”சார் பெரிய ரைட்டர்!”

writer

 

பொதுவாக என்னை யாரிடமும் எழுத்தாளர் என்று அறிமுகம் செய்துகொள்ள விரும்புவதில்லை. நண்பர்களிடமும் என்னை அப்படி அறிமுகம்செய்யலாகாது என சொல்லியிருப்பேன். அனுபவ அமைதி. சமீபத்தில்கூட ஒருவர் பேருந்தில் பார்த்து ”சார்!” என்றார். நானும் ”சார்?” என்றேன்.

”சார்—” என்றார்.

”சார் –?” என்றேன். ‘

‘நான் அருணாச்சலம் சார்… எல்லைஸியிலே இருக்கேன்”

”நான் பீயெஸ்ஸென்னெல்லிலே”.

”ஓகே சார்” என்று போனார். அப்பாடா என்று மூச்சுவிட்டேன்.

ஆனாலும் சில நண்பர்களுக்கு தாங்காது. தன் வட்டத்தில் இப்படி ஒரு விசித்திர உயிர் இருப்பதை பிற நண்பர்களுக்குச் சொல்லும் பெருமையை ஏன் இழக்க வேண்டும்? ”சார் பெரிய ரைட்டர்!”என்று நம் பக்கம் கைகாட்டி சொன்னார் முன்பு ஒரு நண்பர்.

”அப்டியா சந்தோஷம். எந்த ஸ்டேஷனிலே சார்?” என்றார் கனத்த தொப்பையும் காக்கைச்சிறகு மீசையும் கொண்ட அவர்.

நான் ”போலீஸ்லே இல்ல சார்” என்றேன்

”அதானே பாத்தேன்.சாரைப் பாத்தா அந்த லுக் இல்ல பாத்துக்கிடுங்க…டாக்குமென்ட் ரைட்டரா?”

”இல்லீங்க…நான் பியெஸ்ஸென்னெல்லிலே….” என்றேன்.

அவர் சற்றே குழம்பி ”அப்டியா? அங்கயும் அப்டி கேடர் உண்டா சார்?” என்றார்.

”ஆமாம் ”என்று சொல்லி விடுபட்டேன்.

ஆனால் நண்பர் உற்சாகமாக நடுவே புகுந்து ”அதில்லை பாஸ். சார் பெரிய எழுத்தாளர். நாவல் சிறுகதை எல்லாம் எழுதியிருக்கார்…” ஆவேசமாக குரலை தூக்கி ”ஸ்டோரி புக்ஸ் சார்!”என்றார்.

”அப்டியா?” என்று அவர் உற்சாகமடைந்து ”…நான்லாம் காலேஜிலே படிக்கிறப்ப நெறைய புக்ஸ் படிப்பேன் சார். ஸ்டோரீஸ்… ரொம்ப திரில்லா இருக்கும். காமாட்சி நாதன்னு ஒரு பிள்ளைமார் வீட்டு பையன். இப்ப எங்கியோ வாத்தியாரா இருக்கான். அவன் நெறைய ஸ்டோரி புக்ஸ் கொண்டு வருவான். ஹாஸ்டலிலே ஸ்டோரி புக்ஸ் படிக்கிற விசயம் தெரிஞ்சாக்க தோல உரிச்சு போடுவாங்க. பாதிரிமார் நடத்துற காலேஜ் பாத்துக்கிடுங்க…. ஆனா அவன் ஆளு ஆரு ஐட்டம்? பிள்ளமார்லா? சும்மா வேட்டிக்குள்ள வச்சு கொண்டாந்திருவான். நாலஞ்சு பயக்களாட்டு அப்டியே முந்திரிககட்டுக்குள்ள போயி ஒக்காந்து நெருக்கியடிச்சிட்டு எட்டிப்பாத்து படிப்போம்…அது ஒருகாலம். அப்பம் ஒண்ணும் தெரியாதுல்லா…?”

என்னால் நிற்க முடியவில்லை. தாகமோ, தலைசுழற்சியோ எதுவோ வந்தது. ”…இது வேற மாதிரி புக்ஸ் சார்…” என்று சொன்னபோது நா வரண்டிருப்பதை உணர்ந்தேன்.

”ஆமாமா… இப்பல்லாம் ஸ்டோரி புக்ஸ் வேற மாதிரி வருது சார். அண்ணைக்கு என்ன, சும்மா ஆறணா, எட்டணாவுக்கு தந்தி பேப்பர் தாளிலே போட்டிருப்பான்…படம்லாம் ஒருமாதிரி பொகையடிச்சுத்தான் இருக்கும். இப்பம் எல்லாம் ஆப்செட்டுல்லா?”

