அருகர்களின் பாதை 7 – ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ்

காலையில் பெல்காமில் தூங்கி எழுந்தோம். முந்தைய இரவு பெல்காமில் உள்ள கமல் பஸதியைப் பற்றி வாசித்தபோது அதனருகே பெல்காம் ராமகிருஷ்ண மடம் இருக்கும் தகவல் தெரிந்தது. அங்கே தங்கலாமென முடிவெடுத்துப் போய் விசாரித்தோம். மிகப்பெரிய கோயிலும், கட்டிடங்களும் கொண்ட அமைப்பு அது. ஆனால் உள்ளே இருந்த சாமியார் தேனொழுகப் பேசி கிட்டத்தட்டத் துரத்தியடித்தார். ராமகிருஷ்ண மடம் அல்லது அதற்கு நன்கொடை அளிப்பவர்களின் சிபாரிசுக் கடிதத்துடன் வருபவர்களுக்கு மட்டுமே இடம் என்று சொல்லிவிட்டார். வேண்டுமானால் காலையில் வாருங்கள் ஒரு வாய் சோறு போடுகிறேன் என்றார். நண்பர்கள் பேசிய எதையுமே அவர் காதில் வாங்கவில்லை. அப்படி ‘அன்னியர்களை’த் தங்க வைக்க விதியே கிடையாது என்று சொல்லிவிட்டார்.

எனக்கு ராமகிருஷ்ண மடம் என்ற அமைப்பு மீது எப்போதுமே பெரிய மரியாதை இல்லை. ஆகவே எதிர்பார்ப்பும் இல்லை. நான் உள்ளே செல்லவே இல்லை. திரும்பிச்சென்று ஓர் ஓட்டலில் ஆயிரம் ரூபாய் செலவில் அறைகள் அமர்த்திக்கொண்டோம். இரவில் அறைக்கு வந்ததும் அந்த சாமியார் ஃபோனில் அழைத்து நாளைக்கு அவரைச் சந்திக்க வரும்படி முத்துக்கிருஷ்ணனிடம் சொன்னார். அந்தக் குற்றவுணர்ச்சியை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அங்கே செல்லவேண்டாம், அவர்களைப் பற்றி ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் சித்திரத்துக்கும் உண்மைக்கும் சம்பந்தமில்லை என்று நான் சொன்னேன். நன்கொடை வசூலித்து, உண்டு, உறங்கும் கும்பல் அன்றி வேறெதுவும் அல்ல அவ்வமைப்பு. நம்மை வரச்சொல்லி உபதேசமும் சுயவிளக்கமும் சொல்லவே அவர் முனைகிறார் என்றேன்.

காலையில் எழுந்ததும் சமண பஸதிக்குச் சென்று பார்த்தோம். அப்போது ஒருவர் நாங்கள் செல்லும் கார் எண்ணைப் பார்த்து வந்து சாமியார் அழைப்பதாகச் சொன்னார். வேறு வழியில்லாமல் சென்றோம். ஒரு பெரிய போஜனசாலையில் தட்டுகளைக் கழுவி வந்து அமர்ந்தோம். எல்லா ராமகிருஷ்ண மடாலயங்களையும் போல பிரம்மாண்டமான கூடம். அமைதி. சுத்தம். மாபெரும் கட்டிடங்கள். ஒரு வகை உப்புமா போட்டார்கள். என்னால் அள்ளி வாயில் வைக்கவே முடியவில்லை. குமட்டிக்கொண்டு வந்தது. நான் இரந்துண்டு வாழ்ந்தவன். வரிசைகளில் கால்கடுக்க நெடுநேரம் நின்றிருக்கிறேன். கிடைத்ததை உண்டிருக்கிறேன். அவமதிப்பும்கூட பெரிய விஷயமல்ல. அது அவமதிப்பவனின் மனநிலையைக் காட்டுகிறது, அவ்வளவுதான். இது அப்படி அல்ல, இதன் பின்னால் உள்ளது ஒரு மாபெரும் மனச்சிறுமை. என் முன்னால் அமர்ந்து தின்றுகொண்டிருந்த அந்தக் காவிதாரி எங்களை மதிப்பிடுகிறார். நான் வைரமோதிரம் போட்டிருந்தால் அவர் என் முன்னால் வந்து நின்று இளித்திருப்பார் என்று எனக்கு தெரியும் என்பதே என் பிரச்சினை.

