அருகர்களின் பாதை 23 – ரணக்பூர், கும்பல்கர்

ரணக்பூரில் மாலை ஆறுமணிக்கு வந்துசேர்ந்தோம். ராஜஸ்தான் வழியாகப் பயணம் செய்யும்போது இதுவரை தோன்றிய எண்ணம் நம்மூர் பணகுடி அல்லது ராமநாதபுரம் வட்டாரம் அளவுக்கு வறட்சியான வெற்றுநிலம் ஏதும் கண்ணில் படவில்லை என்பதே. ஏதோ ஒரு பசுமை இருந்துகொண்டே இருந்தது. விவசாயம் நடந்துகொண்டிருந்தது.

உயரமான மலைகள் வறண்டவை. ஆனால் மலைநடுவே உள்ள பள்ளத்தாக்குகளில் ஆறுகள் ஓடின. அவற்றில் பெரும்பாலும் நீர் இல்லை. ஆனால் மழைக்காலத்தில் நீர் ஓடியிருக்கக் கூடும் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தன. ஆற்றுப்படுகைகளில் எல்லாம் கிணறுகளில் நீர் இருந்தது. நீரை சிறிய குளங்களில் சேர்த்து மண்ணுக்கு அனுப்பும் பாரம்பரியத்தொழில்நுட்பம் அவர்களிடமிருந்தது.

ஓர் ஆற்றுக்கரையில் சூரியநாராயணர் கோயில் என்ற சிறிய அழகிய கோயில் இருந்தது.பழைய கோயில் எனத்தெரிந்தது. இறங்கி மேலே சென்று பார்த்தோம். உயரமான அடித்தளம் மீது கட்டப்பட்ட பளிங்குச் செப்பு போன்ற சின்ன கோயில். அது சூரியன் கோயில்தான். நாராயணருக்கும் அக்கோயிலுக்கும் சம்பந்தமில்லை, ஆனால் இன்று அது வைணவக்கோயிலாக அறியப்படுகிறது.

கோயிலின் சுவர்களில் உள்ள சூரியச்சிலைகள் அற்புதமான அழகுடன் இருந்தன. மொத்தக் கோயிலும் ஏராளமான குதிரைகளால் இழுக்கப்பட்டு விரைவதுபோலச் சித்தரிக்கபட்டிருந்தது. சூரியனைத்தவிர எந்த தெய்வமும் இல்லை. எந்த தேவதையும் இல்லை. ஆச்சரியமாக இருந்தது. சௌரம் சைவ வைணவத் தொடர்பில்லாமல் தனிமதமாக இயங்கிய காலகட்டத்தில் உருவான கோயில் போலும். இந்த நிலம் சூரியனுக்குரியது. ஒருகாலத்தில் இங்கே சௌரம் வலுவான பெருமதமாக இருந்திருக்கலாம். குறிப்புகளின்படி அது ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

கோயிலை ஒட்டிய மடப்பள்ளியில் பூசாரியும் இரு நண்பர்களும் தீமூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். பயணிகளைக்கண்டு பதற்றம் அடைந்தார்கள்.அருகேதான் ரணக்பூரின் சமண ஆலயம் என்று சொன்னார்கள். அங்கே இந்துக்களும் தங்கலாம் என்று ஆலோசனை கூறினார்கள். மேலும் ஒரு கிமீ தூரத்தில் பக்கவாட்டில் ரணக்பூரின் பேராலயத்தின் முகப்பு தெரிந்தது. நாங்கள் உள்ளே சென்று தங்குமிடம் கோரினோம். அறைகள் எல்லாம் நிறைந்திருந்தன, காரணம் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. பெரிய ஒரே அறையில் தங்கும்படி சொல்லி எல்லாருக்கும் மெத்தைகளும் போர்த்திக்கொள்ளும் ரஜாய்களும் தந்தார்கள்.

