பிக்கானீரில் இருந்து மதியமே கிளம்பினோம். இன்று முழுக்க முழுநேரமும் காரிலேயே செலவழிந்தது. ஒரு நீண்டபயணம் முடிந்து திரும்பி வரும்போது கடலோதம் இறங்குவது போல ஒரு மனச்சோர்வு உருவாகும். அதைத் தவிர்க்கவே திரும்பும் வழியிலும் நிறைய இடங்களைக் குறித்து வைத்திருந்தோம். ஆனாலும் திரும்புகிறோம் என்ற உணர்ச்சி இருந்தபடியேதான் இருந்தது.
ஒரு மாதம் ஊரைவிட்டு விலகி இருந்தாலும் கூட எவருமே பயணத்தின் சலிப்பை உணரவோ, திரும்பிச்செல்லவேண்டும் என்ற உணர்ச்சியை அடையவோ இல்லை. இப்படித் தோன்றுகிறது, வெறுமே ஊர் சுற்றுவதிலும் வேடிக்கை பார்ப்பதிலும் மட்டும் ஆர்வமிருந்தால் அதிகம் போனால் பத்துநாட்களுக்குதான் அந்த விசை இருக்கும். கலையிலும் வரலாற்றிலும் ஆர்வமிருந்தால் மட்டுமே மன எழுச்சி குன்றாமல் நீடிக்கிறது.
ஜெய்ப்பூருக்கு இரவு ஏழுமணிக்கு வந்துசேர்ந்தோம். ராஜஸ்தானியர்களுக்குத் திருமண மாதம் போலிருக்கிறது. சேட்டுகள் ஷெர்வானிகளுடனும் சேட்டாணிகள் சரிகைச் சேலைகளுடனும் நடனமிட்டபடி மின்விளக்கு வெளிச்சத்தில் மின்னிக்கொண்டு செல்ல,அலங்காரக்குதிரையில் வாளேந்தியபடி மணமகன் பீதியுடன் சென்று கொண்டிருக்கும் ஊர்வலங்கள். திருமண மண்டபங்களில் ஒளிவெள்ளம். இசை.
எந்த விடுதியிலும் இடமில்லை. ஆகவே தேடித்தேடி நாங்கள் முதலில் பார்க்கவேண்டிய சங்கானீர் சமணக் கோயில் அருகிலேயே வந்து அறை போட்டோம். நாங்கள் இதுவரை போட்டதிலேயே அதிக செலவுள்ள அறை, எட்டுப்பேருக்கு இரண்டாயிரம் ரூபாய். மூவாயிரம் ரூபாய் சொன்னவர் எங்கள் குடும்ப கோஷ்டிப்பாடலை சோகமாகப் பாடியதும் ஆயிரம் ரூபாய் குறைத்துக்கொண்டார்.
சங்கானீர் நகரில் உள்ள சங்கிஜி திகம்பர் சமணக் கோயில்,பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம். இங்கே கிடைத்த கல்வெட்டின்படி இங்குள்ள ஆதிநாதர் சிலை கிமு இரண்டாம் நூற்றாண்டிலேயே இங்கே இருக்கிறது. மீண்டும் நெடுங்காலம் இந்த ஆலயம் இடிந்து மண்ணுக்குள் கிடந்ததாம். பத்தாம் நூற்றாண்டில் ஒரு திகம்பரர் இங்கே தவம்செய்தபோது உள்ளுணர்வால் இங்கே சிலை புதைந்திருப்பதை உணர்ந்து கோயிலை மீட்டிருக்கிறார். அதன்பின்னர் பல படிகளாக இக்கோயில் விரிவாக்கம் செய்து கட்டப்பட்டது.