சுற்றிலும் பிரம்மாண்டமான கான்கிரீட் கட்டிடங்கள். அவை எல்லாமே தங்குமிடங்கள். பெரும்பாலும் காலியாகவே இருக்கவும் கூடும் என அங்கே பார்த்ததுமே தெரிந்துகொண்டேன். அது மெல்ல மெல்ல மனக்கொதிப்பை உருவாக்கியது. உடனே அங்கிருந்து சென்று விடவேண்டும், ஒரு சொல் கூட அந்தக் காவிதாரியிடம் பேசக்கூடாது என நினைத்தேன். அவரைப் பார்க்காமலேயே வெளியேறினேன்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது அவரிடம் கேட்டார்கள், அமெரிக்காவில் உங்களைக் கவர்ந்தது என்ன என்று. இங்குள்ள பொது அற அமைப்புகள்தான் என்று அவர் சொன்னார். பின்னர் எழுதினார், இந்தியா நூற்றாண்டுகளாகப் பெரும் அறநிலைகளை அறநெறிகளை உருவாக்கி நிலைநாட்டி வந்தது. அவையெல்லாம் நவீன காலகட்டத்தில் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன, நவீன அற அமைப்புகளை உருவாக்கி அந்தப் பிரச்சினையை சமாளிக்க வேண்டும் என்று. அவ்வாறு அவர் உருவாக்கிய அமைப்புதான் ராமகிருஷ்ண மடம். அதற்கு அவருக்குத் தெளிவான நோக்கம் இருந்தது.

விவேகானந்தர் பல இடங்களில் சொல்லியிருக்கிறார், இந்த நாட்டின் பாரம்பரியமும் கலைகளும் ஆன்மீகமும் நிலை நிற்பதே உலகியலை உதறி இந்த நாட்டு நிலவெளி முழுக்க அலைந்து திரியும் அன்னியர்களால்தான் என. இங்குள்ள பெரும்பாலான ஆன்மீக வழிகளில் துறவி ஆவதற்கு முன் பிச்சை எடுத்து உண்டு அலையும் வாழ்க்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் லௌகீகம் சம்பந்தமான பயமும் கவலையும்தான் ஆன்மீகமான சிந்தனைக்குப் பெரும் தடைகள். அவற்றில் இருந்து முற்றாக விடுபட்டவனே உண்மையில் எதையாவது ஆழத்தில் சென்று சிந்தித்தறிய முடியும். ராமகிருஷ்ணரே அவரது மாணவர்களைப் பிச்சை எடுக்க அனுப்பியிருக்கிறார். விவேகானந்தரும் அப்படி பவிராஜக வாழ்க்கை வாழ்ந்தவர்தான்.

ஆன்மீகத்தில் மட்டும் அல்ல, கலையிலும் கூடத்தான். இந்நாட்டின் முக்கியமான எல்லா எழுத்தாளர்களும் பிச்சை எடுத்து அலைந்து திரிந்த வாழ்க்கை கொண்டவர்களே. பஷீராக இருந்தாலும், காரந்தாக இருந்தாலும். அவர்களைப் பேணும் அமைப்புகள் இந்நாடெங்கும் இருந்தன. ஒவ்வொரு இந்துவும் சமணரும் பௌத்தரும் சீக்கியரும் அந்த மனநிலை கொண்டிருந்தார்கள். அன்னியர்களை ஐயப்படுவதற்கும் புறக்கணிப்பதற்கும் பதிலாக அவர்கள் அன்னியர்கள் என்பதற்காகவே அவர்களைப் பேணும் ஒரு பண்பாடு. இன்றும் அந்தப் பண்பாடு நம் கிராமங்களில் உள்ளது. சாவடிக்குச் சென்று இரவுணவுக்கு எவராவது உள்ளனரா என்று பார்த்து உணவிட்டபின்னரே ஊர்த்தலைவர் உண்ணவேண்டும் என்ற மரபு இன்றும் கூட பல்லாயிரம் தமிழகக் கிராமங்களில் உள்ளது.

சென்ற நூற்றாண்டில் பிரம்மசமாஜம் இந்த விழுமியங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது. அலைந்து திரிபவர்களை சோம்பேறிகள் என்றும் குற்றவாளிகள் என்றும் அது சொன்னது. அந்த மனநிலை பெருகி ஒருகாலத்தில் அலைந்து திரியும் அன்னியர்கள் பேணப்படாது போய்விடுவார்கள் என விவேகானந்தர் அஞ்சினார். ஒருநாட்டின் ஆன்மீக சாரம் அந்த அன்னியர்களால், நாடோடிகளால்தான் நிலைநிற்கும் என்று அவர் சொன்னார். ஆகவே அதற்கான நவீன அமைப்பை உருவாக்க வேண்டுமென விரும்பி அவர் ராமகிருஷ்ண மடங்களை உருவாக்கினார். ஓர் இளைஞன் இன்னதென்றறியாத மன எழுச்சியால் உந்தப்பட்டவனாகத் தன்னிடம் உள்ள அனைத்தையும் உதறி எங்கு செல்வதென்றில்லாமல் செல்லும் அந்தப் பயணத்தில் எந்நேரத்திலும் அடையா வாசலும் உணவும் தலைசாய்க்க இடமுமாக அந்த அமைப்பு இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

