அருகர்களின் பாதை 8 – கோலாப்பூர், நந்திகிரி, கட்ரஜ்

காலையில் கும்போஜ் மடம் அருகே உள்ள அருகர் கோயிலுக்குச் சென்றோம். அங்கே எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. நண்பர்கள் சிமிண்ட் நிற சாய வேட்டி கட்டியிருந்தார்கள். அதை அங்குள்ள வாட்ச்மேன் லுங்கி என்றே எடுத்துக்கொண்டார். பாண்ட் அணிந்து வருவது அனுமதிக்கப்பட்டதென்றாலும் குட்டை பாண்ட் அல்லது கால்சட்டை பூஜை உடையாக எண்ணப்படவில்லை.

வழியில் இன்னொரு சமணக் கோயில். வாடேகாம் என்ற ஊரில். கோயில் புதியதாகக் கட்டப்பட்டது. சலவைக்கல்லில் அழகாக ஒரு ரதம்போல கட்டியிருந்தார்கள்.
தந்தத்தால் ஆன சிலை போல் இருந்தது. அங்கும் இதே பிரச்சினை, பூஜை உடை அணியவில்லை என்று. பதிலுக்கு உள்ளே வரச்சொல்லி சாய் சாப்பிடுகிறீர்களா என்று உபசரித்தார் ஒருவர்.

vadecom jain temple

காலை ஒன்பது மணிக்கு கோலாப்பூர் வந்து சேர்ந்தோம். கோலாப்பூரி செருப்புகள் வழியாக அறிமுகமான ஊர். ஊர் நடுவே ஒரு பிரம்மாண்டமான கோட்டைச்சதுக்கம் இருந்தது. கோட்டைமேல் உள்ள கட்டிடங்கள் இன்றும் கூட புழக்கத்தில் இருந்தன. கர்நாடகத்துக்கான நுழைவாயிலாக உள்ள ஊர் கோலாப்பூர். இது தொன்மையான சமண வணிக மையம். பதினொன்றாம் நூற்றாண்டில் சிலாஹார் வம்சத்து மன்னர்களின் காலகட்டத்தில் இந்த ஊர் இன்றைய வடிவில் உருவாகி வந்திருக்கலாமென ஊகிக்கப்படுகிறது. ஷுல்லகபுரா என்ற சொல்லின் மரூஉதான் ஷோலாப்பூர். க்‌ஷில்லகர் என்பது இளம் சமணத் துறவிகளைச் சுட்டும் சொல். இங்கே முக்கியமான கடவுளாக பத்மாவதி யட்சி வணங்கப்பட்டாள். பத்மாவதி யட்சியை இங்குள்ள இந்துக்கள் மகாலட்சுமியாக வழிபடுகிறார்கள்.

kolapur1

கொங்கண நாட்டை ஆண்ட ஷிலாகார் வம்சத்தினர் ராஷ்டிரகூடர் காலகட்டத்தில் அவர்களுக்குச் சிற்றரசர்களாக உருவாகி வந்தவர்கள். இவர்களின் வம்சாவளியினர் இன்றும் மகாராஷ்டிரத்தில் உள்ளனர். தேரதலா என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டுகளின் படி ஒரு சிலாஹார் வம்சத்து மன்னரை பாம்பு கடித்தபோது சமண முனிவர் ஒருவர் அவரைக் காப்பாற்றினார். அவர் சமணராக மாறி நிறைய சமணக் கோயில்களைக் கட்டுவித்தார். இவை கொங்க ஜினாலயா என அழைக்கப்படுகின்றன. தேராதலா, கோலப்பூர் அருகே உள்ள சிற்றூராகும்.

