இரவு குளிரில் நடுங்கியபடி தில்வாரா வந்து சேர்ந்தோம். நாங்கள் குளிருக்கான ஆடைகள் எடுத்துக்கொண்டிருந்தாலும் போதுமானதாக இல்லை. மழையை எதிர்பார்க்கவே இல்லை. பெய்திருந்தால் நாறிப்போயிருக்கும், நல்லவேளை
மௌண்ட் அபு அருகே உள்ளது தில்வாரா. மௌண்ட் அபுவுக்குக் கொஞ்சம் முன்னாலேயே திரும்பிச் செல்லவேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரே மலைவாசஸ்தலம் மௌண்ட் அபு. வரலாற்று ரீதியாகவும் நிலவியல் சார்ந்தும் இது குஜராத்துக்குச் சொந்தமானது, ராஜஸ்தானில் உள்ளது. சிரோகி மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ளது. மாநிலப்பிரிவினை ராஜஸ்தானுக்கு இதை அளித்தது
[ மௌண்ட் அபு, அசல்கரிலிருந்து ]
புராணங்களில் அற்புதாரண்யா என அழைக்கப்பட்ட இந்த மலை மர்மமானதாக, தேவர்களுக்குரியதாகக் கருதப்பட்டது. ஆகவே இன்றும் இது பற்பல மதங்களுக்கு மையமாக உள்ளது. புகழ்பெற்ற பிரம்மகுமாரிகள் சபையின் தலைமையகம் இங்குதான் உள்ளது. அதைக் கடந்துசென்றோம். பஹாயி இஸ்லாமிய மதத்தின் தலைமையகமும் இங்குதான் உள்ளது. பொதுவாக நம் திருவண்ணாமலையைப்போல அனைத்துவகையான தியான அமைப்புகளுக்கும் இந்த மலை முக்கியமானது.
நெடுங்காலம் குஜராத்தின் சோலங்கி மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இங்கே முகமது கோரியை முதலாம் மூலராஜா தோற்கடித்து துரத்தியதாக வரலாறு.பின்னர் சுல்தான்களால் கைப்பற்றப்பட்டது. இங்கிருந்த ஆலயங்கள் அனைத்தும் இடிக்கபப்ட்டன. பின்னர் மீண்டும் சோலங்கி மன்னர்கள் இம்மலையைக் கைப்பற்றி ஆலயங்களை மறுபடியும் கட்டினர்.இந்தியா முழுக்க ஒரே கதைதான்.
மௌண்ட் அபு அருகே உள்ள தில்வாரா சமணர்களின் முக்கியமான தலம். நாங்கள் அந்தியில்தான் அந்த இடத்துக்கு வந்தோம். இடத்தைப்பற்றிய ஒரு சித்திரம் அப்போது உருவாகவில்லை. கீழே உள்ள கோயிலில் தர்மசாலை பற்றிக் கேட்டோம். நேர் மேலே உள்ள திகம்பர் மடத்தில் இடமிருக்கும் என்றார்கள். கீழே உள்ள மடம் சமணர்களுக்கு மட்டுமானது, அவர்களுக்கான சடங்குகளில் பங்கெடுத்தாகவேண்டும்.
ஆகவே மலைமேலே சென்றோம். நல்ல அறைகள் இரண்டு கிடைத்தன. போர்த்திக்கொள்ள ரஜாய் எனப்படும் மெத்தைகள் கொடுத்தார்கள். நேர் கீழே இருந்த உணவகத்தில் உணவுண்டு வந்தோம். சப்பாத்தி கத்தரிக்காய் கூட்டு. பப்பட். இங்கே எங்குமே அசைவ உணவு கிடையாது. மது கிடையாது. அவற்றை தேடிப்போகவேண்டும், குற்றவாளிகளைப்போல.
