அருகர்களின் பாதை 9 – கார்லே, ஃபாஜா, ஃபெட்சா

பூனாவில் இருந்து காலையில் கிளம்பிச் சென்றோம். செல்லும் வழியிலேயே ஃபாஜா குகைகள் இருக்கின்றன என்று கூகிள் மேப் சொல்லியதனால் அதைத் தேடிச்சென்றோம். ஆனால் நாங்கள் சென்ற குக்கிராமத்தில் அந்தக் காலையில் அரைத்தூக்கத்தில் விழித்திருந்த எவருக்கும் ஃபாஜா குகை பற்றி எதுவும் தெரியவில்லை. ஒரு பெரியவர் கார்லே குகைகளைப் பற்றிச் சொல்லி அங்கே செல்லும்படி ஆலோசனை சொன்னார்.

கார்லே குகைக்கு வழி விசாரித்துச் சென்றோம். மையச்சாலைக்கு மீண்டும் வந்து கார்லே குகைக்குச் சென்று சேர்ந்தோம். செல்லும் வழியில் ஓர் இடத்தில் காலையுணவு. இங்கே புகழ்பெற்ற காலையுணவு என்பது பாவ்பாஜி. அது ஒரு கலவை உணவு. நாட்டு ரொட்டிக்குள் உருளைக்கிழங்கு போண்டாவை வைத்து மிளகாய்ப் பொடியுடன் சாப்பிடுகிறார்கள். தொட்டுக்கொள்ளப் பச்சைமிளகாய்.

கார்லேவை நெருங்க நெருங்க சந்தேகம் வந்தது. கார்லே குகைகள்தானா? பெரும் கூட்டம் . சாரிசாரியாக வாகனங்கள். கீழே மலையடிவாரம் முதல், படிகள் முழுக்க எறும்பு வரிசை போல மக்கள். வழியெங்கும் சோப்பு சீப்பு கண்ணாடி விற்பனை. ஆடல் பாடல். நடனமாடிச்செல்லும் பெண்களின் வரிசை. மேலே இடித்து முண்டியடித்துத்தான் ஏற முடிந்தது. ஆயிரம் படிகள் இருக்கும்.

பூனாவிலிருந்து 70 கிமீ தூரத்தில் உள்ள மூன்று குகைகள் முக்கியமானவை. இவை சஹ்யாத்ரி மலையில் உள்ளவை. இந்த மலை, வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் பிரிப்பது. இந்த மலைக்கணவாய்கள் வழியாகவே தக்காணப்பீடபூமியுடன் புராதன வணிகப்பாதைகள் அமைந்தன. ஆகவே இந்த வணிகப்பாதைகளெங்கும் சமணமும் பௌத்தமும் தழைத்தன.

ஃபெட்ஸா, கார்லே, ஃபாஜா ஆகிய மூன்று குகைவிகாரங்களும் பௌத்த மதத்தைச்சார்ந்தவை. ஆனால் அவை எல்லாமே சமண நிலையங்களும்கூட. வணிகர்கள் தங்குமிடமும் பண்டகசாலைகளும் இப்பகுதியெங்கும் இருந்திருக்கலாம். ஆகவேதான் இங்கே இந்த குகைவிகாரங்கள் பெரும் புரவலர் ஆதரவுடன் வளர்ந்தன.

டி டி கோஸாம்பி இந்த குகைகளைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். எப்படி வணிகப்பாதைகள் பண்பாட்டுப் பரிமாற்ற மையங்களாக அமைந்தன என்று அவர் கார்லே குகைகளை ஆதாரமாகக் கொண்டே பேசியிருக்கிறார். நான் இக்குகைகளை இப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறேன்.

இந்தியாவின் பழமையான குகை விகாரங்களில் ஒன்று என கார்லே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைகள் இவை. கிபி பத்தாம் நூற்றாண்டுவரைக்கும் இவை சிறப்பாகச் செயல்பட்டு வந்திருக்கின்றன. இது மிகமுக்கியமான வணிகப்பாதையில் அமைந்துள்ள ஒரு இடம் என்று சொல்லப்படுகிறது. இயற்கையான கணவாய்கள் வழியாக இந்த இடம் வழியாகவே சாலைகள் அக்காலத்தில் சென்றிருக்கின்றன. கீழே பண்டகசாலைகள் அமைந்த கிராமங்கள் இருந்தன.

