நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசன் நேற்று மாலை தன் ஊரான புலிப்புனம்[ தக்கலை, குமரிமாவட்டம்] கிராமத்தில் காலமானார். ஹெப்ஸிபா ஆங்கிலப்பேராசிரியர். அவரது தந்தை பர்மாவில் மரவணிகராக இருந்தார். பர்மாவில் ஐராவதி ஆற்றங்கரையில் ஹெப்ஸிபா பிறந்தார். செல்வச்செழிப்பு மிக்க குடும்பம். உலகப்போரை ஒட்டி பர்மாவில் வணிகத்தைக் கைவிட்டுவிட்டு ஹெப்ஸிபா குடும்பம் நாகர்கோயிலுக்குக் குடியேறியது. ஹெப்ஸிபா நாகர்கோயில் டதி பள்ளியில் சேர்ந்தார். டதி அம்மையாரின் செல்லப்பெண்ணாக இருந்தார். ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றினார். அப்போது திருவிதாங்கூர் இளவரசர்களுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.
ஹெப்ஸிபா பேராசிரியர் ஜேசுதானை மணந்தது அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம். ஜேசுதாசன் சாதாரணக் கொத்தனாரின் மகன். அன்று தமிழ்ப் பேராசிரியருக்கு மதிப்பும் இல்லை, சம்பளமும் இல்லை. பெண் பார்க்க வந்தபோதே ஜேசுதாசனை பிடித்துப்போக அடம்பிடித்துத் திருமணம் செய்துகொண்டார் ஹெப்ஸிபா. அது ஒரு மகத்தான காதல். கிட்டத்தட்ட ஐம்பது வருடம் அந்தக் காதல் உணர்ச்சிகரமான , முழுமையான ஓர் உறவாக நீடித்தது.
எந்த மிகச்சிறந்த காதலையும்போல இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றியமைத்துக்கொண்டனர். ஹெப்ஸிபா தமிழார்வம் கொண்டவர் ஆனார். பேராசிரியர் ஆங்கில இலக்கியத்தில் தோய்ந்தார். இருவரும் கல்வியை ஒரு சேவையாகவே கொண்டனர். பேராசிரியர் அப்பெயருக்கு ஏற்பப் பெரும் ஆசிரியர். எப்போதும் மாணவர் புடைசூழ வாழ்ந்தவர். பல மாணவர்களை உருவாக்கியவர்.
பேராசிரியரின் தூண்டுதலால் ஹெப்ஸிபா தன் முதல் நாவலை எழுதினார்- புத்தம் வீடு. மாநீ அவரது இரண்டாவது நாவல். புத்தம்வீடு தமிழின் தொடக்ககால நாவல்களில் முக்கியமானதாக இன்றும் கருதப்படுகிறது. பேராசிரியரின் துணையுடன் ஹெப்ஸிபா ‘Countdown from Solomon’ என்ற அவரது பெரிய இலக்கியவரலாற்று நூலை எழுதிமுடித்தார்.
தீவிரமான கிறித்தவப்பற்றுள்ள ஹெப்சிபா அவரது இறுதிக்காலத்தை மதச்சேவையில் கழித்தார். பேராசிரியரின் மறைவு அவருக்களித்த தனிமையை அவ்வாறு அவர் தாண்டினார்.
ஹெப்ஸிபா அளித்த உணவைப் பலமுறை உண்டிருக்கிறேன். அவர் அளித்த இலக்கியக் கருத்துக்களை நிறைய சிந்தித்திருக்கிறேன். குருபத்தினி என்ற இடம் எப்போதும் அவருக்கு என் மனதில் உண்டு. ஹெப்ஸிபாவுக்கு என் அஞ்சலி