முந்தையநாள் தாமதமாகத் தூங்கியமையால் காலையில் நன்றாக விடிந்தபின்னர்தான் எழமுடிந்தது. வட இந்தியாவின் குளிர்காலத்திற்குரிய இளமஞ்சள் வெயில். ஆனால் குளிர் எஞ்சியிருந்தது. எழுந்ததும் குளிக்காமல் உடனே கிளம்பினோம். விடுதிக்குக் கீழே இருந்த தமிழ் ஓட்டலில் தாங்கமுடியாத டீ கொடுக்கப்பட்டதாக கிருஷ்ணன் சொன்னார். லாரி ஓட்டுநர்களுக்கான இடம். அவர்களுக்குத் தரத்தைவிட அளவே முக்கியம்.
சூரத்துக்கு வழிகேட்டதும் ஒருவர் முன்வந்து விரிவாக விளக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு இடத்திலும் வழிகாட்டும் பொறுப்பை ஒருவர் சிரமேற்கொண்டு வழிகாட்டி மேலதிக தகவல்களும் அளிப்பதுண்டு. போதையில் இருந்தாரென்றால் அன்பை மீறித்தான் வண்டியை நகர்த்தமுடியும். எங்குமே அக்கறை இல்லாமல் அல்லது தவறாக எவரும் வழி காட்டவில்லை. எங்களுக்கு இந்தி தெரியாதென்பதைக்கூட எவரும் பொருட்டாக நினைக்கவுமில்லை.
சூரத் நகருக்கு வெளியே கும்பாரியா என்ற ஊருக்குத்தான் முதலில் சென்றோம். ஆனால் நாங்கள் போகவேண்டிய கும்பாரியா வேறு. அது கட்ச்சில் இருக்கிறது. ஆகவே நகருக்குள் நுழைந்தோம்.
குஜராத் இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்று என்பது யதார்த்தம். ஓர் உடலின் ஆரோக்கியம் நகங்களிலும் கண்களிலும் உதடுகளிலும் தெரியும் என்பார்கள். ஓர் ஊரின் பொதுவான பொருளியல் நிலையை சில அம்சங்களைக்கொண்டு ஊகிக்கப் பயணிகளால் முடியும். ஒன்று, சாலைகள் மற்றும் சாலையோரக்கடைகள். இரண்டு, புறநகர்களின் கட்டிடங்கள். மூன்று, வாகனப்போக்குவரத்து மற்றும் வாகனங்களில் செல்லும் பொருட்கள். பொருளியல் நிலை வளரும்போது கட்டுமானமும் போக்குவரத்துமே முதல் எழுச்சியை அடைகின்றன.
சூரத் சாலை சர்வதேசத்தரமுள்ள நான்குவழிப்பாதை. சாலையோரத்தில் இத்தனை உயர்தர உணவகங்களைத் தொடர்ச்சியாக எந்த இந்திய மாநிலத்திலும் கண்டதில்லை. ஆனால் அசைவ உணவுண்பவர்கள் அலையவேண்டியதுதான். பொதுவாக எங்கும் சைவ உணவுதான். ஓர் உணவகத்தில் மதிய உணவை உண்டோம். தரமான உணவு, சென்னையை விட விலைகுறைவுதான்.
குஜராத்தின் இப்பகுதி நதிகளாலும், சர்தார் சரோவரின் கால்வாய்களாலும் வளமானது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை கரும்பு வயல்கள். சாலைகளில் பெருஞ்சுமை ஏற்றிய கரும்புலாரிகள். பல இடங்களில் கரும்பு வெட்டிய பின் வயல்களில் தீயிட்டிருந்தார்கள். சாலையில் கரி பறந்து விழுந்து கொண்டிருந்தது, காக்கைச்சிறகுத் தூவிகள் போல.