அங்கேதான் இந்த ஆசாமிகள் காவிகளைக் கட்டிக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறார்கள் இன்று. இன்று இவர்கள் செய்யும் வேலை என்ன? விவேகானந்தர், ராமகிருஷ்ணர் பெயரைச்சொல்லி பெருநகர்களில் அமைப்புகளை உருவாக்குகிறார்கள். பெரும் பணக்காரர்களின் இல்லங்களைத் தேடிசென்று தொடர்புகளை உருவாக்குகிறார்கள். பல்லிளித்துப் பசப்பி நன்கொடைகளைப் பெற்று பெரும் கான்கிரீட் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். அவற்றுக்குள் நெய்விட்டு சோறு தின்று ஊன் வளர்த்து அமர்ந்திருக்கிறார்கள். சில வீணர்கள் சிலரை ஏமாற்றித் தின்று வாழ்வது பற்றி எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் அதற்கு இந்த தேசம் கண்ட விடிவெள்ளியின் பெயர் பயன்படுத்தப்படுவதே கொந்தளிக்கச் செய்கிறது.

என்னால் மிக எளிதாக ஓர் சிபாரிசைத் தொலைபேசியிலேயே ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால் அது இன்றைய நான். முப்பதாண்டுகளுக்கு முன், பதறும் கண்களும் தயங்கும் நடையுமாக, கையில் பைசா இல்லாமல், பசித்துக் களைத்து நான் வந்து இந்த வாசலில் நின்றிருந்தால் என்னை இவர்கள் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். இந்த இடத்தில் இன்றும் என் அகம் அந்த அவமதிப்பை உணர்கிறது. இந்தக் காவி அணிந்த குமாஸ்தா ஒவ்வொரு அரசாங்க அமைப்பிலும் அமர்ந்திருந்து விதிகளைக்கொண்டு அந்த அமைப்பையே தோற்கடிக்கும் அதே ஆன்மாதான்.

நான் சென்ற ஒவ்வொரு முறையும் அரவணைத்து உணவிட்ட சமண நிலையங்களும் குருத்வாராக்களுமே எனக்கானவை. இது அல்ல. இது இந்து சமூகம் மேல் இருக்கும் ஒரு சீழ்க்கட்டி.

வடகர்நாடகத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்று பெல்காம். மாவட்டத் தலைநகரும் கூட. சமணர்களின் முக்கியமான நகரமாக இரண்டாயிரம் வருடங்களாக விளங்கியிருக்கிறது பெல்காம். பெல்காமைச்சுற்றி உள்ள பெல்காம் கோட்டை முக்கியமானது. இன்றும் ஒரு நல்ல கோட்டையாக அது உள்ளது. ராணுவ முகாம் ஒன்று உள்ளே உள்ளது. கோட்டைக்குள் இரு சமணக் கோயில்கள் உள்ளன. கமல் பஸதி எனப்படும் தாமரை வடிவமான சமணக் கோயில் கர்நாடகத்தின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று. இரு சமணக் கோயில்களும் பிற்கால சாளுக்கிய பாணியில் அமைந்தவை.

கமல் பஸதி 1204ல் ரால்ட்டா வம்சத்தைச்சேர்ந்த நான்காம் கார்த்தவீரியரின் அமைச்சர் பிச்சிரரால் கட்டப்பட்டது. இரு தூண்களில் நாகரி லிபியில் கன்னட மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. கதம்ப நாகர பாணியில் அமைந்த கோபுரம் இக்கோயிலில் உள்ளது. கமல் பஸதியில் நேமிநாதர் வீற்றிருக்கிறார். மிக அழகான கட்டிடம். வட்டவடிவ கதம்ப பாணி மண்டபம். உருட்டி
வடிவமைக்கப்பட்ட தூண்கள்.

