அருகர்களின் பாதை 12 – எல்லோரா

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தாறில் நான் தன்னந்தனியனாக அஜந்தா எல்லோராவுக்கு வந்தேன். அது ஓர் இந்தியப்பயணம். காசகோட்டிலிருந்து கிளம்பி சென்னைவழியாக குஜராத் சென்று மும்பை வழியாக மங்களூர்சென்று ஊர்திரும்பினேன். அதன்பின் அஜன்ந்தா வருவது இது நான்காவது முறை. சென்றமுறை 2006இல் குடும்பத்துடன் வந்தபோது அஜிதனுக்கு லஸ்ஸி ஒவ்வாமலாகி நாலைந்து நாள் மருத்துவமனையில் படுத்திருக்க நேரிட்டது. அந்த நினைவு இந்த ஊரை அணுகியதுமே வந்தது. இன்னும் சிலமுறை கூட நான் வரக்கூடும். பின் ஒருமுறை நான் இல்லாமலாவேன். இந்த மலைகளும் இந்த குகைகளும் என்றுமிருக்கும்.

காலையில் கிளம்பும்போது முந்தையநாள் விடுதி நிர்வாகி, அருகே உள்ள பஹாட் என்ற மலைமேல் இருக்கும் அருகர்கோயில் செல்லும்படி சொல்லியிருந்தார்.  காலையிலேயே மலை ஏற ஆரம்பித்தோம். காலையில் மாலையேறுவது இயல்பான அன்றாட நடவடிக்கையாகவே ஆகிவிட்டிருந்தது. சொல்லப்போனால் நுரையீரலுக்கு மலை தேவைபப்ட்டது

ஐநூறுபடிகள் இருக்கும். படிகள் நடுவே ஓர் ஆறு அறுத்தோடுகிறது, இப்போது அதில் நீர் இல்லை. காலை, அந்த மலைச்சரிவில் தன்னந்தனியாக, துல்லியமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு பெரிய ஆசி போல, ஒரு மௌனமான இசை போல. சுற்றிலும் குட்டைமரங்கள் கடந்துசென்றகோடைக்குச் சோர்ந்து இலையுதிர்த்து வரப்போகும் மழைக்காகக் காத்து நின்றிருந்தன. சின்னஞ்சிறு குருவிகள் உற்சாகமாக சிறகடித்து எழுந்து அமர்ந்து குதூகலித்தன. மலைகள் பொழிந்த அமைதி எங்கும் தேங்கிக்கிடந்தது.

எல்லோராவிலேயே இருக்கும் இந்த மலையையும் கோயிலையும் நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இது சுற்றுலா வழிகாட்டி நூல்களில் வராது. பலமுறை இங்கு வந்துள்ள ‘தமிழினி’ வசந்தகுமார் கூடக் கேள்விப்பட்டதில்லை என ஃபோனில் பேசியபோது சொன்னார்.சுற்றிச்சுற்றி இந்தியாவெங்கும் செல்கிறோம், நாங்கள் பார்க்கும் அற்புதங்களுக்கு அருகிலேயே பார்க்காத அற்புதங்கள் எவருமறியாமல் கிடக்கக்கூடும்.

மலையுச்சிக்குச் செல்லும்வரை அங்கே என்ன இருக்கும் என எதிர்பார்ப்பில்லாமல்தான் சென்றோம். மேலே களிமண்பாறையில் வெட்டிச்செய்யப்பட்ட இரு பெரிய யானைச்சிலைகள், உண்மையான யானையளவே பெரியவை. அவற்றின் கால்கீழ் மனித அளவுக்குப் பெரிய படைவீரர்கள். பாறைக்கு மேலே குடைவரைக்கோயில்களில் வர்த்தமானர், ஆதிநாதர் சிலைகள்.

பூசாரி வந்து எங்களை அழைத்தார். அவரிடம் நாங்கள் வருவதை நிர்வாகி சொல்லி அனுப்பியிருந்தார். பூசாரி அந்தக் கோயிலின் கதையைச் சொன்னார். ஔரங்கசீப் அந்தக் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கினார். கருவறையில் இருந்த பார்ஸ்வநாதரை இடிக்க முற்பட்டபோது ஔரங்கசீபுக்குக் கண் தெரியாமலாகியது. ஆகவே அது மட்டும் தப்பியது.