சூரத் பிரம்மாண்டமான நகரம். உண்மையில் அது இவ்வளவு பெரிய நகரம் என நான் நினைத்திருக்கவில்லை. கடந்த இருபதாண்டுக்காலத்தில்தான் இந்நகரம் இவ்வளவு பெரிதாக உருவாகியிருக்க வேண்டும். புத்தம்புதிய கட்டிடங்கள். மாபெரும் அடுக்குமாடிக் கட்டிடவரிசைகள். குஜராத்தில் நிலத்தின் விலை உச்சத்துக்குச் சென்றிருக்க வேண்டும். தனிவீடுகளை விட அடுக்குமாடி வீடுகள் அதிகமாக உருவாகிக்கொண்டிருந்தன. பெங்களூர் புறநகரில் செல்லும்போது இது இந்தியாதானா என்ற பிரமிப்பு ஏற்படும். அதை இங்கும் உணர முடிந்தது.
சூரத் நகரில் பல சமணக்கோயில்கள் உள்ளன. பெரும்பாலானவை புதியவை. சூரத் இந்தியா முழுக்க அதன் துணிகளுக்காக அறியப்படுகிறது. தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலான சமணர்கள், சூரத்தைத் தாய் வீடாகக் கொண்டவர்களோ அல்லது சூரத்தில் வணிகத்தொடர்பு உடையவர்களோதான். எல்லா சமண ஆலயங்களையும் பார்க்கவேண்டாம் என முடிவெடுத்தோம். பொதுவாகவே நகரங்களைத் தவிர்த்துவிடுவதென்பது எங்கள் திட்டம்.
சூரத்தின் முக்கியமான சமணக் கோயில் என சிந்தாமணி சமணக் கோயிலைச் சொல்லலாம். இது ஒரு ஸ்வேதாம்பர் கோயில். வழி விசாரித்து சுற்றி அங்கே சென்று சேர்ந்தோம். சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட ஒரு யானைச்சிற்பம் வாசலில் இருந்தது. கோயிலுக்குரிய அமைப்பு ஏதும் இல்லாத கோயில், ஒரு கட்டிடம். உள்ளே சென்று பார்க்க அனுமதி கேட்டோம். அங்கிருந்த பொறுப்பாளர் ஒருவரை எங்களுக்கு வழிகாட்டியாக அனுப்பினார்.
சிந்தாமணி பஸதியில் உள்ள நுட்பமான மரச்செதுக்கு வேலைகள் மிக அழகானவை.முதல் முறையாக இப்பயணத்தில் மரச்செதுக்கு வேலைகளைப் பார்க்கிறோம். இந்தக்கோயிலைக் கட்டிய சோலங்கி வம்சத்து மன்னர் குமாரபாலரின் சித்திரமும் அருகே ஆச்சாரிய ஹேமச்சந்திரரின் ஓவியமும் இருந்தன. மரச்சிற்பங்களில் எல்லாத் தீர்த்தங்கரர் முன்னாலும் குமாரபால மன்னர் காவலுக்கு நிற்பது போல செதுக்கப்பட்டிருந்தது.
ஆச்சாரிய ஹேமச்சந்திரர் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமணமுனிவர். கவிஞர், அறிஞர். இலக்கணம் நன்னெறி தத்துவம் மற்றும் வரலாற்று நூல்களின் ஆசிரியர். கலிகால சர்வக்ஞர் என்று பாராட்டப்பட்டவர்.
குஜராத்தில் அகமதாபாத் அருகே தண்ட்டுக்கா என்ற ஊரில் பிறந்த ஹேமச்சந்திரரின் பெற்றோர் சச்சதேவரும் பாகினிதேவியும். பெற்றோர் போட்ட பெயர் சந்திரதேவர். சமண மடமான மதோரா தீர்த்தம் இவர் பிறந்த இடமருகே உள்ளது. இளமையிலே சமணத்துறவியாக அந்த மடத்தில் சேர்ந்த ஹேமச்சந்திரர், சோமச்சந்திரர் என்ற பேரில் அறியப்படலானார். அவர் அங்கே அனைத்துக் கலைகளையும் கற்றார். இருபத்தொன்றாம் வயதிலேயே ஸ்வேதாம்பர சமணர்களின் குருவாக அறியப்படலானார்.
அப்போது குஜராத்தை சோலங்கி வம்சம் ஆண்டு வந்தது. சோலங்கி மன்னர் மூல்ராஜருக்கு குருவாக ஆனார் ஹேமச்சந்திரர். பின்னர் அவர் மகன் குமாரபாலருக்கு குருவானார். இக்காலகட்டம் குஜராத்தின் பண்பாட்டு மறுமலர்ச்சியின் காலம் என அறியப்படுகிறது. தாரங்காவில் உள்ள சமண ஆலயத்தை ஹேமச்சந்திரர் குமாரபாலரின் உதவியுடன் கட்டினார். சமணமதம் குஜராத்தின் அதிகாரபூர்வ மதமாக அறிவிக்கப்பட்டது.