தமிழ்நாட்டில் பொதுவாக எழும் கேள்வி ”என்ன குடுப்பான்?”என்பது. முன்பெல்லாம் நான் இலக்கியம் என்ற பயன் கருதா பொதுநலச் செயல்பாட்டைவிளக்க முயல்வேன். பணம் ஏதும் கிடைப்பதில்லை என்றதுமே ஆர்வம் போய்விடும். பிறகு துணிந்து சாத்த ஆரம்பித்தேன் ”…என்ன சார் குடுக்கான்? சும்மா…ஒரு பீஸுக்கு மிஞ்சிப் போனா பத்தாயிரம்…என்ன செய்ய ?செரி போனாப்போவுது…என்ன?” கேட்டவர் கண்களில் வரும் பகீரிடலும் ஒளிமங்கலும் என்னை உள்ளூரக் கூத்தாட வைக்கும்.

தருமபுரியில் ஒரு நண்பர் நான் தொகையைச் சொன்னதும் அதிர்ந்தார். நா அசையவில்லை. பின்னர் ரீங்காரமாக ”அவ்ளவு குடுப்பானா சார்?”என்றார்.

”களவாணிக சார்….பெரிய ரைட்டர்னாக்க அம்பதாயிரம் லெச்சம்னு குடுக்கானுக…நம்மள ஏமாத்துறானுக”’

அவர் ”நானும் சின்னவயசிலே எளுதியிருக்கேன் சார்”என்றார். ”இப்பல்லாம் ஏதுசார் நேரம்? எளவு இந்த வேல ஆள விடுதா?” சந்தேகமாக பார்த்து ”ஆனா அப்பல்லாம் அஞ்சு ரூபாதான் குடுத்தான் சார்”

‘எப்ப?” என்றேன் .

”ஒரு பதினஞ்சு வருசம் முன்ன…”

என்னால் நிதானிக்க முடியவில்லை ”எந்த பத்திரிகையிலே சார்?”

”தினத்தந்திதான் சார்… ஆனா நாம படம் வரைஞ்சு அனுப்ப வேண்டாம். அவனே வரைஞ்சுக்கிடுவான்”

”எப்டி சார் எழுதிவீங்க?”

”அது ஒண்ணுமில்ல சார். நம்ம அண்ணனுக்கு பழைய பேப்பர் ஏவாரம். அதில வாறக் கதைகளை பாத்து அப்டியே போஸ்டு கார்டிலே எளுதி அனுப்பிர வேண்டியதுதான்…”அவர் சொல்லிக் கொண்டிருந்தது தந்தி வெளியிடும் ‘ சிரிப்பு!!!’ துணுக்குகளைப்பற்றி.

இங்கே பெரும்பாலானவர்கள் கதை என்பதே காதல் என்ற கற்பனையில் இருப்பதை உணரலாம். ”அப்டியா சார்? ரொம்ப சந்தோஷம்… கதையெல்லாம் எங்க சார் படிக்கிறது? கதையிலே எல்லாத்தயும் ஏத்தி அடிச்சு எழுதிடறது. ஒருத்திய கட்டி ஒரு பிள்ளையும் ஆகி பிக்கலும் பிடுங்கலுமாட்டு கெடந்து அல்லாடுறப்பல்லா உள்ளது தெரியுது…எல்லாம் வேஸ்டு சார்” என்று சொல்லி ”சார் எங்க வேல பாக்குறீக?”

”பீயெஸ்ஸென்னெல்லிலே…”

”அப்டியா?என்ன செய்றிய?”

”கிளார்க்கு சார்”

”அதுசெரி…நம்ம பய ஒருத்தன் அங்கிண டிவிசனல் எஞ்சீனியரோ என்னமாட்டோ வேல பாக்கானே…” அதன் பின் டிவிஷனல் எஞ்சீனியரின் தோழர் நமக்கு வாழ்க்கையை உபதேசம் செய்ய ஆரம்பிக்கிறார் ”…எல்லாம் சும்மா சார். பணமிருக்கா எல்லாம் உண்டு…இல்லேண்ணா ஒண்ணுமில்ல. சொல்லுதேண்ணு தப்பா நெனைக்காதீய…”