பெரும்பாலான சமணக்கோயில்களில் ஏறத்தாழ இதே கதையைச் சொல்கிறார்கள். பெரும்பாலும் எல்லா சமணக்கோயில்களும் பன்னிரண்டாம் நூற்றாண்டுவாக்கில் சுல்தான்களாலும் பின்னர் மொகலாயர்களாலும் இடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஔரங்கசீப் சமணக்கோயில்களை இடிக்க நிரந்தரமான ஆணையையே விடுத்திருந்தார். எதிர்ப்பைத்தெரிவிப்பது சமணர்களின் வழக்கமல்ல. உடனே மீண்டும் கட்ட ஆரம்பிப்பதே அவர்களின் பாணி. ஆனால் இடிக்கப்பட்ட தகவல்களை அவர்கள் மறப்பதில்லை, எல்லாமே தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன.

மேலே புராதனமான குடைவரைக்கோயில் புதியதாகக் கட்டப்பட்டிருந்தது. ஆனால் உறுத்தாமல் கலையழகுடன் செய்திருந்தார்கள். கருவறைக்குள் முப்பதடி உயரத்தில் பார்ஸ்வநாதரின் பெரும் சிலை அமர்ந்திருந்தது. அய்யனின் பாதங்களே தலைக்கு மேலே சென்றன. கம்பீரமான மோனத்தில் அமர்ந்த சிலை. வெளிச்சம் பரவி அப்பகுதி பறவை ஒலிகளால் நிறைந்தது. மெதுவாக இறங்கிவந்தோம்.

சிற்றுண்டிக்குப்பின் எல்லோரா குகைககளைப் பார்க்கச்சென்றோம். எல்லோராவின் முப்பத்துநான்கு குடைவரைக்கோயில்களை மூன்று பெரும்பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று முதல் பன்னிரண்டு வரையிலான குகைகள் பௌத்தர்களுக்குரியவை. இருபத்தொன்பது வரையிலான குகைகள் இந்துக்களுக்குரியவை. எஞ்சியவை சமணர்களுக்குரியவை.

இவை எல்லாம் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் செயல்பாட்டில் இருந்தன. எல்லாக் குகைகளுமே கைவிடப்படும் காலம் வரை மேலும் மேலும் விரிவாக்கப்பட்டுக்கொண்டே இருந்திருக்கின்றன. இவற்றைச்செதுக்கிய மன்னர்கள் ஒரே சமயம் மூன்று மதங்களுக்கும் சமானமான ஆதரவை அளித்திருக்கிறார்கள். மூன்று மதத்தினரும் ஒரே இடத்தில் வழிபாடுகளையும் மதக்கல்வியையும் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

பௌத்தக் குடைவரைக்கோயில்கள் பிரம்மாண்டமான சிற்ப நுணுக்கங்களுடன் இங்கே உருவாக்கப்பட்டுள்ளன. பல அடுக்குகளாக மேலே மேலே செல்லும் குகைவிகாரங்களில் இருண்ட கருவறைகளில் பத்தடி பதினைந்தடி உயரங்களில் புத்தர் அமர்ந்திருக்கிறார். கருவறை வாசல்களில் இருபதடி உயரமான துவார பாலகர்கள். கருவறைக்குள் இறங்கிப்பார்த்தால் பிரம்மாண்டமான போதிசத்துவர் சிலைகள். இருபக்கமும் சாமரம் வீசும் தேவர்கள். எதிரில் தாராதேவி.

இச்சிலைகளின் பேருருவங்கள் அவற்றைப் பார்த்துக் கண்ணை மூடினாலும் அப்படியே இமைகளுக்குள் தேங்கிநிற்பவை. இருண்ட கருவறைக்குள் இருந்து, இருட்டு கனத்து உருவாகி வருவதுபோல சிலைகள் தோன்றுவது விழிப்புநிலைக் கனவு போலிருந்தது.

விகாரங்கள் மரத்தாலானவை என்ற பிரமையை உருவாக்கும்படி நுட்பமான உத்தரங்கள் கழுக்கோல்களுடன் செதுக்கப்பட்டுள்ளன. பத்தாம் எண்ணுள்ள குகை சந்திரசாலா என அழைக்கப்படுகிறது. இது விஸ்வகர்மா குகை என்றும் சொல்லப்படுகிறது. பல மாடிக்கட்டிடங்கள் போல நடுவே பிரார்த்தனைக் கூடமும் அதன் நடுவே ஸ்தூபமும் கொண்டவை. கூடத்தைச்சுற்றி இரண்டு அடுக்குகளாக வராந்தாக்களும் அவற்றில் இருந்து துறவியர் தங்கும் அறைகளும் உள்ளன.

