அருகர்களின் பாதை 11 – மகாஸ்ருல், தௌலதாபாத், எல்லோரா

இன்றைய பயணம் பெரும்பாலும் சாலையிலேயே கழிந்தது. காலையில் எழுந்ததும் விடுதியில் இருந்து கிளம்பி விடியும் நேரத்தில் நாசிக் ஔரங்காபாத் சாலையில் இருபத்தைந்து கிமீ விலகியுள்ள கஜபாத குன்றுகளை அடைந்தோம். குளிரில் காலைப்பயணம் . சிலசமயம் உற்சகாமாகப்பேச்சு நிகழும். பலசமயம் மௌனம்.

புகைப்படலம் போலத்தெரிந்த வானப்பின்னணியில் கஜபாத மலையை தூரத்தில் இருந்தே கண்டோம். பெரும்பாலான சமணக் குன்றுகளுக்கு இருக்கும் அதே அமைப்பு. சுற்றிலும் பிரம்மாண்டமான நிலவெளி. நடுவே ஒரு இயற்கையான வட்டக்கோபுரம் போல மலை. காற்று அரித்துஅரித்துக் கதம்பர்களின் கோயில்களில் உள்ள வட்டத்தூண்களின் அமைப்பை உருவாக்கியிருந்தன. இந்த மலைகள்தான் அந்தத் தூண்களுக்கான முன்வடிவம் போலும்.

தீர்த்தராஜ் கஜபாதா என்ற பெயரில் சமண நூல்களில் குறிப்பிடப்படும் இந்தக் கோயில் மகாஸ்ருல் என்னுமிடத்தில் இருக்கிறது. கஜபாத மலைக்குக் கீழே ஒரு திகம்பர் சமணமடம் உள்ளது. பெரிய மடம். பல கான்கிரீட் கட்டிடங்கள். அங்கே ஒரு சமண உண்டுறை பள்ளியும், ஆலயமும், முதியோர் இல்லமும் உள்ளது. நாங்கள் சென்றபோது ஓர் ஆனந்த அதிர்ச்சி. நாங்கள் ஒரு ராஜஸ்தானியப் பயணக்குழுவை சிரவணபெலகொலாவில் பார்த்திருந்தோம். பின்னர் வேணூர், கர்க்களா, வரங்கா எனப் பார்த்துக்கொண்டே வந்தோம். கடைசியாகக் கும்போஜில் அவர்களை மீண்டும் பார்த்தோம். வண்டிதான் நின்றது. எல்லாரும் அதிகாலையிலேயே மேலே சென்றிருந்தார்கள்.

நாங்கள் அங்கே நின்றிருந்தபோது ஒரு பெரியவர் வந்து இந்தியில் விசாரித்தார். உடைந்த இந்தியில் நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வருவதைச் சொன்னோம். குளித்துவிட்டு வரும்படி சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் தாமதித்துப்  புரிந்துகொண்டோம். மேலும் கொஞ்சம் தாமதித்துத்தான் அவர் நாங்கள் காரிலேயே இரவுப்பயணம் செய்திருக்கிறோம் என்று எண்ணுகிறார் என்று புரிந்தது. இல்லை, விடுதியில் தங்கியிருக்கிறோம் என்றேன். உங்களுக்குத் தங்குமிடமோ உணவோ தேவையா என்றார். உணவு தேவை என்றதும் உணவுச்சாலைக்கு அழைத்துச்செல்லும்படி சொல்லி ஆளைக் கூடவே அனுப்பினார்.