கமல் பஸதி அதன் சிகரத்தின் விசேஷமான தாமரை வடிவம் காரணமாகவே அவ்வாறு அழைக்கப்படுகிறது. அது 72 இதழ்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. காலை வேளையில கோயிலைச்சுற்றி நடந்தது ஒருவகையான ஆழ்ந்த மனநிறைவைக் கொடுத்தது. அருகே சிக்க பஸதி என்ற ஜினாலயம் இடிந்து கிடந்தது. கமல் பஸதியில் பூசை செய்யும் பூசாரி இருந்தார். வழிபாட்டுக்கு அந்தக் காலையிலும் ஆட்கள் வந்திருந்தார்கள். இடிந்தும் அழிந்தும் கிடந்த ஜினாலயங்களைக் கண்ட கண்களுக்கு அந்த மங்கலத்தோற்றம் நிறைவை அளித்தது.

பெல்காம் கர்நாடகத்தின் வட எல்லை. உண்மையில் மராட்டி அதிகமாகப் பேசப்படும் பகுதி இது. இதை மகாராஷ்டிரத்துடன் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக அரசியலில் உள்ளது. இந்தக் கோயிலுடன் எங்கள் கர்நாடகப்பயணம் முடிவுக்கு வருகிறது. மகாராஷ்டிர எல்லைக்குள் நுழைகிறோம்.

கர்நாடகத்தின் சமணக் கட்டிடக்கலை பல பருவங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் காலகட்டம் சாதவாகன காலகட்டம். சாதவாகனர்கள் ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரத்தின் தெற்குப்பகுதி ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆட்சி செய்திருந்தார்கள். கிமு 230 முதல் இவர்களின் ஆட்சிக்காலம் ஆரம்பிக்கிறது. கிபி இரண்டாம் நூற்றாண்டுவரை ஆண்டார்கள். சாதவாகனர்கள் பௌத்தமதத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் சமணத்துக்கும் ஆதரவளித்தார்கள். இந்தியாவை ஏறத்தாழ ஐநூறாண்டுக்காலம் ஆண்ட சாதவாகனர்களே இந்த தேசத்தின் பழங்குடிச்சமூகங்களை அமைதியான முறையில் ஒருங்கிணைத்து ஒரு வலுவான வணிக வலையை உருவாக்கியவர்கள். இந்தியா என்ற தேசியக் கட்டமைப்பை உருவாக்கியவர்கள் மகதர்களும் சாதவாகனர்களுமே என்றால் மிகையல்ல.

கர்நாடகத்தின் பல சமண பஸதிகளில் சாதவாகனர் காலக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சாதவாகனர் காலத்தில் சிறப்புடன் இருந்த பல சமண நகரங்கள் அழிந்து ஐநூறாண்டுகளுக்குப்பின் மீண்டும் கண்டடையப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டன. ஆகவே சாதவாகனர்களின் தடயங்கள் மிகக்குறைவாகவே கிடைக்கின்றன.

கதம்பர்கள் இரண்டாம் கட்ட சமண மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்தவர்கள். பனவாசி, ஹலசி போன்ற ஊர்களில் நிறைய கதம்பர்களின் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. பிற்காலத்தைய சமணக் கோயில்கள் பலவும் கதம்பர்களால் கட்டப்பட்டவை. கதம்பர்கள் வடகர்நாடகம், கொங்கணம் ஆகிய நிலப்பகுதிகளை ஆண்டவர்கள். இவர்களின் தலைநகரம் பனவாசி. கதம்ப மன்னர்களில் முக்கியமானவர் காகுஸ்தவர்மர். அவர் பல சமணக் கோயில்களைக் கட்டியிருப்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

கதம்ப வம்சம் கிபி 345 வாக்கில் மயூரசன்மன் என்ற மன்னரால் நிறுவப்பட்டது. மாயூரசன்மன் காஞ்சிப் பல்லவர்களை தோற்கடித்தான். தமிழகத்துடன் பனவாசிக்குள்ள வணிகத்தொடர்பு நேரடியானது. கதம்ப மன்னர்களில் சிவகோடி முதலில் சமண மதத்தைத் தழுவினார் எனப்படுகிறது. இதேகாலகட்டத்தில் மேற்குப்பகுதியை கங்க வம்சம் ஆண்டது. அவர்களுடன் கதம்பர்கள் மண உறவு கொண்டார்கள். ஆகவே வலுவான ஒரு ஆதிக்கசக்தியாக இப்பகுதியில் திகழ்ந்தார்கள். பின்னர் ராஷ்டிரகூடர்களுக்குக் கீழேயும் சாளுக்கியர்களுக்குக் கீழேயும் சிற்றரசர்களாக ஆட்சி செய்தார்கள். அவர்களின் குடும்பக் கிளைகள் ஹலசி போன்ற ஊர்களிலும் இருந்தன.