பெரும்பாலான அறைகளில் இருவர் படுத்துறங்குவதற்கு ஏற்ற கல்லால் ஆன கட்டில்திண்டுகள் வெட்டப்பட்டுள்ளன. உள்ளே சுவர்களில் புத்தர் சிலைகளும் போதிசத்வர் சிலைகளும் உள்ளன. குகைநடுவே கருவறை. 15 அடி உயரமான புத்தர் சிலை அமர்ந்த கோலத்தில் அமைந்துள்ளது.

எல்லோராவின் பழமையான இந்துக் குடைவரைகள் காலச்சூரி வம்சத்து ஆட்சியில் அதாவது கிபி ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் உருவாக்கப்பட்டவை. காலச்சூரிப் பேரரசு பெரும்பாலும் தக்காணத்தை ஆண்டிருந்த ஒரு அரசகுலத்தால் ஆனது. ஐந்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இவர்கள் விந்தியமலைப்பகுதிகளில் பல இடங்களை ஆண்டார்கள். காலச்சூரிப் பேரரசின் வடக்குக் கிளை மால்வாவையும்,மேற்கு தக்காணத்தையும் ஐந்து ஆறாம் நூற்றாண்டில் ஆண்டார்கள்.

காலச்சூரிகள் தங்களை புராதனமான யாதவர்குலமான ஹேஹயர்களின் வழிவந்தவர்கள் என நம்புகிறார்கள். ஹேஹயகுலத்துச் சக்கரவர்த்தியான கார்த்தவீரியார்ஜுனர் ஆண்ட மாகிஷ்மதிதான் அவர்களுக்கும் தலைநகர். நர்மதையாற்றின் கரையில் இருந்தது இந்நகரம். மகதப்பேரரசின் கீழெ சிற்றரசர்களாக இருந்தனர். குபதர்களுக்குப்பின் பேரரசர்களாக மாறினர். சுல்தான்களால் வென்று அழிக்கப்பட்டனர்

பிற்காலக்குகைகள் ராஷ்டிரகூடர்களின் காலகட்டத்தைச் சேர்ந்தவை. ராஷ்டிரகூடர்கள் தேவகிரியை தலைநகரமாகக்கொண்டு ஆண்டனர். பின்னர் அங்கிருந்து சுல்தான்களால் தோற்கடிக்கப்பட்டு வரங்கலுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கிருந்தும் தோற்கடிக்கப்பட்டு விஜயநகரத்திற்குச் சென்றனர். ராஷ்டிரகூட என்னும் சம்ஸ்கிருதச்சொல்லின் பிராகிருத வடிவமான ரெட்டகுட்டா என்ற தெலுங்கு சொல்லின் மரூ தான் ரெட்டி.

நெடுங்காலமாக இங்குள்ள சமண பௌத்த குகைகள் காலத்தால் முந்தையவை என்று நம்பப்பட்டு வந்தது. இப்போது இங்குள்ள இந்து குகைகளில் பல பௌத்த குகைகளை விடத் தொன்மையானவை என்பது நிறுவப்பட்டுள்ளது. பௌத்த குகைகள் எல்லாமே கிபி 630 முதல் 700 க்குள் வெட்டப்பட்டவை என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

இங்குள்ள மகாசைத்யம் கார்லே குகை சைத்யத்தை விட சற்றே சிறியது. ஆனால் மகாயான பௌத்த மரபைச்சேர்ந்தது. புத்தபீடிகைக்கு முன்னால் முப்பதடி உயரத்தில் பிரம்மாண்டமான புத்தர் தர்மசக்கரத்தைத் தொடக்கிவைக்கும் முத்திரையுடன் அமர்ந்திருக்கிறார். இருபக்கமும் சுவருச்சிகளில் ஏராளமான சிலைகள். குளிர்ந்த கரிய தரையிலும் தூண்களிலும் இருட்டுக்குள் எண்ணைப்பரப்பு போல ஒரு மெல்லிய பளபளப்பு.

