அன்புள்ள ஜெ,
உங்கள் அருகர்களின் பாதை 7 வாசித்தேன். 2008ல் 9 நண்பர்கள் பத்ரிநாத், கேதார்நாத் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில் உத்தரகண்ட் மாநிலம் துவாரஹட்டில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் இரவு தங்கி, காலை பாபாஜீ குகைகள் செல்ல திட்டம். நண்பர்களில் ஒருவர் அமைப்பை சேர்ந்தவர். அவர் அனைவருக்கும் இரவுணவும் தங்குமிடமும் ஏற்பாடு செய்திருந்தார்.
நாங்கள் மாலை ஆசிரமத்தை அடைந்து இரவுணவுக்காக போஜன ஆலயத்தில் தட்டுகளோடு வரிசையாக நின்றோம். எங்கள் வாகன ஓட்டுநர் இளைஞரும் வரிசையில் நின்றார். ஆசிரம உதவியாளர் (40-45 வயது இருக்கலாம். காவி உடை இல்லை.) ஓட்டுநரைக் கண்டவுடன் அவருக்கு உணவு சாப்பிட அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார். ஏந்திய தட்டை வைத்து விட்டு ஓட்டுநர் வேகமாக வெளியே வாகனத்துக்குச் சென்றுவிட்டார். நாங்கள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் அவர் அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இந்தி தெரிந்த நான் ஓட்டுநரை சமாதானம் செய்ய அனுப்பப்பட்டேன்.
ஒருவரை அந்த சூழ்நிலையில் எந்த சொற்களைக் கூறி சமாதானம் செய்து விட முடியும்? நான் வாகனத்திற்குச் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அவர் பஞ்சாபி இளைஞர். குருதுவாரா பற்றிப் பேச்சு வந்தது. நீங்கள் சொன்ன அத்தனை உணர்வுகளையும் கிட்டத்தட்ட நானும் அடைந்தேன்.
ஆசிரமத்தில் சிறு புத்தக விற்பனைஅறையும் இருந்தது. ஆசிரம உதவியாளரே உதவினார். நண்பர்களுக்காக இந்தியில் அவரிடம் ஏதோ கேட்க நேர்ந்தது. எனக்கு அவரிடம் கொஞ்சம் கூடப் பேசப் பிடிக்கவில்லை. இது என்னைப் பொறுத்தவரை அமைப்பு சார்ந்த, ஏன் இந்திய ஆன்மாவின் பிரச்சனை கூட இல்லை. இது மானுடத்தின் சிறுமை.
என்னுடைய மற்றும் சகமனிதனின் மனச்சிறுமை மனிதத் தீமையின் ஒரு துளி. அந்தத் துளி எப்போதும் பேரிருளை நோக்கியே என்னை இழுத்துச் செல்லும். என் சமன் குலையும். அப்போது ஒரு சொல்லிலோ செயலிலோ சிரிப்பிலோ பேரன்பை வெளிபடுத்தும் முகங்களும் குழந்தை மனம் படைத்த நடுவயதுக்காரர்களும் ஞானிகளுமே நினைவுக்கு வருவார்கள். கொஞ்சம் சமன் செய்துவிட்டுப் போவார்கள்.
அன்புடன்,
ராஜா.
அன்புள்ள ஜெமோ,
தங்களின் இந்திய பயணக் கட்டுரைகளை எப்போதுமே சிலாகித்து வாசிப்பேன், நம்மால் எப்போது இயலும் என்ற ஆதங்கத்துடன். உங்களின் அருகர்களின் பாதையை நானும் உங்களுடன் Google map – இல் பின்தொடர்ந்து வருகிறேன். இன்று இந்த Naneghat -ஐ கழுகுப் பார்வையில் பார்க்கும்போது எனக்கு இது ஏதோ ஒன்றை நினைவுபடுத்துகிறது. பார்க்க http://maps.google.com/maps?q=NaneGhat,+Maharashtra,+India&hl=en&ll=19.297737,73.690796&spn=0.011463,0.01929&sll=20.015936,73.547974&sspn=0.365166,0.617294&oq=nane&vpsrc=6&hnear=Naneghat&t=h&z=16
மேலும் நான் புனேவில் வசித்து வருவதால் தங்களை பயணக் குழுவுடன் சந்திக்கும் ஆவலுடன் இருந்தேன்.ஆனால் கிருஷ்ணன் அவர்கள் அவருடைய செல்பேசியை மறந்ததாலும் நானும் முன்கூட்டியே முயற்சிக்காததாலும் அது முடியாமற் போனது. நீங்கள் ஏறக்குறைய இரண்டு நாட்கள் புனேவைச் சுற்றியே இருந்தும் உங்களை சந்திக்க முடியாமற் போனதால் உறக்கம் கெட்டு வீட்டில் புலம்பிக் கொண்டிருக்கும்…
