ராஜா ரவிவர்மா

அன்புள்ள ஜெ,
நண்பர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவரது வீட்டில் இரண்டு படங்கள் மாட்டியிருந்தது. ராஜா ரவிவர்மாவின் ஓவிய நகல்கள். ஒன்று சரஸ்வதி, மற்றது லக்ஷ்மி. இந்த ஓவியங்களைப் கூர்ந்து கவனித்தால் ஓவியர்கள் அதன்மூலம் சொல்லவருவது புரியும் என்று நண்பர் விளக்கினார். சரஸ்வதியை கல்லில் அமர்ந்திருப்பதுபோலவும், லக்ஷ்மியை தாமரைமேல் நிற்பதுபோலவும் வரைந்திருப்பார் ராஜா. கல்வி கல்லைப்போல நிலையானது, செல்வம் என்பது அசையும் நீரில் மெல்லிய தண்டின்மேல் பூத்த பூவில் நிற்பதுபோல நிலையில்லாதது, அதிஜாக்கிரதையாக கைகொள்ளவேண்டியது. அதிலும், சரஸ்வதி கால்மீது கால்போட்டு அமர்ந்திருப்பார், லக்ஷ்மி நின்றிருப்பார். இதுவும் ஒரு குறியீடெனவே தோன்றுகிறது. கடவுளர்களில் தக்ஷினாமூர்த்தியும், சரஸ்வதியும் மட்டுமே கால்மேல் கால்போட்டு அமர்ந்து பார்த்திருக்கிறேன். அதுவும் குறியீடுதானோ என்னவோ. கடவுள்களிலேயும் குரு தான் சிங்கம் போல.
-ராம்
அன்புள்ள ராம்

ரவிவர்மா அவரது ஓவியங்களை இரு மூலங்களில் இருந்து பெற்றுக்கொண்டார். ஒன்று டச்சு ஓவியர்கள். பதினாறாம் நூற்றாண்டு முதலே திருவிதாங்கூர் அரண்மனையில் டச்சு ஓவியர்கள் இருந்திருக்கிறார்கள். டச்சு– வெனிஸ்- ஓவியங்களின் ஒளியமைப்பு  வர்ணக்குழப்பு [குறிப்பாக எண்ணைச்சாயம்] ஆகியவற்றை அவர் கற்றுக்கொண்டார். அவரது புராண உருவகங்கள் அன்று பிரபலமாக இருந்த பார்ஸி நாடகங்களில் இருந்து பெறப்படவை. பார்ஸி நாடகங்கள் அவர்களுக்கு முன்னோடியாகக் கொண்டது ஐரோப்பிய இசைந் ஆடகங்களை. ஆக அவரது இரு ஊற்றுமே ஐரோப்பியத்தன்மையில் இருந்துதான். அவர் நம் கோயில் சிற்பங்களையோ சுவரோவியங்களையோ முன்னுதாரணமாகக் கொள்ளவில்லை. ஆனால் அவர் மனதில் நம் புராணங்களின் ஐதீகங்களும் குறியீடுகளும் ஆழ வேரூன்றியிருந்தன. ஆகவே அவை குறியீட்டுத்தன்மையில் அசலானவையாக இருந்தன

ரவி வர்மா பற்றி பிற்பாடு விரிவாக ஒரு கட்டுரை எழுத எண்ணம் இருக்கிறது
ஜெ
முந்தைய கட்டுரைதிருவண்ணாமலை
அடுத்த கட்டுரைChicken a la Carte – குறும்படம்