காலையில் எழுந்து குளிருடன் நடந்து போஜனசாலையில் தேநீர் குடித்துவிட்டு கோயில் வளாகத்தைச் சுற்றி நடந்தோம். மலைகள் சூழ இருந்த பெரிய கோட்டைபோன்ற அமைப்புக்குள் இருந்தது அக்கோயில். இந்தியாவின் மிகப்பெரிய சமண அறக்கட்டளையான ஆனந்த்ஜி கல்யாண்ஜி அமைப்பு அதை நிர்வாகம் செய்கிறது. பல சிறு கோயில்கள். நடுவே மையக்கோயில்.

இந்தியாவில் உள்ள சமணக் கோயில்களில் பிரம்மாண்டமானது ரணக்பூரில் உள்ள ஆதிநாதர் ஆலயம். அது தர்ண விகாரம் என்றும் அழைக்கப்படுகிறது. மிகப்பெரிய முகப்பு. பொதுவாக சமண ஆலயங்களுக்கு ஓர் அமைப்புள்ளது. மையக்கோயிலைச்சுற்றி இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களுக்கும் சிறிய கோயில் இருக்கும். அவை ஒவ்வொன்றுக்கும் கோபுரமும் இருக்கும். அக்கோபுரங்கள் வரிசையாக அமைய அவற்றின் மேல் மையக்கோபுரம் எழுந்து தெரியும். அதே அமைப்புதான் இங்கும். கோயிலுக்கு நான்கு வாசல்கள். நான்கும் மூன்று அடுக்குள்ளவை. கருங்கல்லால் ஆனது இந்தப் பேராலயம்.

பிற சமணத் தலங்களைப்போலவே ரணக்பூரும் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதலே புகழ்பெற்றிருந்தது. பதினொன்றாம் நூற்றாண்டில் இஸ்லாமியப் படையெடுப்பாளர்களால் கோயில் முழுமையாகவே அழிக்கப்பட்டது. அதன் சில இடிபாடுகள் நினைவுக்காக வைக்கப்பட்டுள்ளன. 1433இல் ஆட்சிக்கு வந்த மேவார் மன்னர் ராணாகும்பா ஒரு பெரிய அரசைக் கட்டி எழுப்பினார். ராஜஸ்தானில் பல பெரும் கோட்டைகளை அவர்தான் கட்டினார். சித்தூர்துர்க் அவரது தலைநகரம். மிக அருகே உள்ள கும்பல்கட் அவரது பெரும் கோட்டை. ராணா கும்பா இந்த ஆலயத்தை மீண்டும் கட்டினார்.

இன்றுள்ள ஆலயத்தை ராஜஸ்தானி வணிகரான தர்ணா ஷா என்பவர் கட்டினார். சங்கபதி என்ற குடும்பப்பட்டம் இவர்களுக்குண்டு. அவர் ஒரு தனவணிகராக இருந்தார். அவர் ராணா கும்பாவின் நம்பிக்கையைப் பெற்று அமைச்சராகவும் ஆலோசகராகவும் பணியாற்றினார். தன்னுடைய 32 ஆவது வயதில் தன் குரு சோமசுந்தர சூரி முனிவரின் உபதேசத்தை ஏற்றுத் துறவு பூண்டார். அப்போது அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு தாமரையிதழ் விமானத்தில் ஆதிநாதரை அவர் கண்டார். ஆகவே அதைப்போன்ற ஓர் ஆலயத்தை ரணக்பூரில் கட்ட விரும்பினார். ராணா கும்பா அதை ஏற்று, கோயில்கட்ட நிதியும் நிலமும் அளித்தார்.

தாமரையிதழ்களின் அமைப்புள்ள முகடுகளுடன் இந்த ஆலயம் அமைக்கப்பட்டது. 1377இல் இந்த ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது 1441இல்தான் இதன் கட்டிடவேலை முடிந்தது. தர்ணா ஷாவும் அவரது ஆசிரியர் சோமசுந்தர சூரியும் இக்கோயிலின் திறப்பு மங்கலவிழாவில் பங்கு கொண்டிருந்தனர். இங்கே 47 வரிகள் கொண்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் இந்தத் தகவல்கள் உள்ளன. ராணா கும்பா இந்து, காளி பக்தர். ஆனால் மேவார் முழுக்க பல சமண ஆலயங்களை அவர்தான் கட்டியிருக்கிறார்.

