ஜெயமோகன்,
நலமா?
என்னை பற்றி கூறுவதன் மூலம் இந்த கடிதத்தை ஆரம்பிப்பது சரியாய் இருக்குமென்று நினைக்கின்றேன் .
வாசிப்பு உலகத்தின் முதல் நிலை படிக்கட்டுகளில் ஏற விரும்புகின்ற ‘வாசிப்பு பழகுனர்’ நான்.
என் தந்தையின் துண்டுதளால் தான், நான் முதலில் இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அவர் என்னை வாசிக்க சொன்ன முதல் புத்தகம் கல்கி அவர்களின் ‘பொன்னியின் செல்வன்’
அதன் பின்னர்தான் வாசிப்பதை என் வாழ்கையின் மிக முக்கிய பகுதியாக செய்து கொண்டேன்.
தமிழ் இலக்கியம், வரலாறு சார்ந்த புத்த்கங்களை வாசித்ததுண்டு, தமிழர்களின் கட்டட கலை எபோழுதும் என்னை கவர்ந்த விஷயம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவன் அதனாலோ, என்னவோ ‘ஆண்டாள்’ மேல் தீராத விருப்பம் உண்டு.
அவளுடைய ‘குத்து விளக்கு’, ‘ஆழி மழை கண்ணனும் ‘ எபோழுதும் என்னை வசிகரித்தவை.
‘எல்லே இளங்கிளியே’ பாட்டை கூறி ‘ஏலே’ என்று நாம் தற்காலத்தில் புழங்கும் வார்த்தையை ( வட்டார வழக்கு ) பற்றி நண்பர்களிடம் பெருமைபட்டதுண்டு. அபிராமி பட்டரின் ‘இடங்கொண்டு விம்மி’ பாடல் எத்தனையோ நாட்கள் சிந்தையை நிறைத்ததுண்டு .
சாண்டில்யனை வெறி தனமாய் வாசித்ததுண்டு. பாலாகுமரன் எழுதிய ‘உடையார்’ என்னை கவர்ந்து ஒரு சிறந்த படைப்பு. தி . ஜ வின் ‘மோக முள்’ பலமுறை வாசித்திருகின்றேன் . பாரதி யை படிக்காமல் தமிழ் படித்ததாய் சொல்லி கொள்ள முடியாது.
தற்செயலாய் ஒரு நாள் தமிழகத்தின் தொல்லியல் இடங்களை பற்றி படிக்கலாம் என்று கூகிள் செய்து கொண்டிருந்த பொது உங்கள் வலை தளத்தை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதற்கு முன் நான் தங்கள் படைப்புகள் எதனையும் படித்ததில்லை(உண்மையில் வருந்துகிறேன் ). தங்கள் வலை தலத்தில் நுளைந்தது ‘ஆதிச்ச நல்லூர் ‘ பற்றிய தங்களின் படைப்பு வழியாகத்தான்.
அனால் இன்று தங்கள் வலை தளத்தை தினமும் படிப்பது எனது நித்திய கடமைகளில் ஒன்றாகிவிட்டது. தங்களின் ‘அனல் காற்று’ நிச்சியமாய் ஒரு அனல் காற்று தான்.
‘ஊமைச்செந்நாய்’ என்னை மிக அழமாய் பாதித்தது.
தற்போது என்னுடைய வாசிப்பு களம் இன்னும் விரிவடைந்து உள்ளது என்பதில் ஐயம் இல்லை.தங்களின் விஷ்ணுபுரம் படிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றேன். அடுத்த மாதம் என்னுடைய சம்பளம் வாங்கி எனக்கே எனக்காய் ஒரு புத்தகம் வாங்கி படிப்பதாய் முடிவு செய்து உள்ளேன்.
தங்களை வாசித்ததின் தாக்கத்தினால் இக்கடிதத்தை எழுதுகின்றேன். பள்ளி காலங்களில் எழுது வதில் தனித்த விருப்பம் இருந்தது. கவிதை என்ற பெயரில் நானும் கிறுக்கியதுண்டு. அனால் சில மன வியல் காரணங்களால் எழுதுவதை நிறுத்திவிட்டேன். அதனால் ஒன்றும் தவறாகி விடவில்லை. சீறிய சிந்தனை உள்ள மனிதன் அல்ல நான். மிகச் சாதரணமானவன்.
எனினும் என்றுமே என் வாசிப்பை கை விட்டதில்லை. எதிர்காலத்தில் என்னை ஒரு நல்ல ‘வாசகனாய்’ எனக்கு நானே அடையாளப் படுத்தி கொள்ள வேண்டும் என்பதுதான் நான் விரும்பும் ஒற்றை ஆசையாய் இருக்க முடியும், அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றேன்.
