திருவாரூர் பயணம்– அரசுப் பேருந்து

திருவாரூரில் என் மாமனார் உயர்திரு சற்குணம்பிள்ளை அவர்கள் புதுவீடு கட்டியிருக்கிறார்கள். ஏற்கனவே பட்டுக்கோட்டையில் இருந்த வீட்டை விற்றுவிட்டு. என் மனைவி மூன்றுநாள் முன்னதாகவே போய்விட்டாள். நானும் பையனும் ஒன்பதாம் தேதி போய் பத்தாம் தேதி இறங்கினோம்.

போகும்போது யூனிவர்சல் நிறுவனத்தின் தனியார் பேருந்து. நாகர்கோயிலில் இருந்து வேளாங்கண்ணிக்குப் போவது. பெரிய காற்றணைப் பேருந்து. ஆகவே கட்டணம் இரு மடங்கு. ஆனால் வண்டி அரைமணிநேரம் ஓடியதுமே அஜிதன் ‘அப்பா கைகால் அரிக்கிறது’ என ஆரம்பித்துவிட்டான். என் கைகளும் தோளும் அரித்தன. சில நிமிடங்களுக்குள் பையனின் கைகளில் தடிப்புகள். பார்த்தபோது பேருந்தின் இருக்கைக்கு உள்ளே உள்ள நுரை ரப்பரில் வாழும் சிறிய உளுப்பன்பூச்சிகள்தான் காரணம் என்று தெரிந்தது. பலவருடங்களாக வெயில்படாமல், பூச்சிமருந்தும் அடிக்காமல் இருந்த நுரைரப்பர் உளுத்து விட்டது. ஒன்றும்செய்வதற்கில்லை. தூங்கு தூங்கு என்று சொல்லி சமாதானம் செய்தேன். சிம்பு நடித்த மன்மதன் என்ற ‘பலான’ படம் போட்டார்கள்.

அங்கே சென்று இறங்கியபோதுதான் தெரிந்தது சைதன்யாவுக்கு அதே சிக்கல் ஏற்பட்டு கைகளில் தடிப்புகள் வந்து மருத்துவரைக் காட்டி மருந்து போட்ட தகவல். திரும்பி வருவதற்கு யூனிவர்சல் பேருந்தில் சீட்டு எடுக்க முயன்றால் எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. ஞாயிறு மாலையானதனால் இருக்கலாம். அரசுப்பேருந்து உண்டு என்றார்கள். அதுவும் காற்றணைப்பேருந்து. கட்டணம் 30 சதவீதம் குறைவு.

ஏழு மணிக்கு திருவாரூக்கு வரவேண்டிய வேளாங்கண்ணி- களியக்காவிளை ‘சூப்பர் டீலக்ஸ்’ பேருந்து அரைமணிநேரம் தாமதமாக வந்தது. நல்ல இருக்கைகள். வண்டிகிளம்பியதுமே அருண்மொழி சொன்னாள், ‘நல்ல பஸ். பணமும் குறைவு. ஆனா பாதிகூட நிரம்பல்ல பாத்தியா?’

எனக்கும் அது புதிராகவே இருந்தது. கடைசி இருக்கைகளில் கூவிக்கூவி தஞ்சாவூருக்கு ஆள் ஏற்றிக் கொண்டார்கள். தஞ்சைக்குப் போய்ச் சேர்வதற்குள் நெடுநேரம் ஆகிவிட்டது. தஞ்சைக்கு வெளியே ஒரு சாலையோரக் குடிசைக்கடைமுன் வண்டியை நிறுத்தினார்கள். அந்தக் கடையைச்சுற்றி முட்டைஓடுகள் கோழி இறகுகள் குவிந்து மட்கி நாறிக் கொண்டிருந்தன. நெடுஞ்சாலை. ஆகவே சிறுநீர் கழிக்க வசதி இல்லை. பெண்கள் ஒரு குழுவாக திரண்டு முள்காடு வழியாகத் தாண்டி சிறுநீர் கழிக்கச் சென்றார்கள்

தண்ணீர் வாங்கலாம் என்று அந்த கடைக்குச் சென்றால் ஓட்டுநரும் நடத்துநரும் இலவச பரோட்டா- சிக்கனைச் சாப்பிட்டுக் கொண்டிருக்க சில பயணிகளும் சாப்பிட்டனர். மீண்டும் பேருந்து எடுக்கப்பட்டதும் ஒன்று தெரிந்தது, ஓட்டுநர், நடத்துநர் ஒரு உதவியாளர் பையன் மூவருமே மது அருந்தியிருந்தார்கள். அந்தக்கடையில் கள்ளச்சாராயமும் விற்றார்கள்.