மகாசாங்கிக பௌத்த மரபைச்சேர்ந்தவை இந்த குகை விகாரங்கள். தேரவாதம் என்றும் இந்தப்பிரிவு சொல்லப்படுகிறது. ஹீனயானம் என இதை மகாயான பௌத்தர்கள் சொல்வார்கள். இவை அக்காலத்தில் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றவையாக இருந்தன. ஆனால் இந்தக் குகைகளில் சமணர்களும் சாதாரணமாக வந்துசென்றிருக்கிறார்கள். இதை அக்காலகட்டத்து கல்விச்சாலை என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இங்கே 15 மீட்டர் உயரமான இரு கல் கொடிமரங்கள் இருந்தன. ஒன்றுதான் இப்போதுள்ளது.

இக்குகைகள் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் இந்த மலைப் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் குகைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கார்லே குகைகள் உறுதியான கருங்கல் பாறைகளைக் குடைந்து செய்யப்பட்டவை. இவற்றின் சிறப்பம்சமே லாடவடிவிலான மாபெரும் கூரைமுகடு வளைவுகள்தான். மரத்தாலான கட்டிடங்களின் கலையழகைக் கல்லில் கொண்டுவருவதற்கான முயற்சி இது.

மேலே சென்றபோது ஒன்று தெரிந்தது, அந்தப் பெரும்கூட்டம் முழுக்க கார்லே குகை வாசலில் இருந்த இந்து ஆலயம் ஒன்றுக்குத்தான் சென்றுகொண்டிருந்தார்கள். மிகமிகச்சிலரே அக்கோயிலுக்குப் பின்னால் இருந்த குகைகளுக்குள் சென்றவர்கள். ஆறுதலாக இருந்தது. கார்லே குகைகள் செதுக்கப்பட்ட காலகட்டத்தில் இப்பகுதி முழுக்க கோலிகள் என்ற பழங்குடிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் பௌத்தர்களாகவும் அதேசமயம் தங்கள் கடவுளான ஏகவீரரை வழிபடுபவர்களாகவும் இருந்தார்கள். கார்லே குகைகளின் இடது வாசல் விளிம்பில் ஏகவீரரின் சிலை செதுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அச்சிலைக்குப் பூஜைசெய்தும் வந்தார்கள்.

கோலிகள் ஏகவீரருக்கு உயிர்ப்பலி கொடுத்து வந்தார்கள். பௌத்தம் அதைத் தடைசெய்தாலும் வருடத்தில் ஒருமுறை இம்மலையருகே வேறு ஒரு இடத்தில் பலி கொடுக்கலாமென்ற நெகிழ்வையும் அனுமதித்தது. பௌத்தம் அழிந்தபின் கோலிகள் அங்கேயே ஏகவீரரை வழிபட்டனர். இருநூறாண்டுகளுக்கு முன் வெளிவாசல் விளிம்பில் இருந்த அச்சிலையை உள்ளடக்கி ஒரு கருவறை கட்டிக் கோயிலாக்கி வழிபட ஆரம்பித்தார்கள். கோலிகளின் முக்கியமான புனிதத் தலமாக அந்த இடம் இன்றிருக்கிறது. பின்னால் உள்ள மாபெரும் குகைவிகாரம் அவர்களுக்குப் பொருள்படவில்லை.

கார்லே குகை விகாரம் ஐம்பதுக்கும் மேற்பட்ட விகாரங்களும் இரண்டு சைத்யங்களும் கொண்டது. புத்த பீடிகை அல்லது புத்தர் சிலையுள்ள கருவறை அமைந்த வழிபாட்டிடம் சைத்யம் எனப்படுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கும் அறைகளும் வகுப்பு நடக்கும் கூடங்களும் கொண்ட இடங்கள் விகாரங்கள் எனப்படுகின்றன. இவற்றில் மைய சைத்யம் பிரம்மாண்டமானது. மிகப்பெரிய உருளைத் தூண்களுக்கு மேலே வளைவான மேல்விதானம். தூண்கள் மீது பெரும் எருதுகளிலும் யானைகளிலும் அமர்ந்த தேவதேவியர்.

