அருகர்களின் பாதை 16 – பலிதானா, ஹஸ்தகிரி, தலஜா

நேற்று இரவு கொஞ்சம் பிந்தித்தான் பலிதானா வந்து சேர்ந்தோம். லோதலில் இருந்து பலிதானா வந்த சாலை அற்புதமானது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்த வயல்வெளி. கோதுமைப்பயிர் மென்மையாக வளர்ந்து காற்றில் அலையடித்தது. நெல்வயல்களின் அலைக்கும் இதற்கும் பெரிய வேறுபாடுண்டு. கோதுமைப்பயிர் மென்மயிர்ப்பரப்பு போன்றது. அலைகளும் சன்னமானவை

வயல்களுக்கு அப்பால் தொடுவானத்தருகே பனி பெரிய பட்டுத்திரைபோல தொங்க அதற்கு அப்பால் பிரம்மாண்டமான செஞ்சூரியன். பாலைவன சூரியனை இங்கேயே பார்ப்பது போல ஒரு பிரமை. நான்கு பக்கமும் நிலவெளியின் எல்லைகள் வெண்பனித் திரையால் மூடப்பட்டவை போல் இருந்தன. செவ்வொளி சிந்தி ஊறி வெண்பனிப்படலத்தில் பரவிக்கொண்டிருந்தது.

சபர்மதி ஆறு கடலில் கடக்கும் இடத்தில் விரிவான பின்தேக்கநீர் ஏரிகள். அவை கோடையில் உலர்ந்து உப்புப் பூத்துக் கிடந்தன. உப்பை சும்மா சுரண்டிக் குவித்து வைத்திருந்தனர். குஜராத் இன்றும் இந்தியாவின் உப்பு உற்பத்தியில் மையமான இடம் வகிக்கிறது. காந்தி இந்தப்பகுதியைச்சேர்ந்தவர் என்பதனால்தான் உப்புசத்யாக்கிரகத்தை அவரால் கற்பனைசெய்யமுடிந்ததுபோலும்.

காற்றில் நல்ல குளிர் இருந்தது.இருள் படிந்து நிழல்கள் அதில் கரைந்துகொண்டே இருந்தன. எந்நேரமானாலும் பலிதானா சென்று தங்கிவிடுவதென முடிவெடுத்து வந்துகொண்டே இருந்தோம். பலிதானாவுக்கு வந்தபோது இரவு ஒன்பது மணி. ஒரு திகம்பர சமண மடத்தில் இடம் கொடுத்தார்கள். அறையில் தங்கியதுமே நான் பயணக்குறிப்புகளை எழுத ஆரம்பித்தேன்.

இந்தக்குறிப்புகளை முழுமையான பயணக்கட்டுரை எனறு சொல்லமுடியாது. பயணக்கட்டுரைகள் பயணம் முடிந்தபின்னர் குறிப்புகளைக்கொண்டு விரிவாக எழுதப்படுபவை. பயணக்குறிப்புகள் பயணம் நிகழும்போதே எழுதப்படும் அன்றாடப் பதிவுகள் மட்டுமே. இந்த வகைக் குறிப்புகளை அச்சு ஊடக காலத்திலேயே பார்க்கமுடியும் என்றாலும் இணையம் வந்தபின்னரே இவை இந்த அளவுக்குச் சாதாரணமாகி உள்ளன.

வாசகர்கள் பயணம் செய்பவர்களின் கூடவே செல்லும் உணர்வை அடைவதே இதன் முக்கியமான சாதக அம்சம். எதிர்மறை அம்சம் என்றால் பயணக்களைப்புடன், தங்குமிடம் சரியாக இல்லாத காடுகளிலும் மேடுகளிலும் அமர்ந்து எழுதவேண்டும் என்பது. இணைய வசதி கிடைப்பது இன்னும் கடினம். ஆனால் 2008இல் நாங்கள் செய்த இந்தியப்பயணத்தை இன்றுள்ள வசதிகள் கூட இல்லாமல் செய்தபோதும் அன்றன்று பதிவுசெய்ய முடிந்தது.