அதிகாரிகள் மற்றும் பெரிய மனிதர்கள் தங்களுக்கு எதையும் தெரியாது என்று சொல்லிக் கொள்வதில்லை. அவர்கள் எழுத்தாளனை வழி நடத்தும் பொறுப்பில் இருக்கிறார்கள். ஆகவே உடனே உட்காரச் சொல்லி விடுகிறார்கள். அரைமணிநேரம் அவர்கள் ·பைல்களை பார்க்க குளிர் சாதன அறைக்குள் நான் நாடி ஒடுங்கி நா தளர்ந்து கண்ணாடித் தாளெடைக் குமிழுக்குள் ஒளியைப் பார்த்தபடி ஒடுங்கி இருப்பேன். மூடிவிட்டு நிமிர்ந்து கண்ணாடியை கழற்றிவிட்டு ஒரு புன்னகை. ”ஸோ…யூ ஆர் எ ரைட்டர். குட்…” எழுத்தாளனிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும்.

”பொதுவா நான் யாரையும் இதுமாதிரி முன்னாடி உக்கார வைக்கிறது இல்ல. ஆனா நீங்க ரைட்டர்னு சொல்றீங்க… ரைட்டர்ஸெல்லாம் நாட்டு நலனுக்காக எழுதணும். இப்ப நான் படிக்கிறதில்லை. ஸீ, பொறுப்பு அதிகம். ஆக்சுவலி ,நேரமே இல்ல. சின்னவயசிலே நெறைய படிச்சிருக்கேன்… ஆர்க்கே நாராயணன்ன்னு ஒருத்தர் மால்குடி சுபான்னு ஒரு நாவல் எழுதியிருக்கார். குட் வர்க். இப்ப இருக்காரா?”

”இல்ல சார். போயிட்டார்”

”நைஸ். அப்றம்…”சிந்தனை பறக்க சுழல் நாற்காலியில் மல்லாந்து ”…எ லாட் ஆஃப் புக்ஸ் யூ நோ…பெர்னாட் ஷான்னு ஒருத்தர். நாடகம்லாம் எழுதியிருக்கார். பிரிட்டிஷ் மேன்…”

”அவரும் போயிட்டார் சார்…”

”நைஸ்” சட்டென்று தீவிரமடைந்து ”…குட். வாட் கென் ஐ டு ஃபர் யூ?”

பெரிய மனிதர்களை நான் மிகமிகக் குறைவாகவே சந்தித்திருக்கிறேன். பயம் காரணமாக தவிர்த்துவிடுவேன். ஆனால் பொது நிகழ்ச்சிகளில் மாட்டிக் கொள்வதுண்டு. அடிப்பொடியோ அமைப்பாளரோ குனிந்து பணிந்து குழைந்து நெளிந்து கும்பிட்டு சிரித்து ”…இவரு ஜெயமோகன். நெறைய எழுதறாரு…”

பெரியமனிதர் அழகாக புன்னகைசெய்து ”அப்டியா. நல்லது.நல்லா எழுதுங்க…சிறப்பா செய்யுங்க”என்று கைகூப்பி சென்றுவிட்டால் தப்பித்தேன். அவருக்கு தானொரு அறிவுஜீவி என்ற எண்ணம் இருந்தால் நின்று மேலும் ஒரு புன்னகையுடன் ”..இப்ப என்ன எழுதறீங்க?”

”…விஷ்ணுபுரம்ணு ஒரு நாவல்…”

அதை காதில் வாங்காமல் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ”…எழுதறப்ப நம்ம ஆத்மா அதில இருக்கணும். இப்ப திருக்குறளைப் பாருங்க. கொக்கொக்க கூம்பும் பருவத்துண்ணு சொல்றார். அதில ஆழமான கருத்து இருக்கு. யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலைன்னு திருமூலர் சொன்னாப்ல நாமதான் எல்லாத்தையும் நுட்பமா பாத்து எழுதணும். நம்ம சைவத்திலே எவ்ளவோ இருக்கு. இப்ப யாரும் அந்தளவுக்கு பாத்து எழுதறதில்லை. அருணை வடிவேலு மொதலி எங்க அப்பாவைப்பாக்க வருவார். பாவம் கஷ்டப்பட்டவர். அப்பா அஞ்சோ, பத்தோ கொடுத்து அனுப்புவார். அவரு எழுதின சைவசித்தாந்த புஸ்தகத்தை படிச்சிருக்கிறிகளா?”