தில்வாராவின் சமண ஆலயங்கள் பன்னிரண்டு மணிக்குத்தான் பொது தரிசனத்துக்குத் திறக்கப்படும் என்றார்கள். அது வரை சமணர்கள் மட்டுமே பங்கெடுக்கும் சமாராதனை என்னும் நிகழ்ச்சி நடக்கும். ஆகவே எங்களிடம் அசல்கட் என்னும் ஊருக்குச் சென்று அங்குள்ள கோயிலைப் பார்த்து வரும்படி சொன்னார்கள். திட்டத்தை அதன்படி வகுத்துக்கொண்டோம்
நாங்கள் முந்தைய நாளே தர்மசாலையில் சிற்றுண்டி சொல்லி வைத்திருந்தோம். ஆறுமணிக்கே தேவை என்று நாங்கள் கண்டிப்பாகச் சொன்னாலும் நாங்கள் தூங்கி எழுந்தது ஏழு மணிக்கு. காரணம் நல்ல குளிர். தொடர்பயணத்தின் அலுப்பு. இம்மாதிரி பயணங்களை ஒருபோதும் நெருக்கமாக அமைத்துக்கொள்ளக்கூடாது. நன்றாகத் தூங்க நேரமிருக்கவெண்டும். தூங்காமல் ஓர் ஊருக்குச்செல்வது ஒப்பேற்றுவதாகவே அமையும். அத்தனை தொலைவுக்கு வந்து அபப்டி ஓர் ஊரைப்பார்ப்பது வீண்
மொட்டை மாடியில் நின்றுகொண்டு சுற்றியிருந்த மலைகள் வெயில்நீராடுவதைப் பார்த்துக்கொண்டு டீ குடித்தோம். மலையுச்சிகள் ஒளிகொண்டிருந்தன. கொதிக்கக்கொதிக்க வெந்நீர்க் குளியலுக்குப்பின் அசல்கட் கிளம்பினோம்.
[ புலிக்கூடு மடாலயம் போன்ற அசல்கட் மலைக்கோவில் ]
தில்வாராவில் இருந்து எட்டு கிமீ தொலைவில் உள்ள அசல்கட் ஒரு மலைக்கோட்டை. கோட்டையின் இடிபாடுகள் மட்டும் ஆங்காங்கே மிச்சமுள்ளன. அண்ணாந்து பார்த்தால் மலையின் மீது தொங்குவது போல சமண ஆலயம் தெரிந்தது. சட்டென்று பூட்டானின் புலிக்கூடு மடாலயத்தை நினைவூட்டியது. சரிந்த பாதை கொஞ்ச தூரம் செல்லும். அதில் கார் போகமுடியும் அதன்பின்னர் படிகள் .
மூச்சிரைக்க நடந்தோம். செங்குத்தான பாதை. அதற்குள் அவ்வளவுதொலைவுக்குச் செல்வதற்கான மூச்சு வல்லமையை அடைந்துவிட்டிருந்தோம். மலைக்குமேலே சமண ஆலயங்கள் இருந்தன. அதற்கு மேலே காளிகோயில் ஒன்றும் கோட்டையின் உச்சிக்கட்டிடத்தின் இடிபாடுகளும் மிஞ்சியிருந்தன.
சமண ஆலயம் சமீபகாலமாகப் பழுதுபார்க்கப்பட்டு சுத்தமாக, அழகாக இருந்தது. முதற்கோயிலின் கருவறைக்குள் ஆதிநாதர் கோயில் கொண்டிருந்தார். சுற்றிலும் பிற தீர்த்தங்கரர்கள். இது ஒரு கோயில்செண்டு. முழுக்க முழுக்க வெண்பளிங்கினால் ஆன ஒன்பது கோயில்கள். மைய ஆலயம் இரண்டு அடுக்கு கொண்டது. கருவறைக்குள் ஸ்வேதாம்பர மரபுப்படி ரஜத கிரீடம் அணிந்த ஆதிநாதரின் பத்தடி உயரமான சிலை. கம்பீரமாகக் கோயில் கொண்டிருந்தார்.
அமைதியும் பளிங்கின் குளிரும் இளவெயிலும் பறவைகளின் ஒலிகளும் ஒன்றாகக் கலந்த ஒரு படலம் அக்கோயில்களை மூடியிருந்தது. காலையில் செல்லும் ஆலயம் ஒழிந்த மனதில் அழுத்தமான சித்திரமாகப் பதிந்துவிடுகிறது
மலையிறங்கி வரும் வழியில் ஒரு நாய்க்குட்டி குழைந்தோடி வந்தது. பயணிகள் பிஸ்கட் போட்டுப் பழகிய நாய். ஒரு வாரம் வயதிருக்கும். பால்பல்லாகையால் கடிக்க ஆசைப்பட்டது. பிடிக்கப்போனால் குட்டிகளின் மரபுப்படி மல்லாந்து வாலை ஆட்டியது. நான் ரொம்பச்சின்னக்குட்டியாக்கும், என்னை நீ கொஞ்சத்தான் வேண்டும் என்று பொருள்/ முத்துக்கிருஷ்ணன் ஒரு பொட்டலம் பிஸ்கட் வாங்கிப் போட்டார். எங்களை மறந்து பாய்ந்துபோய் பசியுடன் தின்றது.
