அருகர்களின் பாதை 18 – டோலாவீரா

கிர்நாரில் இருந்து கட்ச் பகுதியில் இருக்கும் டோலாவீராவுக்குச் செல்வதென்பது எங்களின் திட்டம். ஆனால் கட்ச் பகுதியில் பார்த்தாகவேண்டிய இடமாக டோலாவீரா மட்டுமே இருந்தது. அதற்காக அவ்வளவு தொலைவு செல்லத்தான் வேண்டுமா என்ற எண்ணம் ஏற்பட்டது. மேலும் அது சமண மதத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்ட இடமும் அல்ல. எங்கள் பயணம் சமணப்பயணம், பல முக்கியமான ஊர்களைத் தவிர்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறோம்

ஆனால் முத்துக்கிருஷ்ணன் அந்த நிலப்பகுதியைப் பார்ப்போமே, விட்டுவிடவேண்டாமே என்றார். எனக்கும் அது சரி என்று பட்டது. இந்தியாவிலேயே கட்ச் பகுதி மிகுந்த தனித்தன்மை கொண்ட நில அமைப்புள்ளது. அத்துடன் சமணத்திற்கும் அது உருவான குஜராத், ராஜஸ்தான் நிலப்பகுதியின் தொன்மைக்கும் நெருக்கமான உறவுண்டு. அவர்களின் முதல் தீர்த்தங்காரர் ரிஷபதேவர். சிந்துசமவெளி முத்திரைகளில் உள்ல ரிஷபமே அவருடைய சின்னம்தான் என சமணர் எண்ணுகிறார்கள்

அதிகாலையிலேயே கிளம்பிவிட்டோம். நல்ல குளிர் இருந்தது. முந்தையநாள் ஏறிய ஆறாயிரம் படியின் உண்மையான கனம் என்ன என்று மூட்டுகளும் தசைகளும் அறிவித்தன. மலை ஏறியமையால் கால் வலிப்பது நியாயம், பின்பக்கம் எல்லாம் ஏன் வலிக்கிறதென உடற்கூற்றியலைக் கொண்டு விளக்க முடியவில்லை. ஆனால் இனிய வலி அது. உடல் இத்தனை பயணத்தை ஏற்று ஈடுகொடுக்கிறதென்பதே நல்ல விஷயம்தான்.

டோலாவீரா செல்ல நான்குமணி நேரம் பயணம் செய்ய வேண்டும். களைப்பில் நான் பகல் முழுக்க தூங்கிக்கொண்டே இருந்தேன். கட்ச் பகுதிக்குள் நுழைந்தபோது சட்டென்று நிலம் மாறுபடுவது தெரிந்தது. அரைப்பாலைவனம் போலக் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை சமநிலம், புதர்க்குவியல்கள் ஆங்காங்கே. மண்ணில் அலையாக புழுதி கிளம்பிக்கொண்டே இருந்தது. மண் தீப்பற்றி எரிவதுபோல

சட்டென்று ஒரு ஒட்டகக்கூட்டத்தைக் கண்டோம். முப்பது நாற்பது ஒட்டகங்கள் இருக்கும். நாலைந்து குட்டிகள். அவை எல்லாமே அந்தப் புதர்க்கூட்டங்களின் இலைகளை மேய்ந்துகொண்டிருந்தன. ஒரு முப்பது வயதுக்காரரும் அவரது மகன் பன்னிரண்டுவயதான பையனும் அவற்றை மேய்த்தார்கள். ஒட்டகக்கூட்டம் அருகே அமர்ந்து படமெடுத்துக்கொள்ள நண்பர்கள் முண்டியடித்தனர். உதைக்குமா கடிக்குமா என்ற பயம் இருந்தது. ஆனால் முகத்தைப்பார்த்தால் ஒட்டகம் சாந்த சொரூபி என்றும் பட்டது. ஒட்டகம் மேய்க்கும் பையன் சாமர்த்தியசாலி. புகைப்படம் எடுத்த காமிராவை அன்பளிப்பாகக் கேட்டான். இல்லையென்றால் பணம் கொடுங்கள் என அன்பாகக் கேட்டு ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டான். அதில் கொஞ்சம் அதிருப்திதான். நிறைய சுற்றுலாப்பயணிகளைப்பார்த்திருப்பான் போல