…சதீஷ் :)
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
இன்று(24 .01 .12) தங்கள் ‘வலைத்தளத்தில்’ வந்துள்ள இந்தியப் பயணக் கட்டுரையைப் படித்த பிறகு இது பற்றி உடனே எழுத வேண்டும் என்று எண்ணம் எழுந்தது. சமீபகாலமாகத் தங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து படித்து வருவதால் ஒரு புதிய உலகத்திற்குள் பிரவேசித்த உணர்வு தோன்றுகிறது. அதுவும் இந்த ”அறம்” உண்மையிலேயே மனதை ரொம்பவும் இம்சை பண்ணுகிறது. எப்படிப்பட்ட எளிய ஆனால் உயர்ந்த மனிதர்கள் நமது இந்தியாவின் மூலை, முடுக்குகளில் நிறைந்து இருக்கிறார்கள் என்று அறியும் போது பெருமிதமாகவும் உள்ளது. கீழ்க்கண்ட உங்கள் சிங்கப்பூர் உரையில் குறிப்பிட்டது போல்:
“இங்க பசிச்சவன்கிட்ட கருணையும் நியாயமும் இருக்கு சார்” என்றார் அந்த அதிகாரி. அதை எப்படிப் புரிந்துகொள்வது என்பதில் நீங்கள் வேறுபடலாம். ஓயாது இந்திய நிலத்தில் அலைபவன் என்றமுறையில் இந்த மண்ணின் ஒவ்வொரு துளியிலும் ஊறிக் கொண்டிருக்கும் கருணையை மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருக்கிறேன். இந்திய நிலத்தில் எங்கும் முலைகனிந்த அன்னையரும் அகம் கனிந்த தந்தையரும் காணக்கிடைக்கின்றனர்”
“இன்று என் நாடு சுரண்டப்பட்டுக் கிடக்கலாம். அச்சமும் கீழ்மையும் அங்கு நிலவலாம். ஆயினும் அதன் ஆத்மாவில் உறையும் அறம் என்றும் தோற்காது என்றே எண்ணுகிறேன்”.
“ஷிண்டேக்களை விளைய வைக்கும் வலிமை இந்த மண்ணுக்கு எப்போதுமிருக்கும் என்றே நினைக்கிறேன். அவரது மெலிந்த உறுதியான கரங்களைப் பற்றிக்கொண்டு என் நன்றியை, வணக்கத்தை, நெகிழ்ச்சியை சொன்னேன். அவரைப் போன்றவர்களிடம் இருந்து அண்ணா ஹசாரேக்கள் உருவாவார்கள். நம்மிடம் அண்ணாவை ஏளனம் செய்யும், நாறும் நாக்குகள் மட்டுமே பிறக்கும். ஷிண்டே என் தேசத்தின் முகம்”
எத்தனை நம்பிக்கை ஊட்டும் சத்திய வார்த்தைகள்.
தங்களின் பயணம் நல்லபடியாகத் தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.
அன்புடன்,
அ.சேஷகிரி
கட்டுரையின் கடைசிப் பாராவில் உங்களைக் கண்டு கொண்டேன் ஜெ..
மிக அதிகமான மனச் சாய்வுகள் உண்டு எனக்கு. ஆனால், அவை அனைத்தையும் தூள் தூளாக்கி விடுகிறது எளிமையான மனிதர்களிடம் காணக் கிடைக்கும் பெருந்தன்மை. எலிகள் போல், தனக்கு, பிள்ளைக்கு, பேரனுக்கு என்று பொருள் பதுக்கும் என் போன்ற மத்தியதர வர்க்கம், சுயநலத்தை ஜஸ்டிஃபை செய்யவே சித்தாந்தத் தர்க்கங்கள் செய்கிறோம் என்பதே உண்மை. மும்பை நகரில் இருந்து வெளியே என் தொழிற்சாலையை மாற்றும்போது ஒரு அனுபவம். சாலையில் இட்லி விற்கும் ஒரு தமிழர், உள்ளே வந்து கேண்டீன் நடத்த அனுமதி கேட்டார். நான், அது ஏற்கனவே உள்ளே 25 வருடங்களாக வேலை செய்து வரும் ஒரு தொழிலாளிக்குத் தர முடிவெடுத்து விட்டோம் என்று சொன்னேன். “சரிதான் சார்.. அவருக்குத் தான் முதல் ரைட்டு.. ரொம்ப நல்ல மனுசன் சார்.. பின்னாடி முடிஞ்சா ஏதாச்சும் உதவி செய்ங்க சார்” என்று போய்விட்டார்..
இதே போன்ற ஒரு சூழலில் நான் என்ன செய்திருப்பேன் என்று யோசித்தேன்.. எனக்குப் போட்டியாக இருக்கும் ஆசாமியைப் போட்டுத் தள்ளி விட்டு, எப்படி ஆரிய ஆதிக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறோம், அதனால நான் செஞ்சது சரின்னு ஜஸ்டிஃபை பண்ணியிருக்கமாட்டேனா??.
நல்லாருங்க சார்..
பாலா