இந்தப் பயணம் முழுக்க நாங்கள் பெரும்பாலான சமணக் கோயில்களில் நாய்க்குட்டிகளைப் பார்த்து கொண்டே சென்றோம். சென்ற கார்த்திகை மாதத்தில் கருவுற்ற நாய்களின் குட்டிகள். எல்லா இடங்களிலும் அவை கொழுகொழுவெனப் புழுதியில் புரண்டு விளையாடிக்கொண்டிருந்தன. சமணர்களுக்கு சீவகாருண்யம் மத ஆசாரம் என்பதனால் உணவுக்குப் பஞ்சமில்லை.
தில்வாரா வந்தபோது பன்னிரண்டு மணி. பயணிகள் வரிசையில் நின்றார்கள். செல்பேசி, காமிரா எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டார்கள். படம் எடுக்க முற்றாக அனுமதி இல்லை. ‘ரொம்பதான் கெடுபிடி செய்கிறார்கள். நாங்கள் தரங்காவையே பார்த்தவர்கள்…கோபேஸ்வரில் விளையாடினவர்கள் எங்ககிட்டையேவா?’ என்றார் கிருஷ்ணன். கேலிபேசியபடி உள்ளே சென்றோம்.
[ தில்வாரா ]
தில்வாராவில் ஐந்து கோயில்கள் உள்ளன. இவை படானை ஆண்ட சோலங்கி வம்சத்து சாளுக்கிய மன்னர்களால் கிபி 11 முதல் 13 வாக்கில் கட்டப்பட்டவை என்று சொல்லப்படுகின்றன. இவர்கள் வாதாபி சாளுக்கியர்கள் அல்ல. ராஜஸ்தானில் உள்ள கிளை. சோலங்கி மன்னர்கள் ஏன் சாளுக்கியர்கள் என சொல்லப்படுகிறார்கள் என்பது ஒரு மர்மம். அங்கிருந்து இங்கே வந்திருக்கலாம்.
தில்வாரா கோயில்கள் காட்டுக்கு நடுவே உள்ளன. கோயில்களைச் சுற்றி உயர்ந்த கோட்டை மதில் உள்ளது. ஒருபக்கம் பெரிய பாறை. இங்குள்ள ஐந்து கோயில்களில் பெரிய மையக்கோயில் விமல்வாசஹி கோயில். இது சோலங்கி மன்னர் முதலாம் பீமதேவரின் அமைச்சரும் குருவுமான விமல்ஷா அவர்களால் கிபி 1021ல் கட்டப்பட்டது. பீமதேவர் சமணர் அல்ல, இந்து வைணவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான சமண ஆலயங்களைக் கட்டியவர் அவர். விமல்வாசஹி கோயில் ஆதிநாதருக்கானது.
இங்கே முன்னர் இருந்த ஆதிநாதர் ஆலயம் கோயிலின் பக்கவாட்டில் இப்போதும் உள்ளது. சிறிய முகமண்டபமும் கருவறையும் உடையது. கருவறைக்குள் பத்தடி உயரமான கருப்பு சலவைக்கல்லில் ஆதிநாதரின் பேரழகு கொண்ட சிலை உள்ளது. கருமையின் அழகை அச்சிலை போல காட்டக்கூடிய இன்னொன்று இல்லை. ஊழிக்கருமை. முடிவிலியின், இன்மையின் கருமை. அக்கோயிலை ஒட்டிக் கட்டப்பட்ட கோயிலில் அதே சிலையைக் கருவறையில் வெள்ளியில் நகல் செய்து நிறுவியிருக்கிறார் விமல் ஷா.
விமல்வாசஹி கோயிலை இந்தியாவின் சமண ஆலயங்களில் அழகானது என்று சொல்வது வழக்கம். ஒரு கலை ஆர்வலனாக இந்தியாவின் மிகச்சிறந்த சிற்பங்கள் கொண்ட கோயில் அது என்று நான் சொல்வேன். நாங்கள் இதற்குள் இந்தியாவின் மகத்தான கலைச்சிகரங்கள் சிலவற்றைப் பார்த்து பிரமித்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு கோயிலும் ஒன்றை இன்னொன்று மிஞ்சக்கூடியது. ஆனால் இந்த ஆலயம் ஈடிணையற்றது.
