அருகர்களின் பாதை 17 – கிர்நார்

காலையில் எழுந்து ஜூனாகட் நகருக்குள் நுழைந்தோம். ஜூனாகட் பலவகையிலும் இந்திய வரலாற்றில் பேசப்பட்ட ஊர். ஜூனாகட் சுதந்திரம் கிடைக்கும்போது நவாப் ஆட்சியில் இருந்தது. நவாப் பாகிஸ்தானுடன் சேர விரும்பினார். மக்கள் இந்தியாவுடன் சேர விரும்பினர். பட்டேலின் ராணுவநடவடிக்கை மூலம் ஜூனாகட் இந்தியாவின் பகுதியாக ஆகியது.

பலவகையிலும் ராணுவ முக்கியத்துவம் கொண்ட ஜூனாகட்டை பட்டேல் வெற்றிகரமாக இந்தியாவின் பகுதியாக ஆக்கியதை நாம் பல நூல்களில் வாசிக்கலாம்,

ஜூனாகட் சுவாரசியமான நகரம் நகரின் நுழைவுவாயிலே பெரும் கோட்டைவாயிலாக இருந்தது. நகரைச் சுற்றி ஒரு பெரும் கோட்டை. நகருக்குள்ளும் இடிந்த கோட்டைகள் கண்ணுக்குப்பட்டன. கோட்டைக்குள் கோட்டைகள் போலப் பெரிய கட்டிடங்கள்.

ஜூனாகட்டில் அசோகச்சக்கரவர்த்தியின் முக்கியமான சாசனம் ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு நேரமில்லை. எங்கள் பயணம் சமணப்பாதை. ஆகவே கிர்நார் செல்வதற்கு முடிவெடுத்தோம்.

ஜூனாகட்டில் இருந்து ஏழு கிமீ தூரத்தில் உள்ள கிர்நார், சமணர்களின் முக்கியமான புனிதத்தலம். குஜராத்தின் மிக உயரமான மலை இதுவே. 3470 அடி உயரமுள்ளது. இங்குள்ள கோயில்களைக் கட்டிய ருத்ரதாமனின் கல்வெட்டில் கிரிநகர் என்று கிர்நார் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கும் முன்புள்ள புராணங்களில் உஜ்ஜயந்தா என்று கிர்நார் சொல்லப்பட்டது. வைஜெயந்தா என்றும் அழைக்கப்பட்டது. சில கல்வெட்டுகளில் இது உர்ஜயத் என்று சொல்லப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில் இது ரைவத மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரைவதர் என்னும் மன்னர் இங்கு இருந்தார். அவர் ‘காலையிலும் மாலையிலும் கும்பிடத்தக்க சாத்வீகர்’ என்று மகாபாரதம் சொல்கிறது

கி

ர்நார் இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் கூட புனிதநகரம்தான். கிர்நார மகாத்மியா என்ற காவியத்தில் கிர்நார் வஸ்த்ரபாதா என்று சிறப்பிக்கப்படுகிறது.

சமணர்களுக்கு இந்தியாவிலேயே மிகப்புனிதமான ஐந்து நகரங்களில் ஒன்று இது. இருபத்திரண்டாவது தீர்த்தங்கரரான நேமிநாதரின் தீக்ஷை, கேவலஞானம், நிர்வாணம் ஆகிய மூன்று கல்யாணங்கள் [மங்கலநிகழ்வுகள்] இங்கேதான் நிகழ்ந்தன. இங்கே பல்லாயிரம் சமணமுனிவர்கள் கேவலஞானம் அடைந்தனர் என்கிறார்கள்.

நேமிநாதர் கிருஷ்ணனின் ஒன்றுவிட்ட அண்ணன். விருஷ்ணி குலத்தில் பிறந்தவர். அவர் தன் திருமணத்தில் ஆடுகள் கொல்லப்பட்டதை கண்டு மனம் உடைந்து அருகநெறி சேர்ந்தார் என்பது சமணர்களின் கதை

கிர்நார் சந்திரகுப்த மௌரியர் காலத்திலேயே உருவாக்கப்பட்ட மலைநகரம். கிர்நார் மலை, ஆறு முகடுகள் கொண்டது. உயரமான சிகரம் கோரகநாதா என்று சொல்லப்படுகிறது.

மலைமேல் ஏறிச்செல்ல இரண்டாயிரம் படிகள் இருக்கின்றன என்று சமண இணையதளம் ஒன்று சொன்னதை நம்பி உற்சாகமாகக் காலை பத்து மணிக்கு ஏற ஆரம்பித்தோம். ஆயிரத்தைநூறு படிகள் ஏறியதும் ஒரு விஷயம் தெரியவந்தது. எட்டாயிரம் படிகள்!