பின்னர் முகலாயர்களால் இந்த ஆலயம் மீண்டும் இடிக்கப்பட்டது. நெடுங்காலம் இட்படுகளாகக் கிடந்தது. மராட்டிய இந்து அரசர்களல் ஓரளவு பழுதுபர்க்க்ட்டது. நூறாண்டுகளுக்கு முன்னர்தான் ஆனந்த்ஜி கல்யாண்ஜி அறக்கட்டளையால் பெரும்பொருட்செலவில் எடுத்துக்கட்டப்பட்டுப் புதுப்பொலிவுடன் உள்ளது.

கோட்டை போன்ற அதன் முகப்பும் உள்ளே உள்ள கட்டிட அளவுகளும் பிரமிப்பூட்டுபவை. இந்தியாவின் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்று இது. வெளியே பார்க்கையில் மூன்றடுக்குக் கோயில். உள்ளே சென்றால் ஒரே மண்டபம் அமைந்திருக்கிறது. கழுத்தைச் சுளுக்க வைக்கும் உயரம். முற்றிலும் சலவைக்கல்லால் ஆனது.

நான்கு பக்கமும் வாசல் உள்ள கருவறைக்குள் ஆதிநாதர் அமர்ந்திருக்கிறார். பெரிய விழிகள் கொண்ட சலவைக்கல் சிலை. முகலாயர்களால் உடைக்கப்பட்ட பழைய சிலைகள் புதியதாகச் செய்யப்பட்டு ஆலயன்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கருவறை வாசலிலும் பிரம்மாண்டமான மண்டபம். கோயில் பிராகாரத்தில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களுக்கும் சன்னிதிகள். நல்லவேளையாக இந்தக் கோயிலில் சிலைகள் அதிகம் இல்லை. இதையும் சிலைகளால் நிறைத்திருந்தால் பார்த்து முடிக்க இருபது வருடங்களாவது ஆகும்.

சுற்றிச்சுற்றி வந்து கோயிலைப் பார்த்துக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் பெருமூச்சுடன் போதும் என்று திரும்பி வெளியே வந்தோம். மாபெரும் கட்டுமானங்கள் ஒரு வகையில் நிலைத்துப் போன காலங்கள், பாறைகளைப் போல. அவை காலத்தின் முடிவிலாத்தன்மையுடன் நிலைத்து நின்றுகொண்டிருக்கின்றன. மனிதன் எத்தனை சிறியவன் எனக் காட்டுகின்றன.

மகாராணா கும்பாவின் பெயர் சொல்லும் இந்தப் பேராலயம் சில அடிப்படை உண்மைகளைக் காட்டுகிறது. இந்த ஆலயம் இடிக்க இடிக்க மீண்டுவந்திருக்கிறது. அதை உருவாக்கும் கலைத்திறனும் தொழில்திறனும் இந்த மண்ணில் இருந்துகொண்டே இருக்கின்றன. கொஞ்சம் வாய்ப்பு கிடைத்தாலும் அது மீண்டும் எழுந்து நிற்கிறது. எத்தனை அழிவுக்குப்பின்னும் மீண்டும் கலை முளைத்தெழுகிறது. அழிக்கவே முடியாதபடி அது மானுட மனங்களில் தன்னை நிறுவிக்கொண்டுள்ளது.மண்ணுக்க்டியில் வேர் உள்ள புபோல. சிலசொட்டு நீரே அதற்குப்பொதும். மெலேஎ எவ்வாவு அனல் எழுந்தாலும் அது அழிவதில்லை.

கலை உண்மையில் வாழ்வது அங்குதான். கல்லும் மண்ணும் வெளியே உள்ளவை. வெளிக்கட்டுமானங்களை மட்டுமே இடிக்க முடியும், உள்ளே உள்ள கலை எப்போது வேண்டுமானாலும் தன்னைச்சுற்றி உள்ள மண்ணையும் கல்லையும் மரத்தையும் அள்ளிக்கொண்டு மீண்டும் உருவாகி வரும். பொட்டல்வெளியில் சுழல்காற்று சருகுகளை அள்ளிக் கோபுரம் போல நிற்கும். உண்மையில் நிற்பது காற்றுதான், அச்சருகுகள் அல்ல. சுழல் காற்றுபோல நம் மரபின் ஆழ்மனத்தில் கலை வாழ்கிறது. வரலாறு இடிப்பவர்களுக்குரியதல்ல, கட்டுபவர்களுக்குரியது. இடித்தவர்களல்ல, கட்டிய மகாராணாவே இன்றும் வாழ்பவர்.