இந்தப் பேராலயம் ஏழு அடுக்குகள் கொண்டது, ஓர் அடுக்கு மண்ணுக்குள் உள்ளது. அங்கே திகம்பரர்கள் மட்டுமே செல்ல அனுமதி. மேலே உள்ள கோயில் கொஞ்சம் வித்தியாசமான அமைப்புள்ளது. நடுவே ஒரு மேடையில் ஆதிநாதருக்கும் அஜிதநாதருக்கும் மல்லிநாதருக்கும் சிலைகள் உள்ளன. கோயிலைச்சுற்றி ஒரு பிராகாரம். அதில் பிற தீர்த்தங்கரர்களுக்கான சன்னிதிகள். சிற்பவேலைகள் என அதிகமாக ஏதுமில்லை. பிராகாரம் இரண்டு மாடி. மாடிமேல் சிறிய கோபுரங்கள் கொண்ட கோயில்களில் தீர்த்தங்கரர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
சங்கானீர் ஜெய்ப்பூரின் புறநகராக இன்று மாறியிருக்கிறது. பத்து கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து ஜெய்ப்பூருக்குள் செல்வதற்குள் நகர வாழ்க்கை மீதே கசப்பு வந்துவிட்டது. இத்தனை பயணத்தில் ஜெய்ப்பூர் போல வெறுப்பை அளித்த இன்னொரு நகரம் இல்லை. எந்தவித ஏற்பாடுகளும் இல்லாமல் கண்டபடி போக்குவரத்து பெருகியிருக்கிறது. எங்கும் தூசு, சத்தம், அடைசல். பல இடங்களில் மேம்பாலத்துக்காகத் தோண்டிப்போட்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு வித்தியாசம் தெரிகிறது, மக்கள் எதையும் ஒரு பிரச்சினையாகவே எடுத்துக்கொள்வதில்லை. வழிதவறி ஒருவழிப்பாதையில் சென்று நாம் உயிரை வாங்கினாலும் மரியாதையாகவே பேசுகிறார்கள். அன்னியர்களை தூற்றுவது இப்பகுதிகளில் பொதுவாகவே இல்லை. ஆச்சரியம்தான்.
ஜெய்ப்பூர் ராஜஸ்தானின் தலைநகரம். மிகச்சிறப்பாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தொல்நகரங்களில் ஒன்று என்ற புகழ் இதற்குண்டு. ஜெய்ப்பூரைச் சுற்றிலும் அரைப்பாலைவன நிலம் இருந்தது. இன்று நவீன நீராதார வசதிகளால் கணிசமான நிலம் வேளாண்மைக்குள் வந்துள்ளது.
பளிங்குக்கல் வணிகத்தால் ராஜஸ்தானின் பொருளியல் நிலை உயர்ந்திருப்பதை ஜெய்ப்பூரைப் பார்த்தால் அறிந்து கொள்ளலாம். சென்ற சில வருடங்களில் கட்டிடங்களும் வாகனங்களும் செறிந்து, வெடிக்கும் நிலையில் உள்ளது ஜெய்ப்பூர். சுற்றுலாத்தலம் என்று புகழ். நிறையப் பயணிகள் வருகிறார்கள். ஆனால் எந்தச் சுற்றுலாத்தலத்துக்கும் வாகனப்புகையில் மூச்சுத்திணறாமல் செல்ல முடியாது. காரில் சென்றால் வளையத்தைத் திருப்பியே கை ஓய்ந்துவிடும். கைடுகள் பின்னால் வந்து கத்திக் கூச்சலிட்டு விடாமல் தொந்தரவு செய்கிறார்கள். சுற்றுலாப்பயணிகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு தனி நரகம் எனச் சொல்லலாம்.
ஜெய்ப்பூர் சிவப்பு நகரம் என அழைக்கப்படுகிறது. சுடுமண் நிறமுள்ள செந்நிறமான கற்களால் கட்டப்பட்டது இந்தக் கோட்டையும் அரண்மனையும். 1876இல் விக்டோரியா மகாராணி ஜெய்ப்பூர் வந்ததை ஒட்டி இந்த நகரில் உள்ள பிற கட்டிடங்களை ஜெய்ப்பூர் மன்னர் சிவப்பு வண்ணம் பூசச்செய்ததால் மொத்த நகரமே சிவப்பாக ஆக்கப்பட்டது. ஜெய்ப்பூர் பற்றிய சுற்றுலா விளம்பரங்களில் அது சிவப்புநகரம் என்பதே முக்கியமான அடையாளமாகச் சொல்லப்படுகிறது.