இரண்டு வகையில் மகத்தானது இந்த ஆலயம். ஒன்று தனிச்சிற்பங்கள். ஒவ்வொரு சிலையிலும் உள்ள எழிலும் நுண்மையும் முழுமையும் கலையின் உச்சநிலையில் மட்டுமே சாத்தியப்படக்கூடியவை. இன்னொன்று இச்சிலைகளை ஒன்றாகக் கொண்டு அமைக்கப்பட்ட கோயிலின் கட்டிடக்கலை. ஒவ்வொரு அணுவிலும் சிற்பங்கள். ஒவ்வொரு சிற்பத்திலும் பல சிற்பங்கள். ஒவ்வொரு சிற்பமும் ஒரு பெருநிகழ்வு. பிரமிப்பின் சொல்லின்மையின் வெளிப்பாடுகளை மீண்டும் மீண்டும் பதிவுசெய்கிறேன் எனத் தெரிகிறது. வந்து பாருங்கள் என்றல்லாமல் எதையும் சொல்ல முடியாது.
நாகரா பாணியில் அமைந்த உயர்ந்த கோபுரம், கவிழ்ந்த தாமரை வடிவ உள்மாடம் கொண்ட முக மண்டபம், சுற்றிலும் தீர்த்தங்கரர் சன்னிதிகள் கொண்ட சுற்றுப் பிராகாரம் ஆகியவை கொண்ட ஆலயம் இது. முழுக்க வெண்சலவைக்கல்லால் ஆனது. சலவைக்கல் செதுக்குதலின் உச்சகட்ட சாத்தியம் இந்த ஆலயத்தில் எட்டப்பட்டுவிட்டது. சிலந்தி வலையின் மென்மையுடன், வெண்தாமரையின் மெருகுடன், நுரைக்குமிழியின் ஒளியுடன், நாரைச்சிறகின் நுட்பத்துடன், வழியும் பாலின் நெளிவுடன், வெண்ணையின் குழைவுடன் கூடிய செதுக்குதல்கள். ஒவ்வொரு சிற்பம் முன்னாலும் சில கணங்கள் சிந்தை அழிந்த பித்துநிலை கைகூடுகிறது.
இயற்கை, மலர்களில் அதன் முடிவில்லாத வடிவசாத்தியங்களை சோதித்திருக்கிறது. பிழையில்லாத வடிவம் என்பதற்கு மலர்கள் என்றல்லாமல் பதில் சொல்ல முடியாது. நிறங்களும் அமைப்பும் மலர்களில் முழுமையான ஒத்திசைவை சாத்தியமாக்குகின்றன. கடவுள் வெறும் நடைமுறைவாதியல்ல, அவன் கலைஞன் என்பதற்கான ஆதாரம் மலர்களே. ஆனால் மனிதனுக்கு மலர்கள் போதவில்லை. மலர்களைக்கொண்டு மாலைகளை, செண்டுகளை, மலர்க்களங்களை உருவாக்கி அவன் கடவுளைக் கடந்துசெல்ல முயல்கிறான்.
மலர்களின் தனித்தன்மை அவற்றின் நிலையின்மை. கனவெனக் கலையும் தன்மை. அந்நிலையின்மையே நாம் அவற்றை மென்மை மென்மை என உணரச்செய்கிறது. இந்த ஆலயத்தில் சுற்றுப்பிராகாரத்தின் விதானங்கள் முழுக்க வெண்பளிங்கில் மலர்களை விரியச்செய்திருக்கிறார்கள். கல்லில் மலர்ந்த மலர்கள்.
எவையுமே மண்ணில் உள்ள மலர்கள் அல்ல. மலர்களின் வடிவ அழகை மட்டும் எடுத்துக்கொண்டு கற்பனையில் விரிவாக்கிக்கொண்டு உருவாக்கப்பட்டவை. தாமரை இதழ்களுக்குள் அல்லிவட்டம். அதற்குள் மந்தார இதழ்வரிசை. அதற்குள் அல்லிபீடம். மோகினிகள் இதழ்களாக மலர்ந்த மலர்கள். மலரிதழ்களின் சிடுக்கற்ற சிக்கலை, கண்களை ஏமாற்றி விளையாடும் அதிபின்னலைக் கல்லில் கொண்டுவந்த மேதையின் கால்கள் நாங்கள் நின்ற இடத்தில் பட்டிருக்கும் என்ற எண்ணமே சிலிர்க்கச் செய்தது.