கோலாப்பூரின் நடுவே ஒரு பேராலயம் உள்ளது. கோலாபுரி மாதா என அழைக்கப்படும் மகாலட்சுமி ஆலயம். இன்றும் பெருங்கூட்டம் வந்து குவிகிறது. தெருவெங்கும் பக்தர்கள். இளவெயிலில் குளிருக்கு இதமாக நடந்தோம். கூட்டம் நெரியும் கோயிலுக்குள் நுழைய வேண்டாமென்றே நினைத்தோம். ஆனால் சிலாஹார் மன்னர்களின் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த ஆதாரம் என்று இக்கோயில் சொல்லப்படுவதனால் உள்ளே சென்றோம்.

kolapur

ஆச்சரியமும் வருத்தமும் அடையச்செய்யும் காட்சி. ஒரு காலத்தில் பிரம்மாண்டமான ஆலய வளாகமாக இருந்திருக்கிறது. கோபுரம் முழுமையாக உடைந்து போய் புதியதாக சிறிய கான்கிரீட் கட்டிடம் கட்டி வைத்திருக்கிறார்கள். கீழே உள்ள கட்டிடத்தின் அழகும் பிரம்மாண்டமும் அந்தப் பழைய கோயிலைக் கனவில் எழுப்பி பிரமிக்கச் செய்தன. எஞ்சிய கோபுர அடித்தளத்தைக்கொண்டு பார்த்தால் கஜுராஹோ காந்தரிய மகாதேவர் ஆலய பாணியில் தஞ்சைப் பெரிய கோயிலை விட உயரமான கோயிலாக இருந்திருக்கலாம். எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம் அலாவுதீன் கில்ஜியால் அழிக்கப்பட்டது. கோயிலை முழுமையாக இடிக்க சிலமாதங்கள் ஆனது என வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. அற்புதமான கருங்கல் சிலைகள். அனைத்தும் ஒன்றுவிடாமல் உடைக்கப்பட்டுள்ளன. கோபுரம் பெரும் கற்குவியலாக மேலே விழுந்து கிடந்தமையால் அடித்தளம் தப்பியிருக்கிறது.

உள்ளே பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் மராட்டியர்களால் மீண்டும் நிறுவப்பட்ட தேவி அமர்ந்திருக்கிறாள். உள்ளே சென்று தூரத்திலேயே தேவியை தரிசித்துவிட்டுத் திரும்பினோம்.

சிலாஹார் மன்னர்கள் சமணர்களுக்கும் ஆதரவளித்தவர்கள். இந்தப் பகுதியில் இஸ்லாமியர் காலகட்டத்தில் இடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பஸதிகள் உள்ளன. சிலாஹார் மன்னரான முதலாம் போஜனின் காலகட்டத்தில் ஆச்சாரிய மகாநந்தி அடிகள், ரூபநாராயண பஸதி என்ற ஓர் அமைப்பை நிறுவி சமணக்கல்வியைப் பரப்பினார். கொங்க மன்னர்கள் பெரும்பாலும் மகாநந்தி அடிகளின் மாணவர்கள். மகாநந்திஅடிகள் கோலாப்புரியர் என்று அழைக்கப்படுகிறார். சித்தாந்த கேசரி என்றும் அவர் சிறப்பிக்கப்படுவதுண்டு. அவர் தேஷிய கண புஸ்தக கச்சா என்ற சமண குருமரபைச் சேர்ந்தவர். மூடுபிதிரி, சிரவணபெலகொலா போன்ற ஊர்களின் பட்டாரகர்கள் இந்த மரபைச் சேர்ந்தவர்கள். நேமிசந்திர ஆச்சாரியாருக்கும் சாமுண்டராயருக்கும் இருந்த குருசீட உறவைப்போலவே சிலாஹார மன்னர் கண்டராதித்தனுக்கும் மகாநந்தி அடிகளுக்கும் உறவிருந்தது என்று நூல்கள் காட்டுகின்றன.

கோலாப்பூர், ஜைனாச்சாரிய பரம்பரா மகிமா என்ற நூலில் முக்கியமான சமணத்தலமாகக் குறிப்பிடப்படுகிறது. அதில் கண்டராதித்தன் 770 சமணக் கோயில்களைக் கட்டினான் என்றும் மகாநந்தி அடிகளுக்கு 770 சீடர்கள் இருந்தார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. திரிபுவன திலகம் என்ற பேரில் நேமிநாதருக்குக் கண்டராதித்தர் ஒரு ஆலயத்தை அர்ஜுரிகா என்ற சிற்றூரில் கட்டினார். சோமதேவர் இங்குதான் சப்தர்னவ சந்திரிகா என்ற பெருநூலை இயற்றினார். கண்டராதித்தர் எல்லா மதங்களையும் ஆதரித்தார். ஒரு கல்வெட்டு, அவரை சர்வ தர்சன சக்‌ஷுகா என்று சிறப்பிக்கிறது. கண்டராதித்தரின் தளபதி நிம்பதேவரும் சமண மதத்தைப் பரப்பியவர்தான். கோலாப்பூர் மகாலட்சுமி ஆலயத்தின் கல்வெட்டில் அது நிம்பதேவரால் கட்டப்பட்டது என்று சொல்லப்பட்டுள்ளது.

