சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார், ”தமிழில் பெரும்பாலான கவிஞர்களுக்கு உரைநடை எழுதத்தெரியாது. இது எபப்டி இருக்கிரதென்றால் நடனமாட முடியும், நடக்கத்தெரியாது என்பது போல” ஆனால் கவிஞர்களில் சிலரே நல்ல உரைநடை எழுத முடியும் என்பதே உண்மை. ஏனென்றால் கவிதை மொழிமின்னல்களாக மனதில் உருக்கொள்கிறது. நல்ல கவிதை எதுவுமே மொழித்துணுக்குகளாகவே இருக்கிறது. நல்ல உரைநடை என்பது அதன் ஓட்டத்தினாலேயே அடையாளப்படுத்தப்படுவதாகும்.
ஓட்டம் என்பது எதன் மூலம் உருவாகிறது? மொழியின் வழியாக ஓர் அகத்தருக்கம் செயல்படும்போதே ஓட்டம் பிறக்கிறது. சிலந்திபோல இழை நீட்டி ஒன்றிலுருந்து இன்னொன்றுக்கு தாவிச்சென்று மெல்லமெல்ல ஒரு பெரிய வலையை பின்னும் மனமே உரைநடையின் நல்ல ஊற்று. தெளிவாகச் சிந்திப்பவர்களே சிறந்த உரைநடையை உருவாக்க முடியும். ‘நடை என்பது அம்மனிதனே’ என்ற சொல் இதிலிருந்து உருவானதே.
கவிஞர்களைப்பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் தெளிவுக்கு எதிரானவர்கள். பொருள்மயக்கம் என்பதை கவிதையின் அழகுகளில் ஒன்றாகவே சொல்வது விமரிசன மரபாகும். சொற்களில் இருந்து சொற்களுக்குத்தாவும் கவிஞர்கள் ஓட்டத்தை அல்ல புள்ளிகளையே உருவாக்குகிறார்கள். இந்த அம்சத்தை அவர்களின் உரைநடையில் காணலாம்.
ஆனால் எல்லா கவிஞர்களுமல்ல. தத்துவத்தேடல் கொண்ட கவிஞர்களிடம் அகத்தர்க்கமும் மொழிஓட்டமும் இருக்கும். ஆகவே நல்ல உரைநடை இயல்பாக அமையும். கவிஞன் தத்துவத்தேஅல் கொண்டவனாக இருக்கும்போதே அவன் காவியகர்த்தனாகிறான். ஆக, இபப்டிச்சொல்லலாம். மின்னல்களைந் அம்பி இயங்கும் கவிஞன் நல்ல உரைநடையை உருவாக்குவதில்லை. அவனால் காவியங்களையும் உருவாக்க முடியாது. தத்துவவாதியான கவிஞன் காவியங்களை உருவாக்குவான், உரைநடை இயல்பாகவே அவனுக்கு உருவாகிவரும்
தமிழின் கவிஞர்களில் பாரதியே சிறந்த உரைநடைக்காரர். பாரதியின் உரைநடை கவித்துவமின்னல்களும் சிந்தனையின் ஓட்டமும் ஒருங்கே நிகழும் ஓர் அற்புதம். மலையாளத்திலும் குமாரனாசானின் உரைநடை நவீன வீச்சு கொண்டது. தாகூரின் உரைநடை அழகும் நளினமும் சரளமும் கொண்டது.
தமிழில் நிறைய உரைநடை எழுதிய கவிஞர் என்றால் பிரமிளைச் சொல்லலாம். ஆனால் அவரது உரைநடை வம்புத்தன்மை கொண்டது. அபூர்வமாக அது கோட்பாடு எல்லைக்குள் செல்லும்போது முறைமீறிய பாய்ச்சல்களை நிகழ்த்துகிறது. ஆனாலும் அது மிக வலுவான உரைநடையே.
அதன்பின் சுகுமாரனின் உரைநடையையே சிறந்ததாகச் சொல்லவேண்டும். சுகுமாரனின் உரைநடைக்கு முக்கியமான முன்னோடி என்று சுந்தர ராமசாமியை சுட்டிக்காட்டலாம். சுந்தர ராமசாமி வகுத்துரைப்பது, கச்சிதமாகச் சித்தரிப்பது ஆகிய இருவகைகளில் செயல்பட்டு எப்போதும் பிரக்ஞையின் கடிவாளம் மீறாத செறிவான அழகிய உரைநடையை உருவாக்கிய முன்னோடி. அந்த அம்சங்கள் அனைத்துமே சுகுமாரனின் உரைநடையில் உள்ளன.
சுகுமாரன் எப்போதுமே அரசியல் கோட்பாட்டுத்தளத்தில் செயல்பட்டவர். மார்க்ஸிய அழகியலில் நம்பிக்கை கொண்ட்வாராக இருந்திருக்கிறார். அந்தத்தளத்தில் முக்கியமான மொழியாக்கங்களைச் செய்திருக்கிறார். குறிப்பாக மலையாளக் கவிஞரும் கோட்பட்டாளருமான கெ.சச்சிதானந்தனின் மார்க்ஸிய அழகியல் என்னும் நூலின் மொழியாக்கத்தைச் சொல்லலாம். அறிவார்ந்த தர்க்கத்தின் கட்டுக்கோப்பு கொண்டவை சச்சிதானந்தனின் எழுத்துக்கள். அந்தப்பாதிப்பும் சுகுமாரனில் உள்ளது
ஓர் இடைவேளைக்குப் பின்ன எழுதவந்த சுகுமாரன் அதிகமும் சுய அனுபவக் கட்டுரைகளையே எழுதினார். அவை அவரது உள்வாங்கிய ஆளுமையின் வெளிப்பாடுகளாக அமைந்தன. கவிதைகளில் நாம் காணும் விரக்தியடைந்த கோபம் கோண்ட சுகுமாரன் சற்றே அமைதியடைந்த விலகிக்கொண்ட சுகுமாரனாக அந்த கட்டுரைகளில் வெளிப்பட்டார்.