குடைவரைக் கலை அடுத்தகட்டத்துக்குச் சென்று மொத்தப் பாறையையே கோயிலாகச் செதுக்கும் கலையைக் கண்டடைந்திருப்பதை நாம் எல்லோராவில் காணலாம். இங்குள்ள கைலாசநாதர் கோயிலை இந்திய சிற்பக்கலையின் மிகச்சிறந்த சாதனை . ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய கட்டிடம் இதுவே. ஒரு பெரும்பாறை வெட்டப்பட்டுக் கோயிலாகவும் சுற்றியுள்ள பிராகாரங்களாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

கைலாசநாதர் கோயில் கைலாயமலையாக உருவகிக்கப்பட்டுள்ளது. இது குடைவரை என்றாலும் மேல்பக்கம் திறந்து பாறைச்செதுக்குக் கோயிலாக ஆக்கப்பட்டுள்ளது. இதை மேலிருந்து கீழ் நோக்கி வெட்டிக்கொண்டே வந்திருக்கிறார்கள். அதாவது மொத்தக் கோயிலையும் வரைந்த பின்னர் கோபுர உச்சியின் கலசத்தைப் பாறைமேல் செதுக்க ஆரம்பித்து வெட்டிக்கொண்டே கீழிறங்கி கடைசியில் அடித்தளத்தையும் வாசலையும் அமைத்திருக்கிறார்கள். இந்தப் பேராலயத்தின் பிரம்மாண்டத்தை, இதிலுள்ள மகத்தான மானுட சாதனையை ஒருபோதும் சொல்லாலும் சித்திரத்தாலும் விளக்கிவிடமுடியாது.

மதிய உணவுக்குப் பின் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் இந்த ஆலயத்திலேயே செலவிட்டோம். ஆரம்பத்தில் இக்கோயிலின் மீது வெண்ணிற சுதைப்பூச்சு இருந்திருக்கிறது. அப்போது இது கைலாயமலை போலவே தோன்றியிருக்கலாம். ஒற்றைப்பாறையாலான இக்கோயிலின் அற்புதம் இதன் உச்சியில் உள்ள கோபுரம் முதல் கீழே இக்கோயிலைத் தாங்கி நிற்கும் பெரும் யானைகள் வரை நாம் காணும் பரிபூரணமான சிற்ப ஒருமைதான்.

கோயிலைச்சுற்றியுள்ள பெரும் பிராகாரமும் அதே பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. பிராகாரங்கள் எல்லாமே பெரும் சிற்பக்கூடங்கள். அங்கே பல இடங்களில் ஏறி நின்று கோயிலைப் பார்த்துக்கொண்டிருந்தோம். பிராகாரங்களில் இருந்து கோயிலுக்குச் செல்ல பாலம் போன்ற நடைபாதைகள் செதுக்கப்பட்டிருந்தன என்கிறார்கள். இப்போது அவை உடைந்துவிட்டிருக்கின்றன. இங்கே சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் இரு சன்னிதிகள் உள்ளன.

இந்த மாபெரும் கோயிலை உருவாக்கி முடிக்கக் கிட்டத்தட்ட நூறு வருடங்கள் ஆகியிருக்கின்றன. கிபி 760ல் ராஷ்டிரகூட மன்னர் முதலாம் கிருஷ்ணர் இந்தக் கோயிலைக்கட்ட ஆரம்பித்தார்ஆனால் இன்னும்கூட பல இடங்களில் வேலை முடிவடையவில்லை. கட்டிமுடிக்கமுடியாத ஒரு பேராலயம் என்று இதைச் சொல்லலாம். 32 மீட்டர் ஆழமும் 30 கீட்டர் அகலமும் 49 மீட்டர் நீளமும் உள்ள பெரும் பாறைக்குடைவுக்குள் இக்கோயில் இன்று நின்றிருக்கிறது. 200,000 டன் கருங்கல்லை வெட்டி விலக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

பார்த்துப்பார்த்துத் தீராத கோயில். பார்க்கப்பார்க்கப் பார்த்துவிட முடியவில்லையே என்ற ஏக்கத்தை மட்டுமே உருவாக்கும் கோயில். ஒருமுறை நான் கடல்நடுவே கட்டுமரத்தில் சென்றிருக்கிறேன். பேரலைகள் என்னைச் சூழ்ந்து கல்நீல நிறத்தில் பளபளத்து மேலெழுந்து வளைந்து இறங்கின. மலைகளாக மடுக்களாக கோபுரங்களாக குளங்களாக பலநூறு வடிவங்களைக் காட்டின. அந்த அனுபவம் இங்கே மீண்டு வந்தது. கல்லே அலைகளாகக் கொந்தளித்து சூழ்ந்து கொண்டது போல.