மற்ற வகையில் நான் ஒரு சாப்ட்வேர் கூலித் தொழிலாளி. சென்னையில் வாசம். தாய் தந்தையர் ஸ்ரீவில்லிபுத்தூரில். ஒரு சகோதரி உண்டு, இளையவள். எனக்கு இலக்கிய விவாதங்களுக்கு கிடைத்த மிக நல்ல தோழி. பாரதியை பற்றியும், தி . ஜ வின் மோகமுள் பற்றியும், சாண்டில்யன் , கல்கி பற்றியும் மணிக் கணக்கில் பேசியது உண்டு.
என் துர்அதிர்சடமோ என்னோவோ, அவளைத் தவிர இலக்கிய சார்ந்த நண்பர்கள் எனக்கு அவ்வளவாய் அமையவும் இல்லை. சில நேரம் என் நண்பர்களிடம் எனக்கு தெரிந்த இலக்கியம் பேசி கஷ்டபடுதியதும் உண்டு.
ஒன்றை மட்டும் எம்போழுதும் மிகத் தீவரமாய் நம்பிவருகின்றேன் அது ‘ வாசிப்பும், இசை கேட்பதும் ‘ தான் என் வாழ்வில் நான் செய்து வரும் பயுன் உள்ள செயல்கள். மற்றவை அனைத்தும் அவை போக்கில் வந்து அவை போக்கிலயே அழிந்து போகும் நீர்க்குமிழிகள். வாசிப்பு என்னும் அலையோடு வந்து அலையோடே அழிந்துவிடுகின்றன.
‘வாசித்த பொழுதுகள் மட்டுமே’ என் வாழ்வில் வாழ்ந்து பொழுதுகளாய்க் கணக்கிடுகின்றேன். வாசிப்பு மட்டுமே என்னை ‘இருத்தல்’ என்ற நிலையில் இருந்து ‘வாழ்தல்’ என்ற நிலைக்கு உயர்த்துகின்றது.
அதனால் என்னால் இதை வசிக்கலாம், வேண்டாம் என்ற பாகுபாடின்றி எதையும் வசிக்க முடிகின்றது. தவறாகவும் இருக்கலாம். ஏன் என்றால்? குறிப்பட்ட சிலவற்றை மட்டும் முழுதாய் படித்து புழமை அடைதல் என்பது எனக்கு சாத்தியப்படாத போகிறதோ என்ற அச்சமுண்டு.
வலைகளின் முலமாய் பலவும் படிக்க வாய்ப்பு கிடைக்கின்றதே என்ற மகிழ்ச்சி எனக்கு உண்டு. பொழுது தான் கிடைப்பதில்லை.
பள்ளியில் படிக்கும் காலத்தில் புத்தகத்தின் மேல் உள்ள காதலால் நூலகத்தில் பணி செய்ய வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கு முன் இலக்கியம் படிக்க வேண்டும் என்று நினைத்தேன்.குடும்ப பொருளாதார சூழ்நிலை உணர்ந்து பொறியியல் படிக்கச் சம்மதித்தேன்.
இன்று வயிறு வளர்ப்பது பொறியியல் படிப்பால் தான்.
புத்தகங்கள் என்னிலிருந்து பிரிக்க முடியாத பகுதியாகவே விளங்குகிறது. பொதுவாக வேலைக்கான நேர்காணலில் ‘உங்களை பற்றி சொல்லுங்கள்’ என்று கேட்க படுவதுண்டு. இந்த கேள்வி என்னை நோக்கி கேட்கப்பட்ட போதெல்லாம் என்னை பற்றியவைகளாய் இருப்பவைகள் எல்லாம் என்
வாசிப்பு பற்றியவைகளாய் மட்டுமே இருக்கின்றன.
தங்கள் மூலமாய் மேலும் என் வாசிப்பினை மிகச் சீரியதாய், அழமானதாய், மிக விரிந்த வாசிப்பு களமுடையதாய் பண்படுத்தி கொள்ள விரும்புகிறேன். தங்கள் உதவியும் வழிகாட்டலும் படைப்புகள் வழியாக கிடைத்து கொண்டுதான் இருக்கின்றன. நேரடியாகவும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
எழுத்துப் பிழை, சொற் பிழை இருப்பின் பொறுத்துக் கொள்க, முதன் முறையாக தமிழில் இணையத்தில் எழுதுகின்றேன். தவறுகளை அடுத்தடுத்து வரும் கடிதங்களில் குறைத்துக் கொள்கிறேன்.
