இன்று சாம் மணல்மேடு முக்கியமான ஒரு சுற்றுலாத்தலம். ராஜஸ்தான் பாலைவனம் என்பது வறண்ட கட்டாந்தரை மேல் முளைத்த உயரமற்ற முட்செடிகள் மட்டும் கொண்டது. நம் ராமநாதபுரம் பொட்டல்களை நினைவுறுத்துவது. மண், வெளிர்சிவப்பு நிறத்தில் ஆற்றுவண்டல் உலர்ந்து மணலாக ஆனதுபோல் இருக்கும். மணல்குன்றுகள் அவ்வப்போது வரும். அலையலையாக செம்பட்டை குவித்துப்போட்டதுபோல.
மணற்பகுதிகளில் சாலையோரம் அமைந்த பெரிய மணற்பரப்பு சாம் மணல்வெளி. அதைச்சுற்றி பாலைவனத்தில் வெண்ணிறமான கூடாரங்களை ‘ப’ வடிவில் அமைத்து சுற்றும் வேலியிட்டுக் காவலர் நிறுத்தித் தங்குமிடம் ஏற்பாடுசெய்திருந்தார்கள். சுற்றுலா பெரும்பாலும் ஒரு ‘பேக்கேஜ்’. அதில் கோட்டையை சுற்றிப்பார்ப்பது, பாலைவனப்பயணம், மணல் மேல் தங்குதல் எல்லாம் அடக்கம். இரவில் கிராமியக் கலைநிகழ்ச்சிகளும் உண்டு.
நாங்கள் டீக்கடையில் சந்தித்த அப்துல் என்பவரின் ஏற்பாட்டில் இரவு தங்குமிடம் மட்டும் கேட்டு வாங்கியிருந்தோம். நாங்கள் செல்லும்போது ஒரு கலைநிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. நாட்டுப்புறப்பாடகர் ஒருவர் உரத்த குரலில் பாடினார். கூட தபலா, ஆர்மோனியம்.
நண்பர்கள் சென்று பார்த்துவந்தனர்.நாற்பது வயதான பாட்டி ஒருத்தி நடனம் ஆடினதாகவும் கூட சில வெள்ளையர்களும் சேர்ந்து ஆடினதாகவும் நண்பர்கள் சொன்னார்கள். பாட்டிகள் ஆடுவதை ரசிக்குமளவுக்கு என் கலையுள்ளம் விசாலமானதல்ல என்பதனால் நான் செல்லாமல் குறிப்புகளை எழுதிக்கொண்டு கூடாரத்திலேயே இருந்தேன். பாடகரின் குரல் நன்றாக இருந்தது.
இரவுணவுக்குப் பின்னர் மணல்மேடுகளில் நிலவொளியைப் பார்க்கச்சென்றோம். குளிருக்கு ஸ்வெட்டர் அணிந்து மேலே ரவி வாங்கிக்கொடுத்த கம்பிளியைப் போர்த்திக்கொண்டு சென்றோம். செல்லச்செல்லக் குளிர் தெரிய ஆரம்பித்தது. நெடுந்தூரம் செல்லவேண்டாம், பாகிஸ்தான் எல்லை ஆதலினால் ராணுவக் கண்காணிப்பு உண்டு, சந்தேகம் வந்தால் பிடித்து விடிய விடிய உட்கார வைத்து விடுவார்கள் என வாட்ச்மேன் சொன்னார். ஆகவே அருகிலேயே மணல் மேல் ஏறினோம். மணல் அதற்குள் பனிக்கட்டி போலக் குளிர்ந்து கிடந்தது.
நிலவு வானில் நன்றாக எழுந்திருந்தது. ராஜஸ்தான் பாலைவனத்தின் முக்கியமான அழகு என்பது வானம்தான். பெரிய மரங்கள் இல்லாத நிலம். மலைகள் சூழாத திசைகள். மேகத்தின் நினைவுகூட மிதக்காத துல்லியமான நீலக் குடையாக வானம். அதில் சூரியன் சந்திரன் விண்மீன்கள் எல்லாமே பெரியதாக, துல்லியமாகத் தெரிந்தன.