கண்டராதித்தரின் மகன் விஜயாதித்தன் ஆச்சாரிய மகாநந்தி அடிகளின் சீடரான மகாநந்தி அடிகளுக்கு மாணவராக இருந்தார்.   அவரது தளபதிகளும் தளபதிகளின் சேவகர்களும் கூடக் கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். விஜயாதித்தனின் தளபதி காமதேவனின் ஊழியரான பிராமணர் வாசுதேவா ஒரு சமண ஆலயத்தைக் கட்டிய தகவல் கல்வெட்டில் உள்ளது. சிலாஹார் வம்சத்தின் வீழ்ச்சிக்குப்பின்னர் மெல்லமெல்ல கோலாப்பூரின் சமணக் காலகட்டம் அழிய ஆரம்பித்தது. இங்கே இரு பட்டாரக மடங்கள் உள்ளன.
லட்சுமிசேன சுவாமி பட்டாரக மடம், ஜினசேன சுவாமி பட்டாரக மடம். அது நந்தினி என்ற ஊரில் இருந்து இங்கே கொண்டுவரப்பட்டது.

சமண பஸதியைத் தேடிக் கோலாப்பூரில் அலைந்தோம். திகம்பர் ஜெயின் கோயில் என அகப்பட்டவர்களிடமெல்லாம் கேட்டோம். ஒருவர் வாருங்கள் என அன்புடன் அழைத்தார். குடிசைகள். இடிந்த மண்டபங்களில் அமைந்த இல்லங்கள். தயங்கியபோதெல்லாம் வாருங்கள் எனக் கட்டாயப்படுத்திக் கூட்டிச்சென்றார்.
கடைசியில் ஓரு வீடு. அதைக்காட்டி இதுதான், உள்ளே செல்லுங்கள் என்றார். அங்கிருந்த அழகான அம்மணி வாருங்கள், உள்ளே வாருங்கள் என்றார். திகம்பர் ஜெயின் எனத் தயங்கினோம். அவர் வெளியே போயிருக்கிறார், வந்துவிடுவார், நீங்கள் அமருங்கள் என்றார். நாங்கள் இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் கலந்துஆங்கிலத்தில் தாளித்து விஷயத்தைச் சொன்னோம். தெருவெங்கும் ஒரே சிரிப்பு. துணி துவைத்துக்கொண்டிருந்த ஒரு அழகி சிரித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

kolapur2

ஒருவழியாக மடத்தைக் கண்டடைந்தோம். தொன்மையான கட்டிடம். கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலை. ஆளே இல்லை. ஆனால் சுத்தமாக இருந்தது. கோயிலுக்கு வெளியே திறந்த வெளியில் 9 மீட்டர் உயரமான பகவான் ஆதிநாதரின் சிலை லட்சுமிசேன மடத்தில் உள்ளது.  நேமிநாதருக்கு ஓர் ஆலயம் இருந்தது. 
வணங்கிவிட்டு கிளம்பினோம்.

kolapur jain

பூனாவுக்குச் செல்லும் வழியில் நந்திகிரி என்ற சமண மலையைத் தேடிச்சென்றோம்.
இந்த இடம் எந்த சுற்றுலா வழிகாட்டியிலும் இருக்காது. தொல்பொருள் துறையின் குறிப்பில் கண்ட ஊர். விசாரித்து ஒரு சின்ன கிராமத்துக்குச் சென்றோம்.
அவர்கள் ஒரு மண்பாதை வழியாக மேலே செல்லச்சொன்னார்கள். மண்ணை வெட்டி உருவாக்கப்பட்ட பாதை செங்குத்தான மலைமேல் ஏறிச்சென்றது. அபாயகரமான சாலை.
சில இடங்களில் உண்மையிலேயே குலைநடுங்கியது.