ஹேமச்சந்திரர் பிராகிருதத்திலும் சம்ஸ்கிருதத்திலும் நிறைய நூல்களை எழுதினார். அவரது காவியமான திரிஷாலக புருஷா சரித்ரா [அறுபத்துமூன்று புனிதர்களின் வரலாறு] சம்ஸ்கிருதத்தின் முக்கியமான நூலாகும். சமண மதத்தின் புனிதர்கள் என அறுபத்துமூன்று முனிவர்கள் கிபி நான்காம் நூற்றாண்டு முதலே குறிப்பிடப்படுகிறார்கள். அதையொட்டித்தான் சைவர்களும் அறுபத்துமூன்று நாயன்மார்களின் கதைகளைத் தொகுத்துக்கொண்டார்கள். சைவர்களின் அறுபத்துமூவர் உற்சவங்களும் செப்புத்திருமேனிகளும் சமணர்களைப் பின்பற்றி உருவாக்கப்பட்டவைதான்.
சிந்தாமணி பஸதியில் உள்ள மரச்செதுக்குவேலைகளுக்குக் கண்ணாடிக் காப்பு போடப்பட்டுள்ளது. அது நல்ல விஷயம் எனத் தோன்றியது. கிட்டத்தட்ட நாநூறு வருடத்தொன்மை கொண்ட இந்த மரச்செதுக்குகள் சரியாகப் பேணாவிட்டால் நீடிக்க வாய்ப்பில்லை.
சூரத்தைத் தாண்டி மதியம் மூன்று மணிக்கு தாபோய் வந்தோம். தாபோய் ஒரு குட்டி நகரம். ஆனால் மிகத்தொன்மையானது. தர்பாவதி என அழைக்கப்பட்ட புராதன நகரம் இது. கிபி ஆறாம் நூற்றாண்டில் இது அமைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. சோலங்கி வம்ச மன்னரான சித்தராஜ் ஜெய்சிங் இங்கே ஒரு கோட்டையைக் கட்டியிருந்தார்.கோட்டையின் எச்சங்கள் இன்னும் உள்ளன.
அந்தக்கோட்டையின் அழகிய வாசல் மட்டும் நகர்முகப்பில் உள்ளது. தொல்பொருள் துறையால் வேலியிட்டுப் பாதுகாக்கப்படுகிறது. நுணுக்கமான சிற்பவேலைகள் கொண்ட கோட்டைவாசல். சிற்பங்களில் முதல்முறையாக வட இந்தியாவில் நான் துதிக்கையும் யானைமுகமும் கொண்ட யாளியைப் பார்த்தேன்.
கிர்னாரில் கிடைத்த சமணக் கல்வெட்டுகளில் தாபோய் முக்கியமான சமணத் தலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நகரை உருவாக்கிய சித்தராஜ் ஜெய்சிங் 1094 முதல் 1143 வரை பதானைத் தலைநகரமாக் கொண்டு ஆண்ட முக்கியமான சோலங்கி வம்சத்து மன்னர். சித்தராஜ் ஜெய்சிங்கின் கதை நாடகத்தனமானது. அவரது தந்தை பீமதேவ் இளமையிலேயே இறந்தார். பீமதேவின் இளையராணியின் பிள்ளைகள் அரசுரிமைக்காகப் போராடினர். அவர்கள் சித்தராஜ் ஜெய்சிங்கைக் கொலைசெய்ய முயன்றார்கள். ஜெயசிங்கின் அம்மா மினால்தேவி அவரது அமைச்சர் சந்து தளபதி முஞ்சல் மேத்தா ஆகியோர் அவரைக் காத்து நாட்டை ஒற்றுமையாக வைக்கக் கடுமையாகப் போராடினார்கள்.