மகாராணா கும்பகர்ணா என்ற ராணா கும்பா மேவாரை 1433 முதல் 1468 வரை ஆட்சி செய்தவர். சிசோடிய குலத்தைச் சேர்ந்தவர். ராணாகும்பா ராஜபுத்திர வீரத்துக்கு முதன்மை உதாரணமாகக் குறிப்பிடப்படுகிறார். பதின்மூன்றாம் நூற்றாண்டில் அல்லாவுதீன் கில்ஜியால் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட பின் மேவார் பலம் குன்றி அதிகார வர்க்கம் சிதறிக்கிடந்த காலத்தில் ராணா கும்பா பதவிக்கு வந்தார். ராஜபுத்திர குலங்களை திரட்டி அரச்மைத்து சித்தூர் கோட்டையைத் தலைமையகமாகக் கொண்டு ஆட்சி செய்தார்.

மால்வா சுல்தான் மாமூது கில்ஜி மேவாரைப் பலமுறை தாக்கினாலும் வெல்லமுடியவில்லை. ராணா கும்பா மாமூது கில்ஜியைத் தோற்கடித்துத் திருப்பி அனுப்பினார். மீண்டும் மாமூது கில்ஜி படையெடுத்து வந்தாலும் சித்தூரை வெல்ல முடியவிலை. இந்த வெற்றிக்காக ராணா கும்பா கட்டிய வெற்றி ஸ்தம்பம் சித்தூரில் உள்ளது.

பின்னர் ஆட்சிக்கு வந்த குத்புதீன் ஐபக் மேவாரைத் தாக்கினாலும் சித்தூரையும் கும்பர்கர் கோட்டையையும் பிடிக்க முடியவில்லை. பலமுனைகளில் தொடர்ந்து சுல்தான் படைகளின் தாக்குதல்களை சந்தித்தாலும் கடைசிவரை ராணா கும்பா தோல்வி அடையாமல் தன் எல்லைகளைக் காத்துக்கொண்டார். ஒருவகையில் ராஜபுத்திர வரலாற்றிலேயே அவருக்கு நிகரான வெற்றிகள் எவருக்கும் வாய்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ராணா கும்பா இன்று நினைக்கப்படுவது அவர் கட்டிய ஏராளமான கோட்டைகளுக்காகத்தான். மேவார் நாட்டில் உள்ள 84 கோட்டைகளில் 32 கோட்டைகள் ராணா கும்பா கட்டியவை. அவர் கட்டிய கோட்டைகளில் சித்தூர், கும்பல்கர் இரு கோட்டைகளும் பிரம்மாண்டமானவை. இந்தியாவின் கோட்டைகளிலேயே அவைதான் முதலிடம் வகிப்பவை. இக்கோட்டைகளில் பெரும்பாலானவற்றுக்கான பொறியியல் வரைவை ராணா கும்பாவே அமைத்திருக்கிறார். அவர் ஒரு வாஸ்து நிபுணர். இன்று இக்கோட்டைகளுக்கான ஆய்வுகளுகாக உலகம் முழுக்க இருந்து ஆய்வாளர் வந்துகொண்டிருக்கிறாகள்.

ராணா கும்பாவின் ஆட்சியில் மேவார், இலக்கியம் இசை கட்டிடக்கலை அனைத்துக்கும் மையமாக வளர்ச்சி அடைந்தது. ராணா கும்பாவின் அரசவையில் அக்காலத்தின் புகழ்மிக்க கவிஞர்களும் இலக்கண ஆசிரியர்களும் இருந்திருக்கிறார்கள். ராணா கும்பா ஒரு பேரிலக்கியவாதி. அவர் ஜெயதேவரின் கீத கோவிந்தத்துக்கு உரை எழுதியிருக்கிறார். அது ரசிகப் பிரியா உரை என அழைக்கப்படுகிறது. ராணா கும்பா எழுதிய சுதாபிரபந்தா, காமராஜ ரதிசாரா போன்ற நூல்கள் முக்கியமானவையாக சொல்லப்படுகின்றன. இசை சம்பந்தமான இரு நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார்.