காலையில் உணவு அவல் உப்புமா. சுவையாகவும் சூடாகவும் இருந்தது. சமணர்களின் கண்டுபிடிப்புதான் அவல். அவல உணவு, எளிய உணவு என்று அதற்குப்பொருள். வீடுகளில் எந்நேரமும் அவல் இருக்கவெண்டும் என்பது அவர்களின் நெறி. விருந்தினர் கைகால் கழுவி வரும்போது உணவு தயாராக இருக்கவேண்டும். அவல் அதற்குரியது

அந்தப் பெரியவர்தான் மடத்துக்கே தலைவர் எனத் தெரிந்து கொண்டோம். உள்ளே சென்று அவரிடம் பேசினோம். மேலே சென்று குகைக்கோயில்களை பார்த்து வரும்படி சொன்னார். 400 அடி உயரமான குன்றின்மீது உள்ளது இந்த ஆலயம். 435 படிகள் ஏறிச்செல்லவேண்டும். படிகள் மிகமிக செங்குத்தானவை. மூச்சு வாங்கப் பல இடங்களில் நின்றும் அமர்ந்தும்தான் மேலே சென்றோம். இந்தக் கோயில் சமீபகாலமாக விரிவாக மறு கட்டமைப்பு செய்யப்பட்டுப் புத்தம் புதியதாக உள்ளது. ஆனால் இரண்டாயிரம் வருடத் தொன்மை கொண்ட கோயில் இது என்று சொல்லப்படுகிறது. மலையுச்சியின் இயற்கையான குகையை செதுக்கி உருவாக்கிய கோயில்.

புராதன சமண நூலான சாந்திநாத புராணம், மைசூரின் சாமராஜ உடையாரின் முன்னோர்களால் இங்குள்ள கோயில் அறுநூறு வருடங்களுக்கு முன்பு விரிவாக்கிக் கட்டப்பட்டது என்றும் ஆகவே அந்த குகைக்கோயில் சாமார் குகை என அழைக்கப்பட்டது என்றும் சொல்கிறது. கோயில் முன்பக்கம் விரிவாக்கிக் கட்டப்பட்டு பார்ஸ்வநாதருக்கும் பிற தீர்த்தங்கரருக்கும் தனித்தனியான சன்னிதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பார்ஸ்வநாதரின் சிலை மார்பளவுக்குத்தான் செதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அதுவே பத்தடி உயரம் இருக்கும்.

மலைமுகட்டில் நின்று சுற்றிலும் விரிந்த நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நான் செல்லும் எல்லா ஊர்களிலும் நிலத்தின் அழகு என்னைக் கொள்ளை கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் நிலத்தின் அழகு இன்னொரு மன எழுச்சியை ஏற்படுத்துகிறது. இது என் நிலம் என்ற எழுச்சி. இந்த மண்ணில் அருகர்களும் முனிகளும் நடமாடியிருப்பார்கள். இந்த மண்ணில் ஒருவேளை நடராஜகுருவும் நித்யாவும் வந்திருக்கலாம். சுற்றிலும் மௌனம் திரண்டு எழுந்து நிற்கும் மலைகள் ஒரு சொல்லின் பருவடிவம் போலத் தோன்றின. ஓங்காரம் உச்சகட்ட ஒலியின் ஒலி. முழுமையான மௌனத்தின் ஒலி. ஆமோதிப்பின் ஒலியும்கூட. ஆம் ஆம் என ஆமோதித்தபடி நின்றன மலைகள்.

 கீழே வந்து பெரியவரை சந்தித்தோம். தமிழ்நாட்டு பதிவெண்ணைக் காரில் கண்டு அவர் வந்து எங்களை வரவேற்றிருக்கிறார். தமிழகத்தில் பொன்னூரில் உள்ள சமண ஆலயத்தின் டிரஸ்டிகளில் அவரும் ஒருவர் என்றார். நான் அங்கே சென்றிருக்கிறேன். ஆச்சாரிய குந்துகுந்தருக்கு [திருவள்ளுவர்] அங்கே கோயில் ஒன்று உள்ளது. பெரியவர் ஏதேனும் உதவி தேவையா என்று கேட்டார். நாங்கள் எல்லோரா செல்லும் திட்டத்தைச் சொன்னோம். எல்லோரா குகை வாயிலிலேயே சமணக் கோயிலும் பெரிய கல்விச்சாலையும் இருப்பதைச் சொல்லி அங்கே தங்கலாம் என்றார். அவரே தொலைபேசியில் கூப்பிட்டு நாங்கள் வருவதைச் சொன்னார்.

