சீனு – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

கடலூர் சீனு எழுதிய கடிதங்கள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக தெருவெங்கும் தெய்வங்கள் . அதில் தகப்பன் சாமி பகுதி சிறந்த சிறுகதையாகவே அமைந்திருந்தது.

“சில நாள் முன் ஒரு குழந்தை தொலைந்து போனதைப்பற்றி எழுதியிருந்தேன். மஞ்சுளா. அவளது ஒன்றரை வயதுக் குழந்தையின் பெயர் கங்கா தேவி.” என்ற ஆரம்பத்தைப் படித்து அதிர்ந்து விட்டேன். பலப்பல அனுமானங்களின் சாத்தியங்களின் பாய்ச்சலில் மனம் தத்தளித்தது. இதனை சீனு ஒரு சிறுகதையாகவே மாற்றி அமைக்கும்படி அவரிடம் நீங்கள் தான் சொல்ல வேண்டும். சீனுவின் அடுத்த கடிதம் இந்த நிகழ்வை விரிவாக விளக்கியிருந்தாலும் அந்த ஒரு வரியை படித்த உடன் என்னால் பாதிக் கதையை யூகிக்க முடிந்தது. அந்த வரி கதையின் முடிவில் வந்தால் அபாரமான திருப்பமாகி சிறந்த சிறுகதையை அமைக்கும். சீனுவின் எல்லா கடிதங்களும் நல்ல சிறுகதையின் வடிவத்திலேயே அமைகின்றன.

பி.கு
பின்னால் வந்த சீனுவின் கடிதங்களைப் படித்தால் என்ன ஆசாமி சாமியாராகி விடுவாரோ என்னும் சிறு பயமும் தோன்றுகிறது. சீனு இலக்கியம் படைக்க பார்ஸ்வநாதரை வேண்டிக் கொள்ளலாம் . உங்கள் அருமையான பயணக் கட்டுரைகளை தினமும் படித்து வருகிறேன். புகைப்படங்கள் சிறப்பாக உள்ளன. பாறைகள் கலைடாஸ்கோப் போல பலப்பல ரூபங்கள் கொண்டு உருமாறுகின்றன. கலர் இல்லாத கலைடாஸ்கோப் இந்த அளவு அழகாக அமையுமா என்ன. வண்ணமிருந்தால் பாறைகளின் ஆன்மா இவ்வளவு அழகாக
வெளிப்பட்டிருக்காது. பல யுகங்கள் கழிந்தாலும் இந்தப் பாறைகளே நவீன தொழில்நுட்பத்தையும் தாண்டி மனித குலத்தின் இருத்தலுக்கு சாட்சியாக இருக்கப் போகின்றன என்று தோன்றியது.

அன்புடன்

சிவா – ஹியூஸ்டன்

அன்புள்ள ஜெ,

சீனுவின் “அடிமை மானுடம்” கடிதம் படித்து முடித்தவுடன் எழுந்த பதட்டம் இன்னும் அடங்கவில்லை.கடலூருக்கு மிக அருகில் புதுவையில்தான் நெடுங்காலம் வாழ்ந்து வந்தேன், மீனவர் சண்டைகளைப் பற்றி நண்பர்களின் வழி நிறைய கேட்டறிந்திருக்கிறேன். ஆனாலும் சீனு விவரித்த மனித வாதை கொடுங்கொலையின் உக்கிரம் நிஜமாகவே உலுக்கி எடுத்து விட்டது. இன்றைய இரவின் உறக்கத்தை விழுப்புரத்திலிருந்து வந்த அந்த இளம் பெண்ணுக்கும் மீனவ தம்பதியினருக்கும் கணிக்கையாக்குகிறேன், வேறென்ன செய்ய முடியும்?

-ரா.சு.

பி.கு: சீனுவின் எழுத்தின் உக்கிரம் மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது இக்கடித்தத்தில் ஒரு நேர்மையான எழுத்தாளனுக்குரிய பேரன்புடன்..

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
இன்று (19 .01 .12 ) வலைத்தளத்தில் வந்த திரு.சீனு அவர்கள் எழுதிய ‘தாய் எனும் நிலை’ படித்தேன். உள்ளபடியே ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’ என்பதற்கு ஏற்றாற்போல் அவரின் கட்டுரை இருந்தது. குறிப்பாக இந்த வரிகள்
‘முள்கரண்டியில் மிஞ்சிய நூடுல்ஸ் போல அலங்கோலமாய் விழுந்து கிடந்தாள் ஓர் ஊனமுற்ற பெண்’
‘விரிந்த கரங்களில் காலமெல்லாம் விழுந்து கொண்டிருக்கிறது என்றும் மீளமுடியாத நம் இம்சைகள்.’
“நீ திடீர்னு கௌம்பிட்டியா, வரவரைக்கும் உன்வாசனை இருக்கட்டுமேன்னு விட்டுட்டேன்.”
மாளும் இவ்வுடல் கொண்டு இப்புவியில் நாம் எய்தவந்ததுதான் என்ன?

உண்மையிலேயே கலக்றார் சீனு.

அன்புடன்
அ.சேஷகிரி,
ஆழ்வார்திருநகரி.

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 23 – ரணக்பூர், கும்பல்கர்