இக்குறிப்புகளை மேலும் விரிவான தகவல்களுடன் பிழைகள் திருத்திப் பயணக்கட்டுரை நூலாக ஆக்கலாமென நினைக்கிறேன். பொதுவாக ஒரு பயணம் முடிந்தபின்னர் அந்நினைவுகளில் தோய்ந்து எழுதும்போது சிறுசிறு தகவல்கள், சாதாரண அனுபவங்கள் எல்லாம் முக்கியமாக ஆகிவிடும். அப்போதுதான் பயணக்கட்டுரையின் அழகும் அதிகரிக்கும்.

ஆனால் உடனடிப்பதிவுகள் வேறு ஒருவகையில் முக்கியமானவை, உடனடியாக எவை உள்ளத்தில் பதிகின்றன என்று பார்க்கலாம் இல்லையா? சிந்தித்து அறியும் புரிதல்களை விட உடனடி மனப்பதிவுகள் மேலும் ஆழ்மானவையாக இருக்கக்கூடும். இப்படி ஒன்று இருக்கட்டுமே என்றும் தோன்றுகிறது

இக்குறிப்புகளைப் பலசமயம் அரைத்தூக்கத்தில்தான் எழுதுகிறேன். ஏனென்றால் எங்கள் பயணம் மிகமிக நெருக்கமான நிகழ்வுகளால் ஆனது. ஒரு நாளில் மூன்று ஊர்கள். சாதாரணமாக இருநூற்றைம்பது கிமீ தூரம் வரை கார்ப் பயணம். அதிகாலை எழுந்து குளித்து இருள்பிரியும் முன்னரே கிளம்பினால் இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்குத்தான் தங்குமிடம் அமைந்து அமர முடியும். நண்பர்கள் பெட்டிகளைக் கார் மேல் இருந்து அவிழ்த்துக் கொண்டு வருவதற்குள் நான் குளித்துவிடுவேன். நண்பர்கள் சாப்பிடச்செல்லும்போது நான் எழுதிக்கொண்டிருப்பேன். எனக்குப் பழங்கள் வாங்கிவருவார்கள். கூடுமானவரை பதினொரு மணிக்குத் தூங்க நினைப்பேன், ஆனால் பெரும்பாலும் பன்னிரண்டு ஆகிவிடும்.

பலிதானா அறையில் லோதல் பதிவை எழுதி முடிக்கையில் எல்லாரும் தூங்கி விட்டிருந்தார்கள். இரண்டு அறை எடுத்திருந்தோம். ஒன்றில் மூவர், ஒன்றில் நான்குபேர். வினோத் உரக்கக் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார். நான் எழுதி முடித்தபின் கழிப்பறைக்கு நடக்கும்போது ஒரு வினோதமான உணர்ச்சிக்கு ஆளானேன். லோதலில் உள்ள உறைகிணறு சட்டென்று நினைவுக்கு வந்தது. அந்த உறைகிணறை எங்கோ பார்த்திருப்பது போல, அதில் நீர் இறைத்துக் குளித்திருப்பது போல. அந்த இரவில் ஒரு பதற்றம் ஏற்பட்டது.

காலையில் நாலரைக்கு எழவேண்டும் என நினைத்தாலும் ஐந்தரைக்குத்தான் முடிந்தது. முதலில் தூங்கி எழுபவர் சீனுதான். ‘எதுக்குசார் நடுவாலே ராத்திரின்னு ஒன்னு வருதுன்னு இருக்கு’ என்று அடிக்கடி சொல்வார். அவர் தமிழக எல்லை தாண்டுவது இதுவே முதல்முறை. ’இதுவரையிலான ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஒரே மூச்சா வாழுற மாதிரி இருக்கு’ என்பார். எப்போதும் ஒரு பரவச நிலை.

ஆரம்பத்தில் காட்சிகளின் தாக்கத்தால் இரவுகளில் தூக்கமில்லாமல் அவதிப்பட்டார். எழுந்து அமர்ந்து சத்தம்போடுவார். மூச்சிளைப்பார். அழுவார்இப்போது மெல்லப் பழகிவிட்டது. புறவுலகை இழந்து கனவிலேயே வாழக்கற்றுக்கொண்டுவிட்டார்.

