அருகர்களின் பாதை 5 – ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர்

அதிகாலை நான்கு மணிக்கு விடுதி அறையில் எழுந்தோம். ஒவ்வொருவராகக் குளித்து வருவதற்குத் தாமதமாகியது. வெளியே நாங்கள் இந்தப் பயணம் கிளம்பியபின் வந்த முதல் பெரிய நகரம் துயில் எழுந்துகொண்டிருந்தது. பன்றிகள் உறுமிக்கொண்டு அலைந்தன. வாசலிலேயே டீ விற்ற தள்ளுவண்டிக்காரர் அருகே இரு பெரிய பசுக்கள் நின்று டீ குடிப்பவர்களை மெல்ல முட்டி பன் வாங்கித் தின்றுகொண்டிருந்தன. அரங்கசாமி ஒரு பசுவுக்கு நான்கு பன்கள் வாங்கிக்கொடுத்தார். டீ குடிக்க வந்தவர்கள் பலர் பசுவைத் தொட்டுக் கும்பிட்டுச் சென்றார்கள். ஒரு மதச்சடங்கு. ஆனால் யோசித்தால் அதற்கு இன்னும் ஆழம் இருக்கலாமென்று பட்டது. பெரும்பாலும் புல்வெளிகள் சூழ்ந்த இந்த நிலப்பரப்பில் ஒரு காலத்தில் மேய்ச்சலே முக்கியமான வாழ்க்கை முறையாக இருந்திருக்கலாம். அன்று பசு செல்வத்துக்கும் மங்கலத்துக்கும் அடையாளமாக இருந்திருக்கலாம். கண்கண்ட தெய்வமாகவே இருந்திருக்கலாம்.

பசுக்களை இங்கே அடிப்பதில்லை. துரத்தும்போதுகூட செல்லமாகத் தட்டி அனுப்புகிறார்கள். ஓட்டலுக்குள் இரு மாபெரும் பசுக்கள் உள்ளே நுழைந்து எதையோ வாங்கித் தின்றுவிட்டு மேஜைகள் நடுவே கனத்த உடலை மெல்லத் திருப்பி நடந்தன. நானும் அரங்கசாமியும் சீனுவும் கிருஷ்ணனும் ஒரு காலைநடை சென்றோம். பெட்டிகளை மேலே கட்டி வைத்ததும் கிளம்பினோம்.

நாங்கள் திட்டமிட்டிருந்தது முலுகுந்து போவதற்கு. ஆனால் போகும் வழியில் வரைபடத்தை நன்றாகப் பார்த்தபோதுதான் பனவாசி, ஹங்கல் என இரு இடங்களையும் விட்டுவிட்டுச் செல்வதைக் கண்டுபிடித்தோம். ஆகவே வண்டியைத் திருப்பி ஹங்கலுக்குச் சென்றோம்.

ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஹங்கல், தர்மா ஆற்றின் கரையில் உள்ளது. ஆற்றங்கரையில் தொன்மையான கோட்டை ஒன்றின் இடிபாடுகள் உள்ளன என இணையம் சொன்னாலும், அங்கே ஏதும் இல்லை என்றே எல்லாரும் சொன்னார்கள். இந்தச் சிறிய நகர் அருகே அனிகெரே என்ற பெரும் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஊர் மகாபாரதத்தில் விராட்நகர் என்று சொல்லப்பட்டுள்ளது என்கிறார்கள். ஹங்கலின் முக்கியமான கோயில் என்பது இங்குள்ள தாரகேஸ்வரர் கோயில்தான். இந்தப்பயணத்தில் நாங்கள் கண்ட மிகச்சிறந்த கலைப்படைப்பு என்பது இந்த ஆலயம். தக்காணத்துக் கோயில்களின் முக்கியமான கலைச்சிறப்பு என்பது தூண்களும் பிரம்மாண்டமான அலங்கார வட்டக்கல் கவிழ்த்தப்பட்ட முகப்பு மண்டபங்களும்தான். கதம்ப மன்னர்கள், பின்னர் கல்யாணிசாளுக்கியர்கள், கடைசியாக ஹொய்சளர்கள் காலம் வரை தொடர்ச்சியாக இந்தக் கட்டிடக்கலை இங்கே வளர்ந்து வந்திருக்கிறது. கதம்பா-ஹொய்சள பாணி என இதைச் சொல்லலாம். இந்தப் பாணியின் மிகச்சிறந்த உதாரணமாக சொல்லத்தக்கது இந்தப் பேராலயம்.