ஜெய்ப்பூர் புராதனமான மத்ஸ்யா அரசவம்சத்தால் ஆளப்பட்ட நிலப்பகுதி. 1727இல்தான் ஜெய்ப்பூர் நகரம் மகாராஜா இரண்டாம் சவாய் ஜெய் சிங் அவர்களால் உருவாக்கப்பட்டது. அருகே உள்ள அம்பர் தான் அவரது தலைநகரமாக அப்போது இருந்தது. அம்பர் இன்னும் பாலைவனத்துக்குள் இருந்தமையால் கொஞ்சம் நீர்வசதி உள்ள இடத்துக்கு மாற மன்னர் முடிவெடுத்தார். ஜெய்ப்பூர் இன்றிருக்கும் இடத்தில் ஓர் இயற்கை ஏரி இருந்தது. அந்த ஏரியை விரிவாக்கம் செய்து கரைகள் கட்டி அதனருகே இந்தக் கோட்டையையும் அரண்மனையையும் அமைத்தார்.
ஜெய்ப்பூர் வித்யாதர் பட்டாச்சாரியா என்ற அமைச்சரின் திட்டப்படி கட்டப்பட்டது என்கிறது வரலாறு. வங்காளத்தைச் சேர்ந்தவரான வித்யாதர் பட்டாச்சாரியா மன்னரின் நிதிச்செயலாளராக இருந்தார். வாஸ்து சாஸ்திர நிபுணரான வித்யாதர் பட்டாச்சாரியாதான் ஜெய்ப்பூருக்கு இன்றுள்ள அமைப்பை அளித்தார் எனச் சொல்லப்படுகிறது.
நான்கு வருடம் இந்த நகரத்தை நிர்மாணிக்கும் பணி நடைபெற்றது. பொதுவாகக் காசி போன்ற நகரங்கள் போலக் கட்டுப்பாடில்லாமல் அடர்ந்த சந்து பொந்துகள் இல்லாமல் இந்த நகரம் அழகான கம்பீரமான கட்டிடங்களின் வரிசையாக உள்ளது. கோட்டைக்குள் உள்ள நகரம் மட்டுமே பழைய ஜெய்ப்பூர். கோட்டைக்கு வெளியே தொடர்ந்து பற்பல கிமீ தூரத்துக்கு ஜெய்ப்பூர் வளர்ந்து விரிந்துகொண்டே செல்கிறது.
செந்நிறமான ராஜஸ்தான் பாணிக் கட்டிடங்களும் அகலமான நேரான தெருக்களும் கொண்ட நகரின் கோட்டை நடுப்பகுதி ஒரு தொன்ம நகருக்குள் வந்துவிட்ட உணர்வை உருவாக்குவது. ஆனால் கட்டுப்பாடில்லாமல் வளரவிடப்பட்ட கட்டிடங்களும் நவீன விளம்பரங்களும் அந்த உணர்வைச் சிதைக்கின்றன. சுற்றுலா எந்த அளவுக்குச் செல்வம் கொழிக்கும் தொழில் எனத் தெரியாத காலகட்டத்தில் இதெல்லாம் நடந்துவிட்டிருக்கிறது. இன்றுகூட இந்தப் புராதன சிவப்பு நகரத்தை அதைச்சுற்றியுள்ள நாகரீக மலினங்களில் இருந்து மீட்டு எடுக்க முடியும், அது பெரும் முதலீடாகவே அமையும் . அரசியல் வழிகாட்டலும் மன உறுதியும் மட்டுமே தேவை.
ஜெய்ப்பூரின் முக்கியமான அடையாளமாக விளம்பரங்களில் நாம் பார்ப்பது ஹவா மஹல் என்ற செந்நிறமான உயரமான கட்டிடம். ஏராளமான சிறிய சிகரங்களால் ஆனது இது. எண்பத்தாறில் ஜெய்ப்பூருக்கு நான் வந்தபோது ஓர் அழகிய திறந்த வெளி போன்ற சாலையின் ஓரம் அது இருந்ததாக நினைவு. இன்று ஓலமிடும் வண்டிகள் முட்டி உரசி நிற்கும் பரபரப்பான சாலையோரமாக நிற்கிறது. அந்தக் கட்டிடத்தை ஏறிட்டுப்பார்க்கவே அங்கே வசதி இல்லை. உள்ளே சென்றோம். வெற்று அறைகள். ‘காமிரா என்ற சாதனம் இல்லாவிட்டால் இந்த மக்கள் இங்கே வரவே மாட்டார்கள்’ என்றார் கிருஷ்ணன்.