குகைக்கு வெளியே இருபக்கமும் பதினைந்தடி உயரமான யானைச் சிற்பங்கள் தூண்களில் இருந்து புடைத்தெழுந்து மேலே தேவர்களுடன் நெருக்கி நின்றன. கல்லில் இருந்து திமிறி எழுவது போல. தேவியர் கூந்தல் அலங்காரங்களும் அணிகளும் எல்லாம் யவன பாணியிலானவை. தேவியர் முகங்கள் கூட வெள்ளைக்காரிகள் போலிருந்தன. இக்கோயில்களைக் கட்டப் பெரும் நிதியுதவிசெய்தவர்கள் யவன வணிகர்கள். சாதவாகனர் காலகட்டம் என்பது இந்தியப்பண்பாட்டின் பொற்காலம். அன்று உலகமே இந்தியாவை நோக்கிக் கல்விக்கும் வணிகத்துக்கும் தேடி வந்துகொண்டிருந்தது.

கார்லே குகைவிகாரங்கள் இருநூறாண்டுக்காலம் தொடர்ந்து செதுக்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கின்றன. சமீபகாலமாக சில ஆய்வாளர்கள் இவை பௌத்த வணிகர்கள் தங்குவதற்கான விடுதிகள் மட்டுமே, ஆகவேதான் இத்தனை சிற்பவேலைகள் இங்குள்ளன என்று சொல்கிறார்கள். ஆழமான இந்திய வெறுப்பு மட்டுமே தெரியும் ‘ஆய்வு’ இது. இக்குகைகளைப் பார்க்கும் எவரும் இது ஒரு பல்கலைக் கழகம் என்பதை உணர முடியும். இதன் கல்விச்சாலை அமைப்புகளை இந்தியா முழுக்கவே காணமுடியும். எந்த வணிகரும் இந்த உச்சத்தில் வந்து ‘ஓய்வு’ எடுக்கவேண்டிய அவசியமில்லை. மரத்தாலான பெரிய கட்டிடங்களும் தாசிகளும் எல்லாம் கீழே இருந்திருக்கும். வணிகர்கள் தங்க இத்தனை பெரிய கலைக்கூடத்தை சாதவாகன மன்னர்கள் அமைக்கவேண்டிய அவசியமும் இல்லை. இடதுசாரிகளும் ஐரோப்பிய இனவாதிகளும் எழுதும் வரலாறு அவர்களின் அடிமைகளால் மெல்லமெல்ல நம் மீது சுமத்தப்படுகிறது.

கார்லே குகைகளில் நெடுநேரம் நிற்க முடியவில்லை. அங்கேயிருந்த சந்தடி எங்களைத் துரத்தியது. அங்கிருந்து ஃபாஜா குகைகளுக்குச் சென்றோம். கார்லேயில் வழி விசாரித்தபோது நாங்கள் ஏற்கனவே சென்று திரும்பிய அதே ஊரில்தான் அக்குகை விகாரங்கள் இருப்பதை அறிந்துகொண்டோம். திரும்பிச்சென்று புழுதி பறக்க மலையடிவாரம் வரை சென்றோம்.

ஃபாஜா குகைகள் கிட்டத்தட்ட 22 குகைகளின் தொகுதி. கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை இவை. கார்லே குகைகளின் அதே அமைப்பு கொண்டவை. காலத்தால் இன்னும் முந்தையவையாக இருக்கலாமென சொல்லப்படுகிறது. கார்லே குகைபோலவே உயரமான வளைந்த லாடவடிவ கூரைச்செதுக்கு. நடுவே புத்த பீடிகை. ஒருவர் அமர்வதற்கான கட்டில் போன்ற பீட அமைப்பு கொண்ட செதுக்கு அறை. குளிர்ந்து சில்லென்று இருந்தது. குளிர்காலத்தில் இளம்சூடாக இருக்கும்.

இக்குகைகளில் ஏராளமான புடைப்புச்சிற்பங்கள் உள்ளன. அவை இந்து தொன்மங்களைச் சார்ந்தவை. பௌத்த ஜாதகக்கதைகள் உருவான காலகட்டம் இது. இந்து தொன்மங்கள் பௌத்த புராண மரபுக்குள் மறு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளிழுக்கப்பட்ட காலம் இதுவே.