இக்கோயிலைப் பகுதி பகுதியாக வருணிக்கலாம். என்றாவது ஒரு பெரும் சொற்சித்திரமாக நான் எழுதவும் கூடும். விஷ்ணுபுரம் நாவலே ஒருவகையில் இந்த மகத்தான சிற்ப அற்புதத்துக்கு என் எளிய காணிக்கைதான். ஆனால் இன்று மனம் சொல்லற்று பிரமித்திருக்கிறது.

என்ன சொல்வது!. சுவரெங்கும் நிறைந்திருந்த மாபெரும் சிற்பங்கள். பக்கவாட்டில் இருந்த பிராகாரத்தில் இருந்த விரிந்து பரந்த சித்திரசபையில் இருந்த இருபதடி உயரமான சிற்பங்கள். கோயிலைத் தாங்கி நிற்பவை போல செதுக்கப்பட்ட யானைகள். கல் அருவியாகப் பொழிவது போலத் தோன்றவைத்த கோபுர எழுச்சிகள். கல் வானமாக ஆகிவிட்டது போல நினைக்கச்செய்த செங்குத்தான பாறை வெட்டு.

‘இனி ஒண்ணுமே மிச்சமில்லைன்னு தோணுதுசார்…வாழ்ந்தாகிவிட்டது’ என்று சீனு கண்களில் ஈரத்துடன் சொன்னார். ‘இதக் கட்டிமுடிக்க மனுஷனால முடியலைங்கிறதே மகத்தான விஷயமா இருக்கு’ நான் சீனுவிடம் சொன்னேன்.  ‘இங்கே நிகழ்ந்திருப்பது ஒரு சிறு வெளிப்பாடுதான். இதைத் தன் கனவில் கண்டவன் இங்கே இருப்பதில் பல மடங்கைக் கற்பனை செய்திருப்பான். எட்டமுடியாத ஏக்கத்துடன் இறந்திருப்பான்”

எந்த செவ்வியல்படைப்பைப்போலவும் இது இன்னும் முழுமை பெறவில்லை. இதற்கு முழுமை என்ற ஒன்றே இல்லை. இந்தக் கோயில் முக்கியமே அல்ல. இந்தக் கோயில் வழியாக நாம் அந்தப் பெரும் கனவைச் சென்றடைகிறோம். அந்தக்கனவை மீட்டிக்கொள்வதற்கான கருவிதான் இக்கோயில். எப்பேற்பட்ட கனவு! ஒரு மலையையே கோயிலாக ஆக்கிவிடுவேன் என்ற அக எழுச்சி! அதை நினைக்கையில்தான் மயிர்கூச்செறிகிறது!

இங்குள்ள இந்துக் கோயில்களில் திரும்பத்திரும்ப வரும் சிலைகள் சில உள்ளன. ஒவ்வொரு சிலையும் ஒவ்வொரு நுட்பத்துடன்தான் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளன. ராஷ்டிரகூடர்களுக்குப் பன்றி குலச்சின்னம். ஆகவே பூமாதேவியைத் தூக்கித் தோளில் ஏற்றி நிற்கும் பூவராகன் சிலை பல இடங்களில் உள்ளது. பன்றிமுகத்தில் உள்ள மதமும் ஆண்மை நிறைந்த உடலும் கலந்து ஒரு பயங்கர வசீகரம் நிகழ்கிறது அவற்றைப்பார்க்கும் முதல்கணத்தில்..