சுற்றிவந்து ஜந்தர் மந்தர் என்ற புராதனமான வானாய்வகத்தைக் காணச்சென்றோம். உலகில் உள்ள தொன்மையான வானாய்வகங்களில் இதுவே பெரியது என்று சொல்லப்படுகிறது. சூரிய, சந்திர ஒளியின் சாய்வைப் பயன்படுத்தி கோளங்களின் அளவையும் சுழற்சியையும் அளவிடப் பயன்படுத்தப்பட்ட கருவிகளின் கூடம். கருவிகள் என்னும்போது நம் மனதில் வரும் சித்திரம் கையளவுள்ள பொருட்கள் என்பதுதான். இங்கே ஒவ்வொரு கருவியும் ஒரு கட்டிட அளவில் கட்டப்பட்டுள்ளது. 1727 முதல் 1734 வரை ஜெய்ப்பூர் மன்னரான இரண்டாம் ஜெய்சிங் பல இடங்களில் இத்தகைய வானாய்வு நிலையங்களை உருவாக்கினார். அவற்றில் இதுவே பெரியது.
இங்குள்ள கருவிகளில் பெரும்பாலானவை நிழல்களை அளவிடக்கூடியவை. 90 அடி உயரமான ஒரு நிழல்கடிகாரம் இங்குள்ளவற்றில் மிகப்பெரியது. ஒரு ஆய்வுக்கூடத்துக்குள் நுழைந்துவிட்ட எறும்பு போல நம்மை உணரச்செய்வது இந்த இடம்.
எனக்குப் பொதுவாக இந்தக் கணித விஷயங்கள் கொஞ்சம் கூட மூளையில் ஏறுவதில்லை. ஆகவே நான் எதற்கும் மெனக்கெடவில்லை. நண்பர்கள் நிழல் மூலம் காலக்கணிப்பைப் பார்த்துக் கடிகாரத்துடன் ஒப்பிட்டார்கள். இந்திய தரப்படுத்தப்பட்ட நேரத்துக்கு 43 நிமிடங்கள் தாமதமானது ஜெய்ப்பூரில் சூரியன் நிகழ்த்தும் நேரம். 1901ஆம் ஆண்டு முழுவதுமாக மறு சீரமைக்கப்பட்ட ஜந்தர் மந்தர் 1948ஆம் ஆண்டு ஒரு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
ஜந்தர் மந்தரில் இருந்து ஜல்மஹல் என்று அழைக்கப்பட்ட ஏரி அரண்மனையைக் காணச்சென்றோம். ஜெய்சிங்கால் அமைக்கப்பட்டது இந்த அரண்மனை. ஒரு பெரிய ஏரிக்குள் இருக்கிறது. அப்பகுதியின் சந்தடியும் குப்பைகளும் புகையும் வணிகர்களும் சேர்ந்து பத்து நிமிடத்துக்கு மேல் அங்கே நிற்கமுடியாதபடி செய்தனர். உடனே கிளம்பிவிட்டோம். இன்னொரு முறை ஜெய்ப்பூர் வருவேனா என்றால் மாட்டேன் என்றுதான் சொல்வேன்.
காரில் சென்றுகொண்டிருக்கும்போது சொன்னேன், இப்போது நாம் பார்க்கும் இந்த ஊர்களும் இவற்றின் அழகும் எல்லாம் இன்னும் பதினைந்து வருடம் கழித்து வந்தால் இருக்கும் என்று சொல்ல முடியாது. அழகுணர்ச்சியும் வரலாற்றுணர்ச்சியும் அற்ற ஆட்சியாளர்களாலும் பாமர மக்களாலும் அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் நாடு இது.
மேலும்…