மேலே செல்லச்செல்ல அந்நிலப்பகுதி ஒரு புதிய தேசத்துக்கே வந்துவிட்டது போன்ற பிரமையை அளித்தது. கிருஷ்ணன்-ராதை சிற்பங்களில் ராதை அணிந்திருப்பதுபோல உடையணிந்த பெண்கள். அழுத்தமான நிறங்களில் பாவாடைகள். தலையில் சுற்றிவரும் மேலாடை,பளபளக்கும் ஜாக்கெட்,கைநிறைய சங்குவளைகள். ஆண்கள் வண்ணத்தலைப்பாகை சுற்றிப் பளிச்சிடும் வண்ணங்களில் சட்டை வேட்டி அணிந்து சரித்திரப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல இருந்தனர். வழியில் முதல் ஆச்சரியத்தைக் கண்டோம். பல கிலோமீட்டர் தூரத்துக்குக் கடல் வற்றிப்போய் உப்பு வெளியாகக் கிடந்தது. ஆர்க்டிக் பனிப்படலம் என்று சொன்னால் நம்புவார்கள். கண்கூசும் வெண்மை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை உப்பு. ஒரு காலத்தில் இந்த உப்பைச் சுரண்டி விற்பதே குஜராத்தின் மைய வணிகமாக இருந்தது. இன்று அந்த வணிகம் அவ்வளவு தீவிரமாக இல்லை போலிருக்கிறது.

உப்புப்படலம் மீது இறங்கிக் கொஞ்சதூரம் நடந்தோம். வெள்ளிப்பாளம் மீது நடப்பது போலிருந்தது. கீழே தரையில்லை, ஒளிவிடும் முகில் அது எனத் தோன்றியது. பொருபொருவென காலில் உப்பு மிதிபட்டது. ஆனால் உப்பை மிதிப்பது ஒரு குற்றவுணர்ச்சியையும் அளித்தது. என்னதான் இருந்தாலும் உப்பு ஓர் உணவுப்பொருள் மதியம் ஒரு மணிக்கு டோலாவீரா சென்று சேர்ந்தோம்.  அந்த உப்புக்கடல் நடுவே செல்லும் நீளமான சாலைதான் ஒரே வழி. உண்மையில் டோலாவீரா ஒரு தீவு.  ஆழமற்ற கடல் வழியாக உருவாக்கப்பட்ட சாலை நாங்கள் சென்றது. அது கூகிள் வான்வழிப் படங்களில் பிரம்மாண்டமான ஒரு பாலம் போலத் தெரியும். இருபக்கமும் மந்திரத்தால் கடல் உறைந்த பாற்கடலாக ஆகிவிட்டது போல! டோலாவீரா லோதல் போலவே முக்கியமான ஒரு புதைநகரம். கிட்டத்தட்ட நான்காயிரம் வருடத் தொன்மை கொண்டது. உள்ளூர்க்காரர்கள் இதைக் கொட்டாடா டிம்பா என்கிறார்கள்.  கட்ச் பாலைவன வனப்பாதுகாப்பகத்துக்குள் அடங்கியது இப்பகுதி. கிமு 2650 முதல் 2100 வரை இது செயலூக்கத்துடன் இருந்திருக்கலாமென்றும் கைவிடப்பட்டு சில நூற்றாண்டுகள் கழித்து கிமு 2100இல் மீண்டும் புழக்கத்துக்கு வந்திருக்கலாம் என்றும் ஊகிக்கிறார்கள். கிமு 2500 வாக்கில் இது மீண்டும் கைவிடப்பட்டது. டோலாவீரா 1967இல் ஆய்வாளர் ஜெ.பி.ஜோஷியால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் 1990க்குப்பின்னர் தான் முறையான அகழ்வாய்வு இங்கே ஆரம்பித்தது. இன்று வரை தொடர்ச்சியாக இங்கே அகழ்வாய்வுகள் நிகழ்ந்துவருகின்றன. டோலாவீராவை அகழ்வாய்வு செய்த நிபுணரான ஆர்.எஸ்.பிஷ்டு டோலாவீராவின் வரலாற்றையும் பண்பாட்டையும் விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார்.

