பின்நவீனத்துவம் ஒரு கடிதம்

அன்பு ஜெயமோகன்,
பின்நவீனத்துச் சிந்தனைகளின் காரணமாகத்தான் விளிம்புநிலை மக்கள் மீதான கவனம்
பரவலாக்கப்பட்டது என்னும் உங்கள் கூற்றை இன்னும் சற்று விவரித்து கூற இயலுமா?

பொதுவாக பின்நவீனத்துவம் குறித்து தேவையற்ற வெறுப்பு உமிழப்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட இலக்கிய கோட்பாடுகள் நமக்குத் தேவையில்லை என்றொரு கருத்தும் நிலவுகிறது. சிறுகதை, நாவல் போன்ற இலக்கிய வடிவங்களும் இறக்குமதி செய்யப்பட்டவையே. இந்திய மரபில் அவை கிடையாது. எனில் இலக்கியம் ஏதோவொரு நிலையில் தேங்கிக் கிடப்பதற்கு மாறாக இவ்வகையான சலனங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் அது விரும்பத்தக்கதுதானே?
[எழுத்தும் எண்ணமும் குழும விவாதம்]
அன்புள்ள சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு

பின் நவீனத்துவம் என்றால் ஒருவகை எழுத்து முறை என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இது தமிழில் உருவாக்கப்பட்ட ஒரு தவறான புரிதல். அரைகுறையாகப் புரிந்து கொண்டவர்களால் முன்வைக்கப்பட்டது- படுவது

நவீனப் போக்குவரத்து, நவீனத் தகவல் தொழில்நுட்பம், தொழிற்சாலை சார்ந்த உற்பத்திமுறை, பொதுக்கல்வி ஆகியவை உருவான பிறகுள்ள காலகட்டத்தை நவீன காலகட்டம் என்கிறர்கள். இக்காலகட்டத்து இலக்கியமே பொதுவாக நவீன இலக்கியம் . பொதுவாக நவீன என்ற சொல்லால் சுட்டப்படுவது இதுவே [மாடர்ன்]

நவீன காலகட்டம் முதிர்ந்த நிலையில் உருவான சில பொதுவான சிந்தனைப்போக்குகளைக் குறிக்க நவீனத்துவம் என்ற சொல்லாட்சியை பயன்படுத்துகிறார்கள் [மாடர்னிசம்] இது ஒரு தத்துவ சிந்தனை அல்ல. ஒரு வலுவான தரப்பு அல்ல. ஒரு எழுத்துமுறை அல்ல. ஒரு பொதுப்போக்கு [டிரெண்ட்] மட்டுமே. நவீனத்துவம் -மாடர்னிசம்- என்ற சொல்லை புதுமை, புதிய காலகட்டம் என்ற பொது அர்த்ததில் பயன்படுத்தலாகாது.

நவீனத்துவம் சில அடிப்படைகளைக் கொண்டது . அது தொழில் நுட்பம் மேல் நம்பிக்கை கொண்டது. தொழில் நுட்பம் உலகை ஒன்றாக ஆக்கும் என்ற நம்பிக்கை அதிலிருந்து பிறக்கிறது. ஆகவே எல்லா சிந்தனைகளையும் உலகளாவியதாக அது காண்கிறது. ஆகவே ஒரு கருத்தை முன்வைக்கும்போது அதை வரலாறு முழுக்க இருப்பதாகவும், உலகம் தழுவியதாகவும் நிரூபிக்க முயல்கிறது. இதையே வரலாற்றுவாதம் என்கிறார்கள். [ஹிஸ்டாரிசிசம்] இப்படி நிறுவ வலிமையான தர்க்கத்தை உருவாக்குகிறது. சரி X தவறு என வகுக்க முயல்கிறது [பைனரி ஆப்போஸிஷன்] இப்படி நிறுவப்பட்ட கருத்தை ஒரு மையக்கருத்தாக நினைக்கும் நவீனத்துவர்கள் தங்கள் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் அம்மையத்தின் அடிப்படையில் அமைக்கிறார்கள்.