ஜெய்சிங்கின் உயிரைக்காப்பாற்றுவதற்காக அவரது அன்னை சோமநாதபுரத்துக்குத் தீர்த்தாடனம் செய்கிறேன் என்று சொல்லி அவரை அழைத்துக்கொண்டுசௌராஷ்டிரத்துக்குச் சென்று ஒளிந்திருந்தார். பதானை அவர் தளபதியின் பொறுப்புக்கே விட்டுவிட்டார். இளவயதிலேயே எதிர்ப்புகளை வெற்றிகொண்டு ஜெய்சிங் பதவிக்கு வந்தார். இந்த வரலாறு அங்கே இன்னும் பாடப்படும் வீரகதையாக உள்ளது. மாளவத்தையும் சௌராஷ்டிரத்தையும் வென்று சோலங்கி வம்சத்து மன்னர்களில் முதன்மையானவராக ஆனார் ஜெய்சிங்.
சித்தராஜ் ஜெயசிங், ஜூனாகட்டை வென்ற கதை ஒரு வீரகதைப்பாடலாகப் பாடப்படுகிறது. சித்தராஜ் ஜெய்சிங், ரானக்தேவி என்ற இளவரசியை மணக்க விழைந்தார். ஆனால் அவளை ஜூனாகட் மன்னர் ராஜா கென்கார் மணந்தார். ரானக்தேவி மேலுள்ள காதலால் ஜூனாகட்மேல் படைஎடுத்துச் சென்ற ஜெய்சிங் ஜூனாக்கட்டை வென்று மன்னரைப் போரில் கொன்றார். ஆனால் அரண்மனைக்கு வந்த ஜெய்சிங்கை ரானக்தேவி ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் உடன்கட்டை ஏற விரும்பினார். ரானக்தேவியைக் கட்டாயமாக வாத்வான் என்ற ஊருக்கு ஜெய்சிங் கூட்டிவந்தார். ஆனால் உடன்கட்டை ஏறுவதில் அவர் பிடிவாதமாக இருக்கவே வேறுவழியில்லாமல் காதலிக்கு ஜெய்சிங்கே சதி ஏற்பாடுகளைச் செய்தார். அவள் இறந்த வாத்வான் நகரில் ஒரு சதிமாதா ஆலயத்தையும் கட்டினார்.
1973ல் ரானக்தேவி என்ற பேரில் இந்தக்கதை இந்தியிலும் குஜராத்தியிலும் திரைப்படமாக வந்துள்ளது. ரானக்தேவியின் சாபத்தால் போகாவோ என்ற ஆறு அன்றுமுதல் இன்றுவரை எப்போதுமே நீரில்லாமல் வறண்டதாக ஆகிவிட்டது என்று அங்கே நம்பிக்கை உள்ளது.
ஜெய்சிங் சமணமத்தைப் பேணியவர். நிறைய சமண ஆலயங்களை அமைத்திருக்கிறார். சோலங்கி வம்சத்தைசேர்ந்த குமாரபாலர் சமண மதத்தைத் தழுவி சமண மதத்தைத் தன்னுடைய அதிகாரபூர்வ மதமாக அறிவித்தார். அவர்தான் சூரத்தின் சிந்தாமணி ஆலயத்தை அமைத்தவர். ஜெய்சிங்கின் காலகட்டம் குஜராத்தின் பொற்காலம் என அறியப்படுகிறது.
தாபோய் நகரில்தான் குஜராத்தி மொழியின் முக்கியமான கவிஞரான தயாராம் வாழ்ந்தார். குஜராத்தி மொழியில் கர்பி என்று அழைக்கப்படும் பக்திப்பாடல்களை அவர் எழுதினார். குஜராத்தின் மத்தியகால கவிஞர் என அழைக்கப்படும் தயாராம் புஷ்டிமார்க்கத்தைச் சேர்ந்தவர். தயாராம் முப்பெரும் பக்திக்கவிஞர்களில் ஒருவர் என்று அழைக்கப்ப்டுகிறார். நரசிங் மேத்தா, மீரா ஆகிய இருவரும் பிறர்.