நன்றி,
தங்கள் வாசகன்,
சுந்தரவடிவேலன் . சு
அன்புள்ள சுந்தரவடிவேலன்
உங்கள் பெயர் அருமையாக ஒலிக்கிரது. அதை சுந்தரவடிவேல் என்று சுருக்கிக் கொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு என்றல்ல அனைவருக்குமே தமிழ் நாட்டில் வாசிப்பு தற்செயலாகத்தான் அறிமுகமாகிறது. பலசமயம் அது மிகவும் தாமதமாகிவிடுகிறது. ஒன்றும்செய்வதற்கில்லை– விதி என்று கொள்ளவேண்டியதுதான். ஆனால் இலக்கியம் என்பது எத்தனை தாமதமாக அறிமுகமானாலும் பயனுள்ளதே.
இலக்கியவாசிப்பு என்பது ஒரு தொடர்ச்சியான பயணம். ஒரு வளர்ச்சிப்போக்கு. ஆகவே இலக்கியத்தில் சரியாக வாசிக்கவில்லையோ என்ற ஐயத்துக்கே இடமில்லை. எல்லா வாசிப்புகள் வழியாகவும் நாம் தொடர்ச்சியாக மேலேறிக்கொண்டே இருக்கிறோம். அதுவே முக்கியமானது. என்ன கவனிக்க வேண்டுமென்றால் நாம் ஒரு மூளை இளைபாறலுக்காக திருப்பித்திருப்பி ஒரே தரத்திலான ஆக்கங்களை வாசிக்கிறோமா என்பது ஒன்று. நனவிடைதோய்தலுக்காக பழையவற்றை மட்டுமே வாசிக்கிறோமா என்பது இரண்டு. இரண்டையும் தவிர்த்தாலே போதுமானது.
இலக்கியவாசிப்பின் மனநிலைகள் தேவைகள் எல்லாமே ஆளுக்கொருவகை. ஆகவே ஒருவர் இன்னொருவருக்கு திட்டவட்டமான வழி எதையும் காட்டிவிடமுடியாது. இலக்கியவாசகர் தன் வழியை தானே விழுந்து எழுந்து நடந்து கற்றுக்கொள்ளவேண்டியதுதான். ஆனால் நாம் நம் வாசிப்பைப் பகிர்ந்துகொள்ள முடியும். வாசித்ததை விவாதிக்க முடியும். அதையே என் இணையதளத்தில் தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருக்கிறேன்.
ஒரு புதுவாசகருக்கு என்னுடைய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் ஒரு நல்ல துணைநூலாக இருக்கும் என நினைக்கிறேன். என்னிடம் கடந்த காலத்தில் அவ்வாறு கேட்ட பல வாசகர்களுக்கு நான் எழுதியவற்றின் பெருந்தொகுதி அந்த நூல். அதில் இலக்கிய வாசிப்பின் ஆரம்பகாலத்துச் சிக்கல்கள், ஐயங்கள் ஆகியவற்றைப் பற்றிய விளக்கம் உள்ளது. இலக்கிய வரலாறு சுருக்கமாக அளிக்கப்பட்டிருக்கிறது. இலக்கிய கோட்பாடுகளும் இலக்கிய இயக்கங்களும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. இலக்கியக் கலைச்சொற்களும் அளிக்கப்பட்டுள்ளன
அதைப்போலவே என்னுடைய கண்ணீரைப் பின்தொடர்தல் ஒரு முக்கியமான நூல். இந்திய இலக்கியத்தை அது விரிவாக அறிமுகம்செய்து வாசிப்புக்கு உகந்த நூல்களின் பட்டியம் ஒன்றையும் அளிக்கிறது. முக்கியமான இன்னொரு நூல் எதிர்முகம். இது இணையவாசகர்களுக்கு நான் அளித்த பதில்களின் தொகை. இதிலும் இலக்கிய அடிப்படைகளை விரிவாக விவாதித்திருக்கிறேன். இதன் பெரும்பகுதி என் இணையதளத்தில் கேள்விபதில்களாக உள்ளது.
இப்பட்டியல்கள் அனைத்தும் என்னுடைய இணையதளத்தில் உள்ளன. விமரிசகனின் சிபாரிசு என்ற பத்தியை பார்க்கவும். கலைச்சொற்கள் இலக்கியக் கலைச்சொற்கள் என்னும் தலைப்பில் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவை உங்களுக்கு உதவக்கூடும்
படிப்பதன் மூலம் மிகவிரைவிலேயே நீங்கள் இலக்கியத்தின் அனைத்து வாசல்களையும் திறந்துவிடமுடியும். வாழ்த்துக்கள்
ஜெ
தேசிய புத்தக நிறுவனம் [ Nathional Book Trust ] வெள்யிட்டுள்ள முக்கியமான தமிழ் நாவல்கள்
கவிதைகள் –விமரிசகனின் சிபாரிசு
தமிழ்ச் சிறுகதை : திறனாய்வாளன் பட்டியல்
சாகித்ய அக்காதமி வெளியிட்டுள்ள முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள்