அன்னா ஹசாரே – கடிதங்கள்

அன்பார்ந்த ஜெயமோகன்,

அன்னாஹசாரே தோல்வி என்பதற்கு நன்றாக விளக்கம் அளித்திருந்தீர்கள். அதுஒரு தோல்வி அல்ல, நீங்கள் சொல்வதுபோல் அது ஒரு அடுத்த கட்ட நகர்வு. அவர் முன்னெடுத்தது இன்று நகர ஆரம்பித்துவிட்டது. இரண்டாம் கட்டப் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்பதற்கு முக்கிய காரணம் நம்முடைய நடுத்தர மற்றும் எளிய மக்களுக்கு அன்றாடப் பிழைப்பே பெரிய விசயமாக இருக்கிறது. இதில் அவர்கள் தொடர்போராட்டங்களுக்கு நேரம் செலவழிக்கமுடியாது. இங்கு நம்மை ஆள்பவர்கள் நாம் தொடர்ந்து பிழைப்புக்காக ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற முறையில் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கிறார்கள். நாம் சம்பாதிக்கும் பணம் பலவழிகளில் கடற்பஞ்சு நீரை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சப்படுகிறது. அன்றாடம் நம் கைகளில் மிஞ்சுவது சொற்பம். சிலசமயங்களில் அதுவும் இல்லை. அப்படி நாம் தொடர்ந்து ஓடுவதால்தான் நம்மைக் காக்கக் கடவுள்போல் ஒருவன் வருவான் (திரைப்படங்களில் காண்பிப்பதுபோல்) என்ற எண்ணத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம்.

செந்தில்குமார்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று (29 .01 .12 ) உங்கள் வலைத்தளத்தில் திரு. ரகுநாதன் பட்டாபிராமன் அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் “அண்ணா தோற்றுவிட்டார். ஆனால் ஒரு காந்தியப்போராட்டம் நிகழ்ந்தவரை வெற்றியையே கொடுக்கும். இந்திய சாமானியனின் மனதில் ஊழலுக்கு எதிரான ஒரு எழுச்சியையும் உறுதிப்பாட்டையும் உருவாக்கியவரையில் அது வெற்றியே. அதற்குமே இந்த தேசத்துக்கு அதிருஷ்டமில்லை. நமக்கு அருந்ததி ராய்களும் ராஜ்தீப் சர்தேசாய்களும் ஞாநிகளும் மாலன்களுமே கதி” என்றும் மேலும் இன்னொரு கேள்விக்கான பதிலில் “அண்ணாவின் இயக்கம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அதைத் தோற்கடித்தவர்கள் இனிமேல் கொஞ்சகாலம் அந்தத் தோல்வியை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதிக்குவிப்பார்கள். யானை இறந்தாலும் இருந்தாலும் பொன்தான்” என்றும் கூறி உள்ளீர்கள்.

இதைப் படித்தவுடன் (அதுவும் நீங்கள் எழுதி) மிகுந்த விரக்தி ஏற்பட்டது. அண்ணாவையும்,அவர் இயக்கத்தையும் பலர் அவதூறாகப் பேசி எழுதியதை நம்பிய நிலையில் அவரைப் பற்றிய தங்கள் கருத்தை அறிந்த பிறகுதான் அவரின் மீது மதிப்பும் அவரின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் மீது நம்பிக்கையும் வந்தது. ஆனால் நீங்கள் அதற்குள் அவர் இயக்கம் தோல்வி அடைந்து விட்டது என்று எழுதியதை வேறு வழியில்லாமல் நம்பக்கூடிய நிலையில் நமக்கு என்றுமே இந்த ஊழல்வாதிகளிடம் இருந்து விமோசனம் கிடைக்காதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இதுதான் நமது நாட்டின் துரதிர்ஷ்டம்.
அன்புடன்,
அ.சேஷகிரி,
ஆழ்வார்திருநகரி.

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 25 – லொதுர்வா, ஜெய்சால்மர்
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 26 – பிக்கானீர்