எங்கள் திட்டத்தில் அடுத்ததாக இருந்த இடம் பாண்டவலேனி குகைகள். ஆனால் அவற்றுக்குச் செல்லும் வழி மிக விலகிச்செல்வதாக இருந்தமையால் எல்லோராவே செல்லலாம் என முடிவெடுத்தோம். வழியில் ஓட்டுநரிடமிருந்து காரை வாங்கி வினோத் கொஞ்ச தூரம் ஓட்டினார். மிகச்சிறந்த ஓட்டுநர் அவர். ஆனால் பெரிய வண்டியின் அகலத்தைக் கணிக்கக் கொஞ்சம் தவறிவிட்டார். வழியில் நின்றுகொண்டிருந்த காரில் இருந்து ஒருவர் இறங்கியதும் அவரது புஜத்தில் வண்டியின் பக்கவாட்டு ஆடி இடித்து விட்டது. ‘தட்’ என்ற ஒலியுடன் கண்ணாடி உடைந்தது.

வினோத் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். திறந்த காரின் கதவில்தான் ஆடி முட்டியது என நினைத்துக்கொண்டோம். மனிதர் மேல் முட்டியது தெரியவில்லை. வினோத் ஒரேயடியாக ‘நான் பார்த்தேன், மனிதரை முட்டவில்லை. நான் சொல்கிறேன், நம்புங்கள்’ என வாதிட்டார். காரை நிறுத்தி ஒரு வாக்குவாதத்துக்கு இடமளிக்க வேண்டாம் என நினைத்தோம். அந்த வண்டியில் நிறையப்பேர் இருந்தார்கள். இருவர் அருகே நின்றிருந்தார்கள்.

நாங்கள் கொஞ்சதூரம் ஓட்டியபின் எவரும் பின்னால் வரவில்லை எனக்கண்டு நிதானமடைந்தோம். மெல்லிய ஒரு முட்டல்தான், எங்கள் வண்டிக்கும் பெரிதாக எந்த சேதமும் இல்லை. ஆனால் அடுத்த டீசல் நிலையத்தில் நிறுத்தியபோது எதிர்த்திசையில் குறுக்குவழியாக அவர்கள் வந்து எங்களைப் பிடித்துவிட்டார்கள். ஏழெட்டுபேர் இருப்பார்கள். எல்லாருமே முரட்டு இளைஞர்கள். வரும்போதே உரக்கக் கத்தியபடி வந்து காரை எட்டி உதைத்தார்கள். எங்கே டிரைவர், டிரைவர் யார் , அதைமட்டும் சொல்லு என்று கூச்சலிட்டார்கள். உச்சகட்ட கோபத்தில் கொந்தளித்த முகங்கள். அடிபட்டவர் கை சிவந்து வீக்கமடித்திருந்தது. அவன் தலையில் பட்டிருந்தால் இந்நேரம் செத்திருப்பானே என்றார்கள்.

நான் கும்பிட்டு முன்னால்சென்று மன்னித்துவிடும்படி கேட்டேன். கிருஷ்ணனும் “நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகிறோம், தீர்த்தாடனம் செல்கிறோம், மன்னித்துவிடுங்கள்” என்றார். நான் காவியாடையுடன் தாடியுடன் சாமியார்க்கோலத்தில் இருந்தேன்.ஆச்சரியமாக அத்தனைபேரும் அப்படியே அடங்கினார்கள். அப்போதுதான் தமிழகப் பதிவெண்ணைப் பார்த்தார்கள். ‘தமிழ்நாட்டில் இருந்து வந்து விட்டீர்கள். மராட்டியராக இருந்தால் நடப்பதே வேறு’ என்றார் ஒருவர்.

மிகச்சில நொடிகளுக்குள் நட்புடன் பேசத்தொடங்கினர்.’பார்த்துச்செல்லுங்கள். இவன் கையில் அடிபட்டிருக்கிறது’ என்றார்கள். மெல்லமெல்ல சுமுகமாகி சிரித்துப் பேசிக்கொண்டோம். வினோத் அருகே சென்று அவர்தான் வண்டியை ஓட்டினார் என்று சொல்லி அடிக்க வேண்டுமென்றால் அடியுங்கள் என்றார். சிரித்தார்கள். ‘போ சகோதரா…பார்த்துப்போ’ என்றார்கள்.