சமணக் கோயில்களின் மூன்றாம் காலகட்டம் பதாமி சாளுக்கியர்களுடையது. முன்பு பதாமி வாதாபி என அழைக்கப்பட்டது. இவர்கள் மேலைச்சாளுக்கியர் என்றும் சொல்லப்படுகிறார்கள். ஆரம்பத்தில் ஐஹோல்-பட்டக்கல் போன்ற ஊர்களில் ஆட்சிசெய்த இவர்கள் பின்னர் பதாமியைத் தலைநகரமாகக் கொண்டார்கள். தென்னிந்தியாவில் பாறைக்குடைவுக்கோயில்களை உருவாக்கியவர்கள் இவர்களே. பதாமியின் சமண ஆலயங்கள் முக்கியமானவை. வாதாபி சாளுக்கியர்களின் காலகட்டம் ஐந்தாம் நூற்ற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை எனலாம்.

சமண ஆலயக்கலையின் அடுத்த காலகட்டம் ராஷ்டிரகூடர்களின் கட்டிடங்களாலானது. இவர்களின் தலைநகரம் இன்றைய மத்தியபிரதேசத்தில் உள்ள மான்பூர். நெடுங்காலம் இவர்கள் வடகர்நாடகத்தை ஆண்டிருக்கிறார்கள். ராஷ்டிரகூட மன்னர்கள் சமண மதத்தைத் தங்களின் இரண்டாவது மதமாகப் பேணினார்கள். கர்நாடகம் முழுக்க அவர்கள் கட்டிய பல்வேறு சமண பஸதிகள் உள்ளன. ராஷ்டிரகூடர்கள் ஏழாம் நூற்றாண்டுமுதல் இரு நூற்றாண்டுக்காலம் ஆதிக்கம் செலுத்தினர்.

சமணக் கட்டிடக்கலையின் முக்கியமான காலகட்டம் கல்யாணி சாளுக்கியர்களுடையது. இவர்கள் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் கர்நாடகத்தின் கிழக்குப்பகுதியை ஆண்டார்கள். இவர்களின் தலைநகரம் கல்யாணபுரம் என அழைக்கப்பட்டது. பஸ்வாகல்யாண் என்றும் பெயருண்டு. இந்நகரம் இப்போது மறைந்துவிட்டது. இவர்களின் முக்கியமான நகரமாக பனவாசி குறிப்பிடப்படுகிறது. ஹங்கலிலும் இவர்கள் ஆண்டிருக்கிறார்கள். கல்யாணி சாளுக்கியர்கள் பெரும்பாலும் சமணர்கள். சிலசமயம் மன்னர்கள் சைவர்களாக இருந்தபோது அவர்களின் மனைவியர் சமணர்களாக இருந்திருக்கிறார்கள்.

தேவகிரியைத் தலைமையகமாகக் கொண்டு ஆண்ட செவ்வுன மன்னர்கள் வடக்குக் கர்நாடகத்தையும் மகாராஷ்ட்ரத்தையும் ஆண்டிருக்கிறார்கள். கல்யாணி சாளுக்கியர்களுக்குப்பின்னர் இவர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இவர்களின் ஆதிக்கம் நிலவியது. இவர்களில் பல மன்னர்கள் சமண ஆலயங்களைக் கட்டியிருக்கிறார்கள்

அதன் பின்னர் விஜயநகரக் காலகட்டம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி முந்நூறு வருடங்கள் நீடித்தது. விஜயநகர மன்னர்கள் எவரும் சமணர்கள் அல்ல. ஆனால் ஏராளமான சமண மடங்களுக்கும் ஆலயங்களுக்கும் பெருமளவில் நிதிவழங்கியிருப்பதை அவர்களின் கல்வெட்டுகள் காட்டுகின்றன. விஜயநகர மன்னர்களின் அமைச்சர்களிலும் சிற்றரசர்களிலும் பலர் சமணர்கள். வேணூரின் திம்மண்ண அஜிலரைப்போல. அவர்கள் முக்கியமான சமண ஆலயங்களைக் கட்டுவித்தார்கள்.

விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப்பின்னர் சமணர்களின் கட்டிடக்கலை பெரும்பாலும் தனிப்பட்ட வணிகர்களையே நம்பியிருந்தது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சமண வணிகர்கள் மீண்டும் பொருள் ஆதிக்கம் பெற்றபோது பழைய சமண பஸதிகளை எடுத்துக்கட்ட ஆரம்பித்தார்கள். இன்று பெருநகரங்களில் உள்ள பல சமணக் கோயில்கள் வணிகர்களால் சென்ற இருநூறாண்டுகளில் கட்டப்பட்டவையாகும்.