இருத்தலியம் [எக்ஸிஸ்டென்ஷியலிசம்] நவீனத்துவ சிந்தனைகளின் முற்றிய நிலை. நவீனத்துவ சிந்தனைகள் மனிதனை மட்டுமே அலகாகக் கொண்டு அனைத்தையும் நோக்கியபோது மனித வாழ்க்கையின் பொருள்/மையம் என்ன என்ற வினா எழுந்து வந்தது. தர்க்கப்பூர்வமாக நோக்கினால் அப்படி ஏதும் பொருளோ மையமோ இல்லை என்றுதானே சொல்ல வேண்டியிருக்கும்? அவ்வெறுமையை உணர்ந்தவன் தன் செயல்களில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் தனிமைப்படுகிறான். அதுவே இருத்தலியல் சொன்ன ‘அன்னியமாதல்’.

நவீனத்துவத் தன்மை கொண்ட இலக்கியம் வலுவான மையக்கரு கொண்டதாக இருக்கும். அக்கருவைத் தர்க்கப்பூர்வமாக நிறுவ முயலும். ஆகவே தெளிவான, செறிவான, ஒருங்கிணைவுள்ள வடிவம் கொண்டதாக இருக்கும். அதற்கேற்ற நுண்மையும், கவனமும் கொண்ட மொழி கொண்டிருக்கும். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் தமிழில் சிறந்த உதாரணங்கள்.

இதற்கு அடுத்த கட்டம் என்று பின்நவீனத்துவத்தைச் சொல்லலாம். நாம் வாழ்வது நவீனத்துவக் கருத்துக்கள்,நம்பிக்கைகள் பலவும் பொருளிழந்துபோன காலத்தில் இதை பின்நவீன காலகட்டம் என்கிறோம். நவீனத்துவம் போலவே பின்நவீனத்துவமும் ஒரு தத்துவ சிந்தனை அல்ல. ஒரு வலுவான தரப்பு அல்ல. ஒரு எழுத்துமுறை அல்ல. ஒரு பொதுப்போக்கு [டிரெண்ட்] மட்டுமே.

தொழில் நுட்பம் மீது சென்ற காலத்தில் இருந்த நம்பிக்கை இப்போது இல்லை என நாம் அறிவோம். தொழில் நுட்பம் மானுடநலன் சார்ந்ததாக இருக்க வேண்டுமென்பதில்லை. அது அதிகாரத்தின் கருவியாக இருக்கலாம். அதேபோல உலகை ஒரேவெளியாக நோக்காமல் அதன் பன்முகத்தன்மையை நோக்க வேண்டுமென்ற எண்ணம் இப்போது உள்ளது. ஆகவே எந்தக் கருத்தையும் வரலாறு முழுக்க உலகம் முழுக்க உள்ளதாக காட்டுவது தேவை இல்லை என இன்று பெரும்பாலான சிந்தனையாளர்கள் எண்ணுகிறார்கள். அப்படிச் செய்யும் வரலாற்றுவாதமானது பெரிய அதிகார மையங்களை உருவாக்கவே உதவுகிறது என்கிறார்கள்.

தர்க்கம் எப்போதும் அதிகார மையங்களை உருவாக்கும் தன்மை கொண்டிருக்கிறது. நமக்குச் சுற்றும் உருவாக்கப்படும் தர்க்க ஒழுங்குகளைக் கூர்ந்து கவனித்து அவற்றில் விடுபடக்கூடிய விஷயங்களை கவனம் செலுத்துவது அவசியம். மையங்களை சார்ந்து அதிகாரமும் வன்முறையும் உருவாகிறது. மையங்களுக்கு வெளியே விளிம்புகளை எப்போதும் கணக்கில் கொள்ள வேண்டும். விடுபடும் விஷயங்கள், மறைக்கப்படும் விஷயங்கள், தோற்கடிக்கப்பட்ட விஷயங்கள் முக்கியமானவை. அவற்றையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும். சரி X தவறு என விஷயங்களை பிரித்து நோக்கலாகாது. ‘மங்கல் பகுதிகள்’ [கிரே ஸ்பாட்] எப்போதும் கவனத்துக்கு உரியவை.

