கடலின் அலை

அனைவருக்கும் என் வணக்கம்,

நண்பர்களே, டி.எஸ்.எலியட்  ‘தத்துவமும் இலக்கியமும்’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் ஒருவரி வரும். இலக்கியம் தத்துவத்தை முன்வைப்பதில்லை, தத்துவசிந்தனையை பிறப்பிக்கும் மனநிலையை உருவாக்குகிறது’

அந்தவரியை நான் என் நோக்கில் தொடர்ந்து வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறேன். ‘இலக்கியம் அரசியலை முன்வைப்பதில்லை, அரசியலை உருவாக்கும் மனநிலையையே அது அளிக்கிறது’, ‘இலக்கியம் சமூகசிந்தனையை முன்வைப்பதில்லை, சமூகத்தைப்பற்றி சிந்தனைசெய்யும் மனநிலையை உருவாக்குகிறது’ இவ்வாறா¡…

அப்படியானால் இலக்கியம் அளிப்பது என்ன? ஒரு மன எழுச்சியை. அந்த மனஎழுச்சி ஒருவரில் தத்துவமாக ஒருவரில் அரசியலாக இன்னொருவரில் சமூக சிந்தனையாக விளையலாம். அந்த மன எழுச்சி என்பது ஓர் உண்மையான வாழ்வனுபவத்தை நாம் அடையும்போது அது நமக்களிக்கும் மன எழுச்சிக்கு நிகரானது. அதாவது இலக்கியமென்பது ஓர் நிகரான வாழ்வனுபவம்.

இந்த நிகரான வாழ்வனுபவத்தை இலக்கியம் எப்படி உருவாக்குகிறது? நுண்தகவல்கள் அதில் மிக முக்கியமான பங்கை ஆற்றுகின்றன. நாம் ஒவ்வொருவரும் கண்டு ஆனால் நம் மனதில் பதியப்பெறாத ஏராளமான தகவல்களால் ஆனது ஒரு நல்ல இலக்கியத்தின் உடல். அதன் செல்லே அதுதான்.  அந்தத்தகவல்களை வாசிக்கும்போது நம் கண்முன் ஒரு நிலமும் அங்குவாழும் மக்களும் அவர்களின் வாழ்வின் அலைகளும் உண்மையாகவே திறந்துகொள்கின்றன.

நல்ல இலக்கியம் வாழ்க்கையை காட்சியனுபவமாக நமக்கு முன் நிறுத்துகிறது. நான் ருஷ்யாவை பார்த்ததில்லை. ஆனால் செண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் தெருக்களில் உறைபனியில் நடந்திருக்கிறேன். நான் போரைப்பார்த்ததில்லை ஆனால் ஒரு மாபெரும் படை இன்னொன்றை எதிர்கொள்ளும் சித்திரம் என் கண்முன் நிற்கிறது. தஸ்தயேவ்ச்கி தல்ஸ்தோய் கதைகளின் வழியாக!

ஓரு வாழ்வனுபவத்தின்போது நம் புலன்கள் அறியும் அனைத்து அனுபவங்களையும் இலக்கிய அனுபவம் நம் கற்பனையை தூண்டி நம்மை
அடையச்செய்கிறது. நாம் அந்த வாழ்க்கைக்குள் நுழைந்து அங்கே வாழ ஆரம்பிக்கிறோம். அதுவே இலக்கியத்தின் முதல் தளம்.

அடுத்தபடியாக இலக்கியம் மனித மனத்துக்குள் ஆழமாகச் செல்கிறது. மனித எண்ணங்களும் உணர்ச்சிகளும் செல்லும் திசைவேகங்களை  அது கூர்ந்து அவதானித்து நுட்பமாக எழுதிக்காட்டுகிறது. மேலான படைப்பாளி எந்த மனதுக்குள்ளும் செல்லக்கூடியவனாக இருப்பான். அது மிக எளிது. எல்லா கதாபாத்திரங்களிலும் தன்னை அவன் கூடுமாற்றிக்கொள்கிறான். ஆழத்தில் எல்லா மனமும் ஒன்றுதான். ஆகவே அவன் தன்னைப்பற்றி எழுதினால் உலகையே எழுதியவனாகிறான்.

மூன்றாவதாக படைப்பாளி வாழ்க்கையின் தருணங்களை எழுதுகிறான். தொடர்ந்து தன் சூழலில் உள்ள வாழ்க்கையைக் கவனிப்பதன் மூலமாகவும் அதில் உணர்ச்சிகரமாக ஈடுபடுவதன் மூலமாகவும் அவன் மானுடத்தருணங்களை கண்டுகொண்டே இருக்கிறான். அவற்றை தன் படைப்பில் மீண்டும் உருவாக்குகிறான். மேம்படுத்துகிறான். புதிதாக கற்பனைசெய்கிறான்.

அவ்வாறு நிகரான வாழ்வனுபவமாக அமைந்து நமம்மில் சிந்தனைகளை உருவாக்குவதே இலக்கியம். அதன்றி இலக்கியவாதி முன்வைக்கும் சிந்தனைகளுக்கு அந்த அளவில் எந்த மதிப்பும் இல்லை. அதன் அடிப்படையில் ஒருபோதும் இலக்கியம் மதிப்பிடப்படுவதும் இல்லை. சரியான சிந்தனையை முன்வைப்பதனால் ஒரு படைப்பு சிறப்பானதாக ஆவதில்லை. தவறான சிந்தனையை முன்வைத்த படைப்பு மோசமான ஆக்கமாக ஆவதும் இல்லை.

நான் சென்ற தினங்களில் கான்பர்ராவில் ஆழியாள் எனும்பேரில் கவிதைகள் எழுதும் மதுபாஷிணி ரகுபதி வீட்டில் தங்கியிருந்தேன். ரகுபதி அவர்களின் அழகிய சிறிய மகள் துகிதை. துகி வைத்த விழி வாங்காமல் ஒரு கார்ட்டூன் நிகழ்ச்சியைப் பார்ப்பதைக் கண்டேன். அந்தக் கார்ட்டூனில் டோரா என்று ஒரு சிறுமி. துகி டோராவுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறாள்– எனென்றால் டோராவுக்கும் கறுப்பு முடி, பெரிய கண்கள்.

டோரா செய்வதையெல்லாம் மலர்ந்த முகத்துடன் கனவில் அமர்ந்திருக்கும் துகி செய்கிறாள் என்பதைக் காணமுடிந்தது. டோரா வழியாக துகி அடையும் அனுபவம் என்ன? அது ஒரு மாபெரும் விடுதலைக் கொண்டாட்டம். குழந்தைக் கதைகளை தொல்பழங்காலம் முதல் எடுத்துப் பார்த்தால் இதைக் காணலாம்.

தவழ்ந்துஎழும் ஒரு குழந்தை கண்டடையும் எல்லைகள் பயங்கரமானவை. அந்த எல்லைகள் குழந்தையை அச்சுறுத்துகின்றன. சோர்வுறச்செய்கின்றன. குழப்புகின்றன. அதனால் ஒரே சமயம் இரு நாற்காலிகளில் அமர முடிவதில்லை. காக்காவும், செடியும், நாற்காலியும், புத்தகப்பையும் அதனிடம் பேசுவதில்லை. அதனால் பறக்க முடிவதில்லை. வண்ணத்துப்பூச்சிகளுடன் சேர்ந்து வானில் துள்ள முடிவதில்லை. ஏன் அழகான ஒரு வால்கூட இல்லை! என்ன கொடுமை!

குழந்தைக்கதைகள் அந்த எல்லையை குழந்தை எளிதில் தாண்டச்செய்கின்றன. மரம் பறவைகள் பாறை எல்லாமே குழந்தையுடன் பேசுகின்றன. டோராவுடன் அவளுடைய புத்தகப்பை பேசுகிறது! துகி வாழும் கற்பனைப்பரப்பில் அவள் மிகப்பெரிய ஓர் உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்!

வெற்றிடத்தைக் காற்று நிரப்புகிறது என்பது அறிவியல் விதி. காற்று இல்லாவிட்டால் இந்தக்கட்டிடங்கள் சரிந்துவிடக்கூடும். இந்த மரங்கள் வீழந்துவிடக்கூடும். நம் மனதின் இடைவெளிகளை எல்லாம் கற்பனையே நிரப்புகிறது. நாம் வாழாத வாழக்கையெல்லாம் நம்முள் நிகழ்கிறது. நாம் இழந்த மண்ணில் நம்மால் வாழ முடியும். நாம் இழந்த மனிதர்களுடன் வாழமுடியும்.

இலக்கியம் மனிதனுக்கு அளிக்கப்பட்டதைவிட பெரிய வாழ்க்கையை அவனுக்கு அளிக்கிறது நண்பர்களே.  இங்கே அமர்ந்திருக்கும் ஆசி. கந்தராஜா அவர்கள் என்னைவிட பலமடங்கு அதிகம் பரப்பளவுள்ள வாழ்க்கையைப் பெற்றவர். பலநாடுகள் கண்டவர். ஓயாது பயணம்செய்பவர். ஆனால் அவரது வாழ்க்கை கூட மிகச்சிறியதே. ஓஷோ சொல்கிறார், எந்த அளவுக்கு பரபரப்பானதாக இருந்தாலும் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கை என்பது ஒரு மணிநேரத்தில் சொல்லி முடித்துவிடக்கூடியதே என்று.