டோலாவீரா மன்ஹார்- மன்ஸார் என்ற இரு நீர்வழிகளின் நடுவே உள்ள தீவாகும். முற்காலத்தில் இந்த இரு கடல் நீட்சிகளும் இல்லை. இந்நிலம் கடலால் சூழப்பட்டு மூவாயிரம் வருடங்களே ஆகியுள்ளன. முன்பு இதன் முன்பக்கம் கடல் இருந்ததிருக்கலாம். கடல் உள்ளே வந்து இதைச்சூழ்ந்திருக்கலாம். டோலாவீரா சிந்துசமவெளி நாகரீகம் பற்றி சொல்லப்பட்டுவந்த பெரும்பாலான ஐரோப்பிய ஊகங்களுக்கு முடிவுகட்டியது.  ஒன்று இந்நகரத்துடன் தொடர்புள்ள பல சமகால நகரங்கள் பஞ்சாபிலும் ஹரியானாவிலும் குஜராத்திலும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆகவே சிந்துசமவெளி நாகரீகம் என்ற ஒன்று உண்மையில் இல்லை என நிறுவப்பட்டது. சிந்து வெளிநாகரீகம் என்று அதுவரை சொல்லப்பட்டுவந்தது கிட்டத்தட்ட வட இந்தியா முழுக்கப் பரவியிருந்த ஒரு பெரும்பண்பாடுதான்.

இந்தப் புதைநகரங்கள் அமைந்திருக்கும் விதம் காஷ்மீர் முதல் கட்ச் கடல் வரை நீளும் ஒரு கீழ்நோக்கிய கோடு போல உள்ளது. ஆகவே ஒரு நதியின் படுகையில் இவை அமைந்திருக்கலாம், அந்நதி ஒருவேளை மறைந்த சரஸ்வதியாக இருக்கலாம். சிந்து சரஸ்வதி நாகரீகம் என்னும் கருத்தாக்கம் வலுப்பெற்றுவருகிறது.

டோலாவீராவில் கிடைத்துள்ள பல பொருட்களுக்கு சுமேரியநாகரீகத்துடன் நெருக்கமான ஒற்றுமை உள்ளது. ஆகவே அவர்கள் இவர்களுடன் வணிகம் செய்திருக்கக்கூடும். லோதல் காளிஃபங்கன் டோலாவீரா ஆகியவை சுமேரிய நாகரீகத்துடன் உரையாடலில் இருந்தவை.

சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் ஆசியாமைனர், வட ஆப்ரிக்கா, அரேபியா முதல் இந்தியாவில் பீகார் வரை பரவியிருந்த பல ஆயிரம் புதைநகரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் புதைநகரங்களின் பால்வீதி என்று சொல்லலாம். ஒரு மேகப்படலம் போல இந்த நிலம் முழுக்கப் பரவியிருக்கிறது. இந்த நாகரீகப்படலத்தின் தொல்பொருட்கள் கிடைத்தபடியே உள்ளன. எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை.

ஐந்தாயிரம் வருடம் முன்னரே ஏதோ சில சூழியல் மாற்றங்களால் அழிந்து மறைந்த ஒரு நாகரீகவெளி இது. இது உண்மையில் என்ன, இதன் மொழி என்ன, பண்பாடு என்ன, இன்றைய பண்பாடுகளுக்கும் இதற்குமான உறவென்ன எல்லாமே மர்மங்கள்தான். இந்த மர்மத்தையே இன்று உலகமெங்கும் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வுசெய்து வருகிறார்கள். ஆரிய திராவிட இனவாதம் போன்ற எளிமையான கொள்கைகளால் இதை விளக்கிவிடமுடியாது என்பது இன்று தெளிவாகியிருக்கிறது.

இந்த விஷயம் இந்தியக் கல்வி-அரசியல் தளங்களில் வேரோடி உள்ள ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டுக்கு எதிரானது. ஆகவே இந்த ஆய்வுமுடிவுகள் இன்றுவரை நம் கல்வித்திட்டங்களுக்குள் வரவிடாமல் அரசியல் சக்திகளால் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவின் முற்போக்காளர்களும் சில ஐரோப்பியர்களும் அதை ஏற்காமல் முன்முடிவுகளுடன் மறுத்துவாதிட்டு வருகிறார்கள். எந்தவிதமான ஆதராங்களும் இல்லாது ஆரிய திராவிட ஊகத்தை வரலாறென ஏற்றுக்கொண்டவர்கள்.

டோலாவீரா, லோதலை விடப் பழமையான நகரம் என்று சொல்லப்படுகிறது. டோலாவீரா நீள்சதுர வடிவமுள்ள நகரம். கிட்டத்தட்ட 100 ஹெக்டேர் பரப்புள்ளது. ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்களைப்போலவே இதுவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரமாகும். லோதல் போலவே சுற்றிலும், நடுவே கோட்டை, ஆட்சியாளர்கள் வாழும் மையநகரம், சூழ கடைமட்டத்தினரின் கீழ்நகரம் என மூன்று கட்டங்கள் கொண்டதுதான் இதுவும். வலுவான அதிகார அமைப்பும் காவல் அமைப்பும் கொண்டது இந்நகரம் என்று தெரிகிறது. ஒரு தொல்நகரம் இத்தகைய பேரமைப்புடன் இருப்பது பிரமிப்பூட்டியது. புதைநகரம் என்று சொல்லும் போது சில செங்கல் இடிபாடுகள் என பிரமை எழலாம். உண்மையில் டோலாவீரா ஒரு மிகப்பெரிய நகரம். பல ஏக்கர் தூரத்துக்கு விரிந்து கிடக்கும் கட்டிடங்கள், தெருக்கள், மாபெரும் சதுக்கம். ஆசியாவின்  புதைநகரங்களிலேயே மிகப்பெரிய சதுக்கம் டோலாவீராவில் இருந்ததுதான் என்கிறார்கள்.

ஹரப்பா காலத்துப் பிறநகரங்களுக்கும் டோலாவீராவுக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடு என்பது டோலாவீரா கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் கொண்டது என்பதுதான். பிறநகரங்கள் எல்லாமே சுடுமண்ணால் ஆனவை. முதல்பார்வையிலேயே நம்மை வியக்கச்செய்வது இந்த விஷயம்தான். இரும்பு இல்லாத காலகட்டத்தில் இத்தனை கற்களை எப்படி வெட்டி அடுக்கி இதைக் கட்டினார்கள் என்பது.

மையத்தில் உள்ள அரண்மனைக்கோட்டை பெரும்பாலும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கம்பீரமான நகர்வாயில். உயர்ந்த கோட்டைச்சுவர். நுழைவாயிலில் கற்களை வெட்டி ஒன்றுடன் ஒன்று பொருத்தி உருவாக்கப்பட்ட தூண்களின் எச்சங்களும் கற்பலகைகளும் உள்ளன. டோலாவீராவின் இன்னொரு முக்கியமான சிறப்பு என்னவென்றால் மிகவிரிவான நீர்சேமிப்பு மற்றும் வினியோக அமைப்பு இங்கே இருந்தது என்பதுதான். முழுக்கமுழுக்கக் கல்லால் செதுக்கப்பட்ட ஓடைகள் வழியாக நீர் வினியோகிக்கப்பட்டிருக்கிறது.  மழை நீரை சேமித்து வினியோகிக்க இந்த அமைப்பைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 16 வெவ்வேறு வகையான நீர் சேமிப்பு அமைப்புகள் இங்கே உள்ளன.