நிலவு மிகப்பெரிய பொன்வட்டமாக வானில் நின்றது. சீனு விஷ்ணுபுரத்தின் முதல் தோற்றுவாய் ‘என் கால்களுக்குக் கீழே நான் அறிந்ததெல்லாம் மணல்தான்’ என்ற வருணனை நினைவுக்கு வருவதாகச் சொன்னார். ‘ஒவ்வொரு சித்தரிப்பும் அப்டியே இருக்கு சார்..’ என்றார்.
நிலவின் ஒளி பாலையில் பரவுவது வெண்பளிங்கு அலைகள் மேல் எண்ணையை மெல்ல ஊற்றுவது போல் இருந்தது. மணல் சரிவுகள் மென்மையாகப் பளபளத்தன. மணல் அடுக்குகளின் கோடுகள் ஆழ்ந்த நிழலால் அடையாளப்படுத்தப்பட்டுத் துல்லியமடைந்தன. பார்க்கப்பார்க்க அக்கோடுகள் அதிர்வது போல, மணல் வெளி ஒரு துணிபோலக் காற்றில் அலைபாய்வது போல பிரமை எழுந்தது.
நிலவு வானில் மெலிதாக சுழல்வது போலத் தோன்றியது. கையெட்டும் தொலைவில் நம்முடனே நிலவும் வருவது போல. அண்ணாந்தால் அக்கணமே அது மேலெழுந்து விலகிவிடுவது போல…
குளிருக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டோம். ஆனால் முத்துக்கிருஷ்ணன், ராஜமாணிக்கம் தவிர எவருக்கும் காலுக்கு ஷூ கிடையாது. விரல்கள் மரத்து உறைந்து வலித்து ஒரு கட்டத்தில் தீப்பட்டது போல எரியவே ஆரம்பித்துவிட்டன. நான் கனடா சென்றபோது வாங்கிய கையுறையை வைத்திருந்தேன். கைகள் சில்லிடுகின்றன என அதை அணிந்திருந்தேன். வேறு வழி இல்லாமல் அதைக் கால்களுக்குப் போட்டு விரல்களைக் காத்துக்கொண்டேன்.
கால்கள் வலித்தாலும் எவருமே திரும்பிச்செல்ல விரும்பவில்லை. நிலவை நோக்கியபடி மணல் வெளியில் நின்றிருந்தோம். பிரமையில், கனவில், ஒவ்வொருவரும் அவரவர் தனிமையில்.இந்தமாதிரி இனிமைகளுக்கு ஒரு துயரம் கலந்த தன்மை உண்டு. நம் இருப்பின் எளிமையை, நம் அகங்காரத்தின் சிறுமையை, நமக்களிக்கப்பட்ட காலத்தின் போதாமையை நாமே உணர்வதனால் வரும் துயரம் அது. melancholy என ஆங்கிலத்தில் சொல்வது அதைத்தான்.
ஆனால் அரைமணி நேரத்துக்கு மேல் அது நீடிக்கலாகாது. நீடித்தால் அந்த இனம்புரியாத துயரம் மெல்ல மெல்லத் திட்டவட்டமான துயர நினைவுகளைக் கொண்டுவந்து நிறைக்கும். ஆன்மீகமான அந்தக் கவித்துவ துக்கம் எப்படியோ நம் லௌகீக வாழ்வின் துயரங்களையும் ஏக்கங்களையும் தன் இடத்தில் கொண்டுவந்து நிறுத்திவிடும். முறையான தியானப்பயிற்சி இல்லாமல் இத்தகைய அகத்தனிமை நிலையை அதிக நேரம் கொண்டு செல்லமுடியாது, முயலவும் கூடாது.
அத்தகைய நிலைகளில் செய்யக்கூடுவது கலைகளை நாடுவதே. அஜந்தா குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்ட காரணம் அதுவே. கலை ஒரு விசித்திரமான எதிரொளிப்பை நிகழ்த்துகிறது. ஆன்மீகமான துயரம் லௌகீகமான துயரமாக மாறும் அந்தத் தருணங்களில் நிகழும் கலை லௌகீகமான துயரங்களை மீண்டும் ஆன்மீகமாக மாற்ற ஆரம்பிக்கிறது.
