அருகர்களின் பாதை 24 – ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு

ஜோத்பூரில் இருந்து எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட்டுப் பாலைவனப்பயணத்தைத் தொடங்கலாமென முடிவெடுத்தோம். ஏனென்றால் ஜெய்சால்மர் முந்நூறு கிமீ தூரத்தில் இருந்தது. அதுவரை பாலைவனம்தான். சாலையில் எந்தச் சிக்கலையும் சந்திக்க விரும்பவில்லை. எங்கள் சக்கரங்களில் ஒன்று பலமுறை ஒட்டுப் போட்டுப் பழுதாகிவிட்டது. ஒன்று ஏற்கனவே கந்தல். ஆகவே புதியதாக ஒரு சக்கரம் வாங்கினோம். ஒரு காற்றுக்குழாய் புதியதாக வாங்கி உபரி சக்கரத்துக்கு மாட்டினோம்.

எல்லாம் செய்துமுடிக்க மதியம் பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. ராஜஸ்தானில் எல்லாக் கடைகளும் பத்து அல்லது பதினொரு மணிக்குத்தான் திறக்கிறார்கள். குளிர்காலத்தில் வெயில் வருவதே எட்டுக்குப் பின்னர்தான். மொத்தமாக ‘என்ன இப்ப செஞ்சுட்டாப்போச்சு’ என்னும் பாவனை அவர்க்ள் முகங்களில் இருந்தது. அது மாவாவின் விளைவாகக்கூட இருக்கலாம்.

சக்கரம் மாட்டியதும் சீறிக்கிளம்பினோம். ஓட்டுநர் தம்பி பிரசாத் அதிவேகத்தில் ஆர்வமுள்ளவர். ஓய்வுநேரத்தில்கூடக் கைபேசியில் அதிவேக துரத்தல் விளையாட்டுதான். பாலைவனப்பாதை எப்போதுமே நேராக, பழுதற்றதாக இருக்கும். மழை இல்லாமையால் சாலைகள் பழுதடைவது குறைவு. சாலைகள் போடும்போது எந்தக் கோயிலும் குடியிருப்பும் நதியும் குறுக்கே வராதாகையால் நேர்கோடாக இழுத்து விடலாம்.

சாலைக்கு இருபக்கமும் அரைப்பாலைவனம் வந்தபடியே இருந்தது. காய்ந்த குட்டைமுட்புதர்கள் மட்டும் நிறைந்த சமதளமான மண் அடிவானம் வரை. செக்கச்சிவந்த புழுதி மண். சிவந்த பாறைகள். மானுடன் அவற்றில் ஒருமுறையேனும் ஏறியிருக்க வாய்ப்பில்லை. அந்த சாத்தியமே அவற்றை வசீகரமான மர்மம் கொண்டதாக ஆக்கியது.

ஆனால் ராஜஸ்தான் பெரிதும் மாறிவிட்டது. இருபத்தாறாண்டுகளுக்கு முன்பு நான் வந்தபோது இதே பாதை ஒரு தார்க்கோடு. அதன் மேல் மண்படிந்திருக்கும். ஓட்டுநருக்கு மட்டுமே சாலை தெரியும். இருபக்கமும் எப்போதாவது சிறிய கிராமங்கள் வரும். அவை குடிசைகளால் ஆனவை. புழுதிக்குள் புழுதியால் ஆன ஒட்டகங்கள், புழுதியால் ஆன மனிதர்கள், புழுதியாலான புதர்கள் இருக்கும்.

ஆனால் இப்போது பல இடங்களில் கட்டிடங்கள் வந்துவிட்டன. சிவந்த கல் ராஜஸ்தானில் நிறைய கிடைக்கிறது. செம்மரத்தை அறுப்பது போல யந்திரங்களால் நாலு விரல் கனத்துக்குக் கச்சிதமாக அறுத்து அடுக்கி வீடுகளைக் கட்டுகிறார்கள். சிவப்புக்கற்களால் ஆன சுவர்கள். வீடுகள் மிக அழகாக, அந்த மண்ணுடன் இணைந்தவையாக இருந்தன.

ஒரு இடத்தில் அந்த செங்கற்கள் அறுக்கும் ஆலையைப் பார்த்தோம். மாட்டுமாமிசம் போலக் கற்கள் அறுத்து வைக்கப்பட்டிருந்தன. பெரிய குழி. அதற்குள் சதுரம் சதுரமாகக் கல்லெடுத்த தடங்கள். ராஜஸ்தானின் பொருளியலையே இந்த சிவந்த கற்களும் பளிங்குக் கற்களும் மாற்றிவிட்டன. செல்வந்தர்கள் உருவாக உருவாக நகரங்கள் வீங்கிப் பெருத்துவிட்டன.