நகரின் முகப்பில் பிரம்மாண்டமான நீர்ச்சேகரிப்புக்குளம் உள்ளது. பாறையில் வெட்டப்பட்டு மேலே கல் கட்டி எழுப்பப்பட்ட குளம். அதில் இருந்து நகருக்குள் உள்ள எல்லாக் குளங்களும் புதை குழாய்கள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. நகர் முழுக்கக் குளியல் அறைகள், கழிவுநீர்க் கால்வாயால் இணைக்கப்பட்டிருக்கின்றன. அக்கால்வாய்கள் ஒரு இடத்தில் சேர்ந்து அந்த நீர் தாவரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டோலாவீரா காலத்தில் மேலும் ஆயிரம் வருடம் நீடித்தமைக்குக் காரணம் இந்த நீர்ச்சேகரிப்பு அமைப்புதான். ஆனால் காலப்போக்கில் இப்பகுதி கட்ச் கடல் உள்ளே வந்து துண்டிக்கப்பட்டதாக ஆகியது. மழைபொய்த்துப் பாலைநிலமாக ஆகியது. நகரம் மெல்லமெல்லக் கைவிடப்பட்டது. நகர் நடுவே வட்டவடிவமான ஒரு அமைப்பு உள்ளது. அதில் எலும்புகள் ஏதும் கிடைக்கவில்லை. ஆகவே ஏதேனும் மதச்சடங்குக்கான அமைப்பாக அது இருந்திருக்கலாம். இங்கே மணல்பாறையால் ஆன ஒரு ஆண் சிலை பெரிய ஆண்குறியுடன் உள்ளது. இது வளச்சடங்குகளுக்காக வழிபடப்பட்ட சிலையாக இருக்கலாம். .

இங்கே கிடைத்துள்ள பெரிய முதுமக்கள்தாழிகளில் ஒன்றில் மட்டுமே எலும்புகள் இருந்தன. டோலாவீராவில் பலவகையான யாககுண்டங்கள் போன்ற அமைப்புகள் உள்ளன. இங்கே வேள்விச்சடங்குகள் செய்யப்பட்டன என்று சொல்லும் ஆய்வாளர்கள் உள்ளனர். நகர் நடுவே உள்ள சதுக்கத்தில் இரு கல்தூண்கள் உள்ளன. அவை ஆண்குறிபோன்ற அமைப்புடன் உள்ளன. அவை என்ன என்பது மர்மம்தான். வேதங்களில் சொல்லப்படும் ஸ்தம்ப வழிபாட்டுக்கான தூண்கள் அவை என்கிறார்கள். சிவலிங்கத்தின் முதல் வடிவம் என்கிறார்கள். டோலாவீராவின் முத்திரைகள், எழுத்துக்கள், சிலைகள், அடையாளங்கள் எல்லாமே மொகஞ்சதாரோ பண்பாட்டைச் சேர்ந்தவை. இந்நாகரீகத்தின் மக்கள் பேசிய மொழி அறியப்படவில்லை. கிட்டத்தட்ட 400 அடிப்படைக் குறிகள் பிரித்தறியப்பட்டுள்ளன. அவை எழுத்துக்களாக இருக்கலாம்.பெரும்பாலான எழுத்துக்கள் மண்ணாலான முத்திரைகளில் உள்ளன. அவை சரக்குகளை அடையாளப்படுத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். செம்புக் கருவிகளும் பல்வேறு வீட்டு உபயோகப்பொருட்களும் கிடைத்துள்ளன.