இந்தப் பயணத்தில் வாதாபி சாளுக்கியர்களின் கட்டிடக்கலையை அனேகமாக பார்க்கவே இல்லை எனலாம். விஜயநகரக் கட்டிடக்கலைக்கும் முக்கியமான உதாரணங்களைக் காணவில்லை. நாங்கள் அதிகம் பார்த்தது கதம்பர்கள், கல்யாணி சாளுக்கியர்களின் கட்டிடங்களையே.

கோலாப்பூர் செல்லும் தேசிய நாற்கரச்சாலையில் சென்றோம். இருபக்கமும் காய்ந்த புல் பொன்னிறமாக விரிந்த பெரும் நிலவெளி. அப்பால் சூரியன் வந்துகொண்டே இருந்தது. கிருஷ்ணன் சட்டென்று குன்றுமேல் ஒரு கோட்டையைச் சுட்டிக்காட்டினார். ஏறலாமே என்றார். காரைத் திருப்பி மேலே சென்றோம். கோட்டையின் பெயர் வல்லப்கர். சிவாஜி காலத்தைய கோட்டை. மண்வெட்டுக் கல்லால் ஆனது. ஒரு குன்றுமீது இருந்த கோட்டை. முந்நூறாண்டுகளுக்கு முன்னர்கூடப் புழக்கத்தில் இருந்திருக்கலாம். இடிந்த கட்டிடச்சுவர்கள் இருந்தன. உள்ளே செல்லும் வழி வளைவாக, உள்ளே செல்பவர்களை மதில்மேலிருந்து தாக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்தது.

கோட்டைக்குள் ஒரு பெரிய சுரங்கப்பாதை இறங்கிச்சென்றது. கொஞ்சதூரம் செல்லலாம் என்ற நினைப்பு வந்தாலும் உள்ளே கேட்ட வவ்வால்களின் ஒலி அச்சுறுத்தியது. இருண்ட சுரங்கப்பாதை எங்கே திறக்கிறது என மறுபக்கம் சென்று நோக்கினோம். எங்கும் அதன் மறுமுனை காணப்படவில்லை.

சாலையில் இருந்து பிரிந்து சென்றுகொண்டே இருந்தோம். சட்டென்று வளமிக்க மண் தெரிய ஆரம்பித்தது. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கரும்பு வயல்கள். பல இடங்களில் கரும்பு வெட்டிக்கொண்டிருந்தார்கள். ஒரு இடத்தில் கரும்பு வெட்டுவதற்காக மகாராஷ்டிரத்தின் உள்கிராமங்களில் இருந்து வந்த மக்கள் கரும்புத்தாள்களினாலேயே கட்டியிருந்த குடிசைகள் தெரிந்தன. ஒரு நகரும் கிராமம். ஆயிரம் குடிசைகள் இருக்கும். அவர்களுடைய மாட்டுவண்டிகளும் காளைகளும் நின்றன. குழந்தைகளும் கிழவர்களும் மட்டுமே இருந்தனர். ஊர்த்தலைவர் போன்ற ஒருவர் நாங்கள் யார் என்று கேட்டறிந்தார். சென்னை என்றோம். தமிழ்நாடு என்றோம். தெரியும், பாலாஜியின் ஊர் என்றார். மொழிவழிப்பிரிவினைக்கு முந்தைய தமிழ்நாட்டை அவர் உத்தேசிக்கிறார் எனப் புரிந்தது.

மதியம் ஒன்றரை மணிக்கு கோபேஸ்வர் என்றழைக்கப்படும் கித்ராப்பூரை சென்றடைந்தோம். மிகச்சிறிய கிராமம். இது கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ளது. ஆற்றில் இறங்கி நீந்திக்குளித்தோம். உடலெங்கும் இருந்த செம்புழுதி போனதும் வரும் விடுதலை அற்புதமான அனுபவம். கோபேஸ்வரில் உள்ள ஆலயமே இந்தப் பயணத்தில் கண்ட கோயில்களில் சிற்பக்கலையின் உச்சம். இதுவரை கண்டுவந்த எல்லா சிற்ப வேலைப்பாடுகளையும் விட அளவிலும் அழகிலும் பலமடங்கு பெரிதாகிவிட்டிருந்தன.