நிலவொளியின் தனிமையில் நாம் அடையும் துயரம் மெல்ல நம்மை ஓர் இழந்த காதலை நினைத்துக்கொள்ளச் செய்யும் என்றால் நாம் துயரம் நிறைந்த மனம் கொண்டவர்களாக ஆகிறோம். நம் அகம் கனத்து இருள் கொள்கிறது. ஆனால் அப்போது ஒரு அற்புதமான காதல்தோல்விப் பாடலைக் கேட்டோமென்றால் நம் மனம் இனிமையால் நிறைகிறது. அகம் ஒளி கொள்கிறது. நாம் மீண்டும் அந்த இனிய துயரத்துக்கே சென்று சேர்கிறோம்.
நிலவொளியில் சில பாட்டுகளைக் கேட்கலாமென நினைத்தோம். எவரேனும் பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். யுவன் சந்திரசேகர் அல்லது ராமச்சந்திர சர்மா இருந்திருக்கலாமே என நினைத்தேன். ராம் பாடும் பாடல் கூட மனதில் ஒலித்தது – ‘எல்லையில்லாத வானக்கடலிடை வெண்ணிலவே, விழிக்கின்பம் அளிக்கும் ஓர் தீவென்று இலகுவை வெண்ணிலவே’.
முத்துக்கிருஷ்ணனின் செல்பேசியில் இணையத்தில் இருந்து பாடல்களை இறக்கிக் கேட்டோம். ‘ஆகா இன்ப நிலாவினிலே ஓகோ ஜெகமே ஆடிடுதே’, ‘அமுதைப்பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ’ பாவமும் கவித்துவமும் கலந்த பாடல்களுக்குரிய நேரம். வெறும் சங்கீதம் இங்கே பொருளிழக்கிறது. அதற்கு நமக்கு இப்போது திரைப்பாடல்கள் மட்டுமே உள்ளன.
[லொதுர்வா]
பாடல்கள் தாண்டிய பின்னர் நான் ஒரு கதை சொன்னேன். துருக்கியப் பாலை நிலத்தில் நிலவொளியில் ஒர் கைவிடப்பட்ட நகரின் சுவரில் அழகிய இளம்பெண்ணின் ஓவியத்தைக் காணும் ஒருவனின் கதை. நூற்றாண்டுகளுக்கு முன்னர் சுல்தானால் கொல்லப்பட்ட அவள் அவனுக்கு காட்சி கொடுக்கிறாள். ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் சுழல்காற்றில் மணல் விலக வெளியே வந்து பின் மணலுக்குள் மறைந்து விடும் மாயநகரம் அது. மேரி கெரெல்லியின் கதை என்பது ஞாபகம். மெல்லிய நினைவுத்தீற்றலாக எஞ்சிய கதையை நானே பெரிதாக முடைந்து கொண்டேன்.
இரவு பன்னிரண்டு மணிக்குக் குளிர் ஐந்து பாகையை எட்டியது. முகமும் எரிய ஆரம்பித்தது. போதிய அளவுக்குக் கனவை மொண்டு நிறைத்துக்கொண்ட மனம் கனத்து ஓய்வை நாடியது. கூடாரத்துக்குள் புகுந்து ரஜாய்க்குள் ஒண்டிக்கொண்டோம். நல்ல கூடாரம். இரட்டைத்துணிக்கூரை கொண்டது. ஆகவே குளிர் குறைவு. குளியலறை இணைக்கப்பட்டது. வசதியான தங்குமிடம்.
[லொதுர்வா]
காலையில் ஏழரை மணிக்கு விழித்தோம். ஏழு இருபதுக்கு சூரிய உதயம் என்று சொல்லியிருந்தனர். அவசரமாகக் கிளம்பி டீ கூடக் குடிக்காமல் உதயம் பார்க்க அந்த மணல் மேட்டுக்கே சென்றோம். பாலைவனத்தின் உதயம், மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதுபோகக்கூடும்.