டோலாவீராவைப் பார்த்துவிட்டுக் கிளம்பினோம். மணி மூன்று. ஏழுமணிக்கு படானை சென்றடையலாம் எனத் திட்டம். கூகிள் காட்டிய வழியே சென்றோம். குறுக்குவழி, ஆனால் சரியான கிராமத்துப்பாதை. ஒரு கட்டத்தில் ஆளரவமில்லாத காட்டுக்குள் கொண்டு விட்டுவிட்டது. பொட்டல் பாலை நிலம். அங்குள்ளவர்களுக்குத் தெரிந்த மொழி கட்ச் மொழி மட்டுமே.

தட்டுத்தடுமாரி ஒரு கிராமத்திற்குள் சென்றோம். பெரும் தலைப்பாகை கட்டிய ஆசாமி தன் உடலாலும் கைகளாலும் மொழியாலும் முயற்சி செய்து எங்களுக்கு வழி காட்டினார். அதைத் தவறவிட்டோம். நேராக ஒரு வெந்தய வயலுக்குள் சென்று சேர்ந்தோம். அங்கே ஒரு பெண் நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தாள். அவளிடம் வழி கேட்க முத்துக்கிருஷ்ணன் சென்றார். அவள் அவரைப்பார்த்ததும் அஞ்சி கூச்சலிட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டாள். அவர் கொஞ்சதூரம் துரத்திச்சென்றார், அவள் ஓடியே போய்விட்டாள். வேறு வழி இல்லை, வந்தவழியே திரும்பினோம்.

புழுதி பறக்க மண்சாலையில் நாலைந்து கிமீ வந்தோம். வழியில் எல்லைக்காவல்படையின் ஒரு முகாம் தென்பட்டது. முகாம் என்றால் வழக்கமான பீரங்கிகள் மதில்கள் ஏதும் இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட தாழ்வான குடில்கள். நடுவே ஒரு பெரிய கொட்டகை. நாலைந்து டிரக்கர்கள். கட்டுமஸ்தான இளைஞர்கள் புட்பால் விளையாடிக்கொண்டிருந்தார்கள். மணல்மூட்டை அடுக்கப்பட்ட மேடை மேல் ஒருவர் மட்டும் சீருடையில் துப்பாக்கியுடன் இருந்தார்.

வண்டியை நிறுத்தி வழிகேட்டோம். அது முட்டாள்தனம், ஆனால் அவர்கள் தீவிரவாதிப்பயம் ஏதுமில்லாமல் ஓய்வாகத்தான் இருந்தனர்.அங்கிருந்த வீரர்கள் வழி சொன்னார்கள். இருவர் மலையாளிகள். நெடுநாட்களுக்குப்பின் மலையாளம் பேசினேன். அவர்களுக்கும் மகிழ்ச்சி

அவர்கள் சொன்ன வழியே திரும்பி வந்தோம். அப்போதும் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. அல்லாடிச் சுற்றியலைந்து ஒரு பண்ணை வீட்டுக்கு முன் நிறுத்தினோம். அந்தப் பண்ணையார் வெந்தய விவசாயி. எங்களுக்கு உதவ அவரே பைக் எடுத்துக் கூட வந்தார். சரியான வழிகாட்டி அனுப்பி வைத்தார். நாங்கள் முதலில் சென்ற அதே பாதை, ஒரே ஒருமுறை தப்பாகத் திரும்பியிருந்தோம். சின்ன தப்புதான்.  சரியான வழி குழியாக இருக்கிறதென நினைத்து சீராக இருந்த தப்பான வழிக்குத் திரும்பிச் சென்றிருந்தோம். ததுவார்த்தமான ஓர் அறிதல் இது