தயாராம், சானோட் என்ற ஊரில் 1777ல் பிறந்தவர். அவர் சைவக் குடும்பத்தில் பிறந்தாலும் வைணவராக ஆகி புஷ்டிமார்க்கத்தைத் தழுவினார். கிருஷ்ண ராதா லீலையை வர்ணித்து பக்திரசம் நிறைந்த பாடல்களை எழுதியிருக்கிறார். தயாராம் மணம் செய்துகொள்ளவில்லை. தன்னை ராதையாகவும் கிருஷ்ணனை மணமகனாகவும் கற்பனைசெய்து வாழ்ந்தார் என்கிறார்கள். ஆனால் வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் ரத்தன் சோனாராம் என்ற விதவை அவரை கவனித்துக்கொண்டார் என்பது வரலாறு. பஜனைசம்பிரதாயம் மூலம் தயாராம் பிரபலமானார். அவர் ஹவேலி சங்கீதத்தில் நிபுணர். 13 மொழிகளில் அவர் பாடல்களை எழுதியிருக்கிறார். 1853ல் தயாராம் இறந்தார்.
தாபோய் இன்றும் ஒரு முக்கியமான சமணப் புண்ணியத் தலமாக உள்ளது. நாங்கள் சென்ற பகுதியில் உள்ள பெரும்பாலான கட்டிடங்களுக்கு நூறு வருடம் பழைமை இருக்கும். பல கட்டிடங்களை இடித்து வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பகுதி சில வருடங்களில் அடையாளம் தெரியாமல் முற்றாக மாறிவிடக்கூடும். பழைய கட்டிடங்கள் அமைந்த இடுங்கலான தெருவழியாக நடந்தோம். காசியின் சில பகுதிகள் இப்படித்தான் பழைமை தேங்கிக் கிடக்கும்.
இங்கே ஆறு சமண ஆலயங்கள் இன்றுள்ளன. அவற்றில் லோதான் பார்ஸ்வநாதர் ஆலயம் முக்கியமானது. ஆனால் அது பூட்டிக்கிடந்தது. அருகே உள்ள ஸ்வேதாம்பர் ஜெயின் மடாலயத்துக்குச் சென்று திறந்து காட்டமுடியுமா என்று கேட்டோம். மடாலயப் பொறுப்பாளர் எங்களை உள்ளே அழைத்துத் தேநீர் தந்து உபசரித்தார். அவர் பெயர் ஷா. வெண்ணிறமான பைஜாமா குர்தா அணிந்திருந்தார். வங்கியில் பணிபுரிந்த பின் இப்போது வணிகம் செய்கிறார். அவரே வந்து ஆலயத்தைத் திறந்து காட்டினார்.
அந்த ஆலயம் பற்றிய கதையைச் சொன்னார். ஒரு சமணத் துறவி மழைக்காலத் தங்குதலுக்காக அந்நகருக்கு வந்தார். அது இடிபாடுகளாகக் கிடந்தது. ஓர் இடிந்த வீட்டில் தங்கியபோது அவரது வழிபாட்டுக்காக சாணியையும் மணலையும் குழைத்து ஒரு பார்ஸ்வநாதர் சிலை செய்தார். அச்சிலையை அவர் திரும்பிச்செல்லும்போது ஒரு கிணற்றில் போட்டுவிட்டார். நான்கு வருடம் கழித்து அவர் தாபோய்க்குத் திரும்பி வந்தார். அன்றிரவு ஒரு கனவில் நான் அதே கிணற்றில் இருக்கிறேன் என தீர்த்தங்கரர் சொன்னார். ஊராரைக் கூட்டி சிலையை மீட்டெடுத்தார். அதுவே ஆலயத்தில் உள்ள பார்ஸ்வநாதரின் சிலை.
அச்சிலை துருப்பிடிக்காத இரும்பாலானது. இரும்பாலான சிலைகள் சமண மதத்தில் மிகக்குறைவு. நான்கே நான்கு சிலைகள்தான் உள்ளன என்கிறார்கள். அது அந்தக் கிணற்றில் கிடந்து வளர்ந்து இரும்பாக ஆகியது என நம்புகிறார்கள். இரும்பு பார்ஸ்வநாதர் என்ற பொருளிலேயே லோதான் பார்ஸ்வநாதர் என அழைக்கப்படுகிறார். சோலங்கி மன்னர் அச்சிலையை ஆளில்லா மாட்டு வண்டியில் வைத்து ஓடச்செய்ய, அது வந்து நின்ற இடத்தில் அக்கோயிலை அவர் கட்டியதாகக் கதை.