பலிதானா கோயிலுக்குக் காரில் சென்றோம். தங்கியிருந்த மடத்தில் இருந்து இரு கிலோமீட்டர் தொலைவில்தான் மலை. ஆனாலும் அந்த நடையை மிச்சம் பண்ணலாமென நினைத்தோம். ஒரு குஜராத்தி சமணர் காரில் இடம் கேட்டு ஏறிக்கொண்டார். அவர் பலமுறை வந்தவர்.அவர் வழிசொல்ல இருள் படர்ந்த குளிர்ந்த காலையில் பலிதானாவின் மலை அடிவாரத்தை அடைந்தோம்.

நான் பலிதானா ஆளில்லாத தனித்த கோயில்வெளியாக இருக்குமென நினைத்திருந்தேன். மாறாகப் பரபரப்பான ஒரு கடைவீதி பலிதானா மலைக்குக் கீழே இருந்தது. ஆனால் டீ காப்பி ஏதும் இல்லை. சமணர்கள் காலையில் எதுவுமே சாப்பிடாமல்தான் மலை ஏறி இறங்குவார்கள். டோலிகளில் ஆட்களைத் தூக்கிச்செல்லும் தொழிலாளர்கள், கூட்டம் கூட்டமாகக் காத்திருந்தார்கள்.

மூங்கில் கழிகளைப் பதினைந்து ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். திரும்பக் கொண்டு வந்து கொடுத்தால் பத்துரூபாய் திரும்பக் கிடைக்கும். கழிகள் தேவைப்படும், ஏனென்றால் பலிதானா மலையுச்சிக்குச் செல்ல மூவாயிரத்து முந்நூற்று முப்பத்தாறு படிகள் ஏறிச்செல்லவேண்டும். அதை முன்னரே கூகுளில் பார்த்திருந்தோம் என்றாலும் படிகள் செங்குத்தாகச் செல்வதைக்காண கொஞ்சம் பீதியாகத்தான் இருந்தத

கிளம்பியதில் இருந்து அனேகமாக தினமும் மலை ஏறிக்கொண்டே இருப்பதனால் ஏறுவது பழகிவிட்டிருந்தது. ஆனாலும் பலிதானா ஏறுவது பெரிய விஷயம்தான். படிகளில் ஏற ஆரம்பித்தோம். மேலே பார்க்கக்கூடாது, படிகளைக் கணக்கிடக்கூடாது. ஏறிக்கொண்டே இருந்தால் போய்விடலாம்.நுரையீரல் உடைவதுபோல விம்ம, மூச்சு இழுத்து தொண்டை வலிக்க, காதுகளிலும் மூக்கிலும் வெம்மை கொதிக்க கொஞ்சநேரம் நின்று இளைப்பாறவேண்டும். மீண்டும் ஏற வேண்டும். நுரையீரலை ஒவ்வொரு கணமும் உணரும் ஒரு பயணம்.

மூச்சிரைத்து வியர்வை வழிய கூலியாட்கள் மெல்ல வழிகோரியபடி டோலிகளில் முதியவர்களைச் சுமந்து மேலே சென்றனர். சமணர்கள் மிருகங்கள் மீது ஏறுவதில்லை, மனிதர்கள் மேல் ஏறுவார்கள். ஏனென்றால் மனிதர்களுக்கு அதைச்செய்யவேண்டாம் என முடிவெடுக்கும் உரிமை உண்டு.அறத்தாறிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’ என்ற குறள் நினைவில் தட்டுப்பட்டது.

மலையில் டோலிகளில் ஆட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் தொழிலாளர்களில் பெண்களை இப்போதுதான் பார்க்கிறேன். பல்லக்கின் தண்டைத் தலையில் வைத்து சுமந்து செல்கிறார்கள். அவர்கள் குண்டாக உறுதியாக இருந்தனர். மலைகளிலும் பலாஇவனங்களிலும் வாழ்ந்து பழகிய தலைமுறைகள்.