முந்தைய நாளின் எல்லாக் காலடிகளையும் அழித்துப் புதிய காற்றலைகளுடன் கிடந்தது மணல் மேடு. மணல் மேல் ஏறிச்சென்றபோது வெள்ளை யானைகள் மேல் ஏறிப் பொற்சாமரங்கள் வீசி வரும் அக்னிதேவன் போல சூரியன் உதித்து நிற்பதைக் கண்டோம். பாலைவனத்தூசு பொன்படலமாகப் பரவியிருந்தது. பொன்னிறமான துணிவழியாகப் பார்ப்பது போல சூரியன் தெரிந்தது. பொன்னிற முகத்தின் குங்குமம் போல.
காலையில் நூற்றுக்கணக்கான கிளிகள் முந்தைய நாள் ஒட்டகங்கள் போட்ட சாணிகளைக் கிண்டிக்கொண்டிருந்தன. முட்புதர் செடிகளுக்குள் அவை கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தன. இயற்கையான கூண்டுக்குள் இருப்பவை போலத் தோன்றின. இங்குள்ள புதர்களுக்குள் எப்போதும் பறவைகள் நிறைந்திருக்கின்றன. வெயிலில் அவை பறப்பதில்லை.
[ஜெய்சால்மர் சமணக் கோயில் சிலை]
காலைச்சிற்றுண்டி முடிந்ததும் கிளம்பி ஜெய்சால்மர் சென்றோம். புழுதிபறக்கும் சாலையில் எங்கள் வண்டி பழையகால படங்களின்கனவுக்காட்சி போலச் சென்றது. ஜெய்சால்மர் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தனர் நண்பர்கள். நான் எண்பத்தி இரண்டுல் இங்கே வந்திருக்கிறேன். அன்று தார் பாலைவனம் இன்னும் மொட்டையாக இன்னும் குளிராக இருந்ததாக நினைவு.
ஜெய்சால்மர் மகாராவல் ஜெய்ஸ்வால் அவர்களின் பெயரால் அமைந்த நகரம். 1156இல் இந்நகரம் அமைந்திருக்கலாம் என வரலாறு சொல்கிறது. ஜெய்சால்மர் பொன் மஞ்சள் நிறமான கற்களால் கட்டப்பட்ட கோட்டை. அதனருகே உள்ள பாறைகளும் பொன்னிறமானவை. உதய அஸ்தமன செவ்வொளியில் பொன்னிறமாகத் தெரிவதனால் இந்நகரமே பொன்னகரம் என்று அழைக்கப்படுகிறது.
ஃபாட்டி ராஜபுத்திரர்களின் நகரம். ஃபாட்டி என்றால் போர்வீரர் என்று பொருள். போர் மட்டுமே தொழிலாகக் கொண்டு பல நூற்றாண்டுகள் வாழ்ந்த மக்கள். விக்ரமாதித்ய மன்னரின் [இரண்டாம் சந்திரகுப்தர்] நண்பரும் அமைச்சருமாக இருந்தவர் பெயர் ஃபட்டி. அவர் இந்த வம்சத்தைச் சேர்ந்தவர்தான்.
மன்னர் தேவ்ராஜர் என்பவர் ஜெய்சால்மர் அரசின் ஸ்தாபகர் எனக் கருதப்படுகிறார். இந்த வம்சம் ராவல் என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்படுகிறது. மேவார் மன்னர்கள் ராணா என அழைக்கப்படுவது போல. தேவராஜரின் ஆறாவது வாரிசான ஜெயஸ்வால் ராவல் ஜெய்சால்மர் கோட்டையைக் கட்டித் தலைநகரமாக அறிவித்தார். அது வரை அருகே உள்ள லொதுர்வாதான் தலைநகரமாக இருந்தது.
[ஜெய்சால்மர் கோயில்]
1293இல் அலாவுதீன் கில்ஜி ஜெய்சால்மரைக் கைப்பற்றி அழித்தபின் சிலகாலம் கைவிடப்பட்ட நிலையில் இக்கோட்டை கிடந்தது. கில்ஜியின் படையெடுப்பு கொடுமையானது. அவரது கோட்டைமுற்றுகை தொடர்ந்து ஏழு வருடம் நீடித்தது. எல்லா நீர் ஆதாரங்களும் வறண்டபோது ஃபாட்டிகள் ஜோகர் செய்து உயிரிழந்தனர்.
