அன்பின் ஜெயமோகன்
சமீபத்தில் உங்களின் வட்டார வழக்கு பற்றிய பதிவினை படித்திருந்தேன்.
தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வருகிற பலரின் கேலிக்கு உள்ளாவது சென்னை மொழி (குப்பத்து மொழி) இதனை ஒரு பெரிய நகைச்சுவையாக பாவித்து பேசுவதுடன் கொஞ்சமும் யோசிக்காமல் அதற்கு எழும் கைத்தட்டல்களும் அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் தான் தமிழ் வாழ்கிறது இங்குதான் தூயதமிழை நான் கண்டேன் தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் காதில் கேட்பது தமிங்கிலீஸ் என்ற மேதமைப் பேச்சுகளால் பல நேரத்தில் கடுப்பானதுண்டு. (இது போன்று பேசுபவர்களை ஒரு ஞாயிறு முழுமைக்கும் சிங்கப்பூர் நூலக வாயிலில் நிறுத்தி அங்கு சேமிக்கப்பட்டுள்ள தமிழ் புத்தகங்களை எத்துனை பேர் (சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள்) வாசித்து இன்புறுகின்றனர் என்பதை கணக்கெடுக்கச் செய்யவேண்டும் என்ற ஆவா நெடுநாளாக என்னுள் உள்ளது).
சமீபத்தில் புவிநாள் விழாவினை கொண்டாட தென் தமிழகத்தில் இருந்து வந்திருந்த குருமகான் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் கூட சென்னை பாஷை(மொழி)-யை விட்டுவைக்கவில்லை. இஸ்திகுனு வா இதுக்கு எந்த அகராதியை வைத்து நாம் பொருள் அறிந்துகொள்வது என்று நகைத்து அதற்கு எழுந்த கையொலியில் இன்புற்று இங்குதான் (சிங்கப்பூர்) தமிழ் தமிழாக இருக்கிறது என்ற பேச்சால் அதற்கு பின்பு அவர் ஆற்றிய சொற்பொழிவை கேட்கவிரும்பாதவனாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டேன் (அதற்கு பின்புதான் அவரது சொற்பொழிவே ஆரம்பமானது).
சென்னை மொழிபற்றிய உங்களின் பார்வையை தெரிந்துகொள்வதன் வழியே இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து உற்றுநோக்க ஏதுவாக அமையும்.
1. குப்பத்து பாஷை (மொழி) உருவானதற்கு ஏதேனும் பின்னணி உண்டா? (அதாவது எப்படி தோன்றியிருக்ககூடும்-ஆக தமிழில் சமீபத்தில் தோன்றிய வட்டார பாஷை அல்லவா?)
2. குப்பத்து பாஷை (மொழி) வட்டார வழக்கில் வருமா எடுத்துக்கொள்ளலாமா
3. சென்னை பாஷை (மொழி) என்றாலே பொதுவாக குப்பத்து பாஷை (மொழி) தானா அல்லது இதில் இருந்து வேறுபட்டதா? தற்போதைய பொதுவான சென்னை மொழி குப்பத்து பாஷையிலிருந்து மருவியதா?
4. குப்பத்தில் பிறக்கும் உணர்வுள்ள இசை பாடல்களை சில மேதமைகள் மிக இழிவாக சுட்டிக்காட்டியுள்ளனர் குப்பத்து மொழியை இழிவாக காணச்செய்வதுபோல் அவர்களின் இசை வாழ்வாதரங்கள் என் இன்னபிறவற்றையும் சேர்த்து சிலர் இழிவுபடுத்துகின்றனர். ஆக இதையெல்லாம் எவ்வையில் எடுத்துக்கொள்வது .
5. குப்பத்து பாஷை (மொழி)யால் தமிழ் சிதைவுறுகிறதா?