இங்குள்ள சிலைகள் ஒவ்வொன்றும் ஒரு கலைச்சாதனை. திரிபுரம் எரிக்கும் சிவன் காதுவரை நாணை இழுத்து நிற்கும் தோரணை, உமையை மடியில் அமரச்செய்த உமா மகேஸ்வரன் தேவியை அணைத்திருக்கும் மெல்லிய தொடுகை, ஊர்த்துவ நடமிடும் சிவன் உறைநிலையில் அளிக்கும் உக்கிரமான சுழன்றாடல்தருணம், உமையை மணக்கும் சிவனின் கம்பீரமும் தேவியின் உடலில் நெளிந்து வழிவது போல தெரியும் நாணமும்…

ஆனால் வேறெங்கும் இல்லாமல் இங்குமட்டுமே நான் கண்ட சிற்பம் சிவனும் உமையும் தாயம் விளையாடும் காட்சி. குறைந்தது பத்து வெவ்வேறு சிலைகள் உள்ளன. காளிதாசனின் குமாரசம்பவத்தில் உள்ள காட்சி இது. பிரபஞ்ச நிகழ்வே அவர்களின் அந்த ஆட்டம்தான் என்கிறார் காளிதாசன். சில சிற்பங்களில் சிவன் பகடை உருட்டப்போக மெல்லிய எள்ளலுடன் தேவி பார்த்திருக்கிறார். சில சிற்பங்களில் பொய்விளையாட்டு விளையாடும் தேவியை சிவன் கைபிடித்துத் தடுக்கிறார்.

கைலாயம் மேல் அமர்ந்திருக்க்கும் சிவனை மலையோடு தூக்க முனையும் ராவணனின் சிலை மீண்டும் மீண்டும் பிரம்மாண்டமாகச் செதுக்கப்பட்டுள்ளது. சிரிப்புடன் கீழே குனிந்து சிவன் பார்க்க தேவி கருணையுடன் பார்க்கிறாள். ஒவ்வொரு சிவகணமும் ஒவ்வொரு உணர்ச்சியுடன் பார்த்திருக்கிறது. ஒரு சிலையில் ராவணன் கிட்டத்தட்ட சரிந்து மண்ணோடு ஒட்டிவிட்டிருந்தான்.

எல்லோராவின் சிலைகளைப்பற்றிச் சொல்லி முடிக்க முடியாது. மாதாக்களின் சிலைகளை இத்தனை பிரம்மாண்டமாக இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது. இருளுக்குள் எலும்புக்கூடான பேயுடலுடன் இருபதடி உயரச்சிலையாக தாண்டவக்கோலத்தில் நிற்கும் சாமுண்டி ஒரு கணம் என் அகத்தை நடுங்கச்செய்தாள். தெய்வங்கள் எல்லாம் உண்மை உருவங்களாக ஆக நான் ஒரு நுண்ணிய கிருமியாக அவர்கள் நடுவே ஊர்ந்து சென்றேன். தெய்வங்கள் பருவடிவுகளாக நிற்க நான் ஒரு எண்ணம் மட்டுமாகக் கடந்து சென்றேன்.

இங்குள்ள சமணக் குகைகளில் சோட்டா கைலாஷ் , இந்திரசபா, ஜகன்னாத சபா என்னும் குகைகள் பெரியவை. குகைக்கோயில் கருவறைகளில் பார்ஸ்வநாதர் பேருருவமாக நின்றிருக்க அவரைச்சூழ்ந்து மறலியும் மாரனும் நின்று ஞானசோதனையிடும் காட்சிகள் பல இருந்தன. பேருருவம் கொண்ட பாகுபலி சிலைகள். அமர்ந்த கோலத்தில் ஆதிநாதர் வர்த்தமானர் சிலைகள். ஒவ்வொரு சிலையும் பிரம்மாண்டமான கருமையுடன் பிரம்மாண்டமான மௌனத்துடன் அமர்ந்திருந்தது. தியானத்தின் நிறம் கருமைபோலும் என நினைத்துக்கொண்டேன்.

சமணக்குகைகளில் மிக விரிவான வண்ண ஓவியங்கள் இருந்திருக்கின்றன. சில இடங்களில் மேல்பூச்சும் அவற்றில் ஓவியங்களும் உள்ளன. ஆனால் பெரும்பாலும் எங்கும் ஓவியங்கள் மிச்சமில்லை. இக்கோயிலுக்குள் பிற்காலத்தில் ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. அப்போது பந்தங்களை எரியவிட்டு ஓவியங்கள் கருமைகொண்டன. பின்னர் அவை உதிர்ந்தன. பொதுவாகக் கொஞ்சமேனும் உடையாத சிதையாத ஒரு சிலை கூட எல்லோராவில் இல்லை. பெரும்பாலான சிலைகள் கைகளும் கால்களும் உடைந்த நிலையிலேயே உள்ளன.

