குடி.கடிதங்கள்

ஜெயமோகன் ஜி,

தங்களின் குடி குறித்த கட்டுரை வெகு அருமையான ஒன்று. இலக்கியங்களில் வெறுமே பொழுது போக்கவும், வேறுபட்ட கதாபாத்திரங்கள் ஊடே பயணித்து வருவதுமான அனுபவம் தருபவை சில. அறிவுசார்ந்த தகவல்களைக் கொண்ட ஆராய்ச்சியும், அனுபவும் ஒருங்கே அமைந்து கிடக்கும் தகவல் களஞ்சியத்துள் வாசகன் பயணிக்கும் அனுபவம் தருபவை சில. வாசகன் எழுத்தாளர்களின் எண்ணங்களின் மீதமர்ந்து தரிசிக்கும் மாறுபட்ட அனுபவங்கள் தருபவை பல. அவ்வகையில் படிக்கும் வாசகனை திருத்தும் படியும், அவனுக்கே ஆசிரியராகவும் அமைந்து விடும் சில கட்டுரைகள். தங்களின் கட்டுரையால் எனது நண்பர் ஒருவருக்கு தற்போது குடி கசப்பதை தந்து இருக்கிறது.

தங்களின் குடி குறித்த கட்டுரை சாராயலோகத்தின் உறுப்பினர்களின் உடல் பிரச்சினைகளை ஆதாரத்துடன் அலசி ஆராய்ந்து அவர்களுக்கு தனது நிலைமையை புரிய வைக்கும் மருந்தான மகத்துவம் வாய்ந்தது.

எனது உற்ற தோழர் ஒருவருக்கு தங்களின் கட்டுரையினை வாசிக்கும்படி வேண்டி இருந்தேன். படித்தவுடன் உங்கள் கட்டுரையினைப் பற்றி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார். கையில் கிளாஸை எடுக்கும் போதெல்லாம் நோயாளி போன்ற உணர்வேற்படுவதாகவும், குடிக்க வெறுப்பேற்படுவதாகவும் சொன்னார். எனது நண்பருக்கு இவ்வுணர்ச்சியினை உருவாக்கிய தங்களின் கட்டுரையினை என்னவென்று சொல்லி பாராட்டுவது. தங்களைப் போன்ற எழுத்தாளராறென்றால் வார்த்தைகளில் விளையாடி இருக்கலாம். இருப்பினும் மருந்து போன்ற கட்டுரை தந்தமைக்கு நன்றிகள் கோடி….

வாழ்க பல்லாண்டு !!!! வாழ்க வளமுடன் !!!! 

நட்புடன்

தங்கவேல் மாணிக்கதேவர்

கோயமுத்தூர். 
 

 

 

அன்புள்ள ஜெ

குடி கட்டுரை மிகவும் அருமையான ஒன்று. குடி ஒரு நோய் என்ற கருத்து நம் சமூகத்தில் ஆழமாக வேருன்றவேண்டிய ஒன்று. நெடுங்காலமாக குடி ஒரு ஒழுக்கக்கேடு என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணங்களெல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டன. அந்த மாற்றத்தை ஆற்றியதில் சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் முக்கியமான பங்கு உண்டு. குடியை சிறப்பித்துக் கொண்டாடி இப்போது எல்லா இளைஞர்களும் குடிப்பதை கடைப்பிடிப்பதை ஆரம்பித்துவிட்டார்கள். சினிமாவில் கதாநாயகன் நல்லவன் வல்லவன் உற்சாகமானவன் ஆனால் குடிப்பவன் என்றுதானே காட்டுகிறார்கள். ஆகவே இப்போதெல்லாம் குடி மிகவும் பெருகிவிட்டிருக்கிறது. இன்றைய தினம் குடி ஒரு நோய் என்பதை சொல்லி நிறுவிவிடவேண்டிய அவசியம் உள்ளது. உங்கள் கட்டுரை அது எந்த அளவுக்கு அபாயகரமான நோய் என்பதைக் காட்டியது நன்றி

சோமசேகரன்
அன்புள்ள ஜெ

குடி கட்டுரை அருமை. குடிப்பழக்கம் பற்றி பேசும்போது அளவோடு குடிப்பது நல்லது என்ற பேச்சு எப்போதும் வருகிறது. அளவோடு நெடுங்காலமாகக் குடிக்கும் சிலரை உதாரணம் காட்டுவதும் உண்டு. ஆனால் குடிப்பழக்கம் என்ற நோய் சிலருக்கு உடனடியாக குடிநோய் பீடித்துவிடும் .சிலருக்கு ஒன்றும் ஆகாது. அந்த உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல விஷயம்

சண்முகம்

 

குடி

முந்தைய கட்டுரைஇரண்டு சில்லறைக் கருத்துக்கள்
அடுத்த கட்டுரைகுயில்:கடிதங்கள்