இக்கோயில் விதானங்களில் உள்ள மலர்வடிவங்களைப்பற்றி மட்டும் ஒரு தனி நூல் எழுத முடியும். ஓவிய – சிற்ப வரலாற்றில் இந்த வடிவ நுட்பங்களுக்கு அப்பால் மிகக்குறைவான சாதனைகளே நிகழ்த்தப்பட்டிருக்கும் எனச் சொல்லத்துணிவேன். மலர்கள் அல்ல இவை. மலர்தல் என்ற நிகழ்வு மட்டும் மலர்களில் இருந்து எடுக்கப்பட்டு பிரம்மாண்டமாக ஆக்கப்பட்டுள்ளது. மலர்மை என்று சொல்லலாமா? சொல்லைப் பரிபூரணமாகத் தோற்கடித்து கைக்குழந்தையாக ஆக்கி ஒக்கில் வைத்து நின்று புன்னகைக்கிறது இந்தக்கலை.
இக்கோயில் விதானங்களில் உள்ள தேவியர் சிலைகள் ஒவ்வொன்றும் ஒரு சாதனைகள். யுகங்களுக்கொருமுறை கலையில் நிகழும் முழுமைத்தருணங்கள். சமணர்களுக்கு முக்கியமான தேவி சரஸ்வதி. வாக்தேவி என்றும் சொல்வார்கள். பிரம்மா விஷ்ணு சிவன் எல்லாமே சமணர் மரபிலும் உண்டு. அவர்களுக்கான சிற்ப இலக்கணங்கள் வேறு. சரஸ்வதி பன்னிரு கைகளுடன் கட்கம், அங்குசம், பாசம், கதை, எழுத்தாணி, வீணை, ஏடு, அமுதகலசம் ஏந்தி அபயமும் வரதமும் காட்டி அமர்ந்திருக்கிறாள். பத்மாவதி தேவி சக்கரங்கள் ஏந்திப் பன்னிரு கைகளுடன் நிற்கிறாள். தேவியர் சிலைகளின் கருணைப்புன்னகையும் அசைவும் நிலைப்பும் ஒன்றேயான அந்த அமைந்த கோலமும் சிற்பக்கலை எதைச்சாத்தியமாக்கும் என்பதற்கு சான்றுகள்.
தேவியரின் கைவிரல்கள் காந்தள் இதழ்கள் போல மென்மையாக வளைந்திருந்த விதம், தூங்கும் குழந்தையின் கட்டைவிரல் போலக் கால்விரல் நெளிந்திருந்த அழகு, இடையின் சரிவு, முலைக்குவைகளின் வளைவு. பல சிலைகளை விட்டு வரவே மனமில்லை. ஆனால் இது சிலைகளின் கடல். ஒரு சிலை முன் நின்றபோது அடுத்தடுத்த சிலைகள் அழைத்தன. சென்ற பின் மீண்டும் அச்சிலை அருகே வந்து நின்றேன். மனம் அரற்றியது, பின் கரைந்தழிந்தது, பின் பெரும் தவிப்புடன் மீண்டது.
வைணவ மன்னர்களால் கட்டப்பட்டதனால் இங்கே விஷ்ணு சிலைகளும் நிறைய உள்ளன. கோபாலகிருஷ்ணனின் சிலை நடனம் போல நின்றது, நிற்பதுபோல நடனமிட்டது.
தேவியர் சூழ விஷ்ணு நடன நிலையில் அருள்புரிந்தார். ஆனால் சிலைகளில் உச்சமென்பது இங்குள்ள அகோரநரசிம்மர். தமிழகத்திலும் பல அற்புதமான அகோரநரசிம்மர் சிலைகள் உள்ளன. ஆனால் இச்சிலை அவை எதனுடனும் ஒப்பிடத்தக்கதல்ல. பன்னிரு கைகள் கொண்ட நரசிம்மர் இரணியனை மல்யுத்த முறைப்படி பூட்டுப் போட்டுப் பிடித்துக் குடலைக்கிழிக்கிறார். கொல்வதும் சாவதும் பெரும் பரவசநிலையாக நடனக்கோலம் கொண்டுள்ளன.ஒரு சமணக்கோயிலில் உச்சகட்ட வன்முறை திகழும் இச்சிலை இருப்பதும் ஆச்சரியமானதே.