கிளம்பும்போது ஒரு பெரும் பதற்றம் மெல்ல வடிந்த நிறைவை அடைந்தோம். கிருஷ்ணன்’நல்லவேளை சார், தமிழ்நாட்டிலேன்னா அடி உறுதி… நண்பர் ஒருவர் அடிவாங்குவதை நானே பார்த்திருக்கிறேன்’ என்றார். சிரித்துப்பேசத்தொடங்கினோம். அவரவர் அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தோம்

நான்றிந்தவரை இவ்விஷயங்களில் நானறிந்தவரை எந்தவகையான அறமும் இல்லாத பகுதி என்றால் மதுரைதான். எவர் தவறால் நடந்திருந்தாலும் அன்னியருக்குச் சரமாரியாக அடிவிழும். இதற்கென்றே கூட்டம் சேரும். ஆள் வர வர அடிப்பார்கள். அதன்பின் ஊரே கூடிப் பஞ்சாயத்துப் பேசிக் கையில் இருப்பதை எல்லாம் பறித்துக்கொண்டு விரட்டி விடுவார்கள். சமயங்களில் காரையே பணயமாகப்பிடித்துக்கொள்வார்கள். போலீசுக்குப் போகலாமெனக் கெஞ்சினாலும் விடமாட்டார்கள். வெளிமாநிலப் பதிவெண் உள்ள வண்டி என்றால் கேட்கவே வேண்டாம். உள்ளூரில் ஏதாவது உறவோ அரசியல் பிடியோ இருந்தால் மட்டுமே தப்பிக்கலாம்.

வினோத் மிகவும் சோர்ந்துவிட்டார். “என் வாழ்க்கையில் நான் ஒரு மனிதன் மேல் வண்டியால் முட்டுவது இதுவே முதல்முறை. அடிபட்டவன் அன்பாக சிரித்துக் கையாட்டிக்கொண்டு சென்றான். அவனுக்கு நல்ல வலி இருக்கும். இருந்தாலும் விட்டுவிட்டான்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். மராட்டியனாக இல்லாததனால் விட்டுவிடுவதாகச் சொன்னதும். ‘பாயி’ [சகோதரா] என்ற அழைப்பும் மிகுந்த மனச்சங்கடத்தை அளித்தன.

வெகுநேரம் அதையே எண்ணிக்கொண்டிருந்தோம். ‘சொல்லி வச்சதுமாதிரி படிப்பினைகளா நடந்திட்டிருக்கு சார்’ என்றார் கிருஷ்ணன். உண்மையில் இந்தப் பயணத்தில் நம் கண்கள் கொஞ்சம் திறந்திருக்கின்றன. நம்மைச்சூழ வாழும் எளிய மனிதர்களைக் கொஞ்சம் கவனிக்கிறோம், அவ்வளவுதான்.

எல்லோராவை நான்குமணிக்குச் சென்றடைந்தோம். வழிகேட்ட இடத்திலேயே ஒருவர் சொல்லிவிட்டார், இன்று எல்லோரா விடுமுறை என்று. ஆகவே நேராக தௌலதாபாத் கோட்டைக்குச் சென்றோம். தேவகிரி என்று இந்தக் கோட்டை முன்பு அழைக்கப்பட்டது. எல்லோராவை உருவாக்கிய ராஷ்டிரகூடர்கள் இந்தக் கோட்டையைக் கட்டியிருக்கலாம் என்று ஆய்வாளர் கருதுகிறார்கள். ராஷ்டிரகூடர்களின் வீழ்ச்சிக்குப்பின்னர் அவர்களுக்குக் கீழே சிற்றரசர்களாக இருந்த யாதவர்கள் இக்கோட்டையை மையமாகக் கொண்டு தனியரசை உருவாக்கினார்கள். அவர்களே யாதவப்பேரரசை உருவாக்கியவர்கள். 1187 முதல் 1318 வரை யாதவர்களின் தலைநகரமாக இந்தக் கோட்டைநகர் இருந்தது.