‘ஒவ்வொரு முறையும் இதைத்தான் சொல்றோம் சார். ஒரு கலை இன்னொரு கலையைத் தோக்கடிச்சுட்டே போய்ட்டிருக்கு’ என்றார் கிருஷ்ணன். கோபேஸ்வர் கோயிலின் சுவரில் உள்ள நூற்றுக்கணக்கான அழகிகளின் சிற்பங்கள் பேதலிக்கவைப்பவை. பெண்ணுடல் என்ற இயற்கை அற்புதத்தைக் கடவுளைக் காணும் பரவசத்துடன் தரிசித்திருக்கிறார்கள் சிற்பிகள். தேவ வடிவங்களில் சாமுத்ரிகா லட்சணங்கள் பேணப்படுவதனால் அவற்றின் முகங்கள் எப்போதும் மாறுவதில்லை. இவை அப்படி அல்ல. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு முகம், ஒவ்வொரு உடல்நளினம். நிற்பில், அசைவில், கண்ணில் நிறைந்துள்ள கனவில். இந்த வேறுபாட்டை ஹளபீடு சிற்பங்களில் மட்டுமே நான் இந்த அளவுக்குப் பார்த்திருக்கிறேன்.

இங்கே கேளி சிற்பங்கள் அல்லது காதல் சிற்பங்கள் குறைவே. யானைகள் இங்கே மும்மடங்கு பெரிதாக இருந்தன. யானை உடலை, பெண்ணுடல் அளவுக்கே கொண்டாடியிருந்தார்கள். தேவதைகள், தேவர்கள் நடுவே சமண தீர்த்தங்கரர்களும் புத்தரும் நின்றிருந்தார்கள். நடனமிடும் மகிஷாசுரமர்த்தனி, பேய்கள் சூழக் கூத்தாடும் சாமுண்டி சிலைகள் மகத்தான கலைப்படைப்புகள். இங்குள்ள சிலைகளைப் பட்டியலிடுவதோ விளக்குவதோ முடியாத காரியம். சிலைகளைக் கொண்டே கட்டப்பட்ட பெரும் கோயில் இது. ஒரு மகத்தான கனவில் சிலைகளைக் கண்டுகொண்டு பல வருடம் வாழ்ந்து வாழ்ந்து வாழ்ந்து தீராமல் உலுக்கி விழித்தெழும் அனுபவம்.

கோயில் முகப்பில் உள்ள பெரும் புஷ்பவிதானம் இடிந்திருந்தது. துல்லியமான வட்டமாக மேலே வானம் தெரிந்தது. மிக அபூர்வமான ஒரு கல்லில் கட்டப்பட்ட கோயில் இரும்பைக் காய்ச்சி வடித்தது போல. மின்னும் கருமை. உள் மண்டபத்த்தில் இருளை உருக்கிக் கட்டியது போன்ற தூண்கள். மிக அபூர்வமாகக் கருவறைக்குள்ளும் ஏராளமான நடனமோகினிகளின் அழகிய சிலைகள்.

இந்தக் கோயில் சிலாகார் அரசனான கண்டராதித்தனால் கட்டப்பட்டது. பின்னர் விஜயாதித்யனும் இரண்டாம் போஜவர்மனும் இதை விரிவாக்கம் செய்தார்கள். 1109 முதல் 1178 வரை இது தொடர்ச்சியாகக் கட்டப்பட்டது. காலகட்டத்தை வைத்துப்பார்த்தால் இது தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சமானமான காலட்டத்தைச் சேர்ந்தது. ஆனால் அன்றுவரையிலான நம்முடைய சிற்பக்கலையை வைத்துப்பார்த்தால் இதனுடன் ஒப்பிடுகையில் அது உருவாகி வரும் நிலையில்தான் இருந்தது. நாம் வியக்கும் சிற்பங்கள் எல்லாமே நாயக்கர் காலகட்டத்தில், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்துக் கட்டப்பட்டவை. இந்த அளவுக்கு சிற்ப நுட்பத்தை நாம் எப்போதுமே அடையவும் இல்லை

இந்தக் கோயிலின் விமானம் உடைக்கப்பட்டிருக்கிறது. சிற்பங்களில் உடையாத சிற்பங்கள் குறைவே. இதன் விமானத்தை வைத்துப் பார்த்தால் கஜுராஹோவின் பெரிய கோபுரமும், தஞ்சைப் பெரிய கோயிலின் முன்மாதிரியுமான காந்தரிய மகாதேவர் ஆலயத்தின் பாணியிலான அதே அளவுக்குப் பெரிய விமானம் இங்கே இருந்திருக்கிறது என்று தோன்றியது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அலாவுதீன் கில்ஜியால் இந்த ஆலயம் முழுமையாக இடிக்கப்பட்டது. கருவறைக்குள் உள்ள அனைத்துச் சிற்பங்களும் தலை உடைக்கப்பட்ட நிலையில் உள்ளன. வெளியேயும் சிற்பங்கள் பெரும்பாலும் உடைக்கப்பட்டிருக்கின்றன. கலைச்சிறப்பில் கஜுராஹோவுடனும் ஹலபீடுடுடனும் ராமப்பா கோயிலுடனும் ஒப்பிடத்தக்க இந்தப் பேராலயம் இன்று கலையின் கசாப்புசாலை போல கிடக்கிறது.