விமல்ஷா கோயிலின் மைய மண்டபம் ஒரு பெரும் மலர். மாலை தாமரை கூம்பும்போது தாமரை இதழ்க்குவைக்குள் தேன்குடித்தபடி மயங்கிய வண்டு மாட்டிக்கொள்ளும் வர்ணனை சங்க இலக்கியங்களில் வரும். அதைப்போல அந்த மண்டப மலருக்குள் மாட்டிக்கொண்டேன் என நினைத்தேன். பன்னிரு தூண்களிலும் கட்டைவிரல் அளவு முதல் இரண்டு முழம் அளவு வரை பெரிய நூற்றுக்கணக்கான சிலைகள். மேலே வித்யாதேவியரின் வரிசைகள் வானில் பறந்து இசை மீட்டின. ஒவ்வொன்றிலும் நகைகள், ஆடைகள். தலைகீழாக செதுக்கப்பட்ட பளிங்கு மலர்கள். மலர்தலுக்குள் மலர்தலுக்குள் மலர்ந்துகொண்டே இருந்தது மலர். சிற்பம் காதுகளில் இசையாக நாவில் சுவையாக நாசியில் வாசனையாக நிறையமுடியும் என்ற அனுபவத்தை இங்கேதான் அடைந்தேன்.
விமல்ஷா ஆலயத்தின் முன்னும் பின்னும் இரு யானைக்கொட்டடிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. விமல்ஷாவின் மகனான பிரித்விபாலர் இதை அமைத்தார். இதற்குள் எட்டடி உயரமான யானைச்சிலைகள் வரிசையாக உள்ளன. முன்னால் நிற்கும் யானைகளில் பீமதேவரும் விமல் ஷாவும் உள்ளனர். வெண்பளிங்கினால் ஆன அழகான யானைகள் இவை.
இரண்டாவது ஆலயமான லூனா வாசஹி இருபத்திரண்டாவது தீர்த்தங்கரரான நேமிநாதரின் ஆலயம். இதுவும் வெண்பளிங்காலானது. விமல் ஷா ஆலயம் போலவே அமைப்பு. அதே போல முடிவில்லாத மலர்தல்கள் கொண்ட கூரை விதானங்கள். சிற்பங்களேயான தூண்கள். முற்றிலும் புதிய மலர்க்கற்பனைகள். இதழ்கள் ஊசிகள் போலக் கூம்பின. அம்புகள் போலக் கூர்ந்தன. மழைத்துளிகள் போலச் சாய்ந்தன. நாக்குகள் போல வளைந்தன. கிள்ளைநாசிகள் போல் கொஞ்சலாகக் குவிந்தன. கற்பனையின் உச்சம், சதுரங்களாக இதழ்கள் கொண்ட மலர்கள். இதழ்க்குவிதல்கள் ஆழமாகக் குளம்போல இறங்கிச்சென்ற மலர்கள். இனி கடவுள் புதிய மலரைப் படைக்க நினைத்தால் என்னதான் செய்வார்?
லூனா வாசஹி கோயிலை 1230ல் போர்வாட் சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட வாஸ்துபால், தேஜ்பால் இருவரும் கட்டினார்கள். வகேலா வம்சத்து வீர்தாவல் மன்னரின் அமைச்சர்கள் இவர்கள். இந்த ஆலயத்தின் ரங்கமண்டபத்தின் கூரைக்குவையில் இருந்து பிரம்மாண்டமான அலங்காரக்கொத்து தொங்குகிறது. இங்கே தீர்த்தங்கரர்களின் 72 சிலைகளும் 360 சமணமுனிகளின் சிலைகளும் உள்ளன. ஹஸ்திசாலையில் 10 அழகிய யானைச்சிலைகள் உள்ளன. குப்த் மண்டபத்தில் நேமிநாதரின் கரிய சலவைக்கல் சிலை உள்ளது. மேவாரின் ராணா கும்பா கட்டிய கரிய சலவைக்கல் தூண் உள்ளது. அதில் அவரது கல்வெட்டும் உள்ளது.
மேலும் கோயில்கள் அருகே இருந்தன. பிதல்ஹார் கோயில் ரிஷபதேவருக்கானது. இது இப்போது எடுத்துக்கட்டப்படுகிறது. கர்தார் வாசஹி கோயில் பார்ஸ்வநாதருக்கானது. மகாவீர் கோயில் வர்த்தமானருக்கானது. இவற்றில் விமல் வாசஹி கோயிலும் லூனா வாசஹி கோயிலும்தான் சிற்பங்கள் மண்டியவை. எப்படி இந்த ஒட்டுமொத்த சாதனையை நிகழ்த்த முடிந்தது? ஒரு சிற்பி மேதையாக இருக்கலாம். சரி நூறு சிற்பிகள் மேதைகளாக இருந்திருக்கலாம். ஆனால் பதினான்காயிரம் பேர் இருபத்தைந்து வருடம் உழைத்துக்கட்டிய இக்கோயிலில் எத்தனை ஆயிரம் பேர் சிற்ப மேதைகளாக இருந்திருக்க வேண்டும்? அது சாத்தியம்தானா?