அல்லாவுதீன் கில்ஜி இக்கோட்டையைப் பிடிக்க நீண்ட முற்றுகை இட்டார். கடைசியில் யாதவர்கள் சரண் அடைந்து கப்பம் கட்ட ஒத்துக்கொண்டனர். 1318 குத்புதீன்முபாரக் கில்ஜி தேவகிரியை வென்று யாதவ மன்னர்குலத்தையே கொன்றழித்தார். கடைசி மன்னர் ஹரபலதேவர் உயிருடன் தோல் உரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல், தலைநகர் வாசலில் பலநாள் தொங்கவிடப்பட்டது. யாதவ அரசு முடிவுக்கு வந்தது. கோட்டை தௌலதாபாத் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தௌலதாபாத் இன்றும் வரலாற்றில் பேசப்படுவது இன்னொரு காரணத்துக்காக. 1327ல் சுல்தான் முகமது பின் துக்ளக் டெல்லியில் இருந்து தௌலதாபாதுக்குத் தலைநகரை மாற்றினார். ஒட்டுமொத்தக் குடிமக்களையும் இங்கே வரச்செய்தார். அதில் பெருமளவுக்கு மக்கள் மடிந்தனர். இங்கே கடுமையான குடிநீர்ப்பஞ்சம் இருந்தமையால் மீண்டும் டெல்லிக்குத் தலைநகரைக் கொண்டுசென்றார். எஞ்சியவர்களில் கணிசமானோர் மடிந்தனர்.

ஆனால் அந்த முடிவு உண்மையில் மிக விவேகமானது. அன்றே தலைநகர் மாற்றப்பட்டிருந்தால் பின்னர் நிகழ்ந்த மொகலாயப் படையெடுப்பு – நாதிர்ஷா அகமதுஷா அப்தாலி போன்றவர்களின் படையெடுப்புகளில் இருந்து தலைநகரைப் பாதுகாத்திருக்கலாம். பெருங்கொலைகளை தவிர்த்திருக்கலாம்

தௌலதாபாத் மலைகளைத் தாண்டி வரவேண்டிய தொலைவில் சமநிலத்தில் உள்ளது மட்டும் அல்ல காரணம், இது வெல்லவே முடியாத கோட்டை. இந்தியக் கோட்டைகளிலேயே அபூர்வமானது. ஒர் உயரமான மலைமேல் உள்ளது இந்தக் கோட்டை. கோட்டைக்குள் செல்ல மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட வளைவான சுருள்பாதை மூலமே வழி உள்ளது. அந்த வழியல்லாமல் எந்த திசையிலும் இந்தக் கோட்டைக்குள் செல்ல முடியாது. துக்ளக் கோட்டையைச் சுற்றி கோட்டைகள் என ஆறடுக்கு பாதுகாப்பு வளையங்களை உருவாக்கியிருந்தார். பிரம்மாண்டமான அகழிகள் இரண்டு நகரை வளைத்துச் சென்றன.

இங்கே ஒரு பெரும் ஏரியை வெட்டியபின் தலைநகர்மாற்றம் செய்யலாமென துக்ளக் எண்ணியிருந்தால் இந்திய வரலாறே வேறு திசையில் சென்றிருக்கும். ஆனால் துக்ளக் எந்த அளவுக்கு அறிவாளியோ அந்த அளவுக்கு அகங்காரி. அவருக்கு ஆலோசகர்களே இல்லை, துதிபாடிகளை மட்டுமே அவர் தன்னுடன் வைத்திருந்தார். வரலாற்றின் கொடுங்கோலர்கள் எல்லாமே ஒரே வார்ப்புதான்.

1347 முதல் டெல்லி சுல்தான்களின் வலிமை குறைய தளபதிகள் தன்னாட்சி பெற்றார்கள். பாமினி சுல்தான்கள் தக்காணத்தில் வலுவாக உருவெடுத்தார்கள். 1499 முதல் இந்தக்கோட்டை அகமதுநகர் சுல்தானின் ஆட்சியின்கீழ் வந்தது. 1550 வாக்கில் மாலிக் அம்பர் என்ற பிராந்திய நிர்வாகி இக்கோட்டையை ஆண்டார். அவர்தான் காட்கி என்ற ஊரைக் கோட்டைக்குக் கீழே உருவாக்கினார். அதுதான் இன்று ஔரங்காபாத் என அழைக்கப்படுகிறது.