அத்துடன் இந்தப் பணம் ராஜஸ்தானின் களர் நிலங்களை வேளாண்மைக்குக் கொண்டு வந்துள்ளதையும் கண்டோம். ஏராளமான நிலங்கள், நெடுங்காலமாகப் பாலைநிலமாகக் கிடந்தவை, வேலியிடப்பட்டுப் பண்ணை நிலங்களாக ஆக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆழ்குழாய் மூலம் நீர் பாய்ச்சப்பட்டு வேளாண்மை செய்யப்படுகிறது. இன்று துவரம் பருப்பு, பயறு உற்பத்தியில் ராஜஸ்தான் முந்திக்கொண்டிருக்கிறது.

மணல் மேடுகள் வர ஆரம்பித்தன. மாபெரும் செம்பட்டு ஒன்று வானில் இருந்து மிதந்து மிதந்து இறங்கி அப்படியே படிந்து கிடப்பது போல, ஒசிந்து சுருங்கி நெளிந்து வளைந்து கிடந்தன மண் சரிவுகள். அவற்றில் காற்றின் அலைகள். காற்றின் ரகசியக் குறிப்புகள். காற்று மணலை அறிவதுபோல நீரையும் அறிவதில்லை. மணல் தன்னை முழுக்கமுழுக்க காற்றுக்கு ஒப்புக்கொடுக்கிறது.

இங்குள்ள மணல் வெண்மணல் அல்ல. செம்மை நிறமுள்ளது. மணல் மேட்டில் ஏற ஆரம்பித்தோம். நாற்பதடி உயரமான மேடு. ஆனால் அதில் ஏறுவதைப்போல கடினமான ஏதும் இல்லை. எண்பதடி ஏறுவதற்குச் சமம். உந்துவிசையை முழுக்க மணல் வாங்கிக்கொண்டது. கையாலும் காலாலும் ஏறியதும் மூச்சுவாங்க மணல் மேலேயே படுத்துக்கொண்டேன்.

மணலின் அழகு. அதைப் பெண்ணுடலின் வசீகரமான வளைவுகளுடன் , மென்மையுடன் மட்டுமே உவமிக்க முடியும். ஒசிந்து நெளிந்து படுத்த பெண். இடை, இடுப்புமேடு, தொடைச்சரிவு, மெல்லிய உந்தி சுழித்த பள்ளங்கள்… மணல் மீது நடக்கையில் சிறு குழந்தையாக அம்மா மடிமீது ஏறி நடந்த அனுபவம். சரிவில் இறங்கையில் மென்மணல் மெல்லக் காலை வாங்கிக்கொண்டது. திரும்பிப்பார்க்கையில் நாம் நடந்த தடம் நீண்டு கிடந்தது. மணலுக்கு அது சில நிமிடங்களில் கரைந்து மறையும் ஒரு தடம். மணல் ஒரு வரலாறு.

ஒரு கணநேர நினைவு. ‘வசந்த காலக் கோலங்கள், வானில் விழுந்த கோடுகள்’ என்ற வரி நினைவில் ஊறியது. வானில் விழுந்த கோடுகூட இன்னும் கொஞ்சம் நீடிக்குமோ? மணல் தான் வரலாறு. இந்த மணலில் நடந்த எல்லாப் பாதங்களும் மறைந்தன. மணல் புதிய பாதங்களுக்காகக் காத்துக் கிடக்கிறது. மணல் வரலாறு. திரும்பிப்பார்க்கையில் இரு பாதங்களின் தடங்கள் ஒரு குறள் வரி போலக் கிடந்தன. ஒரு கவிதை வரி. ஒரு வாழ்க்கையின் பதிவு. இந்தத் தாள் எழுதப்படுவதை எல்லாம் உடனே உள்வாங்கி செரித்து அழித்துக்கொள்கிறது. மணல் இலக்கியம்.

மாலை ஐந்து மணிக்கு ஜெய்சால்மரை அடைந்தோம். நகர எல்லையை அடைந்ததுமே மோட்டார் பைக்குகளில் ஏழெட்டுப் பேர் துரத்தி வந்தார்கள். பாலைவனச்சவாரிக்கும் தங்குமிடத்துக்கும் ஏற்பாடுசெய்யும் கைடுகள். மம்மி படத்தில் வெள்ளைக்காரர்களை ஏறி ஏறித் தாக்கும் மம்மிகளைப் போல. இந்த மாதிரி வந்து மாட்டிக்கொண்ட வெள்ளையனின் கெட்ட கனவுபோலும் அந்த காட்சி. அவர்களைத் துரத்திவிடுவதே பெரும் பணியாக இருந்தது. சரமாரியாக இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசித்தள்ளினார்கள். முந்நூறு ரூபாய்க்கு மூன்றுநட்சத்திர ஓட்டல் விடுதி இருக்கிறது என்றார்கள்.