அதன்பின் பேருந்து ஓடிய விதத்தைப்பற்றி நாவல்தான் எழுதவேண்டும். எதிரே வந்த வாகனங்களின் ஓட்டுநர்கள் உரக்க வசைபாடினர். பாதசாரிகள் கெட்டவார்த்தை கூவி கல்லை விட்டெறிய ஓட்டுநரும் நடத்துநரும் திருப்பி வசைபாடி சிரித்தார்கள். மரங்களை நோக்கி பாய்ந்து சென்ற வண்டி பயங்கரமாகக் கிரீச்சிட்டு கூவி நின்றுத் திரும்பியது. குழிகளில் விழுந்து எம்பியது.

தஞ்சை தாண்டியதும் சாலையில் வைத்து நடத்துநர் ஒரு கும்பலை ஏற்றிக் கொண்டார். அவர்கள் உள்ளே வந்து வண்டிக்குள் இடமில்லை என்று கண்டதும் கூச்சல் போட ஆரம்பித்தார்கள். ”சீட் இருக்குன்னு சொன்னியேய்யா” நடத்துநர் வேறு ஒரு தர்க்கநிலையில் இருந்தார். ”சீட் இருக்கு…ஆனா அதிலே ஆள் இருக்கு” ”இறக்கிவிடு”என்று அந்தக்கும்பல். ”இனிமே அடுத்த ஸ்டாப் புதுக்கோட்டைதான்”என்று ஓட்டுநர். ஏறிய கும்பலும் முழுப்போதை. பணம் கொடுக்க மாட்டோம் என்று அவர்கள் கூச்சலிட்டார்கள். நடத்துனரால் எழ முடியாது. ஆட்டம்– வண்டிக்கும் அவருக்கும்.

ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பயணிகள் எழுந்து கூச்சலிட ஆரம்பிக்க வேறுவழியில்லாமல் வண்டி நின்றது. போதைக்காரர்கள் இறக்கி விடப்பட்டார்கள். வண்டி கிளம்பியதுமே நடத்துநர் எழுந்து உள்ளே வந்து ”…குடிச்சிருக்கேன்னா சொல்லுதே? …யளி என்னைய ஒருத்தனும் ஆட்டிகிட முடியாது…அப்டித்தான் குடிப்பேன்…” என்று சவால் விட்டார். நிற்க முடியாமையால் அவரால் சவாலை வெகுநேரம் நீட்டிக்க முடியவில்லை. போய் உடனே தூங்கிவிட்டார். ஓட்டுநரும் ஓரளவு தூங்க வண்டி அதன் வேகத்தில் பல இடங்களில் ஓலமிட்டும் கதறியும் ஓடியது

வந்து சேர்வதற்கே முடியாமல் ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டாலும் மெல்ல காலையில் நாகர்கோயில் வ்நது சேர்ந்தோம். வழியில் குறைந்து இருபது முறை விபத்துக்கள் மயிரிழையில் தவிர்க்கப்பட்டன. இறங்கும்போது அப்படி ஒரு நிம்மதி. முழு தூரமும் வந்தவர்கள் சிலரே. விஷயமறியாத கடற்கரை வாசிகள் அவர்கள்.

SETC பல உயர்தர பேருந்துகளை பல ஊர்களுக்கு விட்டிருக்கிறது தமிழ்நாட்டில். தனியார் பேருந்துகளில் இருக்கைகள் கிடைப்பதில்லை. ஆனால் SETC பேருந்துகள் பாதி காலியாகவே ஓடுகின்றன. ஆகவே ஊர் ஊராக நின்று கூவிக்கூவி ஆள் ஏற்றுகிறார்கள். தனியார் பேருந்துக்களில் எல்லா இருக்கைகளும் விலாசம் தந்து முன்பதிவுசெய்த பயணிகளால் நிறைந்திருப்பதனால் அவை விரைவாகவே செல்கின்றன. பாதுகாப்பும் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் போதையில் ஏறி இறங்கும் கும்பலால் அரசுப் பேருந்துகள் தாமதமாகின்றன. பாதுகாப்பு முற்றிலும் இல்லை.

”லாங் ரூட் டிராவல்னா என்னைக்குமே கவர்மெண்ட் பஸ்ஸிலே ஏறப்பிடாது சார். இது சின்னக்குழந்தைக்கும் தெரியும். இல்லேன்னா சார்ஜ் குறைவா இருக்கிறதனால நம்மளுக ஏறி அம்மிர மாட்டானுகளா?அதிலையும் நைட் டிராவல்னா ஏறவே கூடாது. ரொம்ப ரிஸ்க்…” என்றார் நண்பர். ஆம், பூச்சி கடித்தாலும் இனி தனியார் பேருந்துதான். உயிருக்காவது உறுதி அளிக்கிறார்களே!

முந்தைய கட்டுரைபஷீர் – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபஷீர்- கவிஞர் சுகுமாரன் கடிதம்