1633ல் இக்கோட்டை ஷாஜகானால் கைப்பற்றப்பட்டது. அதன்பின் 1724ல் ஹைதராபாத் நிஜாமால் கைப்பற்றப்படும்வரை இது முகலாயர்களின் தெக்காணத்துத் தலைநகரமாக இருந்தது. நடுவே இரண்டுவருடம் மராட்டிய பேஷ்வா சதாசிவ ஷாகு இக்கோட்டையைக் கைப்பற்றி ஆண்டார். மற்றபடி சுதந்திரம் கிடைக்கும்வரை ஹைதராபாத் நிஜாமின் ஆட்சியில்தான் இருந்தது.

மாலையில் கோட்டைமேல் ஏறிச்சென்றோம். இடிந்த பெரும் மதில்கள். பீரங்கித்தாக்குதலை எதிர்கொள்ளும்படி பெரிய கற்களால் வளைவாகக் கட்டப்பட்டிருந்தன. இந்தக் கோட்டையின் கீழ் அடுக்குகள் மகாகட் என்றும் உள்ளடுக்குகள் காலாகட் என்றும் அழைக்கப்படுகின்றன. குதிரைகள் கட்டுவதற்கான கல்மண்டபங்கள், வீரர்கள் தங்கும் அறைகள், வரிசையாக இருந்தன. வலப்பக்கம் யானைக்குளம் என்றழைக்கப்படும் பெரிய குளம். இதுவே கோட்டையின் முக்கியமான நீராதாரம்.

அப்பால் பழைய ஆலயம் ஒன்று இடித்துக் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. யாதவர்களால் கட்டப்பட்ட மாபெரும் சமணக்கோயில் இது. துக்ளக் அதை இடித்து ஒரு மசூதியாக ஆக்கினார். மசூதியாகக் கட்டப்பட்ட பகுதி தனித்துத் தெரிந்தது. சித்திரத்தூண்களில் இருந்த அருகர் சிற்பங்கள் சிற்பிகளைக்கொண்டு செதுக்கி நீக்கப்பட்டிருந்தன. அங்கே அகற்றப்பட்ட ஒரு சிலையைக் கோட்டையின் அடித்தளக்கல் ஒன்றில் கண்டோம். இப்போது ஒரு சிமிண்ட் சிலையை அந்தக் கருவறைக்குள் நிறுவியிருக்கிறார்கள், பாரதமாதா சிலை. கோயிலும் பாரதமாதாகோயில் என அழைக்கப்படுகிறது.

1948ல் ஹைதராபாத் நிஜாம் தோற்கடிக்கப்பட்டு இந்த நிலப்பகுதி இந்தியக் குடியரசுடன் இணைக்கப்பட்டதும் உள்ளூர்க்காரர்களால் இச்சிலை இங்கே வைக்கப்பட்டுவிட்டது. இன்று பார்க்கையில் பொருத்தமற்ற ஒரு வரலாற்றுப்பிழையாகவே இது தென்படுகிறது. நேற்று என்பது இன்று நாம் திருத்திக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.

வலப்பக்கம் மிகப்பெரிய ஒரு ஸ்தூபம். இது சாந்த்மினார் என அழைக்கப்படுகிறது. சிவப்புக்கல்லில் உருவாக்கப்பட்ட கம்பீரமான கட்டிடம் இது. மூன்று அடுக்குகள் கொண்ட ஒரு பெரும் தூண். குதுப்மினாருக்கு நிகரானது. 1447ல் சுல்தான் அகமது ஷா பாமினி இதைக்கட்டினார் . குதுப்மினாருக்கு அடுத்தபடியாக உயரமான மினார் இது. உள்ளே சுழல்படிகள் செல்கின்றன. உள்ளே எவரையும் அனுமதிப்பதில்லை. 65 மீட்டர் உயரமானது.