[ஜோகர் என்பது அத்தனை அரசகுலப் பெண்களும் கூட்டமாகத் தீயில் குதித்து இறந்த பின்னர் ஆண்கள் அனைவரும் முழு நிர்வாணமாகக் குதிரைகளில் ஏறி எதிரியை சந்தித்துக் கடைசி வீரர் இறப்பது வரை போர்புரியும் சடங்கு]
அதன் பின் ஃபாட்டி வம்சமே இன்றைய பாகிஸ்தானின் சிந்து பகுதிக்கு சிதறிப்பரவியது. அவர்கள் அங்கே பூட்டோ சாதியினர் என அறியப்படுகின்றனர். மறைந்த பாகிஸ்தானியப் பிரதமர் சுல்பிகர் அலி ஃபுட்டோ இந்த வம்சத்தைச் சேர்ந்தவர்.
ஃபட்டிகள் ஜெய்சல்மரை மீண்டும் கட்டி எழுப்பினர். இன்னொரு அரசு அங்கே உருவாகியது. மீண்டும் சுல்தான் ஃபெரோஸ் ஷா ஜெய்சால்மரைத் தாக்கினார். நாலாண்டுகால முற்றுகைக்குப்பின்னர் ஜெய்சால்மரில் இன்னொரு ஜோகர் நடைபெற்றது. அதன் பின் நெடுங்காலம் ஃபாட்டிகள் சிதறி சில்லறைக் கொள்ளையர்களாக வாழ்ந்தனர். ஜெய்சால்மர் கோட்டை இடிபாடுகளாகக் கிடந்தது.
கடைசியாக முகலாய மன்னர் அக்பர் ஜெய்சால்மர் இளவரசியை மணம் செய்ததும் முகலாயர்களுக்கும் ஃபாட்டிகளுக்கும் இடையே இருந்து வந்த பகைமை முடிவுக்கு வந்தது. ஷாஜகானின் ஆட்சியில் ஃபாட்டி வம்சத்தின் சஃபலசிம்மன் அவருக்கு பெஷாவர் படையெடுப்பில் பேருதவி புரிந்தமையால் நல்மதிப்பைப் பெற்று சிற்றரச பதவியைப் பெற்றார். சஃபல சிம்மன் ஆட்சிக்காலத்தில் ஜெய்சால்மர் கோட்டை இன்றைய வடிவில் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. 1888இல் ஜெய்சால்மர் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்டது.
[ஜெய்சால்மர் முகப்பு]
ஜெய்சால்மர் தார் பாலைவனத்தின் நடுவே இருப்பதனால் சுல்தானியப் படைகள் மற்றும் முகலாயப்படைகளின் தாக்குதல்கள் அடிக்கடி நிகழவில்லை. பெரும்பாலும் இது சிறிய கப்பத்துடன் தனியாட்சி செய்ய முஸ்லீம் ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டது. ஃபாட்டிகள் தார்ப் பாலைவனம் வழியாக இருந்த மிக முக்கியமான ஒட்டக வணிகப்பாதையில் கப்பம் வசூலிப்பது, கொள்ளையடிப்பது ஆகியவற்றையே முக்கியமான தொழிலாகச் செய்துவந்தார்கள், நம் ஆறலைக்கள்வர்களைப் போல.
இன்று அவர்கள் பாலைவன வணிகத்தில் சிறந்து விளங்குகிறார்கள். ஃபாட்டிகளில் முஸ்லீம்களும் இந்துக்களும் உண்டு. அவர்கள் ஒரே சாதிக்குரிய ஒற்றுமையுடன் இருந்துவருகிறார்கள். பாலைவன வணிகமும் சுற்றுலாவும் அவர்களுக்குக் கைகொடுக்கிறது. நடுவே இந்தியபாகிஸ்தான் எல்லை வருகிறதென்றாலும் அதை அவர்கள் அதிகமாக பொருட்படுத்துவதில்லை.