நாங்கள் ஏறவேண்டிய மலைச்சிகரம் காலை ஒளியில் சுடர்விட்டபடி மேகங்கள் மேல் ஒரு விண்ரதம் போல நின்றுகொண்டிருந்தது.

மனம்தளராமல் ஏற ஆரம்பித்தோம். ‘நாமள்ளாம் பலிதானாவையே ஏறினவங்க சார்’ என்றார் கிருஷ்ணன். இரண்டாயிரம் படிகள் தாண்டிய பின்னரும் மலைச்சிகரத்தில் கோயில் அப்படியே நின்றது.

மொத்தம் எத்தனை படிகள் எனத் திரும்பிவந்துகொண்டிருந்த ஒருவரிடம் கேட்டோம். ஐந்தாயிரம் படிகள் ஏறினால் சமண ஆலயங்கள் வந்துவிடும் என்றார். இந்த மலையுடன் ஒப்பிடுகையில் பலிதானா ஒரு குன்று.

துணிந்து ஏறிக்கொண்டே இருந்தோம். கல்படிகள். மிகச்செங்குத்தானவை. மனிதர்கள் ஏறி ஏறி வழவழவென இருந்தன. படிகளில் ஐந்து கிலோமீட்டர் தூரம் ஏறிச்சென்றால் முதல் மலைமுகடை அடையலாம்.

அங்கே மலை நாற்புறமும் செங்குத்தான சிகரமாக முடிவடைகிறது. அந்த சிகர நுனியில் ஐந்து சமண ஆலயங்கள் உள்ளன. நேமிநாதரின் ஆலயம் இருக்கும் இடம் இதுவே. இத்தனை மலை உச்சியில் இப்படி ஒரு கோயில் தொகுதியை எதிர்பார்க்கவே முடியாது.

கோயில்களால் ஆன ஒரு குட்டி நகரம் இது. பெரிய கோயில்கள் பதின்மூன்று. சின்னஞ்சிறு கோயில்கள் இருபதுக்கும் மேல். பலிதானாவின் கோயில்கள் புதியதாகக் கட்டப்பட்டவை, சலவைக்கல்லால் ஆனவை.

இக்கோயில்கள் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை, சிவந்த கல்லாலும் மணல்கல்லாலும் கட்டப்பட்டவை. ஒரு கோயிலில் இருந்து எதிர்பார்க்கமுடியாத வழிகள் வழியாக அடுத்த கோயிலுக்குச் சென்றுகொண்டே இருந்தன. ஒரு துளசிமணிமாலை சுருண்டு கிடப்பது போல பிரமை எழுந்தது. ஒவ்வொரு கோயிலும் ஒரு செம்மணி.

முதல் கோயில் நேமிநாதருக்குரியது. 190 அடி உயரமானது. சிவந்த கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களில் இருகைகளிலும் சக்கரங்களுடன் சமண தேவர்கள். நடனமிடும் தேவ கன்னிகைகள், யட்சிகள். இசைக்கும் யட்சர்கள். கோயில் வளாகத்துக்குள் அந்நேரம் நாங்கள் மட்டுமே இருந்தோம். அமைதியில் குளிர்ந்த வெயிலில் அந்தக் கோயில் அந்தரங்கமாக எங்களுடன் பேசிக்கொண்டிருப்பது போலிருந்தது.

ஒரு மகத்தான நூலின் பக்கங்களைப் புரட்டுவது போல ஒரு கோயிலில் இருந்து இன்னொன்றுக்குச் சென்றுகொண்டே இருந்தோம். இக்கோயில்கள் எல்லாமே வட இந்தியக் கோயில்பாணியில் பலநூறு சிறு சிகரங்களால் ஆனவையாக இருந்தன. ஆயிரத்து எட்டு சிறிய சிகரங்கள் வரிசையாக அமைந்த முகப்பு மண்டபம். உள்ளே சென்றால் ஒற்றைக்கல்லால் ஆன பெரிய மண்டப மலர்க்கவிகை மாடம். ஆலய வாசல்களில் நுண்ணிய சிற்பங்கள்.

இப்போதெல்லாம் சிற்பங்களைப் பார்ப்பதெப்படி எனக் கற்றுக்கொண்டோம். பருவடிவம் கொண்டு நம்மைச்சூழ நிறைந்து நிற்கும் அந்தக் கனவுவெளிக்கு நம்மை முழுமையாக ஒப்புக்கொடுப்பதுதான் அந்த வழி.