பாண்டித்துரை
சிங்கப்பூர்
http://pandiidurai.wordpress.com
அன்புள்ள பாண்டித்துரை
இரு வருடங்களுக்கு முன்னர் நான் சிங்கப்பூர் வந்திருந்தபோது நான் பேசிய உரைக்கு எதிர்வினையாக சில சிங்கை நண்பர்கள் எழுதியிருந்தார்கள். நான் சிங்கப்பூரை ஏற்றுவதற்காக தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் வழக்கமான செயலில் ஈடுபடவில்லை என்று சொல்லியிருந்தார்கள். அது தமிழ்ப்பேச்சாளர்களின் வழக்கமான உத்தி. அவர்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் செய்வது. அதில் மகிழும் மக்களின் தாழ்வுணர்ச்சியையே அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நீங்கள் சொல்லும் பரஞ்சோதியாரும் ஒரு பேச்சாளர் மட்டுமே
வட்டாரவழக்குகள் என்பவை ஒரு வட்டாரத்து மக்களின் பண்பாட்டின் விளைச்சல்கள். நான் வட்டாரமொழியை கிண்டல் செய்வதில்லை, வட்டாரமொழியில் கிண்டல்களை அமைக்கிறேன். அது நானும் வட்டாரமொழி பேசுபவன் என்ற நிலையில்தன. என்னுடைய கிண்டல் என்பது வட்டாரமொழியை ஆய்வுப்பொருளாக ஆக்கக்கூடிய மனநிலைக்கு எதிரானது மட்டுமே.
நானே எங்களூர் வழக்கில் பேசக்கூடியவனே. அதுவே என் அடையாளம். ஆனால் அது சிலவகை சொற்பொழிவுகளுக்கு உதவாது, அங்கே வட்டார அடையாளம் தடையாக ஆகலாம். ஆகவே அச்சுமொழியில் பேசுகிறேன். முன்னர் யூகி சேதுவிடம் பலமணிநேரம் பேசியபின் நான் கேட்டேன்- என் பேச்சில் மலையாள நெடி அடிக்கிறதா என? இல்லைசார் தமிழ்நெடிதான் கொஞ்சம் அடிக்கிறது என்றார்.
ஒரு வட்டார வழக்கு என்பது அப்பகுதி மக்களின் தொழிலுடனும் அதன்மூலம் அவர்களுக்கு பிற மக்களுடன் கொள்ளும் உறவுடனும் எல்லாம் தொடர்புடையது. அதற்கான வரலாற்றுப்பின்புலத்தை எளிதாக நாம் சொல்லிவிடமுடியாது. உதாரணமாக குமரிமாவட்ட வட்டாரவழக்கு என்பது தொல்தமிழ், மலையாளம் இரண்டும் கலந்தது. அல்லது தொல்தமிழ் மலையாளமாக திரிபுகொள்ளும் பரிணாமத்தின் ஒரு கட்டத்தைச் சார்ந்தது. அவ்வாறு அது நின்றுவிட்டமைக்கான காரணங்களில் முக்கியமானது மலைசூழ்ந்த குமரிமண்ணில் வெளிப்பாதிப்புகள் மிகவும் குறைவு என்பதே.
வட்டாரவழக்குகளை கொச்சை என்று சொல்வது தவறு. செம்மைமொழி என ஒன்று எப்போதுமே புழக்கத்தில் இருந்திருக்காது. அது ஏடுமொழி. நமக்குக்கிடைக்கும் அதிபுராதனமான கல்வெட்டுகளைப் பார்க்கையில் அப்போது புழக்கத்தில் இருந்ததும் அக்காலத்துக்குரிய அவ்ட்டாரவழக்கே என்று ஊகிக்க முடிகிறது. செம்மொழியில் எப்போதும் எவரும் பேசியதில்லை.செம்மொழியர்கள் என்பது இப்போது உருவாகியிருக்கும் புதிய இனம்.