தனிமனிதன் என நாம் சொல்வது ஒருவன் தன்னை அப்படி உணரும் நிலையே. இது கருத்துக்களால் உருவகிக்கப்படும் ஒரு மனநிலை மட்டுமே. ஒருவன் தன்னை தன் சாதியாக உணரலாம். ஒருவன் தன்னை மதத்தின் துளியாக உணராலாம். இதற்கு அப்பால் ஒரு சுயம் மனிதனுக்கு இல்லை என்கிறார்கள் பின்நவீனத்துவ சிந்தனைகள். மனித வாழ்க்கையில் பொருள் என்ன என்ற கேள்வி தேவையே இல்லாதது. மனிதன் எந்தக் கருத்துக்களினால் உருவாக்கப்பட்டிருக்கிறான் என்பதே முக்கியமானது.

எளிமையாகவும் சுருக்கமாகவும் சொன்னால் இவையே பின்நவீனத்துவ சிந்தனைப்போக்கின் அடிப்படைகள். பின்நவீனத்துவம் என்பது வரலாற்றுவாதம், பைனரி ஆப்போசிஷன், இருத்தலியம் ஆகியவற்றுக்கு எதிரானது. விடுதலை, சமத்துவம், உலகநலன் என்றெல்லாம் கூறிய முந்தைய சிந்தனை மையங்கள் உருவாக்கிய அதிகாரக் குவிப்பு மற்றும் வன்முறையை வைத்து நோக்கும்போது பின் நவீனத்துவம் மேலும் ஜனநாயகமானது என்பதை சாதாரணமாக உணரலாம்.

நவீனத்துவ இலக்கியம்’ உலகைப் புரிந்துகொள்ள உதவக்கூடிய கருத்துக்களை’ உருவாக்கியது. அதற்கேற்ற ஆக்கங்களை உருவாக்கியது. பின்நவீனத்துவ இலக்கியம் அக்கருத்துகளையும் படைப்புகளையும் கூர்ந்து ஆராயும் கருத்துக்களையும் படைப்புகளையும் உருவாக்கிவருகிறது. நவீனத்துவம் உலகை பார்த்தது. பின்நவீனத்துவம் உலகை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நம் பார்வை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பார்க்கிறது- இதுவே வேறுபாடு.

ஆகவே வடிவங்களிலும் வேறுபாடு உருவானது. நவீனத்துவ இலக்கியம் ஒருங்கிணைவுள்ள இலக்கியவடிவத்தை உருவாக்கியது என்றால் பின்நவீனத்துவ இலக்கியம் பிரித்து பகுத்து ஆராயும் இலக்கியங்களை உருவாக்கியது. நவீனத்துவ இலக்கியம் ‘வலியுறுத்தும்’ ஆக்கங்களை உருவாக்கியது. பின்நவீனத்துவ இலக்கியம் ‘விவாதிக்கும்’ படைப்புகளை உருவாக்கியது

ஆகவே பின்நவீனத்துவ படைப்பில் தெளிவான மையம், முடிவு ஏதும் இருக்காது. ஒரு மறுபரிசீலனை இருக்கும். அந்த மறுபரிசீலனை அங்கதமாகவோ விவாதமாகவோ வெளிப்படும். நவீனத்துவப் படைப்புக்கு இருக்கும் திடமான ஒருமையுள்ள வடிவம் பின்நவீனத்துவ படைப்புக்கு இருக்காது.