பெரும்பாலான சமணத் தலங்களில் உள்ள வழக்கமான வரலாறுதான். மூன்று அல்லது நான்கு அழிவுக்காலகட்டங்கள் அவற்றுக்கு இருக்கும். அவை அனேகமாக ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் சமணம் முக்கியத்துவம் இழக்கப்பட்டபோது கைவிடப்பட்டுக் கிடக்கும். மீண்டும் கண்டெடுக்கப்பட்டுக் கட்டப்படும்.
பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டில் சுல்தானிய முகலாய ஆட்சிக்காலத்தில் இடிக்கப்பட்டுக் கைவிடப்பட்டு மீண்டும் நவீன காலகட்டத்தில் கண்டெடுக்கப்படும். அவை மீட்டெடுக்கப்பட சமணத் துறவியர் காரணமாக இருப்பார்கள்.அவர்களுக்கு தீர்த்தங்காரர்களே கனவில் வந்து அவர்கள் இருக்குமிடத்தைச் சொல்வார்கள்.
சோலங்கி வம்சம் முகலாயர்களால் அழிக்கப்பட்டபின்பு நீண்ட இடைவேளைக்குப்பின் சமீபகாலமாகவே இந்தக் கோயில் மீண்டும் கட்டப்பட்டுள்ளது. இப்போது சாதாரணமாக சுதையில் ஒரு பங்களா வடிவில் உள்ளது. அடித்தளம் பழையது. அங்குதான் பார்ஸ்வநாதர் சிலை உள்ளது. அடித்தளத்தின் உட்பகுதியில் இப்போதுதான் சலவைக்கல் தூண்களுடன் அலங்காரமான கருவறையும் முகமண்டபமும் கட்டப்படுகின்றன. ஒன்றரைக்கோடி ரூபாய் அதுவரை செலவிட்டிருப்பதாகச் சொன்னார் ஷா.
ஒரு தூணில் சலவைக்கல் மீது வண்ண அலங்காரம் செய்ய ஐம்பதாயிரம் வரை ஆவதாகச் சொன்னார். சிற்பிகளும் ஓவியர்களும் ஒரிசாவில் இருந்து வருவதாகக் குறிப்பிட்டார். ஆச்சரியமாக இருந்தது. சலவைக்கல் வேலைகள் குஜராத்திலும் ராஜஸ்தானிலும் அதிகம். ஆனால் நெடுங்காலம் மரபு அறுபட்டுவிட்டமையால் அங்கே சிற்பிகளும் கலைஞர்களும் இல்லாமலாகிவிட்டனர்.
நான்கு மணிக்கு அங்கிர்ய்ந்து கிளம்பினோம். நீங்கள் தர்மஸ்தலாவில் தங்கி நாளைக்குச் செல்லலாமே என்று சொன்னார் ஷா. உணவுக்கும் ஏற்பாடு செய்வதாகச் சொல்லி உபசரித்தார். இல்லை நாங்கள் பெரிய திட்டம் வைத்திருக்கிறோம் என்று சொல்லி விடைபெற்றுப் புறப்பட்டோம்.
அதிவேக சாலையில் பறந்து அகமதாபாத் சென்றோம். பிரம்மாண்டமான புறநகர்களில் சென்ற பத்தாண்டுகளில் கட்டப்பட்ட, இன்னும் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் மட்டும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிருக்கும் என்று பட்டது. உலகமெங்கும் இருக்கும் குஜராத்திகள் இங்கே முதலீடு செய்கிறார்கள்.
சாலைக்குக் குறுக்காக ஒரு பெரிய கால்வாய் சென்றது. அதில் இறங்க வேண்டுமென்றால் பல கிமீ முன்னால் சென்று சுற்றி ஒரு சிற்றூருக்குள் இறங்க வேண்டும். கால்வாயைப்பார்த்துவிடுவது என்று முடிவு செய்தோம். அங்கே சென்று அஸ்தமன சூரியனைப் பார்த்தபடி நடந்தோம். நீல நீர் சுழித்தோடும் கால்வாயில் இறங்கிக் குளித்தோம். அகமதாபாத் புறநகரிலேயே ஒரு விடுதியில் தங்கினோம்.
மேலும் …