவர்கள் மேல் அந்தரத்தில் மிதந்து நிற்பதுபோலக் கண்காணிப்பு உப்பரிகைகள்.
பெரும்பாலான கோட்டைகள் மன்னராட்சிக்காலத்தில் உள்ளூர்க் காவலர்களின் பொறுப்புக்கு விடப்பட்டிருக்கும். அவர்கள்தான் ஊரை நன்கறிந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் சாமிகளை அங்கே நிறுவி வழிபட்டுவருவார்கள். இந்த ஊரில் கணிசமான கோயில்களில் அம்பாதேவி, காளி, சாமுண்டி, அனுமான் போன்ற தெய்வங்கள் கோட்டை முகப்பில் நிறுவப்பட்டிருக்கும். ரண்தம்போர் கோட்டை வாசலில் உருண்டைத் தலை மட்டுமேயான ஒரு தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. அந்தத் தெய்வத்தை கும்பல்கர் கோட்டையிலும் பார்த்தேன். ஒரு ராஜஸ்தானிய நாட்டுப்புறத் தெய்வம்.
கும்பல்கர் கோட்டையில் முழுக்க செந்தூரம் பூசப்பட்டு இருந்த சிலை இன்னும் பெரிதாக ஒரு வெறும் முகம் மட்டுமாக இங்கே இருந்தது. நம்மூர் ரேணுகாதேவி சிலை நினைவுக்கு வந்தது, பெரும்பாலும் அது தலைமட்டுமேயாக நிறுவப்பட்டிருக்கும். பழங்குடிச்சிலைகளில் சில பொது அம்சங்களை நான் அவதானித்திருக்கிறேன். அவை – ஒன்று, படுக்க வைக்கப்பட்டிருக்கும் அல்லது தலை மட்டுமாக இருக்கும் அல்லது புடைப்புச்சிலையாக இருக்கும். எளிதில் உருவாக்க வசதியான வடிவில் கடவுள் அவர்கள் மனதில் உதிக்கிறார்.
ரண்தம்போர் கோட்டை உச்சியில் ஒரு சமண ஆலயம் உள்ளது. சம்பவ நாதருக்குரியது. அக்கோட்டை கட்டப்பட்ட காலத்திலேயே அக்கோயிலும் அங்கிருந்தது. அக்கோட்டையைக் கட்டிய இந்து மன்னர்கள் சமண வணிகர்களுக்காக அமைத்த ஆலயம் அது. பின்னர் அது அலாவுதீன் கில்ஜியால் இடிக்கப்பட்டது. கோட்டை இஸ்லாமியர் வசம் இருந்த போது கோயில் இடிந்த நிலையில் இருந்தது. முகலாயர் காலத்தில் ஜெய்ப்பூர் முகலாயர்களுக்குக் கட்டுப்பட்ட சமஸ்தானமானபோது கோயில் மீட்டுக் கட்டப்பட்டது. மும்முறை செப்பனிடப்பட்ட கோயிலில் இப்போதும் கொஞ்சம் வேலை நடந்துகொண்டிருக்கிறது.
கோயிலுக்குள் வெண்பளிங்குச்சிலையாக ஆதிநாதர் அமர்ந்திருக்கிறார். சுற்றி உள்ள கோயில் சிற்பவேலைகள் அற்ற சின்னக் கட்டுமானம். அந்தக் குளிரான காலையிலும் சமணர்கள் பத்துப்பதினைந்துபேர் அவர்களின் பூஜையுடையுடன் வந்து அபிஷேகம் செய்து துதிகள் சொல்லி வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆதிநாதர் கோயிலருகே இடிந்த நிலையில் ராணியின் மண்டபமும் அமீர் மகால் என்ற அரண்மனைப்பகுதிகளும் உள்ளன. 7 கிமீ பரப்புள்ள கோட்டை வளாகத்துக்குள் பத்து குளங்களும் ஆலயங்களும் உள்ளன. கோட்டை வளைப்பெங்கும் அரண்மனைகள் இடிந்து கற்குவியல்களாக, குட்டிச்சுவர்களாக நிற்கின்றன. இங்குள்ள கணேசர் ஆலயம் முக்கியமானது. அதற்குக் காலையிலேயே நிறைய பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்கான சில கடைகளும் உள்ளன. அங்கே டீ குடித்தோம்.
கோட்டை முழுக்கக் குரங்குகள் வெயில்காய்ந்தன. விவேகம் முதிர்ந்த சில முதிய குரங்குகள் மல்லாந்து காலாட்டிக்கொண்டு யோசனையில் மூழ்கியிருந்தன. எப்போதோ பார்த்த ஒரு திரைப்படத்தில் ஒரு கப்பலில் சென்ற அனைவரும் கொல்லப்பட்டபின் காலிக்கப்பலில் குரங்குகள் ஏறி விளையாடும் காட்சி நினைவுக்கு வந்தது. நாகரீகம் கட்டி எழுப்பிய கோட்டை மீண்டும் ஆதி மனிதர்களுக்குக் கையளிக்கப்பட்டது போலத் தோன்றியது.
மதியம் திரும்பி விடுதிக்கு வந்தோம். வரும் வழி முழுக்கக் காடுகளில் மிளாக்கள் நின்றிருந்தன. சில ஆண்மிளாக்கள் காளை அளவு பெரியவை. அவற்றுக்காக இலைகளை முந்தைய நாள் இரவு வெட்டிப் போட்டிருந்திருக்கிறார்கள். அவற்றைத் தின்ன மிளாக்கள் வர மிளாக்களைத் தேடிப் புலிகள் வரும். வனஇரவுலாவுக்காகக் காட்டிலாகாக்காரர்கள் செய்த தந்திரம். அவற்றைத்தான் விடிந்தபின்னரும் மிளாக்கள் தின்றுகொண்டிருந்தன.
கோட்டையையும் காட்டையும் விட்டு வெளியே செல்லும்போது வரலாறும் வனமும் அகத்துக்குள் கலந்து கொந்தளித்தன. எங்கும் நான் இதேபோல ஒரு முக்கியமான வரலாற்றுத்தலம் வனத்தால் அணைத்து நொறுக்கி உண்ணப்படுவதைக் கண்டதில்லை. வரலாறெங்கும் வனநீதியே ஆண்டிருக்கிறது என்பது எப்போதும் முதலில் ஏற்படும் எண்ணம். வரலாறு என்பது வெற்றியாளர்களுக்குச் சொந்தம் என்பதே நமக்கு மேலை வரலாற்றாளர் கற்பிக்கும் பாடம்.
ஆனால் நான் ஹமீர் தேவை வெற்றியாளராக எண்ணுவேன். வெற்றி என்றால் என்ன? அலாவுதீன் கில்ஜி மட்டும் என்ன அடைந்தார்? அவரது கோட்டைகளும் இடிபாடுகளாகவே கிடக்கின்றன. ஹமீர் தேவ் ஒரு மதிப்பீட்டை நிறுவிச்சென்றார். அதை எளிதில் இடிக்க முடியாது.அது இந்தியாவில் என்றும் வாழும்
சாவாய் மாதோப்பூர் நகர் நடுவே பூரண ஆயுததாரியாகக் குதிரைமேல் அமர்ந்திருக்கும் ஹமீர் தேவ் சௌகானின் சிலை ஒரு பெரும் வெற்றியின் அடையாளம் என நினைத்துக்கொண்டேன்.
மேலும்…