அந்தச் சிறிய வாழ்க்கையை இலக்கியம் மூலம் நாம் பெரிதாக்கிக் கொள்கிறோம். ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கை வாழ்கிறோம். அந்த வாழ்க்கைகள் மூலம் நம் அனுபவத்தை, நம் விவேகத்தை, நம் சிந்தனையை பெரிதாக்கிக் கொள்கிறோம். இலக்கியம் அதற்காகவே எழுதப்படுகிறது

நண்பர்களே, ஈழ இலக்கியத்தைப்பற்றி நான் சில கருத்துக்களைச் சொல்லிவருகிறேன். சில மதிப்பீடுகளை முன்வைக்கிறேன். அதன் அளவுகோல் என்ன என்பதையே இங்கே சொன்னேன். எனக்கு வாழ்க்கையை அளியுங்கள் என்பதே என் கோரிக்கை. நான் உங்கள் வாழ்க்கையை உங்கள் சொல் வழியாக அனுபவிக்க வகைசெய்யுங்கள். அதுவே என் நோக்கில் சிறந்த இலக்கியம். சிந்தனைகளை அதில் இருந்து நானே உருவாக்கிக் கொள்வேன்

அதுவல்லாமல் உங்கள் சிந்தனைகளை, உங்கள் அரசியலை, உங்கள் பூசல்களை முன்வைக்கும் இலக்கியத்தை நான் ஏற்க முடியாது. அது எனக்கு ஒன்றும் அளிப்பதில்லை. அது உங்களுக்குள் என்ன பொருள் அளித்தாலும் எனக்கு அதனால் எந்த லாபமும் இல்லை.

மேலான இலக்கியம் நாம் அறிந்த ஒன்றையே நமக்கு அளிக்கிறது. அது எதையும் நிரூபிப்பது இல்லை. நிரூபணம் இல்லமாலேயே நாம் ஒன்றை நம்புவது இலக்கியத்தில் மட்டுமே. ஒரு விஷயம் இலக்கியத்தில் நுட்பமாகச் சொல்லபப்ட்டுவிட்டதென்றால் ஆம் இது உண்மை என நம் மனம் உடனே ஒப்புகிறது.

அதுவே இலக்கியத்தின் வலிமை. இலக்கியம் ஆசிரியனால் எழுதப்பட்டிருக்கலாம். அனுபவம் என்னுடையதல்லவா? நானடைந்த அனுபவம் எனக்களிக்கும் ஒரு கருத்து என் கருத்து அல்லவா? அதற்கு எனக்கு ஏன் நிரூபணம்?

நண்பர்களே, இன்னொரு வரி இங்கே நினைவுக்கு வருகிறது.  சம்ஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உண்டு. ”ரிஷி அல்லாதவன் கவிஞன் அல்ல” . விவேகமும் ஞானமும் கனியாத ஒருவன் கவிஞன் அல்ல. எழுதுவதன் மூலம் வாழ்க்கையின் ஆழத்துக்குச் செல்பவனே கவிஞன். அதன் சாரத்தைக் கண்டு முதிர்ந்தவனே கவிஞன்

நான் அந்தவரியை மேலும் விரிவடையச்செய்துகொள்வேன் ‘கவிஞன் அல்லாதவன் ரிஷி அல்ல’ ஆம், ஒருவன் விவேகமும் ஞானமும் கொண்டுவிட்டான் என்றால் இயல்பாகவே அவன் கவிஞன் ஆகிவிடுகிறான். மேலான ஞானம் தன்னளவிலேயே மேலான இலக்கியமும் ஆகிறது..

ஏனென்றால் மேலான ஞானம் ஒருபோதும் ஒரு கருத்து மட்டுமாக இருப்பதில்லை. அது ஓர் அனுபவமாக இருக்கிறது. தன்னளவிலேயே அது ஓர் வாழ்க்கைக்கூறாக இருக்கிறது. அந்த ஞானம் நமக்கு ‘தெரிவது’ இல்லை நமக்கு ‘அனுபவமாகிறது’

சலீம் அலி இந்தியாவின் மகத்தான பறவையியலாளர். பறவையியலின் ஒரு ரிஷி. ‘எந்தப்பறவையும் உன்னைப்பார்க்கவில்லை என்று எண்ணாதே ,நீ பார்க்கும் முன்னரே அது உன்னைப் பார்த்திருக்கும்’ என்ன அற்புதமான வரி. எத்தனை அர்த்தங்களை திறந்து அளிக்கும் வரி. ‘பறவை மண்ணில் பலவீனமானது’ எத்தனை உக்கிரமான அனுபவத்தை அளிக்கும் வரி

எல்லா ஞானங்களும் மொழியில் வந்துசேர்கின்றன. ஆறுகள் கடலில் சேர்வதுபோல. இலக்கியம் மொழியில் அடித்துக்கொண்டிருக்கும் அலை.

நன்றி
[18-4-2009  சனிக்கிழமை அன்று சிட்னி  வுட்ஸ்ஸ்டாக் கம்யூனிட்டி செண்டர் கான்பரன்ஸ் ஹாலில் எஸ்.பொன்னுத்துரை அவர்களின் மகனும் மித்ர பதிப்பகத்தின் உரிமையாளருமான பொன்.அநுர அவர்கள் ஏற்பாடுசெய்த சந்திப்பில் ஆற்றிய உரை. மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பும் கலந்துகொண்டு உரையாற்றினார்]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 52
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53