திரும்பி வருகையில் இங்குள்ள கிருஷ்ணேஸ்வர் கோயிலுக்குச் சென்றோம். பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று இது. புராதனமான கோயில் சற்றுத் தள்ளி இருந்தது. அது சுல்தான் முகமது பின் துக்ளக்கால் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் இன்று ஒரு வெற்றிக்கும்மட்டம் உள்ளது. அது நிரந்தரமாகப் பூட்டப்பட்டுப் புழுதிபடிந்து நிற்கிறது. ஔரங்காபாதைக் கைப்பற்றிய பேஷ்வா சதாசிவராவ் அருகே சற்றுத்தள்ளி சிவப்புக்கல்லில் கட்டிய புதிய கோயில் இப்போது வழிபாட்டில் உள்ளது. எல்லோரா குகைளுக்கு வருபவர்களை விட இங்கேதான் கூட்டம் அதிகம்.

அழகிய சிற்பவேலைகள் கொண்ட கோயில். வட இந்தியாவில் உடையாத கோயிலைப்பார்ப்பதே வினோதமாக இருப்பது கொஞ்ச நேரம் கழித்துத்தான் தெரிந்தது. எல்லாரும் கருவறைக்குள் சென்று லிங்கத்தைத் தொட்டு வழிபடலாம். நண்பர் ராஜமாணிக்கம் சென்று வழிபட்டு வந்தார். மாலை அறைக்குத் திரும்பினோம். நாளை அஜந்தா பார்த்துவிட்டு அப்படியே கிளம்பிச்செல்வதாகத் திட்டம்.

மேலாளர் வந்தார். எல்லாம் வசதியாக இருக்கிறதா என்றார். நாங்கள் நாளை கிளம்புவதைச் சொன்னோம். முன்பணமாக ஐநூறு ரூபாய் கொடுத்திருந்தோம். அதை நன்கொடையாகக் கொடுப்பதாகச் சொன்னோம். காலையில் ரசீது பெற்றுக்கொள்கிறோம் என்றோம்.இல்லை, நான் இப்போதே கொண்டு வந்து தருகிறேனே என்றார். அங்குள்ள ஆதரவற்றோர் பள்ளிக்கு அளிப்பதாகச் சொன்னோம். சென்று ரசீது கொண்டு வந்து தந்தார்.

எல்லோரா மகாராஷ்டிரத்திலேயே அதிகபட்ச அறை வாடகை உள்ள இடம். வெளியே மூவாயிரம் ரூபாய்க்குக் குறைவாக விடுதி அறை இல்லை. இரண்டு அறைகளை இலவசமாகக் கொடுத்ததுடன் காலையுணவுக்குக் கட்டாயப்படுத்தவும் செய்தார். நாங்கள்தான் தொடர் பயணம் இருப்பதைச் சொன்னோம்.

இன்றிரவு முன்னரே தூங்கவேண்டும். ஆனால் தூங்க முடியுமா எனத் தெரியவில்லை. கண்மூடினால் சிற்பங்கள் விழிகளுடன் சொல்லாத சொற்களுடன் உறைந்த அசைவுகளுடன் கல்வெளியில் இருந்து கல்வடிவங்களாக வந்தன. கல்லில் நீந்தித் திளைத்தன.

ஒரு கருநீலக்குளம். அதனுள் இருந்து பார்க்கப்பார்க்க மீன்கள் எழுந்து மேலே வந்துகொண்டே இருந்தன. கண் தெளியத்தெளிய மேலும் மேலும் மீன்கள். ஆயிரக்கணக்கில். கண்விழித்த மிகப்பெரிய மீன்கள். அலையுடன் நெளியும் நடுத்தர மீன்கள். செறிந்த ஒற்றைப்பரப்பாக ஆன பரல்கள்… ஒரு கண்ணசைவில் அப்படியே நீருக்குள் மறைந்து வெறும் நீர்வெளி எஞ்சியது. கண்மயங்க மயங்க மீண்டும் மீன்கள்….இது கடல்.

மேலும்…

படங்கள் இங்கே

முந்தைய கட்டுரைமேலான உண்மை – சீனு கடிதம்
அடுத்த கட்டுரைபயணம் – கடிதங்கள்