மலை உச்சியில் ஒரு சமணக் கோயில். சிறிய கோயில்தான். அருகே ஒரு அனுமான் கோயிலும் இருந்தது. அதனருகே ஒரு படி இறங்கிச்சென்றது. கொஞ்சதூரம் சென்ற டிரைவர் பிரசாந்த், சார் வாருங்கள் வாருங்கள் என அழைத்தார். குரலில் பரபரப்பு, துள்ளல். அது ஒரு பெரிய குகை. நிலத்துக்குள் செல்லும் குகைகளுக்குத் தமிழில் பிலம் என்று பெயர். குனிந்து செல்லவேண்டும். சில இடங்களில் நிற்கலாம். பல இடங்களில் குனிந்து வளைய வேண்டும்.  ஆனால் இரண்டு ஏக்கர் அளவுக்கு அகலம். உள்ளே இரு குளங்கள். குளங்களுக்குள் இருந்து குகைகள் மேலும் பிரிந்து சென்றன. கண்ணைக் குத்தும் இருட்டு.
கைவிளக்கு ஒளியால் உள்ளே சென்றோம். இரு சிறு சமண ஆலயங்கள்.  ஆதிநாதர், பார்ஸ்வநாதர் சிலைகள் இருந்தன. நெடுங்காலமாக சமண முனிகள் தியானத்துக்குப் பயன்படுத்திய இடம் அது.

nandigiri

விளக்கை அணைத்துவிட்டு இருளில் அமர்ந்தோம். கோயிலில் வைக்கப்பட்ட சிறிய விளக்கு மட்டும் முத்துப் போல, பழுத்த மிளகாய் போல மின்னிக்கொண்டிருந்தது.
அமைதி. உள்ளுக்குள் நிறையும் அமைதி. இருபது நிமிடங்கள் அமர்ந்துவிட்டு கிளம்பினோம். சீனு பின்னர் அந்த அனுபவத்தை அற்புதமாகச் சொன்னார்.
அலைகளில் ஆடும் மலரிதழ் போல ஆடிஆடி மலைமேல் சென்றோம். பிரம்மாண்டமான நிலம். அதன் நடுவே தகதகக்கும் பொற்கோபுரம் போல சூரியன். மெல்லமெல்ல உள்ளே சென்று இருட்டு. இருட்டுக்குள் சின்னஞ்சிறு சுடராக ஒளி. அதே சூரியனின் சிறு துளி. மீண்டும் மேலே வந்தால் நிலம் புதியதாகப் பிறந்து வருகிறது புறச்சூரியன்!

Nandigiri pune

பூனாவுக்கு அருகே உள்ள கட்ரஜ் எங்கள் அடுத்த இலக்கு. ஸ்வேதாம்பர் சமணர்களின் மிகப்பெரிய கோயில். ஒரு சிறு குன்று மீதிருந்தது. பழைய தலம். ஆனால் கோயில் புதியதாகக் கட்டப்பட்டது. வெண்பளிங்கில் கட்டப்பட்ட ஆலயத்தின் தூண்கள் முழுக்க நுண்ணிய சிற்பங்கள். கருவறையின் சிற்பங்கள் சட்டென்று புத்தம்புதிய அழகியலைத் திறந்து வைத்தன. வஜ்ரகிரீடம் அணிந்த தீர்த்தங்கரர் சிலைகள் பொன் முலாமிட்ட உலோகத்தில் செய்யப்பட்டிருந்தன.
கிரீடங்களிலும், காதணிகளிலும் பல வகையான கற்கள். ஆடம்பரமும் கலையும் கலக்கும் அழகு. திபெத்திய புத்தர் சிலைகளை நினைவூட்டும் சிலைகள்.

katraj jain

katraj

கட்ரஜுக்கு நண்பர் பாலா மும்பையில் இருந்து வந்திருந்தார். அவருடன் அவரது நண்பரின் விருந்தினர் விடுதிக்குச் சென்றோம். அங்கே இரவு தங்குதல்.
அரங்கசாமி அங்கேயே விடைபெறுகிறார். நாளை நாங்கள் மட்டும் கிளம்புகிறோம், செந்தில்குமார் தேவன் சேர்ந்து கொள்கிறார்.

மேலும்…

படங்கள் இங்கே

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்