அந்தக்காலையில் வெண்ணிற ஆடை அணிந்து கூட்டம் கூட்டமாக சமணர்கள் மலையேறினர். அருகநாமத்தை மெல்லியகுரலில் வாழ்த்திப் பாடியபடி. வயதானவர்களை இளைஞர்களான பிள்ளைகளும் பேரர்களும் ஏந்திக் கொண்டு சென்றார்கள். வழக்கமாக மலை ஏறும் சமணத் துறவிகள் சரசரவென ஏறிச்சென்றார்கள். அவர்களின் கெண்டைக்கால்கள் மலையை நன்கறிந்திருந்தன

நிறைய சமணப் பெண்துறவிகளைக் கண்டோம். நாரினால் ஆன தூரிகையும் கப்பரையும் கையில் ஏந்தி சுருக்குப்பாவாடை போன்ற கீழுடையும் சல்வாரும் அணிந்து முந்தானையை முக்காடாகப் போட்டு வாயை மூடிக்கொண்டு மேலே சென்று திரும்பிக்கொண்டிருந்தார்கள். அதிகமும் ஸ்வேதாம்பரர்கள். இங்கே திகம்பரர்கள் குறைவு. நாங்கள் ஒரு திகம்பரத் துறவியையும் காணவில்லை.

ஏறிச்செல்லும் பயணத்தில் முதலில் மலைமேல் உள்ள கோயில்களை பார்ப்பது ஒரு பரவசமூட்டும் அனுபவம். நான் சின்னவயதில் எங்கள் ஊர் ஆனைப்பாறை மேல் படுத்து மேகங்களைப்பார்ப்பதில் பித்துள்ளவனாக இருந்தேன். மேகங்கள் மீது பளிங்கினால் ஆன மாளிகைகள் கொண்ட நகரங்களை என்னால் பார்க்க முடியும். அவை ஒளிகொண்டு மின்னி மிதந்து நிற்கும். செவ்வொளியில் சிவப்பு மாளிகைகளாக ஆகும். அதேபோன்ற காட்சி.

மேகங்களற்ற நீலவானுக்குக் கீழே ஒரு பளிங்கு நகரம். பலிதானாவின் இந்தக் குறிப்பிட்ட மலையில் மட்டும்எண்ணூற்று ஐம்பது கோயில்கள் உள்ளன. சின்னஞ்சிறு கோயில்கள், பிரம்மாண்டமான கோயில்கள். பளிங்குக்கோயில்களின் கொத்து. ஒரு குழந்தைக்கற்பனைக்கு முல்லைமலர்ச்செண்டு எனத் தோன்றியது

பளிங்கின் ஜாலம். வானில் கூடிய மேகக்குவைகள் போல. பனிப்புகையில் வடிக்கப்பட்ட மாளிகைகள் போல. மலைக்குச் சூட்டப்பட்ட வெள்ளி மணிமுடி போல. செவ்வொளியில் செந்நிறக்கோயில்களின் சிகரங்கள் எரியும் கனல்கள் போல் சுடர் விட்டன. காற்றில் தழல்போல கொடிகள் படபடத்தன. பொற்கலசங்கள் தாலிக்குண்டுகள் போல மின்னிக்கொண்டிருந்தன. எங்கோ ஒரு மாயநகரை உருவாக்கச்சென்ற மயனின் சேனைகள் ஒரு கைப்பிடி அள்ளிக் கீழே போட்டுச்சென்றனர் போலும்!

பலிதானாதான் இந்தியாவில் சமணர்களின் முதன்மை முக்கியத்துவம் உடைய தலம். கிமு மூன்றாம் நூற்றாண்டுமுதலே இருந்துவந்த இந்நகரம் காலப்போக்கில் அழிந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. கிபி பதினொன்றாம் நூற்றாண்டில் இந்தக் கோயில்களை சோலங்கி வம்சத்து மன்னர் குமாரபாலர் மீண்டும் கட்டி எழுப்பினார். ஆனால் பதினான்காம் நூற்றாண்டிலும் பதினைந்தாம் நூற்றாண்டிலும் இஸ்லாமியப் படையெடுப்பாளர்களால் தொடர்ந்து இந்த மலைமேல் இருந்த ஆலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன .

கடைசியாக 1656இல் முகலாய மன்னர் முராத் பக்‌ஷ் அவர்களிடமிருந்து இந்த நிலத்தை சாந்திதாஸ் ஜாவேரி என்ற சமணப் பெருவணிகர் விலைக்கு வாங்கினார். 1730 வரை இங்குள்ள ஆலயங்கள் தொடர்ச்சியாகக் கட்டப்பட்டன. 1730இல் ஆனந்த்ஜி கல்யாண்ஜி டிரஸ்ட் என்ற அமைப்பு இந்த ஆலயங்களின் பொறுப்புக்கு வந்தது. அதன் பின் மேலும் நூற்றுக்கணக்கான கோயில்கள் கட்டப்பட்டன.

இதுதான் உலகிலேயே மிகப்பெரிய ஜைனக் கோயில்வளாகம். சத்ருஞ்சயா என்பது இந்த மலையின் ஒட்டுமொத்தமான பெயர். இதைச்சுற்றிக்கொண்டு சத்ருஞ்சயா என்ற ஆறு ஓடுகிறது. அதில் கட்டப்பட்ட அணையால் அந்த ஆறு ஒரு பிரம்மாண்டமான ஏரியாக மாறி மலையை மூன்று பக்கங்களிலும் சூழ்ந்துள்ளது. சத்ருஞ்சயா மலையில் மட்டும் 3507 கோயில்கள் உள்ளன. பெரும்பாலானவை வெண்ணிற சலவைக்கல்லால் ஆனவை. இக்கோயில்கள் அனைத்துக்கும் செல்ல படிகள் பிரிந்து பிரிந்து செல்கின்றன. மொத்தக் கோயில்களையும் பார்த்து வர எட்டாயிரம் படிகள் ஏற வேண்டும்.

மேலே செல்லச்செல்லக் கீழே சூழ்ந்துகிடந்த நீலநீர்வெளி காலை ஒளியில் மின்னி ஜொலிக்க ஆரம்பித்தது. இந்தப்பயணத்திலேயே மிக அழகிய புலரிச்சித்திரம். செம்பழுப்பு நிறமான மண் ஒரு பெரும் பொன்னகை. அதில் பதிக்கப்பட்ட நீலக்கல் அந்த ஏரி. பார்க்கப்பார்க்க மனம் பொங்கிக்கொண்டே இருந்தது. மனதின் விசித்திரம், அன்றுவரை கண்ட அத்தனை சிற்பங்களும் ஓவியங்களும் மனிதக் கற்பனை என்ற அசட்டு முயற்சியின் சான்றுகள் என்ற எண்ணம் வந்து விட்டது.

மலைமேல் செல்லும் சமணர்கள் அங்கே வெண்ணிறமான பூஜை உடை வாங்கி அணிந்துகொண்டு பூசைப்பொருட்களுடன் உள்ளே சென்றார்கள். பலிதானா கோயிலில் எங்கும் உணவு அனுமதிக்கப்படுவதில்லை, குழந்தைகளுக்குக் கூட. தண்ணீர் மட்டும் கிடைக்கும். ஆகவே அனைவரும் அதற்கெல்லாம் சித்தமாகவே வந்திருந்தனர். துன்பங்களைப்பொறுத்துக்கொள்வது சமணர்களின் நோன்புகளில் முதன்மையானது.

பலிதானாவின் மையக்கோயில் குன்றின் உச்சியில் உள்ளது. இது ஆதிநாதரின் ஆலயமாகும். கடந்த ஆயிரமாண்டுகளாக இந்தக் குன்றின் மீது சமணர்கள் கோயில்களைக் கட்டி நிறைத்தபடியே இருக்கிறார்கள். அவை ஒன்றில் இருந்து ஒன்று முளைத்தவை போல, ஒரு வெள்ளைக்கோழியின் வெண்குஞ்சுக்கூட்டங்கள் போல, வெண்ணுரைப்பெருக்கு போல அந்த மையக்கோயிலைச் சுற்றிப் பெருகிக் கிடந்தன.