சாத்தியம்தான். மானுட சாதனை எதுவுமே தனிமன வெளிப்பாடு அல்ல. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழில்நுட்ப அறிவியல் ஓர் அலை போல உருவான பின் வெறும் முந்நூறாண்டுகளில் ஐரோப்பா உருவாக்கிய கருவிகளின் அளவு எத்தனை என்று பார்த்தாலே போதும். எத்தனை மேதைகள், எத்தனை மகத்தான படைப்புத்தருணங்கள். அதேபோல இங்கே சில நூற்றாண்டுக்காலம் மானுட பிரக்ஞை ஒற்றைப்பேரலையாக கலை-இலக்கியம்-தத்துவம் நோக்கிப் பிரவாகமெடுத்திருக்கிறது. மழைப்பெருக்கில் எறும்புகள் ஒன்றுடன் ஒன்று கவ்வி ஒரு பந்தாக மாறி மிதந்து உருண்டு செல்வது போல். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அந்தக் காலகட்டத்தின் ஒட்டுமொத்த பிரக்ஞையும் குடியேறுகிறது. ஒவ்வொரு மனமும் பல லட்சம் மனங்களால் ஆனதாக ஆகிவிடுகிறது.
பெரும் கலைஞன் என்பவன் அவன் காலகட்டத்தின் ஒட்டுமொத்த கலைக்கொந்தளிப்பின் அலைமேல் ஆரோகணித்துச் செல்பவன். இந்த நாகரா பாணி கோயில்கோபுரங்களைப் போல. சிறுசிறு கோபுரங்கள் சேர்ந்து சேர்ந்து பெரும் கோபுரமாகிக் கலசத்தைத் தாங்கி நிற்கின்றன. இங்கே இந்த மகத்தான கலைப்படைப்பை சாதித்தவர்களை சிற்பிகளின் சமூகமாக நாம் நினைக்கிறோம். அது அவர்களின் உடல்களைக் கொண்டு. அவர்களைப் பல்லாயிரம் கரங்களும் பல லட்சம் விரல்களும் கொண்ட ஒரு விராட புருஷனாக உருவகிக்க வேண்டும். அந்த புருஷமேருவுக்கு எந்த மாபெரும் கலையும் ஒரு விளையாட்டுப்பொருள் மட்டுமே.
கோயில்களைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது ஓர் எண்ணம் ஏற்பட்டது. தமிழகத்தில் நமக்கு சிற்பக்கலை பற்றிய ஒரு பெருமிதம் உள்ளது. நியாயமான பெருமிதம்தான். ஆனால் பெரும்பாலும் அறியாமை காரணமாக அது மிகைப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் சிற்ப மரபு எட்டாம் நூற்றாண்டு முதல் அதன் உச்சத்தைத் தொட்டுப் பதினொன்றாம் நூற்றாண்டில் முழுமையை அடைந்து விட்டது. வட இந்தியாவின் பெரும் கலைக்கோயில்கள் பெரும்பாலானவை சுல்தான்களாலும் பின்னர் முகலாயர்களாலும் அழிக்கப்பட்டபின் எஞ்சிய சிலவற்றை வைத்து நாம் ஊகிக்கும் கலையே இந்த பிரமிப்பை உருவாக்குகிறது என்பதை நினைவில் கொண்டால் அந்தக் கலைப்பெருவெளியின் பிரம்மாண்டத்தை நம்மால் ஊகிக்க முடியும்.
தமிழகத்தில் களப்பிரர் காலகட்டத்துக்குப்பின் நமக்கு சிற்பக்கலை கொஞ்சம் தாமதமாக, எட்டாம் நூற்றாண்டில், பல்லவர் காலத்தில்தான் வந்து சேர்ந்தது. நாம் சிற்பக்கலையில் ராஷ்டிரகூடர்களும் வாகாடகர்களும் சாளுக்கியர்களும் சோலங்கிகளும் அடைந்ததை எட்ட முயன்றவர்கள் மட்டுமே. வடக்கே கோயில்கலை இஸ்லாமியர் காலகட்டத்துடன் மறைந்து விட்டது. பின்னர் பதினாறாம் நூற்றாண்டு முதல் மராட்டியர்களாலும் பதினேழாம் நூற்றாண்டு முதல் சமண வணிகர்களாலும் சில மீட்பு முயற்சிகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன.