கோபேஸ்வரில் ஒரு ஜைன ஆலயம் உள்ளது. ஒரு காலத்தில் இது சமணர்களின் முக்கியமான புனிதநகரம். இந்துப் பண்பாடும் சமணப் பண்பாடும் இணைந்து வளர்ந்தன. கோபேஸ்வர் கோயிலை கட்டிய அதே சிலாகார் மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய ஜினாலயம் இங்குள்ளது. அது அலாவுதீன் கில்ஜியால் முழுக்க இடிக்கப்பட்டு நெடுநாட்கள் இடிபாடுகளாகக் கிடந்தபின் சமீபத்தில் அதன் மேல் ஒரு கான்கிரீட் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இங்கும் கோயில் புறச்சுவர்களில் கோபேஸ்வர் கோயிலில் உள்ளது போலவே போக சிலைகளும் மோகினிச்சிலைகளும் இருந்தன. அதே பாணிக் கோயில்தான் இதுவும்.

கோலாப்பூரில் இருந்து மகாராஷ்டிர மையநிலத்துக்குள் நுழைந்தோம். இங்கேதான் கிருஷ்ணா உற்பத்தியாகிறது. பிரம்மாண்டமான வண்டல் சதுப்பு. எங்கும் கரும்பு. போகிற வண்டிகளில் இருந்தெல்லாம் கரும்பு வாங்கித் தின்றுகொண்டே சென்றோம்.அதிகம் தின்றால் வாய் புண்ணாகும் என்று தெரிந்தாலும் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. எங்கள் அடுத்த இடம் கும்போஜ். கும்போஜ் ஊருக்கு வெளியே ஒரு சமண மடாலயமும் பள்ளிக்கூடங்களும் சமண வழிபாட்டிடங்களும் உள்ளன. இப்பகுதி பாகுபலி என்றே அழைக்கப்படுகிறது.

கோலாப்பூரில் இருந்து 27 கிமீ தெற்காக மலைமீது இந்த பாகுபலி கோயில் உள்ளது. நானூறு படிகள் ஏறிச்செல்லவேண்டும் மேலே முன்னூறுவருடம் பழமையான துறவியர் மடம் இருந்தது. கல்லால் ஆனது. அதனருகே இப்போது புதியதாகக் கான்கிரீட்டில் கட்டப்பட்ட சமண ஆலயங்கள் உள்ளன. ஆலயங்களுக்குள் வெண்சலவைக்கல்லில் அமர்ந்த தீர்த்தங்கரர் சிலைகள். ஒரு பீடத்தில் எட்டடி உயரமான பாகுபலி சிலை நின்றது. சலவைக்கல் சிலை.

அங்கே மலை விளிம்பில் அமர்ந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தோம். கீழே நிலம் பசுமையும் செம்மையுமாக விரிந்து கிடந்தது. குளிர் பரவ ஆரம்பித்த நேரம். பறவைகள் அணையும் ஒலி. கீழே வரும் வழியில் புதியதாக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கோயில் வளாகம். அது பல படிகளாக ஏறிச்சென்றது. மேலே பாகுபலியின் பெரிய வெண்சலவைக்கல் சிலை. 28 அடி உயரமான சிலை. அங்கே நிலவிய அமைதியில் இருட்டும் வரை அமர்ந்திருந்தோம்.

திரும்பிவந்து சமண தர்மசாலாவில் தங்குமிடம் கேட்டோம். எந்த வினாவும் இல்லை. வசதியான இடம். என்ன பிரச்சினை என்றால் சமணர்கள் ஆறுமணிக்கு மேல் சாப்பிடுவதில்லை. ஆகவே உணவே இல்லை. நண்பர்கள் காரில் நகருக்குள் சென்று உணவு வாங்கி வந்தார்கள்.

மேலும்…

 

மேலும் படங்கள் இங்கே

 

முந்தைய கட்டுரைஅடிமை மானுடம் – சீனு
அடுத்த கட்டுரைஞானமும் மெய்ஞானமும்- சீனு கடிதம்