கவிஞர் சி.மணி :அஞ்சலி

 

கவிஞர் சி.மணி நேற்றிரவு காலமானார். எழுத்து காலகட்டத்தைச் சேர்ந்த கவிஞர்களில் முக்கியமானவர் சி. மணி. தமிழில் புதுக்கவிதையை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழ் புதுக்கவிதையை உருவாக்கும் வீச்சுடன் வெளிவந்தபோது அதில் எழுதிய கவிஞர்களில் நகுலன்,சி.மணி, பசுவய்யா [சுந்தர ராமசாமி] பிரமிள். இரா மீனாட்சி, தி.சொ.வேணுகோபாலன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். அவர்களின் கவிதைகளைக்கொண்டு சி.சு.செல்லப்பா வெளியிட்ட புதுக்குரல்கள் என்ற கவிதைத்தொகுதி அக்காலத்தில் பரவலாகப் பேசபப்ட்டது. தமிழின் முதல்புதுக்கவிதைத்தொகுதி அது

 

யாப்பை உடைத்து புதுக்கவிதை  உருவானபோது அதற்கான நியாயங்களை முன்வைத்து வாதாடியவர்களில் முக்கியமானவர் சி.மணி. டி.எஸ்.எலியட்டின் சிந்தனைகளால் பெரிதும் கவரபப்ட்டவர். எலியட்டின் பாழ்நிலத்தை மொழியாக்கம்செய்தவர். அந்த பாதிப்பில் நரகம் என்னும் நீள்கவிதையையும் எழுதியிருக்கிறார்.

 

தமிழ் நவீனக்கவிதையில் அங்கதம்ழென்பது சி.மணியால் கொண்டுவரப்பட்டது எனலாம். இருத்தலின் வெறுமையை சிரிப்பும் கசப்புமாகச் சொன்ன பல புகழ்பெற்ற கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார். பின்னர் அம்மரபு ஞானக்கூத்தன், ஆத்மாநாம் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது. வரிகளை ஒடித்தும் பிரித்தும் பொருள்களை உருவாக்குவது அவரது வழிமுறைகளில் ஒன்று சாதா ரணவாழ்க்கை வாழும்  மனிதன் இவன்என்பது போல

 

 

சி.மணிவிளக்கு பரிசு பெறுகிறார். அளிப்பவர் ஞானக்கூத்தன்.  [www.thinnai.com]

 

 

சமீபகாலமாக இலக்கிய நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதில்லை. சமீபத்தில் அடையாளம் பிரசுரமாக வந்த நூல்வரிசையில் பௌத்தம் பற்றிய நூலை மொழியாக்கம் செய்திருந்தார்.  2002 ஆம் ஆண்டுக்கான விளக்கு இலக்கியப்பரிசு சி.மணிக்கு வழங்கப்பட்டது

 

 சி.மணியின் இயற்பெயர் எஸ் பழனிசாமி .  3 அக்டோபர் , 1936 இல் பிறந்தவர். கல்வி   எம் ஏ (ஆங்கிலம்), பி எட்., பி ஜி டி டி சி   சென்னை, வேலூர், குமார பாளையம்  அரசினர் பயிற்சிக் கல்லூரி களில் ஆங்கிலப் பேராசிரியர்.   

வரும்போகும் (கவிதைகள்), [ க்ரியா, 1974 ] யாப்பும் கவிதையும் (விமர்சனம்),[ சாதனா, 1975 ] ஒளிச் சேர்க்கை (கவிதைகள்)[ சாரல், 1976]  இதுவரை (கவிதைகள்)[ க்ரியா, 1996 ] ஆகியவை நூல்கள்

மொழியக்கமாக தோண்டுகிணறும் அமைப்பும் [ க்ரியா, 1982 ] டேனிடா செயல் முறைத் திட்டம் [தமிழ்நாடு அரசு, 1984]  தாவோ தே ஜிங்(ஆன்மிகம்) [ க்ரியா , 2002  ] ஆகியவை வெளிவந்துள்ளன

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் (இரு முறை 1983,1985)  விருது வழங்கியிருக்கிறது.  ஆசான் கவிதை விருது ,  கவிஞர் சிற்பி விருது ஆகியவை கிடைத்துள்ளன  

 வே.மாலி என்றபேரிலும் எழுதியிருக்கிறார்

 

சி.மணிக்கு அஞ்சலி

 

 

 

 http://www.thinnai.com/?module=displaystory&story_id=604010112&format=print&edition_id=20040101

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60312182&format=print

முந்தைய கட்டுரைஆதிச்சநல்லூர்:மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்