அங்கிருந்து பார்க்க அடுத்த சிகரம் கண்ணுக்குப் பட்டது. மலைச்சிகர நுனியில் வான்வழிச்சென்ற விண்ணவர் எவரோ கைமறதியாக விட்டுச்சென்ற ஒரு விளையாட்டுப்பொம்மை போல நின்றது. இந்த மலையில் உள்ள ஆறு சிகரங்களுக்கும் செல்லத் தொடர்ச்சியான படிக்கட்டுகள் உள்ளன. மொத்தம் 9999 படிக்கட்டுகள் உள்ளன என்பது ஐதீகம். ஆனால் 8000 படிகள்தான் உள்ளன என்று சொல்கிறார்கள்.

துணிந்து மேலே ஏற ஆரம்பித்தோம். ஆறாயிரத்து நானூறு படிகள். தொடைகள் கடுத்துத் தசைகள் தானாகவே துடித்துக்கொண்டன. நுரையீரலில் படிந்த எல்லா அழுக்கும் மூச்சாக சீறி வெளியேறியது.

சிகரத்துக்குச் செல்லும் வழியில் பரதரி குகா, மாலி பரபாப் ராமச்சந்திர கோயில், கதிபாஷன் போன்று பல சிறு கோயில்கள் உள்ளன. சிவன், காலபைரவன், காளி கோயில்கள். மலை ஏறும் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். செல்லும் வழி முழுக்க சிறு கடைகள் இருந்தன. தண்ணீர், தின்பண்டங்கள் கிடைக்கும். நெல்லிக்காய் கிடைத்தது. உப்புநீரில் ஊறப்போட்டு வைத்திருந்தனர். நெல்லிக்காயும் குளிர்நீரும் இனிய வழித்துணையாக அமைந்தன.

செல்லும் வழியில் பல இடங்களில் ரகுபதி ராகவ ராஜாராம், வைஷ்ணவ ஜனதோ போன்ற பாடல்கள் ஒலித்தன. ஓர் ஒலி ஒளிக் காட்சியை நின்று பார்த்தேன். அது நர்சிங் மேத்தா பற்றியது. அவர் கிர்நாரில் பல வருடம் இருந்திருக்கிறார். கிர்நார் அவரது வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த ஊர்.

நரசிங் மேத்தா குஜராத்தி மொழியின் முக்கியமான கவிஞர். நர்ஸி பகத் என்றும் அழைக்கப்படுகிறார். குஜராத்தின் பக்தி இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். குஜராத்தி மொழி அவரது கவிதைகள் வழியாகவே தனித்துவம் கொண்டது. ஆகவே அவர் ஆதிகவி என்று அழைக்கப்படுகிறார். அவரது வைஷ்ணவ ஜனதோ என்ற பாடல் காந்திக்கு மிகவும் பிடித்தமானது.

தலஜாவில் 1414இல் ஒரு பிராமணக்குடும்பத்தில் பிறந்த நர்சிங் மேத்தா பின்னர் இன்று ஜுனாகட் என்று அழைக்கப்படும் ஜினதுர்க் நகருக்குச் சென்றார். அவர் எட்டுவயது வரை பேசமுடியாதவராக இருந்தார் என்றும் கண்ணனின் அருள்பெற்றுப் பேசவும் பாடவும் ஆரம்பித்தார் என்றும் சொல்லப்படுகிறது. 1429இல் நரசிங் மேத்தா மேனகாபாயை மணந்தார்.

இல்லறத்தில் சலித்துக் காட்டுக்குச்சென்று தங்கிய நரசிங் மேத்தா அங்கே சிவலிங்கமொன்றைக் கண்டடைந்து பூஜைசெய்தார் என்றும், சிவன் தோன்றி அவரை பிருந்தாவனத்துக்குக் கொண்டுசென்று கண்ணனின் ராசலீலாவைக் காணும்படிசெய்தார் என்றும் சொல்கிறார்கள். அவர் பிருந்தாவனத்திலேயே தங்கி, கிட்டத்தட்ட இருபதாயிரம் பக்திப்பாடல்களை எழுதினார்.

அதன்பின் நரசிங் மேத்தா தன் ஊருக்கு வந்தார். ஜூனாகட்டில் வறுமை நிறைந்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். அவருக்கு இரு குழந்தைகள் பிறந்தன. குன்வாபாய் என்ற மகளும் சியாமள்தாஸ் என்ற மகனும் பிறந்தார்கள்.

நரசிங் மேத்தா அன்றைய சாதியமைப்புக்கு எதிரானவராக இருந்தார். பெண்களுடன் ராஸநடனமாடுவதும் வழக்கம். ஆகவே அவர் ஜூனாகட்டின் வைதிகர்களால் வெறுக்கப்பட்டார். ஆனால் அவரது இசைப்பாடல்கள் எளிய மக்களிடையே பிரபலமடைந்தன. அவை நாடோடிப் பாடகர்களால் பாடப்பட்டு குஜராத் முழுக்க பரவின. நரசிங் மேத்தா 1481 வாக்கில் இறந்திருக்கலாமென்று சொல்லப்படுகிறது.