நாங்கள் இதுவரை பார்த்த கோயில்களில் சிற்ப நுட்பங்களில் உச்சம் என்பது ராமப்பா கோயில் [ஆந்திராவில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில், சென்ற இந்தியப் பயணத்தில் பார்த்தோம்] அதற்கு இணையான கோயில் என இதைச் சொல்லலாம். உயரமற்ற அழகிய கோபுரம் கொண்ட கருவறை. அதற்கு முன்பாக வரிசையாக மண்டபங்கள். உருளையாகத் தீட்டப்பட்ட தூண்கள். கன்னங்கரிய கல். குறிப்பாகக் கோயிலுக்கு முன்னால் உள்ள பெரிய அணிமண்டபத்தின் புஷ்பவிதானம் ஒருநாள் முழுக்க அமர்ந்து பார்த்தாலும் தீராத செறிவுகொண்டது.

ஹங்கல், கதம்பர்களின் தலைநகரமாக இருந்துள்ளது. கதம்பர்கள் அக்காலகட்டத்தில் கல்யாணிசாளுக்கியர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்துள்ளார்கள். கதம்பர்கள் கோவா பகுதியை, அதாவது கொங்கண் கடற்கரையை ஆண்டுவந்தவர்கள்.  ஆரம்பத்தில் இவர்கள் பனவசி அல்லது வைஜயந்தபுரத்தை ஆண்டுவந்தனர். பின்னர் அவர்கள் ஹங்கலுக்கு வந்தார்கள். கதம்பர்கள் சமண மதத்தைச் சார்ந்தவர்கள்.  ஆறாம் நூற்றாண்டில் வாதாபிசாளுக்கியர்கள் கதம்பர்களை வென்று அவர்களின் நாட்டைத் தங்களுடைய நாட்டுடன் இணைத்துக்கொண்டார்கள். ஹங்கல் முழுக்க ஏராளமான சமண ஆலயங்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றாக அழிந்தன. இப்போது ஒரே ஒரு கோயில்தான் உள்ளது. தாரகேஸ்வரர் ஆலயத்துக்குள் சந்தித்த காவலர் எங்களைக் கூட்டிக்கொண்டு சென்று கோயிலைக் காட்டினார். அந்தக் கோயில் தோட்டக்கலை வளாகத்துக்குள் உள்ளது. சின்னஞ்சிறிய கோயில். ஆனால் தாரகேஸ்வரர் கோயிலுக்குச் சற்று முந்தைய வடிவத்தைச் சேர்ந்தது.

ஹங்கலில் இருந்து பனவாசிக்கு வந்தோம். பனவாசி கதம்ப மன்னர்களின் இரண்டாம் தலைநகரமாக இருந்தது. உண்மையில் இது ஒரு புதையுண்ட நகரம். ஹங்கல், பனவாசி இரு நகரங்களிலும் ஏராளமான புதைபொருள் ஆய்வுகள் பலகாலமாகத் திட்டமிட்டு நடத்தப்படாமல் உள்ளன, நிதி நெருக்கடியால். இன்னும் அகழப்படாத ஒரு வரலாறு கதம்பர்களுடையது.

வடகர்நாடகத்தில் ஷிவ்மொக்கே மாவட்டத்தில் உள்ள பனவாசி பலவகையிலும் முக்கியமானது. கர்நாடகத்திலேயே மிகத்தொன்மையான ஊர் இது என்று சொல்லப்படுகிறது.  இன்று இது இந்துக்களின் புண்ணியத்தலம். இங்குள்ள முக்தேஸ்வர் ஆலயம் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிவாலயம் இது. இதன் கூரையின் சரிவு இங்குள்ள அதீத மழைக்கு அவசியமானது போலும். இது ஓடுபோட்ட கோயில்களை நினைவுறுத்துகிறது.  கோயிலின் முகப்பும் அமைப்பும் கூட ஓடுபோடப்பட்ட ஆலயம் என்ற எண்ணத்தை உருவாக்குவதாகவே உள்ளது.

ஆனால் ஆலய வளைப்புக்குள் நுழைந்தால் கோயில் நம்மை மூச்சுத்திணறச்செய்யும் அளவுக்கு பிரம்மாண்டமானது என்பது தெரியும். கல்லாலான அலைகளாக விரிந்து விரிந்து சென்றது கோயிலின் இணைப்புவரிசை. நான்கு பக்கமும் அஷ்டதிக்பாலகர்களின் சிலைகள். எருமைமேல் அமர்ந்த எமனின் பெரிய சிலையைக் கண்டபோது நான் எமனின் சிலையைப் பார்த்ததே இல்லை என்ற எண்ணம் வந்தது. கருவறைக்குள் உள்ள லிங்கம் மதுகேஸ்வரர் என்று சொல்லப்படுகிறது. சாளகிராமத்தால் ஆனது, தேன் நிறமானது.