ஜெய்சால்மர் ஒரு காலத்தில் இந்திய- அரேபிய வணிகத்தின் மையப்புள்ளியாக விளங்கியது. பின்னர் மும்பைத் துறைமுகம் எழுந்து வந்து வணிகம் முழுக்க நீர்வழிகளைச் சார்ந்ததாக ஆனபோது அதன் வணிக முக்கியத்துவம் இல்லாமலாகியது. இந்திய பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டபோது ஜெய்சால்மரின் எல்லா வணிக வாய்ப்புகளும் அழிந்தன.
ஆனால் இன்று இது ஒரு முக்கியமான சுற்றுலா மையம். இந்தியாவில் இந்த அளவுக்குப் பண்பாட்டுத் தனித்தன்மை கொண்ட நகரம் வேறு இல்லை. சுற்றுலாவை நம்பியே இன்று இப்பகுதியின் பொருளியல் உள்ளது.
[ஜெய்சால்மர்]
ஜெய்சால்மரின் சமணப் பாரம்பரியம் மிக விரிவான ஒன்று. கிமு இரண்டாம் நூற்றாண்டு முதலே ஜெய்சால்மர் முக்கியமான சமணத் தலமாக இருந்தது. ஏனென்றால் இது மேற்கே செல்லும் வணிகப்பாதையின் முக்கியமான இயற்கை நீர்ச்சோலை, தங்குமிடம். சமண வணிகர்கள் இங்கே தங்கிச் செல்வது வழக்கம். ஃபாட்டிகளின் முக்கியமான பழைய அரசர்கள் சமணர்கள்.
அப்போது அவர்களின் தலைநகரமாக இருந்தது லொதுர்வா. இந்தக் கைவிடப்பட்ட நகரம் இன்று சிற்றூராக தார் மணல்வெளி நடுவே கிடக்கிறது. சாம் மணல்மேடுகளில் இருந்து திரும்பும் வழியில் லொதுர்வா சென்றோம். மிகச்சிறிய ஊர். சமீபகாலமாக செம்மஞ்சள் கல்லில் கட்டப்பட்ட சிறிய கட்டிடங்கள். நடுவே இருந்தது பார்ஸ்வநாதர் கோயில்.
இதுவரை நாங்கள் பார்த்த ஆலயங்களிலேயே வித்தியாசமான அழகான ஆலயம் இது. ஏற்கனவே இருந்த ஆலயம் 1152இல் அலாவுதீன் கில்ஜியால் அழிக்கப்பட்டபின் 1615இல் சமண வணிகரான சேத் தாரு ஷா இந்த ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினார். 1688இல் மீண்டும் திருப்பணிகள் நடந்துள்ளன. அதன் பின்னர் அதிக அழிவுகள் இல்லாமல் அழகாக இருக்கிறது ஆலயம்.
முதல் முக்கியமான அழகு இந்தக்கோயில் பொன்னிறமான மணல்கல்லால் கட்டப்பட்டது என்பதே. இந்தக் கல் தார் பாலைவனத்தில் அன்றி எங்கும் கிடைப்பதில்லை. கடினமான கல். சந்தன நிறம். தீட்டப்பட்டால் வெண்கலம் போல இருக்கும். இக்கல்லால் ஆன ஒரு சிலையை ஐந்தடி தூரத்தில் இருந்து பார்த்தால் வெண்கலச்சிலை என்றுதான் நினைப்போம். மொத்தக் கோயிலும் இந்தக் கல்லால் செய்யப்பட்டு ஒரு பெரும் சந்தனத்தேர் போல் இருந்தது. காலை ஒளி பட்ட இடங்கள் பொன்னாக ஜொலித்தன. கல்லுக்கு இத்தனை அழகு கைகூட முடியும் என்பதை நம்பவே முடியவில்லை.