அவர்களை மீறி அரசு சுற்றுலா மையம் சென்றோம். அங்கே விசாரித்தபோது நேராக சாம் மணல் திட்டு என்ற ஊருக்குச் செல்லும்படியும் அங்கே பாலைச்சவாரிக்கு எல்லா வசதியும் உண்டு என்றும் சொன்னார்கள். ஜெய்சால்மரை நாளை பார்க்கலாமென முடிவெடுத்தோம். நேராக அறுபது கிலோமீட்டரை அரை மணிநேரத்தில் கடந்து சாம் மணல் திட்டை அடைந்தோம். பாகிஸ்தான் அருகே உள்ள இந்த இடமே இந்தியாவின் கடைசி சுற்றுலா மையம்.

பிரம்மாண்டமான செம்மணல் வெளி. அங்கே பயணிகள் கூட்டம். ஒட்டகங்கள் காத்திருந்தன. ஓர் ஒட்டக வண்டியில் ஏறி மணல்மேட்டுமேல் ஏறி நின்று அணையும் சூரியனைப் பார்த்தோம். பாலைவன அஸ்தமனம் போல உக்கிரமான தோற்றத்தில் சூரியன் எப்போதுமே தோற்றமளிப்பதில்லை.

பின்பக்கம் நிலவெழுந்துவிட்டிருந்தது. முழுநிலவுக்கு மூன்று நாள்தான். கீழே கொஞ்சம் சப்பியிருந்ததைவிட்டால் பௌர்ணமிதான். வினோதும் பிரசாத்தும் ஓர் ஒட்டகத்தில் ஏறி மணலில் சுற்றி வந்தனர். முத்துக்கிருஷ்ணன் மணல் மேல் ஒட்டகத்தில் கொஞ்சம் ஓடி மீண்டார். நான் ஒரே ஒருமுறை ஒட்டகம் மேல் ஏறிப் பன்னிரு கிமீ சென்றபின் அதில் ஏறுவதே இல்லை என முடிவெடுத்திருந்தேன். இடுப்பு எலும்புகள் கழன்று விடும்.

இந்தப் பயணத்தின் மகத்தான அந்தி. மெல்ல மெல்ல ரத்தச்சிவப்பில் சிவந்து சிவந்து எரிந்தணைந்தது சூரியன். பெரும் காளவாய் போல ஒரு கணம். அதிபிரம்மாண்டமான செம்பருத்தி போல மறு கணம். தங்கம் உருகிய கலம் போல மறு கணம். சூரியன் அஸ்தமித்த பின்னரும் நெடுநேரம் வானில் ஒளி மிச்சமிருந்தது. தூசியில் பிரதிபலிக்கும் செக்கச்சிவந்த ஒளி. அடிவானில் ஓர் உதயம் நிகழப்போவதுபோல.

மறு பக்கம் நிலவு ஒளி கொள்ள ஆரம்பித்தது. பீங்கான் தட்டு போல இருந்தது வெள்ளித்தட்டாக ஆகியது. வெண்கண்ணாடி போட்ட விளக்காக ஆகியது. பின் குளிர்ந்த வெண்ணிறமான அதிகாலைச்சூரியனாக ஜொலித்தது.

பாலைவனத்தின் மணல் மடிப்புகளின் கோலங்கள் ஒளி மாறுபாடுகளுக்கு ஏற்ப விதவிதமாக மாறின. அவை சிவந்த பட்டுச் சுருக்கங்களாக ஆயின. பின் மெல்ல மெல்ல மஞ்சள் சருமம் போல மின்னின. மெல்ல அடங்கி நிலவில் துருவியிட்ட அலுமினியத் துகள்களின் குவியல்களாக மணல்சரிவுகளை மாற்றின. பின் இருண்டதும் நிலவின் தண்ணொளியை பிரதிபலித்து உறைந்த கடல் அலை போலக் குளிர்ந்து கிடந்தன. ‘இந்த ஒரு மாலை போதும் சார்… இது போதும் சார்…’ என சீனு புலம்பினார்.

இரவில் அறை தேடி வந்தோம். ஒரு டீக்கடையில் டீ குடித்தோம். கடைக்காரரிடம் விசாரித்தபோது தலைக்கு முந்நூறு ரூபாய்க்கு இரு கூடாரங்களில் மணலில் தங்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். கூடாரங்களுக்கு வந்தோம். வசதியான அழகிய கூடாரங்கள். கட்டில், மெத்தை, போர்த்திக்கொள்ள ரஜாய் உண்டு. இங்கே விடிகாலையில் நான்கு டிகிரி வரை குளிர் வருமாம். இப்போதே நல்ல குளிர். ஆனால் நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் நள்ளிரவில் பாலைநிலவின் ஆட்சியை தரிசிக்கக் காரில் கிளம்பவிருக்கிறோம். இன்று எங்களைப் பற்றிக் கடவுள் சந்தோஷப்பட்டிருப்பார். அவர் அளித்த நாள் என்னும் அமுதகலசத்தில் ஒரு துளி வீணாக்காமல் அருந்தியிருக்கிறோம்.

மேலும்…

மேலும் படங்கள்

முந்தைய கட்டுரைஅஞ்ஞாடி- ஒரு மதிப்புரை
அடுத்த கட்டுரைபனிமனிதனும் அம்மாவும்-கடிதம்