உச்சிமலைக்குச் சென்று சேர்ந்தோம். அங்கிருந்து பார்க்க சுற்றிலும் இருந்த பிரம்மாண்டமான சமவெளி பச்சைக்கடலாகத் தெரிந்தது. அதன் மேல் வெள்ளிமழை போல வெயில் பொழிந்துகொண்டிருந்தது. தூரத்தில் இரு மலைகள் மண்மேடுகள் போலத் தெரிந்தன. நடுவே சிறிய அணை, கைக்குட்டையைப் போட்டு வைத்தது போல. அதன் பின்னால் ஒரு நீர்த்தேக்கம், ஒரு நீலப்புடவைத்துண்டு போல. கொளுத்தும் மதிய வெயிலிலும் நடுக்கும் குளிர்.

கீழே நேமிநாதர் ஆலயமும் சுற்றியிருந்த கோயில்களும் மேகங்களின் கடலலைகளில் மிதக்கும் கப்பல் தொகுதிகள், படகுக்கூட்டங்கள் போலத் தெரிந்தன. வானில் ஒரு தெய்வீக நகரம். மெய்மறக்கச்செய்யும் காட்சி.

மலையுச்சிக்கோயில்கள் சிறியவை. சிவன், காலபைரவன், காளி, துர்க்கை போன்ற தெய்வங்களுக்காக சாமியார்கள் அவர்களே கட்டிக்கொண்டவை போலத் தோன்றின.  பலவகையான சாமியார்கள் அங்கே குகைகளைத் திருத்திச் செய்த சிறு குடியிருப்புகளில் நிரந்தரமாக வசிக்கிறார்கள். பலர் நல்ல சௌகரியமாகவே வீடுகளைக் கட்டி வைத்திருந்தார்கள். சாய்வுநாற்காலிகள், எரிவாயு அடுப்புகள் கண்ணுக்குப்பட்டன.

உச்சிமலையில் நின்றபோது அடுத்த மலை கண்ணுக்குப்பட்டது. மேலும் ஆயிரம் படிகள். ஆனால் மிக அற்புதமான ஒரு இடம் அது. இந்த மலைச்சிகரத்தில் இருந்து ஒரு பெரிய அந்தரப்பாலம் போல மலைஉச்சியால் ஆன நீட்சி அந்தச் சிகரம் நோக்கிச் சென்றது. பத்தடி அகலமான ஒரு கருங்கல்படிப்பாதை.

அது தொங்குபாலம் போலவே மேலேறி அந்தச் சிகரத்தை அடைந்தது. ஏணியில் ஏறுவது போல செங்குத்தாக ஏற வேண்டும். மேலே ஒரு சிறிய காளி கோயில். அங்கிருந்து பார்த்தபோது அடுத்த சிகரம் தெரிந்தது. ஏறலாம் எனத் துணிந்தவர் கடலூர் சீனு மட்டுமே. மற்றவர்கள் மௌனமாகத் தலை குனிந்து இருந்தார்கள்.

அந்த மலைச்சிகர உச்சியில் இருந்து நான் கண்டது என் வாழ்க்கையில் கண்ட மிக அழகிய இயற்கைக்காட்சிகளில் ஒன்று. ஒளி பரவிய பெருங்காடு, மலைத்தொடர்கள் நடுவே பச்சை ஏரி போல நிறைந்து கிடந்தது. ராஜாளிப்பருந்துகள் எங்களுக்கு வெகு ஆழத்தில் வட்டமிட்டன, அவற்றின் முதுகை நாங்கள் பார்த்தோம். கீழே ஒரே வீச்சில் கிர்நார் ஊரையும் ஜூனாகட் நகரையும் பத்துப்பதினைந்து கிராமங்களையும் காணமுடிந்தது.

பின்னர் மலை இறங்க ஆரம்பித்தோம். மேலே ஏறிவர ஐந்தரை மணிநேரம். கீழே இரண்டு மணிநேரத்தில் இறங்கி வந்தோம். வந்து சேர்ந்ததும் ஏற்பட்ட நிறைவுணர்ச்சி, நம் எல்லைகளை நாம் மீறும் போது அடையப்பெறுவது. ஒரு வகையில் நம்மை அறிதல்.

மேலும்…

படங்கள் இங்கே

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 16 – பலிதானா, ஹஸ்தகிரி, தலஜா
அடுத்த கட்டுரைஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை – கடலூர் சீனு