கல்லில் பலகணி போல செதுக்குவதென்பது எல்லா ஆலயங்களிலும் உள்ள வழக்கம். மரச்செதுக்குவேலையைக் கல்லில் நிகழ்த்தும் முயற்சி. ஆனால் லொதுர்வா கோயிலின் பலகணி போல எங்குமே பார்த்ததில்லை. கோயிலின் நான்கு பக்கமும் நுட்பமாகப் பூவேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட கல் பலகணிகள் இருந்தன. சுவரே இல்லை, முழுக்கவே பலகணிகள்.
அவை ஒரு வலை போல, சல்லாத்துணி போல பூப்படலம் போல பரவியிருந்தன. ஒரு இஞ்ச் கனம்தான் கற்பலகைக்கு. அதை இத்தனை நுட்பமாகக் குடைவதென்பது பெரும் கலைஞர்கள் மட்டுமே செய்யும் வேலை. ஒரு விண்ணுலக சிலந்தி பொன்னால் கட்டிய வலை என நினைத்துக்கொண்டேன். இந்தப்பாலைவனத்தில் காற்றுச்சாளரம் ஓர் அவசியத்தேவை. அதையே கலைப்படைப்பாக ஆக்கியிருக்கிறது மனிதனின் ஆன்மீகத்தேவை.
[முத்துக்கிருஷ்ணன்]
கோயிலின் ஒவ்வொரு சிலையும் அற்புதமானவை. குறிப்பாக இங்குள்ள வித்யாதேவி சிலைகளின் விசித்திரமான நடனநிலைகள். கோயில் அருகே ரிஷபநாதருக்கும் சம்பவநாதருக்கும் சிறிய ஆலயங்கள் உள்ளன. ரிஷபதேவரின் ஆலயத்துக்கு மேலே மேருவும் கல்பவிருட்சமும் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலைப் பார்க்கப்பார்க்க ஆசை தீரவில்லை.சட்டென்று ஒரு பெரிய பொற்கிரீடம் போலத்தோன்றியது. இன்னொரு கோணத்தில் ஒரு பிரம்மாண்டமான காதணி போல. ஒரு தேர்முகடு போல. தேனீக்கூடு போல. பொன்னும் கல்லும் ஒன்றே என்றான இயற்கையின் கனவு.
ஜெய்சால்மருக்கு நாங்கள் பன்னிரண்டு மணிக்குத்தான் வந்துசேர்ந்தோம். ஜெய்சால்மருக்குப் பொன்னகரம் என்று அதைப்பார்ப்பவர் எதையும் கேள்விப்படாமலே பெயர் சூட்டி விடுவார். கோட்டையும் கட்டிடங்களும் எல்லாமே பொன்னிறமான மணல்பாறையால் கட்டப்பட்டவை. அந்த மெல்லிய வெயிலொளியில் கோட்டையைப் பார்ப்பது பொன்னால் ஆன வான்நகர் ஒன்றைப் பார்க்கும் அனுபவமேதான்.
ஜெய்சால்மர் கோட்டை இன்று ஒரு பெரும் சுற்றுலாத்தலம். மலைக்கு மேலே கட்டப்பட்ட கோட்டைக்கு மேல் செல்லும் படிகள் முழுக்க வெள்ளைப் பயணிகள். அவர்களுக்கான கலைப்பொருட்கள் விற்கும் கடைகள். கம்பளங்கள், தொப்பிகள், முண்டாசுகள், இசைக்கருவிகள்.
[கெ பி வினோத்]
மேலே செல்லச்செல்லப் பொன்னிறமான கட்டிடங்கள் நுட்பமான கலையழகுடன் வந்தபடியே இருந்தன. இந்தவகைக் கட்டிடங்களின் அழகே வலைப்பின்னல் போலக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்ப வேலைகள் கொண்ட அழகிய உப்பரிகைகள்தான். அவை பறக்கும் ரதங்கள் போல, பொன்னாலான அம்பாரிகள் போல அந்தரத்தில் நின்றன.
இன்றும் கோட்டைக்குள் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. அலங்கார முகப்புகளும் உப்பரிகைகளும் கொண்ட புராதனமான கட்டிடங்களில் பெரும்பகுதி பயணிகள் தங்குமிடமாக உள்ளது. சின்னஞ்சிறிய சந்துகள். காசியை நினைவுறுத்தும் மடிப்புவழிகள். தரையில் பாவப்பட்ட கல் கூடப் பொன்னிறமான மணல் கல்.