இந்தக் கோயில்கள் எல்லாமே நுட்பமான கலையழகுடன் சலவைக்கல்லில் செய்யப்பட்டவை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தந்தத்தாலான சிறிய பொம்மைகளின் குவியல்போலுள்ளன இவை. சோலங்கி வம்சத்தின் குமாரபால மன்னரும் விமல்ஷாவும் சம்ப்ரிதிராஜாவும் கட்டியவை இக்கோயில்களில் பல. குமாரபால ராஜா இக்கோயில்களைக் கட்டுவதை ஆரம்பித்து வைத்தார் எனலாம். 11 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து இன்றுவரை இங்கே கோயில்கள் கட்டப்பட்டபடியே இருக்கின்றன. இடிக்கப்பட்டவற்றை உடனடியாக மீண்டும் கட்டுவது சமணர்களின் வழிமுறை.

சித்திரை மாதம் இங்கே திருவிழா. அன்று பல்லாயிரம் மக்கள் இங்கே குழுமுகிறார்கள். சென்றமுறை பன்னிரண்டுலட்சம் பேர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த மலையில் இருபத்தேழாயிரம் சமண தீர்த்தங்கரர் சிலைகள் உள்ளன. இக்கோயில்களையும் சிலைகளையும் தனித்தனியாகப் பார்ப்பது சாத்தியமே அல்ல. ஒட்டுமொத்தமான ஒரே பார்வையில் அக் காட்சிவெளியை உள்வாங்கியபடி பித்தெடுத்து சுற்றிவருதல் மட்டுமே சாத்தியம்.

ஆதிநாதரின் கோயில் கஜுராஹோவின் காந்தரிய மகாதேவர் கோயில் அளவுக்கே பெரியது. அதே போன்ற சிகரமாலிகை என்னும் கோபுரவடிவம். அதாவது சிறிய கோபுரங்களைக் குவித்துக்குவித்து கோபுரத்தை உருவாக்கியது போன்ற அமைப்பு. காலை வெயில் ஏறி விட்டது. நாங்கள் இரண்டரை மணிநேரத்தில் ஏறி வந்துவிட்டிருந்தோம். வெயிலில் கோபுரம் வெள்ளித்தேர் போலப் பல்லாயிரக்கணக்கான அதிநுட்பமான சிற்பங்களுடன் ஜொலித்தது. ஆனாலும் காற்று நடுக்கும் குளிர் கொண்டிருந்தது.

சமணர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒருமுறையேனும் இந்தக் கோயிலுக்குச் சென்றாகவேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. சமணர்களின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர். இவர் ஆதிநாதர் என அழைக்கப்படுகிறார். சமண மதநம்பிக்கையின்படி இவர்தான் மக்களுக்கு விவசாயம் செய்யவும் மிருகங்களைப் பழக்கவும் சொல்லித்தந்தவர். இவர் ஹரப்பா நாகரீக காலகட்டத்தில் வாழ்ந்தவர் எனக் கருதும் ஆய்வாளர் உள்ளனர். இவரது அடையாளமான ரிஷபம்-காளை, சிந்து சரஸ்வதி காலகட்டத்துச் சின்னம். நம்பிக்கைகளின்படி ரிஷபதேவர் அரசாண்ட இடங்களில் ஒன்று இந்த மலை.

மலைக்குமேல் எவரும் இரவு தங்க அனுமதிக்கப்படுவதில்லை. மலைக்குமேலே அங்கார் பாபா என்ற சூபியின் சமாதி உள்ளது. அதுவும் சமணர்களால் வழிபடப்படுகிறது. சில பர்தா அணிந்த இஸ்லாமியப் பெண்கள் மலைமேல் ஏறிச்செல்வதைக் கண்டோம்.

மலையில் இறங்கி வந்தபோது பன்னிரண்டு மணி. கொலைப்பசி. ஆனால் அங்கே பொரி போன்ற ஒரு மிக்சர் அல்லாமல் எதுவுமே கிடைப்பதில்லை. தர்மசாலைகள் நிறைந்த ஊரில் உணவுக்கு எவரும் வருவதில்லை போலும். நாங்கள் எங்கள் அறைக்குத் திரும்பி பெட்டிகளைக் காரில் கட்டிக்கொண்டு கிளம்பினோம். செல்லும் வழியிலேயே மதிய உணவு உண்டோம். ஐம்பது ரூபாய்க்கு வயிறு நிறைய சப்பாத்தி சோறு தயிர். காரிலேயே களைப்பில் கிருஷ்ணனும் ராஜமாணிக்கமும் தூங்கி வழிந்தார்கள்.