மீண்டும் பயணம். நேராகச் சென்று இறங்கியது முப்பது கிலோமீட்டருக்கு மேல் நீள அகலமுள்ள ஒரு ஏரியில். பல ஆண்டுகளுக்கு முன்னரே வற்றிக் காய்ந்துபோன ஏரி. தொடுவானம் வரை விரிந்து கிடந்த நிலம் வெடித்து வெடித்து அபாரமான ஒரு காட்சிப்பரப்பாக இருந்தது.  எல்லையற்ற ஒரு மீன்வலையை விரித்தது போல. ஒரு மகத்தான தோல்பரப்பு போல. அங்கே சென்றதும் காரின் சக்கரம் ஓட்டையாகிவிட்டது. சக்கரத்தை ஓட்டுநர் கழட்டி மாட்டினார். அங்கே நின்று பார்த்தபோது உண்மையில் நாங்கள் ஒரு பாலைவனம் முன்னால் நிற்பதாகவே எண்ணினோம். ஏரி எனப் பின்னர் கூகிள்தான் சொன்னது. நாங்கள் அந்தப் பாலையில் இறங்கிக் கொஞ்ச தூரம் நடந்தோம். கண் எட்டும் தூரம் வரை அந்த நிலம்தான். வேறு ஏதோ கிரகத்தில் எப்போதோ காய்ந்து போன கடல் ஒன்றுக்குள் சென்றுகொண்டிருக்கும் வான்பயணிகள் போல உணர்ந்தோம். ஏரிப்பரப்பு உடைந்த தரையோட்டுத்துண்டுகளால் ஆனதுபோல கால்கீழே உடைந்தது.

சூரியன் பிரம்மாண்டமான செவ்வட்டமாக மேற்கே அணைந்தது, மறு நிமிடமே குளிர் அலைபோல வந்து சூழ்ந்து கொண்டது. எங்கள் முகவிளக்கு வெளிச்சம் ஏரிக்குள் ஒரு சிறிய மின்மினி போல செல்வதை நாங்களே கற்பனையில் கண்டோம். மிகத்தொலைவில் இன்னொரு மின்மினி. மெல்லிய ரீங்காரம். அது பத்து கிமீ அப்பால் என தோன்றியது

ஏரிக்குள் காரை ஓட்டி பதினைந்து கிலோமீட்டர் தூரம் சென்று ஒரு கரையை அடைந்தோம். அங்கே ஒரு பட்டியில் மாடுகளுடன் நால்வர் அமர்ந்திருந்தனர். வழிகேட்டதும் விரிவாக விளக்கிவிட்டு சாய் குடிக்கும்படி உபசரித்தனர். ஏற்கனவே தீ மூட்டிக் கனல் செக்கச்சிவப்பாக இருந்தது. அதிலேயே டீ போட்டுக் கொடுத்தனர். நல்ல பாலில் போடப்பட்ட அருமையான டீ. அவர்கள் மாடு மேய்த்துப் பட்டியில் கட்டிவிட்டு அங்கேயே தூங்குவார்களாம். குளிருக்கு எப்போதும் கையோடு கம்பிளி. சூழ்ந்து அமர்ந்து அந்த நாடோடிகளுடன் டீ குடித்தது இப்பயணத்தின் அரிய அனுபவங்களில் ஒன்று.

அவர்களில் ஒருவர் அருகே உள்ள ஊருக்குச் செல்ல விரும்பினார். வண்டி என ஏதும் அவ்வழி செல்வதில்லை, சென்றால் அதில் ஏறிப் பக்கத்து ஊருக்குச் செல்வது வழக்கமாம். எதை நம்பி அங்கே இருந்தார் எனத்தெரியவில்லை. காரைப்பார்த்ததால் கிளம்பலாம் என நினைத்திருக்கலாம். அவரை ஏற்றிக்கொண்டு கிளம்பினோம். அவர் வழிகாட்டினார்.

ஒருவழியாக மீண்டும் சாலைக்கு வந்தோம். அங்கிருந்து இந்தச் சிற்றூருக்கு வந்திருக்கிறோம். இதன் பெயரை அறியக்கூட முயலவில்லை, அவ்வளவு களைப்பு. சிறிய விடுதியில் மூன்று அழுக்கான அறைகள்.இப்போது மணி பதினொன்று. இந்தக்குளிரில் இனிமேல்தான் தூங்கவேண்டும்.

மேலும்…

படங்கள் இங்கே

முந்தைய கட்டுரைஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைதற்கொலையும் தியாகமும்- கடிதங்கள்