நம் சிற்பக்கலை பதினேழாம் நூற்றாண்டு வரை நாயக்கர்களின் ஆதரவில் செழித்தது. ஆனால் நம்முடைய எந்த ஆலயமும் இந்த ஆலயங்களின் முழுமையை அடையவே இல்லை என்பதே உண்மை. அத்துடன் நம் சிற்பக் கட்டிடக்கலை நாயக்கர் காலகட்டத்திற்குப்பின் எவ்வகை வளர்ச்சியையும் அடையவில்லை. நாம் பெருமைகொள்ளும் ஒரு தமிழக ஆலயம்கூட பின்னர் கட்டப்பட்டதில்லை. சொலப்போனால் நாணித்தலைகுனியச்செய்யும் கேவலமான கான்கிரீட் கட்டிடங்களையே நாம் பின்னர் கட்டியிருக்கிறோம்.
பத்தாம் நூற்றாண்டில் வடக்கே மாபெரும் கலைச்சாதனைகள் நிகழ்த்தப்பட்ட காலகட்டத்தில் தஞ்சைப் பெரியகோயில் சிலைகள் வழியாக நாம் சிற்பக்கலையின் ஆரம்பகட்ட சாதனைகள் சிலவற்றைச் செய்தோம். சோழர்காலச் சிலைகளில் பல சிலைகள் அழகானவை, ஆனால் இந்தக் கோயிலின் சிலைகளுடன் அவற்றை ஒப்பிடுவதே அறியாமை. நம் சிற்பங்கள் சிறந்த கலை, இவை மகத்தான கலை.
அதன்பின் நாயக்கர் காலத்துச் சிற்பங்களிலேயே நமக்குப் பெரும் கலைப்படைப்புகள் கிடைக்கின்றன. கிருஷ்ணாபுரம், தாடிக்கொம்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, கும்பகோணம் ராமசாமி கோயில், காஞ்சி வரதராஜர் கோயில் சிலைகள் போன்றவை. அவை கருங்கல்லில் கலையை சாதித்தவை. அச்சிலைகள் அழகியவை, கம்பீரமானவை, நுட்பமானவை. ஆனாலும் வட இந்தியாவில் உள்ள இக்கோயில்களின் சிலைகளின் கலைப்பூரணம் அவற்றில் நிகழவில்லை. நம் கலை அந்த எல்லையைத் தாண்டவே இல்லை.
அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஒன்று, கல். சலவைக்கல் கலைஞனுடன் சேர்ந்து இசைகேட்ட நாகம் போல நெகிழ்ந்துருகுகிறது. விரல்பட்ட மலர் போலப் பூத்து விரிகிறது. நம் கருங்கல்தொழில்நுட்பம் மாபெரும் கட்டிடக்கலையை நாம் நிகழ்த்த உதவியது. மதுரை, திருவண்ணாமலை, சிதம்பரம், ஸ்ரீரங்கம் போன்ற பிரம்மாண்டமான ஆலயங்களே நம் சாதனை. அதைச் சொன்னபோது கிருஷ்ணன் சொன்னார் ‘அப்படி ஒண்ணும் ஆறுதல் அடையவேண்டியதில்லை சார், கோபேஸ்வர் கோயில் கருங்கல் கோயில்தானே?’
ஆனால் இந்தியனாக இந்த ஒவ்வொரு கலையும் என்னுடையது, என் முன்னோரின் விரல்களில் ஆன்மா பூத்தெழுந்த வடிவங்கள் இவை என்ற உணர்வு அளிக்கும் சிலிர்ப்பு வெகுநேரம் தரையில் நடக்க முடியாதபடி ஆக்கியது. கையில் ஒரு தம்புராவின் நாதம் மீட்ட காலடியில் மேகங்களே வாகனமாக அமைய மலர்மணங்கள் துணையாக வர மிதந்துசெல்லும் கந்தர்வனாக உணரச் செய்தது.
மகத்தான கலை மனிதனுக்கு சிருஷ்டி விதித்த மூன்று எல்லைகளை அவன் தாண்டிச் செல்ல வைக்கிறது. அவன் அகம் அவனுடைய ஐம்புலன்களின் வரையறைகளை மீறுகிறது. அவன் மரணமற்றவனாக ஆகிறான். அவன் இருப்பு கால-இட எல்லைக்கு அப்பால் நிகழ ஆரம்பிக்கிறது.
மேலும்…