பின்நவீனத்துவப் படைப்பு என்று ‘லேபில்’ ஒட்டப்பட்ட படைப்பு ஏதும் இல்லை. சில நூலாசிரியர்கள் ஒரு ‘இது’க்காக அப்படிச் சொல்லிக் கொள்ளலாம். அது பெரும்பாலும் அசட்டு உரிமைகோரலே. ஒரு படைப்பில் பலவகையில் பின்நவீனத்துவக் கூறுகள் வெளிப்படும்.

தமிழில் சிலர் மேலைநாட்டில் இவ்வாறு பின்நவீனத்துவம் உருவாக்கிய வடிவங்களை அப்படியே செயற்கையாக பிரதிசெய்திருக்கிறார்கள். அவற்றில் சாரம் ஏதும் இல்லை. அதேபோல நக்கலும்,பாலியல்திரிபுகளும்,சிதறிய குறிப்புகள்போன்ற வடிவமும் கொண்டதே பின்நவீனத்துவம் என சிலர் சொல்லிவருகிறார்கள்.இவற்றை வைத்து பின்நவீனத்துவம் என்றாலே பம்மாத்து என்று சொல்லி விடலாகாது.

பின்நவீனத்துவ இலக்கியத்தின் இயல்புகள் பலவகை. நம் பார்வை என்ன என்று பார்க்கும் பார்வை அது என்றேன். பின் நவீனத்துவ நாவல் நாம் நமது வரலாறு என நினைப்பதையே தலைகீழாக புனைந்து காட்டலாம். நம் மதத்தின் மொழி அமைப்பையே மறு ஆக்கம்செய்து காட்டலாம். நமது செவ்விலக்கியங்களை திரும்பி எழுதிப்பார்க்கலாம். ஒரு கரு சார்ந்து நாம் நினைக்கும் எல்லா தரப்புகளையும் ஒரே நாவலில் பேசவிட்டு எந்த மையத்தையும் நிறுவாமல் போகலாம். நாம் அடிப்படைப் படிமங்களாக நினைப்பனவற்றை உடைத்து மீண்டும் அமைக்கலாம்.

கருத்துக்கள் என்பவை மொழியால் உருவாக்கப்படுபவை என்ற நம்பிக்கை பின்நவீனத்துவத்திற்கு உண்டு. அவை நிரந்தரமான கட்டுமானங்கள் அல்ல என அது நம்புகிறது.ஆகவே அது கருத்துக்களையும், மொழியையும் சதுரங்க விளையாட்டாக மாற்றிக்காட்டுகிறது நமக்கு. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நம் இன்றைய தமிழ்ப் படைப்புகளில் பல வகைகளில் பின்நவீனத்துவக் கூறுகள் உள்ளன.

பின் நவீனத்துவம் என்ன அளித்தது? நம் சமூக சிந்தனையில் நாம் எப்போதும் நீதியான,வலிமையான, நடுநிலையான மையம் உருவாக வேண்டும் என்றே எண்ணிக் கொண்டிருந்தோம். மையமளவுக்கே அனைத்து துறைகளிலும் விளிம்புகளும் முக்கியமானவை என்ற எண்ணத்தையே அது உருவாக்கியது. குற்றவாளிகளை திருநங்கைகளை என ‘விளிம்புக்கு தள்ளப்பட்ட’வர்களைப் பற்றிய நம் இன்றைய கவனம் பின் நவீனத்துவ சிந்தனைகளால் உருவாக்கப்பட்டதே. வென்றவர்களின் வரலாறு அளவுக்கே தோற்றவர்களின் வரலாறும் முக்கியம் என நமக்கு கற்பித்தது பின்நவீனத்துவமே. நிறுவப்பட்ட உண்மைகள் அளவுக்கே மறுக்கப்பட்ட உண்மைகளையும் நாம் பரிசீலிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதன் மூலம் உருவானதே. அதை நாம் புறக்கணிக்க முடியாது.

முந்தைய கட்டுரைஆற்றூர்– இரா.முருகன்:கடிதம்
அடுத்த கட்டுரைபின்நவீனத்துவம்- இன்னொருகடிதம்