வழக்கம்போல மலைக்க வைக்கும் முகமண்டபம். தமிழ் சிற்பக்கலை எப்படி கோபுரங்களில் தன் உச்சத்தைத் தொட்டதோ அப்படி இவர்கள் சிற்பத்தூண்களிலும் மண்டபங்களிலும் உச்சத்தைக் கண்டிருக்கிறார்கள். குளிர்ந்து கிடந்த கோயில் மண்டபங்கள் வழியாகக் காலமற்ற ஒரு அந்தரங்க வெளியில் சுற்றியலைந்துகொண்டே இருந்தோம். இங்கே மிகத்தொன்மையான நாணயங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் கிபி ஐந்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த கதம்ப மன்னர் இரண்டாம் கிருஷ்ண வர்மனின் நாணயம் முக்கியமானது. அதில்தான் முதன்முதலாக கன்னட எழுத்துக்களின் முதல் வடிவம் காணக்கிடைக்கிறது. அதில் மகாபாரதத்தில் உள்ள சசாங்கரின் சித்தரிப்புடன் நிலவு என கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது.

பனவாசிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆதிகவி பாம்பா இங்கேதான் பிறந்தார். பாம்பா கன்னட கவிஞர்களில் முதன்மையானவர். கன்னட இலக்கியமே மும்மணிகள் என அழைக்கப்படும் பாம்பா, பொன்னா, ரண்னா ஆகிய மூன்று கவிஞர்களால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். மூவருமே சமணக் கவிஞர்கள். பாம்பா, சாளுக்கிய மன்னர் இரண்டாம் அரிகேசரியின் அவைப்புலவராக இருந்தார். அரிகேசரி அன்று ராஷ்டிரகூடப் பேரரசின் கீழ் சிற்றரசராக ஆட்சி செய்துவந்தார். உரையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்ற வடிவில் [சம்பு] எழுதிய பாம்பா விக்ரமார்ஜுன விஜயம், [இது பாம்பா பாரதம் என அழைக்கப்படுகிறது] ஆதிபுராணம் என இரு பெரும் காவியங்களை எழுதியிருக்கிறார்.

பாம்பா பனவாசியில் பிறந்தார் என்பதற்குச் சில ஆதாரங்கள் உள்ளன. சிலர் அவர் அன்னிகேரியில் பிறந்தாரென்று சொல்கிறார்கள். பனவாசி ஒருகாலத்தில் கதம்பா ஆட்சியாளர்களின் தலைநகரமாக இருந்துள்ளது.  கதம்பர்கள் கிபி இரண்டு-மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆட்சி செய்தவர்கள். இவர்கள் சமணர்கள். இவர்களுக்குச் சமானமான காலகட்டத்தில்தான் தமிழகம் சமணர்களான களப்பிரர் ஆட்சியில் இருந்தது. கதம்பர்களுக்கும் களப்பிரர்களுக்கும் உள்ள உறவு இன்னும் விரிவாக ஆராயப்படவில்லை.

பனவாசி வழியாக வரதா ஆறு ஓடுகிறது. இது இங்கே மழையில்லாத காலம். ஜூன் ஜூலைதான் மழைக்காலம். ஆகவே ஆற்றில் பெரிதாக நீர் இல்லை.  ஆற்றைக் காரில் தாண்டி வந்தபோது அது பெரிதாக கவனத்தைக் கவரவில்லை.  மதியம் அங்கேயே அன்னசத்திரத்தில் சாப்பிட்டோம். அலைந்து திரிந்த பின் சூடான சோறும் சாம்பாரும் மோரும் கிடைத்தபோது ஆவேசமாக சாப்பிட வைத்தது. எந்த ஊர் என்று கேட்டுவிடுவார்களோ என்று தோன்றிவிட்டது. உண்டபின் குளிர்ந்த கல்திண்ணையில் சற்று நேரம் அமர்ந்துகொண்டோம்.