அருகே ஒரு அருவி உள்ளது. மழைக்காலத்தில் அங்கே நீர் கொட்டும். அஜந்தாவை நினைவுறுத்தியது அந்த அருவி. நாங்கள் சென்ற போது கரிய தடமாக மலையில் இருந்து இறங்கிச் சென்று கொண்டிருந்தது.

ஃபாஜாவில் இருந்து ஃபெட்சா குகைவிகாரங்களுக்குச் சென்றோம். ஞாயிற்றுக்கிழமை ஆனதால் கொஞ்சம் மக்கள் நடமாட்டம் இருந்தது. மற்றபடி முழுமையாகவே மனிதவாசமில்லாமல் கிடக்கும் இடம். மற்ற இரு குகைகளுக்கும் காவல் இருந்தது, இங்கே அதுவும் இல்லை. கார்லே குகைகளைப் போலவே இரு சைத்ய மண்டபங்களும் சில விகாரங்களும். சைத்யங்கள் மிக உயரமாக வளைவான கூரையுடன் மரத்தாலான பட்டியல் போன்ற அமைப்புடன் செதுக்கப்பட்டிருந்தன. ஒரு பெரும் மாளிகை முகப்பு போல.

ஃபாஜா, ஃபெட்ஸா குகை விகாரங்களைப்பற்றி ஒரு கதை உண்டு. இந்தக் குகைகளில் நிறைய ஓவியங்கள் இருந்திருக்கின்றன. நூறு வருடம் முன்பு ஏதோ வெள்ளைய அதிகாரி இதைப்பார்க்க வந்திருக்கிறார். அனேகமாக அது லார்ட் ராபர்ட் ஸிவேல் [Robert Sewell (1845–1925)] ஆக இருக்கலாம். பெரும் கலை ஆய்வாளர் அவர். விஜயநகரத்தை மீட்டெடுத்தவர். அவர் இப்பகுதியில் நிறையப் பயணம்செய்து எழுதியிருக்கிறார். அவர் வருகைக்காக குகையில் அழிந்த நிலையில் இருந்த எல்லா ஓவியங்களையும் துப்புரவாகச் சுரண்டி வெள்ளையடித்து வைத்திருந்தார்களாம். பெட்சாவில் ஒரு இடத்தில் ஏராளமான புத்த பீடிகைகள் அமைந்துள்ளன. இந்த அமைப்பை எங்கும் பார்த்ததில்லை. இந்தக் குகைகளை செதுக்க உதவிசெய்த மாண்டவியின் இளவரசி சமாதினாகாவைக் குறிப்பிடும் ஒரு கல்வெட்டு இங்குள்ளது. குகைகளைப் பெரும்பாலும் நேர்த்திக்கடனாகவே மன்னர்களும் இளவரசிகளும் கட்டி அளித்திருக்கிறார்கள்.

இப்பகுதியில் கோலிகள் என்னும் மகாராஷ்டிர ஜாதியினர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அக்காலத்தில் பௌத்தமதத்தினராக இருந்திருக்கலாம். அவர்களின் தெய்வமான யாமை என்ற தெய்வத்துக்கான சிலை இங்கே செதுக்கப்பட்டுள்ளது. சிவப்பு செந்தூரம் பூசி வைத்திருக்கிறார்கள், பூசை என ஏதும் இல்லை.

ஃபெட்சாவில் இருந்து நாசிக் அருகே உள்ள நாணேகாட் என்ற பழங்காலக் கணவாய்க்குச் செல்லலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் பூனாவுக்குள் திரும்ப நுழைந்து கடந்து நாசிக் சாலையில் வருவதற்குள் மாலையாகி விட்டது. ஆகவே வழியில் ஜுன்னார் அருகே சிவ்நேரி என்ற ஊரில் ஒரு விடுதியில் தங்கினோம்.

மேலும்…

படங்கள் இங்கே

 

முந்தைய கட்டுரைபாண்டிச்சேரியில் – கடலூர் சீனு கடிதம்
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 10 – லென்யாத்ரி, நானேகட்