 

ரணக்பூர் கோயிலில் போஜனசாலையில் உணவருந்தினோம். பிரம்மாண்டமான போஜனசாலையில் அவ்வேளையில் நாலைந்து பெரிய பந்திகளிக்கு ஆளிருந்தனர்.அவல் உப்புமா, தொட்டுக்கொள்ளக் காராசேவு. அப்பளமா சப்பாத்தியா எனத் தெரியாத ஒரு விஷயமும் கொடுத்தார்கள்.இப்போதுதான் அவல்உப்புமாவில் காரசேவை கலந்து சாப்பிடவேண்டும் என்று கண்டுபிடித்தோம். இத்தனை தொலைவு வரவேண்டியிருக்கிறது.

அங்கிருந்து பதினொரு மணிக்குக் கிளம்பி கும்பல்கர் கோட்டையைப் பார்க்கச் சென்றோம். கும்பல்கர் ராணா கும்பாவால் கட்டப்பட்ட பெரும் கோட்டை. ராணா பிரதாப் சிங் அங்குதான் பிறந்தார். ஆகவே அது ராஜபுத்திரர்களுக்கு ஒரு புனிதத் தலம்போல.

கும்பல்கர் கோட்டை கடல்மட்டத்துக்கு 1100 மீட்டர் உயரத்தில் 36 கிமீ சுற்றளவுக்குக் கட்டப்பட்டுள்ளது. ராஜபுதனத்துக் கோட்டைகளைப் போல இதுவும் மலைகளை வளைத்துக் கட்டப்பட்ட கோட்டை. கார் அந்தக் கோட்டையின் முகப்பில் சென்று நின்றபோது நெடுநேரம் பேச்சிழந்து போனோம். அத்தனை பிரம்மாண்டமான ஒரு கோட்டையை எங்களில் எவரும் அதற்கு முன்னர் பார்த்ததில்லை. பதினைந்து அடி தடிமன் கொண்ட கோட்டைச்சுவர். நாற்பதடி உயரம். அது முகப்பில் பிரம்மாண்டமான நீர்த்தாழிகளை வரிசையாக வைத்தது போல வளைவு வளைவாக நின்றது. கனத்த கருங்கற்களால் ஆன கோட்டை.

இக்கோட்டை கட்டுவதற்கான முயற்சிகள் பலமுறை நடந்து தோல்வியுற்றன என்றும் ஒருவர் தன் தலையைத் தானே வெட்டி பலியானால் மட்டுமே இதைக் கட்டுவதை தேவதைகள் அனுமதிக்கும் எனக் குறி சொல்லப்பட்டது என்றும் கதைகள் சொல்கின்றன. ஒரு வீரன் தன் கழுத்தைத் தானே வெட்டிக் களப்பலியானான். அவனுக்காக ஒரு கோயில் நுழைவாயிலருகே கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள தீபஸ்தம்பத்தில் மகாராணா கும்பா பெரும் நெய்விளக்குகளை அமைத்திருந்தார் என்றும் அந்த ஒளியில் விவசாயிகள் வயலில் வேலைசெய்வார்கள் என்றும் சொல்கிறார்கள்.

கும்பல்கர் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதலே முக்கியமான ஊராக இருந்திருக்கிறது. சமண நூல்களில் சொல்லப்படும் மாமன்னரான சம்பிரதா அந்த ஊரில் ஆயிரம் சமணக்கோயில்களைக் கட்டியதாகக் கல்வெட்டுகள் சொல்கின்றன. பின்னர் அந்நகரம் அழிந்தது. ராணா கும்பா அங்கே நூற்றியெட்டு சமணக் கோயில்களை மீண்டும் கட்டினார். சிவன் காளி விஷ்ணு கோயில்களையும் கட்டினார். அவற்றில் ஏழு சமண ஆலயங்ளும் இந்து ஆலயங்கள் சிலவும் கோட்டை முகப்பருகே உள்ளன. அவற்றைச் சென்று பார்த்தோம். எல்லாக் கோயில்களுமே மூர்த்தி இல்லாமல் காலியாகக் கிடந்தன.