ஜெய்லசால்மர் கோட்டைக்குள் இருக்கும் நான்கு சமண ஆலயங்கள் முக்கியமானவை. சாந்திநாதருக்கும் பார்ஸ்வநாதருக்கும் அமைந்த ஆலயங்கள் மிக அழகானவை. அலாவுதீன் கில்ஜியால் இடிக்கப்பட்டபின் 1615 இல் வணிகரான சேத் தாரு ஷா அவர்களால் மீண்டும் கட்டப்பட்ட கோயில்கள் இப்போது உள்ளன. பொன்மஞ்சள்நிறமான கல்லால் ஆனவை. வெண்கலத்தாலானவை என பிரமை எழுப்பும் அற்புதமான சிற்பங்கள் கொண்டவை.
யட்சிகள், வித்யாதேவிகள். பன்னிரு கைகளுடன் நடனமிடும் நிலையில் வினாயகர் காவலாக நிற்கிறார். இங்குள்ள பல அற்புதமான சிலைகள் காலபைரவருக்குரியவை. பாசாயுதமும் சூலமும் ஏந்தி நாய் அருகே நிற்க நிற்கும் காலபைரவர் தாடி வைத்திருக்கிறார். சில சிலைகளில் பைரவி கூட நிற்கிறார். காலைபைரவி மட்டுமே நிற்கும் சிலைகளும் உள்ளன.
இருகோயில்களிலும் சுவர்களில் உள்ள சிலைகள் மஞ்சள் கல்லை விட சிற்பத்துக்குரிய இன்னொரு ஊடகமே இல்லை என எண்ணச்செய்தன. மண்ணின் செழுமையையும் சருமத்தின் மென்மையையும் பொன்னின் ஒளியையும் ஒரேசமயம் கொள்ளும் இன்னொரு ஊடகம் இருக்க முடியுமா என்ன? பார்க்கப்பார்க்க சலிக்காத சிற்பங்கள்.
உலகம் முழுக்க மதங்களில் ஏன் உருவ வழிபாடு இருகிறது என்பது சிற்பங்களைப் பார்க்கப்பார்க்கத் தெரியும். சிற்பங்கள் நேரடியாக நம் கனவுக்குள் செல்லக்கூடியவை. நேராக நம் துரியத்தில் சென்று அமர்பவை. இந்தச் சிற்பங்களை நான் என்றாவது என் அகத்தில் இருந்து இழப்பேனா என்ன? நூற்றாண்டுகளுக்கு முன் அந்தக் கலைஞனின் கை வழியாக மண்ணுக்கு வந்தபோது சொன்ன சொல்லை, அளித்த புன்னகையை, காட்சியை, அசைவை அப்படியே ஒரு துளி சிந்தாமல் எனக்குள் நிறைக்கின்றன இவை.
மதியம் மூன்று மணி வரை ஜெய்சால்மர் நகருக்குள் சுற்றி வந்தோம். பொன்னிறம் மின்னிய புராதனக் கட்டிடங்கள் கொண்ட நகரம் இடாலோ கால்வினோ எழுதிய புலப்படா நகரங்கள் என்ற நாவலை நினைவில் கொண்டு வந்தது. விதவிதமான உலோகங்களில் உருவாக்கப்பட்ட நகரங்களைப்பற்றி அதில் சீன சக்கரவர்த்தி குப்ளாகானிடம் பயணியான மார்க்கோபோலோ விவரிப்பான்.
மனிதனின் அழியாத கற்பனையில் வாழும் நகரங்கள் அவை. மனிதன் இங்கிருக்கும் எளிய நகரத்துக்கு மாற்றாக ‘அங்கிருக்கும்’ ஒரு பொன்னகரை எப்போதும் கற்பனை செய்துகொண்டிருக்கிறான். சிலசமயம் அந்தக் கற்பனை ஏணியில் சில படிகள் ஏறியும் விடுகிறான். ஜெய்சால்மர் அப்படி அவன் ஏறிய படிகளில் ஒன்று.
மேலும்…