கோட்டையின் மிக வியப்பூட்டும் அம்சம் மேலே செல்லும் வழிதான். பாறைக்குடைவுப்பாதை மிக இருட்டானது. அதைத் தாண்டிச்செல்ல இன்று வழி அமைத்திருக்கிறார்கள். நாங்கள் அந்த இருண்ட வழியாக டார்ச் அடித்துத் தடுமாறிச் சென்றோம். மேலே ஏராளமான வௌவால்கள். புழுதிவாசனை. இருட்டு வாசனை. அந்த வாசல்வழியாக உள்ளே வரும் எதிரிகளை ஏமாற்றி மறுபக்கம் அகழியில் விழச்செய்யும் போலி வாசல்கள் பல உள்ளன, அவை இப்போது மூடப்பட்டுள்ளன. பல வழிகள் பொய்யானவை. மேலே இருந்து எதிரிகள் மேல் கொதிநீரைக் கொட்டும் துளைகள் ஏராளமாக உள்ளன.

கோட்டைக்கு மேலே அரண்மனை உள்ளது. கல்லால் கட்டப்பட்டு சுதை பூசப்பட்ட சுவர்கள் கொண்டது. கிட்டத்தட்டக் குன்றின் நெற்றியில் உள்ளது இந்தக் கட்டிடம். இங்கிருந்து சுற்றிலும் உள்ள மலைகளையும் நிலத்தையும் காணலாம். ஒரு பிரம்மாண்டமான கிண்ணத்துக்கு நடுவே இருப்பது போல் இருந்தது. மலைகளே மதில்களாக சூழ்ந்துகொண்டதுபோல. மாலை வெயில் மலைகளின் உச்சியில் சுடர கீழே நிலத்தின் விரிவில் நிழல்கள் நீண்டு நீண்டு சென்றன. கண்ணெதிரே காட்சி மாறிக்கொண்டே இருப்பதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

இந்த மலைக்கு உச்சிநுனியில் ஒரு சிறு குகைக்கோயில் உள்ளது. இது ஒரு சமணக்குகை. அருகே ஒரு சமண முனியின் பாதுகைத்தடம் இருக்கிறது. இங்கே ஜனார்தன் சுவாமி என்ற இந்துத் துறவி தவம்செய்தார் என்று சொல்லப்படுகிறது. இவர் பாமினி சுல்தான்களின் கீழே கோட்டைப்பொறுப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் துறவு பூண்டு ஆன்மீக ஞானியாக ஆனார். அவருக்கு இக்குகையில் தத்தாத்ரேயர் காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது. ஆகவே இந்தக் குகை இன்று தத்தாத்ரேயர் குகை என்று சொல்லப்படுகிறது.

இருட்டியபின் எல்லோராவுக்கு வந்தோம். கஜபாத ஆலயத்துப் பெரியவர் கூப்பிட்டுச்சொன்ன மடத்துப் பொறுப்பாளர் எங்களைத் தொலைபேசியில் அழைத்து வரும் வழியை விவரித்தார். மடத்தில் இடம் கொடுத்து ‘இது உங்கள் இடம், என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்’ என்றார். ‘எல்லாருக்கும் இங்கே இடம் கொடுப்பதுண்டா?’ என்று கேட்டோம். ‘இல்லை, சமணப் பயணிகளுக்காகக் கட்டப்பட்டவை இவை. அனைவருக்கும் அளித்தால் எங்களுக்குக் கட்டுப்படியாகாது. ஆனால் உங்களைப் பார்த்தாலே தெரிகிறதே’ என்றார்.

இன்றிரவு இந்த சமண ஆலயத்து வளாகத்தில் தங்கவிருக்கிறோம். இங்கே ஒரு பெரிய ஆதரவற்றோர் விடுதியும் பள்ளியும் இருக்கிறது. அவர்களின் பாடல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. வசதியான அறை. இளங்குளிர் இருக்கிறது. ஆனால் ஈரமற்ற காற்று. மலையேறிய களைப்பில் உடல் சோர்ந்தாலும் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்

மேலும்…

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 10 – லென்யாத்ரி, நானேகட்
அடுத்த கட்டுரைமேலான உண்மை – சீனு கடிதம்