மேவார் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே இருந்தது. அப்போதைய ராணா, குன்று மேல் இருந்த அரண்மனையைப் புதுப்பித்துக் கட்டியிருக்கிறார். மேலே ஏறிச்செல்ல சரிவான யானைப்பாதை உள்ளது. அக்குன்றும் அதன் சரிவின் கட்டிடங்களும் ஒரு கம்பீரமான உணர்வெழுச்சியைக் கொடுத்தன, சரித்திரத்தைத் தொட்டறிவது போல் இருந்தது. சுதையால் ஆன பெரிய மாளிகை அந்த அரண்மனை. எல்லா அறைகளும் காலியாகவே கிடந்தன.அங்கிருந்த வாழ்க்கை அகன்றுபோய்விட்டது. எஞ்சியுள்ளது நீள்மூச்சுவிடும் காற்று மட்டுமே

கும்பல்கரில் இருந்து ஓசியான் செல்வது எங்கள் திட்டம். ஆனால் பயணம் நினைத்தது போல இருக்கவில்லை. புழுதி நிறைந்த சிறிய மலைப்பாதை வழியாக இறங்கி கிராமத்து சாலைகள் வழியாகச் சென்றோம். கிராமங்களின் வழியாக அங்கே திகழும் வாழ்க்கையைப்பார்த்தபடிச் செல்வது ஒரு நல்ல அனுபவம்தான். வறுமை என்று சொல்லமுடியாது, ஆனால் நெடுக்கியடித்துக்கொண்டு வாழும் எளிய வாழ்க்கை. புழுதிமூடிய வீடுகள். புழுதியிலேயே துணிகளைக் காயப்போட்டிருந்தார்கள். ரஜாய்கள் குளிர்காலத்துக்காக காய்ந்துகொண்டிருந்தன

திட்டமிட்டதைவிட ஏழுமணிநேரம் தாமதமாகிவிட்டது.ஆகவே ஜோத்பூரில் தங்கலாமென முடிவெடுத்தோம். ஜோத்பூர் நெருங்கியபோது ஒரு விபத்தைக் கண்ணால் பார்த்தோம். ஒரு ஆள் பைக்கில் வந்து லாரி மோதிக் கீழே விழுந்தான். இருட்டுக்குள் குருதியின் வாசனை. இறங்கி அவனை நோக்கி ஓடினோம். அவனுக்கு நினைவில்லை. அவனைத் தட்டி எழுப்பினோம். முனகினான். அதற்குள் ஒரு கூட்டம் வந்துவிட்டது. அவர்கள் அவனை உசுப்பினார்கள். அடி பெரிதில்லை. நெற்றி கன்னம் கால் போன்ற இடங்களில் காயம், அவ்வளவுதான்.

அவர்கள் உள்ளூர்க்காரர்கள். நாங்கள் ஆம்புலன்ஸுக்கு போன் செய்திருந்தோம். அவர்களும் ஆம்புலன்ஸிடம் பேசினார்கள்.மேலும் அங்கே நிற்க எங்களுக்கு அவகாசமில்லை. விடைபெற்றுக் கிளம்பி மேற்கொண்டு சென்று ஜோத்பூரை நெருங்கியதும் டயர் ஒன்று வெடித்துவிட்டது. பலமுறை ஒட்டுப்போட்ட டயர். வேறு வழியில்லை. ஜோத்பூரில் தங்கி அதை சரிசெய்த பின்னர்தான் கிளம்பியாகவேண்டும். மொத்தத் திட்ட்டமும் மாறிவிட்டது. சில ஊர்களை தவிர்த்தாகவேண்டும், வேறுவழியில்லை

மேலும்…

மேலும் படங்கள்

முந்தைய கட்டுரைசீனு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅஞ்ஞாடி- ஒரு மதிப்புரை