சத்ருஞ்சயா மலையின் மறுபக்கம் இருந்த மலை ஹஸ்தகிரி. ஆனந்த்ஜி கல்யாண்ஜி டிரஸ்ட் சார்பில் இந்த மலையில் அதிபிரம்மாண்டமான ஒரு சமண சலவைக்கல் ஆலயம் கட்டப்படுகிறது. நல்லவேளையாக மலையுச்சி வரை செல்ல சாலை உள்ளது. செல்லும் வழியில் சத்ருஞ்சய் நீர்த்தேக்கத்தைப் பார்த்தபடியே சென்றோம். இந்நிலம் முன்பு பாலையாக இருந்திருக்கலாம். இன்று இது இந்த நீர்த்தேக்கத்தால் செழிப்புற்றிருக்கிறது.

இந்தத் தலம் ஆதிநாதரின் முதல்மகன் பரதனால் கட்டப்பட்டது என்று சமண வரலாறு சொல்கிறது. பரதனின் பாதத் தடம் கோயிலுக்குள் உள்ளது என்கிறார்கள். பரதனின் இளையவன் தான் பாகுபலி.நெடுங்காலம் சிறு ஆலயமாகப் பழுதடைந்து கிடந்த ஆலயம் இப்போது கட்டி சீரமைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது, மேலும் நூறுகோடி ரூபாய் செலவாகலாம்.

நாங்கள் பார்த்ததிலேயே மிகப்பிரம்மாண்டமான சமண ஆலயம் இதுவே. கட்டி முடிக்கப்பட்டால் இந்தியாவிலேயே பெரிய சமணஆலயமாகவும், இந்தியாவிலேயே பெரிய சலவைக்கல் கட்டிடமாகவும் இது இருக்கும். சிற்பக்கலையின் நேர்த்தியில் இந்தக் கோயில்முன் தாஜ்மகாலை ஒரு குழந்தைவிளையாட்டு என்றுதான் சொல்லவேண்டும். இங்குள்ள சிலைகள் ஒவ்வொன்றும் சலவைக்கல் என்ற ஊடகத்தின் உச்சகட்ட சாத்தியத்தை வெளிப்படுத்துபவை. கண்ணாடிபோல இறுகிய உயர்தர சலவைக்கல். மிகமிக நுட்பமான செதுக்குகள் கொண்ட சிலைகள். மொத்தக் குன்றின் உச்சியையும் வளைத்துக்கொண்ட மாபெரும் வளாகம்.

நான்கு முகம் கொண்ட கோயில். நான்கு பக்கமும் அதிபிரம்மாண்டமான வளைவுக்கூரை கொண்ட மண்டபங்கள். அவற்றைச்சுற்றி இரண்டு அடுக்குகளாக சுற்று மண்டபங்கள். மையத்தில் பிரம்மாண்டமான கருவறை. அதில் நான்கு பக்கமும் திறக்கும் வாசல்களில் நான்கு ஆதிநாதர் சிலைகள். படிகள் ஏறி மாடிக்குச் சென்றால் அதேபோன்ற சுற்றமைப்பு.

படானைச்சேர்ந்தவரும் மும்பையின் பெருவணிகருமான மறைந்த காந்திபா மணிபாய் இந்தக்கோயிலுக்கு நூறுகோடிக்கும் மேல் செலவிட்டிருக்கிறார். இக்கோயிலைக் கட்டும் பெரும்பணியைத் தொடங்கி முன்னெடுத்தவர் அவரே. கலையின் தூய மனநிறைவையும் மனித முயற்சி சார்ந்த பிரமிப்பையும் நம் சுயம் சார்ந்த சிறுமையுணர்வையும் ஒரே சமயம் உருவாக்கக்கூடியது இக்கோயில்.