பனவாசி சமணர்களுக்கு முக்கியமான ஊர். ஹங்கல் பலகாலம் முன்னரே கைவிடப்பட்டு இடிபாடுகளாகக் கிடந்து நூறு வருடம் முன்பு மெல்லமெல்ல மக்கள் குடியிருக்க ஆரம்பித்த ஊர். கோயிலைச் சூழ்ந்தே குடிசைகளையும் வீடுகளையும் கட்டி வைத்திருந்தார்கள். நேர்மாறாக, பனவாசி அழகான பழைய ஊர். மண்ணைக் குழைத்துக் கட்டப்பட்ட பழமையான அழகிய வீடுகள் வரிசையாக அமைந்த தெருவில் நடந்தோம். ஓட்டு வீடுகள். குளிர்ந்த திண்ணைகள். மண்சுவரின் செம்பழுப்பு நிறம். சமண பஸதி ஒன்று பனவாசியில் இருப்பதாகச் சொன்னார்கள். தேடித்தேடிக் கடைசியில் ஒரு சமணரைக் கண்டு கொண்டோம். அவர் எங்களைக் கூட்டிச்சென்று காட்டிய கோயில் முப்பதாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. அங்கே கிடைத்த சமணச் சிலைகளைக் கொண்டுவந்து வைத்திருந்த இடத்தில் கட்டியிருக்கிறார்கள். மொத்தம் ஆறே ஆறு சமணக் குடும்பங்கள்தான் பனவாசியில் உள்ளன. ஆனால் பனவாசியில்தான் சமணம் ஒரு காலத்தில் தலைமையிடம் கொண்டிருந்தது. ஹும்பஜ் மடத்தின் முதல் தலைமையகம் இங்குதான் இருநூறாண்டுக் காலம் முன்பு வரை இருந்தது. எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் நினைத்து வந்தது இந்த ஊரே சமணர்களுடையதாக இருக்கும் என்று. ஊரெல்லாம் பஸதி கட்டிய கதம்பர்களின் தலைநகரத்தில் பஸதிகளே இல்லை என்பதில் ஓர் அபூர்வமான விதிவிளையாட்டு இருப்பதாகப் பட்டது.

இன்றே லட்சுமேஸ்வர் சென்றாகவேண்டும் என முடிவெடுத்தோம். லட்சுமேஸ்வரை வந்தடைய நான்கு மணி ஆகியது. இங்கே பிதார் சுல்தானால் கட்டப்பட்ட அழகிய மசூதி ஒன்று உள்ளது. தொல்பொருள் துறைப் பராமரிப்பில் உள்ள இந்த மசூதி முழுக்க முழுக்கக் கல்லால் ஆனது. மிக நுட்பமான செதுக்கு வேலைகள் கொண்டது. கல்லால் ஆன சங்கிலிகளும் பூவேலைப்பாடுகளும் அழகியவை. தொழுகை நடக்கிறது. உள்ளே பெயிண்ட் அடித்திருந்தார்கள்.

லட்சுமேஸ்வரம் கன்னட வரலாற்றில் முக்கியமான ஊர். இதற்கு ஹுலிகெரே அல்லது புலிகெரே என்று பெயர். புலிக்குளம் என்று பொருள்.  கன்னட ஆதிகவி பாம்பா இந்த ஊரில் வாழ்ந்து அவரது காவியங்களை எழுதியிருக்கிறார். இங்கே புகழ்பெற்ற பல சமண ஆசாரியர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். சங்கணாச்சாரியர், ஹேமதேவாச்சாரியர், பத்மசேனர், திரிபுவன சந்திர பாதமிதா, ராமதேவாச்சாரியர் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இங்கே கன்னட மொழியின் புராதனமான பல கல்வெட்டுகள் வாசிக்கப்பட்டுள்ளன.

லட்சுமேஸ்வரம் சமணர்களுக்கு முக்கியமான ஊர். ஆனால் மிகமிகச் சில சமணர்களே இங்கிருந்திருக்கிறார்கள். இரு சமண பஸதிகள் உள்ளன. ஒன்று சிக்க பஸதி. அதை நோக்கிச்செல்லும்போது எங்களுக்கு முன்னால் ஒரு திகம்பர முனி செல்வதைக் கண்டோம். முழு நிர்வாணமான உடல். கையில் மயில் தோகை. சிரித்த முகம். அவர் சென்றது சிக்க பஸதிக்குத்தான். அது முழுக்க முழுக்க இடிந்து பாழடைந்து கிடந்தது. அதை மூடி செங்கல்லால் கட்டியிருந்ததார்கள். அதைச் செப்பனிட்டு மீட்டுக்கொண்டிருந்தார்கள். நேமிநாதருக்கான பஸதி. ஆனால் வழிபாடு ஏதும் இல்லை. வேலை நடந்து கொண்டிருந்தது. முனிவரிடம் ஆசி பெற்றோம். இரு சமணர்கள் எங்களை வண்டியில் வழிகாட்டி தொட்ட பஸதிக்கு அழைத்துச் சென்றார்கள்.

