ஆபிரகாம் பண்டிதர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே,

நலமா?

என்னுடைய இணையதளத்தில் நான் ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணாமிர்த சாகரம்’புத்தகத்தைப் பற்றியும்,தமிழிசை பற்றியும் விரிவாக எழுதியுள்ளேன்.இன்னும் எழுத ஆசை.

தமிழிசை-வட்டப்பாலை

அவற்றைப் பற்றி உங்கள் எண்ணங்களை அறிய ஆவலாய் உள்ளேன்.

நன்றி,

ரா.கிரிதரன்.

அன்புள்ள கிரி,

ஆபிரகாம் பண்டிதரின் கர்ணாமிர்த சாகரம் இன்றுகூட ஆய்வாளர்களில் ஒரு தரப்பினரால் மட்டுமே கவனிக்கபப்டும் ஒரு நூல். அது சில பதில்களை முன்வைக்கிறது. அந்தப்பதில்களை ஏற்காதவர்கள் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குக் கூட அந்த நூல் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. அந்நூலை முழுமையாகப் படிக்கும் அளவுக்கு இசை ஞானம் உள்ளவனல்ல நான். அதில் உள்ள பண்பாட்டுக்கூறுகளை மட்டும் கவனித்திருக்கிறேன்.

ராகபுடம் குறித்துப் பண்டிதர் சொல்வதில் உள்ளது இன்று மேலும் மேலும் முக்கியத்துவமடைந்துவரும் அந்த வினா. கர்நடக சங்கீதத்தின் ராகங்கள் எந்த அடிப்படையில் கணக்குப்படுத்தப்பட்டுள்ளன என்பதே அது. சாரங்கதேவரின் ‘சங்கீத ரத்னாகரம்’ முதலிய நூல்களில் இசையின் ராகப்பிரிவினைகள் உள்ளனவே அல்லாமல் அதன் கணிதம் இல்லை என்கிறார் பண்டிதர்.

அந்தக் கணிதத்தை அவர் உருவாக்குகிறார். பன்னிரண்டின் மடங்குகளில் சுவரங்களை அமைத்துக்கொண்டு ராசி சக்கரத்தின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு. அது தெளிவான கச்சிதமான விளக்கமாகவும் இருக்கிறது– சரியாக இசை தெரியாத என்னைப்போன்றவர்களுக்கும் கூட. அதை ஏற்றுக்கொண்டால் இந்திய இசை என்பதே தொல்தமிழ் இசை என்பதை ஏற்றாகவேண்டும் என்பதனால் அது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்

உங்கள் கட்டுரை தெளிவாகவும் நுட்பமாகவும் ஆபிரகாம் பண்டிதரைப்பற்றிப் பேசுகிறது. இவ்வாறு பல கோணங்களில் பண்டிதரைப்பற்றிய பேச்சுகள் உருவாகிவரவேண்டும். அது நம் விசாரணையின் எல்லைகளைப் பெருக்கும்
ஜெ

சிலப்பதிகாரம், ஒரு புதிய பதிப்பு

இசைப்பாடல்கள்:கடிதம்

இசை, மீண்டும் சில கடிதங்கள்

தமிழிசை ஒரு கடிதம்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம், ஊமைசெந்நாய் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்