உண்மையில் சென்றகாலக் கலைக்கோயில்களைப் பார்க்கையில் இனி இதுபோல சாத்தியமா என்ற ஏக்கம் எழும். அவற்றைவிடவும் மேலான, மகத்தான கலைப்படைப்புகளை நம் தேசத்துக் கலைஞர்களால் இன்றும் உருவாக்கமுடியும் என்பதற்கான கண்கூடான ஆதாரம் இக்கோயில். இதற்கிணையான ஓர் ஆலயத்தை ஏன் தென்னாட்டில் நம்மால் உருவாக்கமுடியவில்லை என்றும் தோன்றியது.

மாலை மூன்று மணிக்குக் கிளம்பினோம். எங்கள் அடுத்த இலக்கு தலஜா. ஜூனாகட் செல்லும் வழியில் சத்ருஞ்சயா நதியும் சரிதா நதியும் கலக்கும் முனையில் அமைந்துள்ள அதிபுராதனமான நகரம் இது. இந்நகர் நடுவே சித்தாசலம் என்ற குன்று உள்ளது. இது இரண்டாயிரமாண்டு பழைமை கொண்ட ஒரு சமணப் பல்கலைக் கழகம். மலை சேற்றுப்பாறையால் ஆனது. அந்தப்பாறைகளில் குடையப்பட்ட முப்பது குகைகள் உள்ளன. எல்லாமே அகலமான கல்விக்கூடங்களும் தங்கும் அறைகளும். சிற்பங்கள் ஏதும் இல்லை. பெரும்பாலான குகைகள் காலப்போக்கில் இடிந்து சரிந்து விட்டன.

கம்பி வேலி கட்டப்பட்ட பாதைகள் வழியாக குகைகளைச் சென்று பார்த்தோம். காலையில் அத்தனை படிகளை ஏறியமையால் மேலும் மலை ஏறுவது சிரமமாக இருக்குமென நினைத்தோம். மாறாக அப்படி மலை ஏறியதனாலேயே மேலும் ஏறுவது எளிதாக இருந்தது. கற்குகைகள் இருண்டு கிடந்தன. அங்கே இருந்த அந்த கல்விச்சாலையைக் கற்பனையில் உருவாக்கிக்கொள்ள முடிந்தது.

குகைகள் மகத மன்னரான சம்பிரதியின் காலத்தில் குடையப்பட்டவை. இந்தக் குன்றின் மேல் குமாரபால மன்னர் கட்டிய சுமதிநாதரின் ஆலயம் இருந்தது. அது இடிக்கப்பட்டது. பின்னர் இன்னொரு கோயில் பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அருகே பார்ஸ்வநாதருக்கு இன்னொரு கோயில் உள்ளது.

இடிந்த இக்கோயில்களை இப்போது சலவைக்கல்லில் எடுத்துக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். குஜராத்தின் வளர்ச்சியால் உடனடியாக நிகழ்வது இந்த ஆலயப்புதுப்பித்தல்தான் எனத் தோன்றியது . கீழே ஒரு குகையை துர்க்கை ஆலயமாக ஆக்கியிருந்தார்கள். சில பக்தர்கள் தென்பட்டனர். மலை விளிம்பில் நின்று சூரிய அஸ்தமனத்தைப்பார்த்தோம். பனியின் வெண்பட்டுத் திரை மஞ்சளாகி, செம்மையாகி இருண்டு கொண்டே இருந்தது.

முடிந்தவரை ஜூனாகட் பாதையில் செல்ல முடிவெடுத்தோம். வழியில் எங்காவது தங்கலாம் என ஒரு சின்ன ஊரில் நிறுத்தி, இங்கே ஓட்டல் உண்டா எனக் கேட்டோம். ஓட்டல் இல்லை, காந்தி ஆசிரமம் உள்ளது, அங்கே தங்கலாம் என்றார் வழிப்போக்கர். காந்தி ஆசிரமம் எளிமையான வசதிகளுடன் பெரிதாக இருந்தது. ஆச்சரியமாகக் குழாயில் வெந்நீர் வந்தது. ஆனந்தமாகக் குளித்தபின் இன்றைய குறிப்புகளை எழுத ஆரம்பித்தேன்.

மேலும்…

படங்கள் இங்கே

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 15 – அகமதாபாத்,லோதல்
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 17 – கிர்நார்