”இல்லீங்க”

”படிக்கணும். படிச்சாத்தான் புத்தி தெளியும். புத்தி தெளிஞ்சா சித்தி”

அடிப்பொடி, அமைப்பாளர், சூழ நிற்போர் அனைவரும் மெய்ஞானம் கேட்ட பெரும்பரவசத்தை காட்ட பெரியமனிதர் தன்னடக்கமாகப் புன்னகை செய்து ”..அப்ப பாப்போம். எப்பவாவது வாங்க பேசுவோம்.. பேச நெறைய விஷயமிருக்கு .. பேசப்பேசத்தான் ஈசன்…”

மீண்டும் பரவச அலை. ”சிவஞானம், அய்யா ·போன் நம்பரை வாங்கிக்கோ” அவர் முன்னகர பலர் என்னை ‘பரவாயில்லியே இவன்’ என்று நோக்க ஒருவர் ”உக்காருங்க சார். ”என்று உபசரித்து ”இப்பதான் வாறேளா?” என்றார்.

சினிமாவுக்குப்போன பிறகு இன்னும் சிக்கல். ”…சார்தான் பாலாவோட நான் கடவுள் சினிமாவுக்கு எழுதறார்…தெரியும்ல?”என்றால் உடனே ஏழெட்டு தலைகள் திரும்பிப் பார்க்கும். அப்பால் நின்று பல்லை நோண்டுபவரும் குச்சியை எறிந்துவிட்டு திரும்பிப்பார்ப்பார். ஏழெட்டு பேர் கண்களில் சிறு மின்னல்கள். அறிமுகப்படுத்தப்பட்ட நடுவயது வெள்ளைச்சட்டைக்காரர் ஆர்வமாக ”யாரு சார் ஹீரோ?”

”ஆரியா”

”நல்ல பையன். இப்பக்கூட கஜினிண்ணு ஒரு படம் வந்ததே?”

”அது சூரியா. இது ஆரியா”

உடனே ஒருவர் புகுந்து ”அறிந்தும் அறியாமலும் படத்தில வில்லனா வருவாரே”

இன்னொருவர் ”அதுக்குப்பிறகு மூணுபடம் வந்தாச்சு. பட்டியல்,வட்டாரம், ஓரம்போ….”

”அய்யர்ரு வீட்டு பையனா? நார்த் இண்டியன் மாதிரி இருக்கானே?”

”மலையாளத்தான். ஜம்ஷத்துண்ணு பேரு…”

வெள்ளைச்சட்டை ஒளி பெற்று ”ஆமா…தீப்பிடிக்கத் தீப்பிடிக்கண்ணு ஒரு பாட்டுக்கு ஆடுவானே… என்ன சார் பாட்டு அதெல்லாம்? வைக்கப்படாத எடத்தில கைய வைச்சிட்டு அப்டி ஆட்டியாட்டி ஆடுறான்…”

”தெரியல்ல சார்…அந்தப்படம் நான் பாக்கல்லை”

”டிவியிலே போடுறானே அடிக்கடி….” திருப்தியுடன் ”… அவன் ஆளு எப்டி சார் ?”

”ரொம்ப நல்ல மாதிரி ”

”அப்டியா? இந்த நடிகனுங்கள்லாம் ஒருமாதிரின்னு சொல்லுறாங்களே”

”அதெல்லாம் இல்ல சார். இவரு ரொம்ப நல்ல டைப்”

”இப்ப நாங்கள்லாம் பாக்க வந்தா மதிப்பாரா சார்? அந்த டேன்ஸில அவரோட எக்ஸ்பிரஷன்ஸ் ஆக்சுவலா பாத்தா அரூமையா இருக்கும்… ஹீரோயின் யாருசார்?”

”பூஜா”

”அவளா? சிங்களத்துக்காரி இல்ல? அவதானே ஆரியாகூட லவ்வுண்ணு சொன்னாங்க?”

”அது தெரியல்ல சார்”

”அவட்டே நீங்க பேசியிருக்கீங்களா சார்? அவ நம்மளயெல்லாம் பாத்தா எப்டி, பேசுவாளா இல்ல….”

மீண்டு வரவே முடியாது. எப்படியும் கடைசியில் ஒரு கேள்வி. உடனே எனக்கு தொண்டை அடைத்து கண்ணீர் மல்கி விடும். ”பாலா எப்ப சார் படத்த முடிப்பார்?”

ஆகவே நான் எழுத்தாளனே இல்லை. சாதாரண ‘பீயெஸ்ஸென்னெல்’ மட்டுமே

[முதல்பிரசுரம் 2005, மறுபிரசுரம் ]

முந்தைய கட்டுரைஇருநாய்கள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74