சென்னை வழக்கு என்பதன் ஊற்றுக்கண் என்பது பாண்டிச்சேரி கடலூர் பகுதியின் பேச்சுமொழிதான். இப்பகுதியில் இருந்துதான் அதிகமாக மக்கள் சென்னைக்குக் குடியமர்ந்திருக்கிறார்கள். பாண்டிச்சேரியைப்பற்றிஎ ழுதிய ஆனந்தரங்கம் பிள்ளை டைரிகளில் வரும் மொழி சென்னைத்தமிழுக்கு மிக நெருக்கமானது. சென்னை தெலுங்குபேசும் மக்கள் வாழ்ந்த இடமாதலினால் தெலுங்கு அம்சம் உண்டு. அத்துடன் உருது. காரணம் உருது பேசும் வணிகர்கள் துறைமுகம் சார்ந்து பெற்ற பரவல்
சென்னைத்தமிழுக்குள் இரண்டு பெரிய வகைபாடு உண்டு. சென்னையின் குடிசைவாழ் மக்கள் பேசும் பொதுமொழி ஒன்ரு. வடசென்னை மீனவர்கள் பேசும் சென்னைத்தமிழ் ஒன்று. இரண்டுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. இரண்டுமே ஏழை மக்களால் பேசபப்டுபவை. அவர்களுக்கே உரிய முறையில் சொற்திரிபுகள் செய்பவை. ஆகவே அவை கிண்டல்செய்யபப்டுகின்ரன
அந்த அளவுக்கே ஒலித்திரிபுகளும் மொழிக்குழப்பங்களும் கொண்ட பிராமண பாஷை அவ்வாறு தாழ்வாக நினைக்கப்படுவதில்லை என்பதைக் கவனித்தால் சென்னைத்தமிழ் மீதான கிண்டல் என்பது அதைப்பேசும் மக்கள்மீதான கிண்டல்மட்டுமே என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். பிராமணர்களில் பலர் அவர்களின் தமிழ் கிண்டல்செய்யப்பட்டால் புண்படுகிறார்கள், ஆனால் அவர்கள் சென்னைமொழியை கிண்டல்செய்துகொண்டே இருப்பார்கள். கிண்டல் மேலிருந்து செய்யப்படும்போது ஒரு வன்முறையாக ஆகிவிடுகிறது.
சென்னையின் ஆங்கிலக்கலப்பு மொழி ஒருவகை வட்டாரவழக்காகவே உருவாகிக் கொன்டிருக்கிறது. ”யெஸ்டர்டே அவன் அப்டியே கிரை பண்ணிட்டான்” என்று பேசுவதை சென்னையில் கேட்கிறோம். அது படித்த உயர்குடிகளின் தனிப்பேச்சாகக் கருதபப்டுகிறது
ஆக கிண்டல் என்பது மொழி சார்ந்தது அல்ல, வர்க்கம் சார்ந்ததே.
குப்பத்துமொழியால் மட்டுமல்ல அக்ரகார மொழியாலும் கூட தமிழ் சிதைவுபெறுவதில்லை. அவற்றால் தமிழ் வளர்கிறது. மனிதர்கள் பேசுவதனால் மொழி தேய்கிரதா என்று கேட்பது போன்றது உங்கள் வினா. மனிதர்கள் மொழியைப்பேசும்போதுதான் மொழி ஒவ்வொரு கணமும் புதுப்பிக்கப்படுகிறது. மொழியின் அற்புதமான நுட்பங்கள் அப்போதுதான் வெளிப்படுகிறன. ஒரு மொழியின் நகைச்சுவையும் கவித்துவமும் வட்டாரவழக்கில் வெளிப்படுவதுபோல ஒருபோதும் சீர்மொழியில் வெளிவராது. உதாரணமாக நான் காடு நாவலின் குட்டப்பனையே சொல்வேன்
ஜெயமோகன்
மறுபிரசுரம்- முதல்பிரசுரம் Apr 29, 2009