சுகுமாரன் எழுதிய கட்டுரைகளின் புதிய தொகுப்பு ‘இழந்தபின்னும் இருக்கும் உலகம்’ இதில்லவரது பலதரப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. எழுத்து என்னும் முதல் பகுதியில் சமகால இலக்கியம் மீதான அவரது எதிர்வினைகள் உள்ளன. முதல் கட்டுரையான ‘அறுபதாயிரம் காதல் கவிதைகளும் உதிரியான சில குறிப்புகளும்’ முக்கியமானது. தமிழ்க்கவிதையின் நெடும்பரப்பில் காதல் என்பது எவ்விதங்களில் பொருள்கொள்ளப்பட்டிருப்பது என்பதை தொட்டுத்தொட்சு செல்லும் இக்கட்டுரையில் அடர்த்தியான காதல்கவிதைகள் பலவற்றை ஆக்கிய சுகுமாரன் வேடிக்கை பார்ப்பவராக விலகி நிற்பதைக் காண்கிறோம்
சுந்தர ராமசாமி, தேவதச்சன், விக்கிரமாதித்யன் போன்ற சமகாலக் கவிஞர்களைப்பற்றிய தன் கருத்துக்களை சம்பிரதாய நோக்கம் இல்லாமல் கறாராக பதிவுசெய்கிறார் சுகுமாரன். விக்ரமாதியன் கவிதைகள் உள்ள செயற்கையாக உருவாக்கபப்ட்ட ‘நான் கவிஞன்’ என்ற பிம்பத்தையும் அதிலிருந்து கிளைத்த நிலப்பிரபுத்துவகால மதிப்பீடுகளையும் மென்மையாகச் சுட்டிக்காட்டுகிறார். மு.சுயம்புலிங்கத்தின் நாடுப்பூக்கள் என்னும் நேரடியான கவிதைகளை சுகுமாரனைப்போன்ற செய்நேர்த்தி மிக்க கவிஞன் எளிதாக சென்று தொட்டு அங்கீகரிக்கும் இடம் தமிழுக்கு முக்கியமானது. கவிதை என்பது எந்த திசையில் இருந்தும் அணுகப்படக்கூடிய ஓர் உச்சம் என்ற எண்ணம் ஏற்படுகிறது
மகாஸ்வேதாதேவி யின் கதை ஒன்றில் அர்ஜுனா மரம் என்று வந்ததை மொழியாக்கத்தில் அப்ப்அடியே எழுதிவிட்டு பின்பு அந்த மரத்தின்பெயர் வழியாக சுகுமாரன் செய்யும் பயணம் ஆச்சரியம் அளிப்பது.அர்ஜுனனுக்கும் அந்த மரத்துக்கும் என்ன சம்பந்தம்? அது பழங்குடிகள் இட்ட பெயர். மகாஸ்வேதா தேவியின் கதையில் அந்தப்பெயர் அம்மரத்துக்கு விதவிதமான அர்த்தங்களை அளிக்கிறது. அந்தமரத்தின் தமிழ்ப்பெயர் மருது. மருது என்று எழுதினால் அர்ஜுனா மரம் என்னும்போது உருவாகும் நுண்ணிய கவித்துவச்சாத்தியங்கள் இல்லாமலாகின்றன. மொழிபெயர்ப்பின் இக்கட்டுகளைப் பறிய இக்கட்டுரையை ஒரு கதைக்குரிய வடிவநேர்த்தியுடன் எழுதியிருக்கிறார் சுகுமாரன்.
இந்நூலின் இரண்டாம் பகுதியே மேலும் முக்கியமானது. விதவிதமான மனிதர்களுடன் தன் வாழ்க்கையனுபவத்தைச் சொல்லும் சுகுமாரன் அவற்றுக்கு சிறுகதையின் வடிவ அழகை எளிதாக அளித்திருக்கிறார். மதுரை சோமு சுகுமாரனுக்காக அவரது விடுதியறையின் பழைய மெத்தைமேல் அமர்ந்து பாடும் அந்த அந்தரங்கமான இசைக்கச்சேரி மிக அழகாக சொல்லபப்டிருக்கிறது. அந்த அறை குறித்த விவரணை ,சோமுவுன் முரட்டு ஆளுமையை ஓரிரு சொற்களிலேயே விவரிக்கும் தேர்ச்சி அனைத்துமே சிறப்பானவை. இந்நூலில் உள்ள மிகமுக்கியமான கட்டுரை அதுவே
நகுலன் குறித்த நினைவலைகளும் அதேபோல நுட்பமாக அமைந்திருக்கின்றன. முதுமையின் ஒரு கட்டத்தில் நினைவுப்பதிவுகள் இல்லாத ஒரு வெறுமையைச் சென்றடைந்த அவரைப்பற்றிய சித்தரிப்பு வழம்மகான மிகைகள் ஏதுமில்லாமல் எளிய கோடுகளினால் அழகுற அமைக்கபப்டிருக்கிறது
தமிழின் முக்கியமான உரைநடைத்தொகுதிகளில் ஒன்று இது என ஐயமில்லாமல் சொல்லிவிடமுடியும்
இழந்தபின்னும் இருக்கும் உலகம், சுகுமாரன். உயிர்மைபதிப்பகம்