தொட்ட பஸதி, சங்க பஸதி என்றும் அழைக்கப்படுகிறது.  அந்த ஆலயத்துக்குள் நுழைந்ததும் ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. முதன் முறையாக ஒரு சமண ஆலயத்தில், அதிலும் திகம்பர சமண ஆலயத்தில், போக சிற்பங்களைப் பார்த்தோம். பலவகையான உடலுறவுச்சிலைகள். நிறைய சிலைகளைச் செதுக்கி உடைத்திருந்தார்கள். கோயிலின் முகப்பு மண்டபம் மிக அழகானது. நுட்பமான செதுக்குவேலைகள் கொண்ட பலகணியால் ஆனது. ஆனால் கருவறையைக் கண்டதும் இன்னும் அதிர்ச்சி. மிக விசித்திரமான ஆலயம். முன்பு எப்போதோ இருந்த ஒரு பேராலயம் முற்றாக இடிந்து குப்பைக் குவியலாக ஆகிவிட்டிருக்கிறது. அந்த இடிந்த உடைந்த சிற்பங்களை அப்படியே அள்ளிக் கைக்குக் கிடைத்தபடி அடுக்கிக் கட்டி அந்த கோயிலைக் கட்டியிருந்தார்கள். கோயில் 12 ஆம் நூற்றாண்டில் சுல்தான்களால் இடிக்கப்பட்டு 16 ஆம் நூற்றாண்டில் உள்ளூர் சிற்றரசரால் எடுத்துக்கட்டப்பட்டது எனத் தெரிந்து கொண்டோம். சிற்பங்களால் ஆன ஒரு கொலாஜ் அது. சிற்பங்கள் சம்பந்தமே இல்லாமல் ஒன்று மீது ஒன்று அமர்ந்திருந்தன. அங்கே எங்கே பார்த்தாலும் சிற்பங்கள். உடைந்த சிற்பத்தை ஸ்டம்ப் ஆக்கி இரு பயல்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

மாலை ஐந்து மணிக்கு சோமேஸ்வர் ஆலயம் வந்து சேர்ந்தோம். பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் கல்யாணிசாளுக்கியர்களால் கட்டப்பட்ட இந்தப் பேராலயம் ஒரு நூற்றாண்டுக்காலம் கூட முழுமையுடன் இருக்கவில்லை. சுல்தானியப் படையெடுப்புகளால் இடிக்கப்பட்டபின் வெறும் இடிபாடுகளாகப் பல நூற்றாண்டுக்காலம் இது மண்மூடிக் கிடந்தது. இப்போதும் இடிபாட்டுக்குவியலாகவே உள்ளது. கோயில் வளாகம் முழுக்கப் பல்வேறு சிறு சன்னிதிகள் ஆளில்லாமல் கிடந்தன.  கோட்டை போன்ற சுற்றுமதிலுக்குள் ஹம்பியின் ஒரு துண்டு மட்டும் எஞ்சுவது போல பிரமை எழுந்தது. ஹம்பியை ஒரு கெட்டகனவில் திடுக்கிட்டு எழுந்த சிற்பி நினைவு கூர்ந்த காட்சி என்று கவிஞர் மோகனரங்கன் சொன்னதாகக் கிருஷ்ணன் சொன்னார். அப்படித்தான் இருந்தது. இந்த ஆலயத்தின் மிகப்பெரிய கவர்ச்சி என்பது இங்குள்ள குளம். இது ஒரு கிணறுதான். குளம் அளவு அகலமானது. நூற்றைம்பதடி ஆழம் கொண்டது. பெரும் கோட்டை போல மதில் கட்டி இறக்கியிருந்தார்கள். உள்ளே இறங்க பல அடுக்குகளாகச் செல்லும் கற்படிகள். விஷ்ணுபுரத்தில் சித்தனும் சீடனும் சென்று பார்க்கும் ஆழத்துக் குளம் போல் இருந்தது என்றார் சீனு.

அந்தி இறங்குவதுவரை சோமேஸ்வர் ஆலயத்திலேயே இருந்தோம். அந்திச்சிவப்பில் இப்படி ஆலயத்தில் இருப்பது சாதாரணமான அனுபவம் அல்ல. உள்ளுக்குள் ஏதோ உருகி வழிவது போல. குருதி எல்லாம் வழிந்து மறைவது போல. ஆனால் கிளம்பும்போது தோன்றியது, அதுவும் இயற்கையே என. பேரழகுடன் பிறக்கும் குழந்தை தொண்டு கிழமாகி சாவது போல.

மேலும்…

படங்கள் இங்கே – https://picasaweb.google.com/112217755791514676960/JainTripJeyamohanDay5

 

முந்தைய கட்டுரைசோழபாண்டியபுரம்
அடுத்த கட்டுரைதாய் எனும் நிலை – சீனு