கவிதைகள்:கடிதங்கள்

அன்புள்ள  திரு.ஜெயமோகன் அவர்களுக்கு

தி.க.சி என்ற தலைப்பில் தங்களின் வலைதளத்தில் வசித்தும் , மின்னஞ்சல் எழுத வேண்டும் என்ற எண்ணம் மேல்லோங்கி இருந்தது .வேலை நேரத்தை விழுங்கி கொண்டுவிட்டது . அது போக என்னுடைய தயக்கம் . தயக்கங்களுக்கு ஆறுதல் சொல்ல இவ்வளவு காலம் பிடித்துவிட்டது.          .

    விநாயகம் பிள்ளை அவர்களை பற்றி தாங்கள் பேசிக்கொண்டிருந்ததை வாசித்த போதுஆர்மோனியம் வாசித்துக்கொண்டே, ” தீக்குள் விரலை வைத்தல் நந்தலாலா ” பாடக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தவர் தான் என் உள்ளம் முழுவதும் வியாபித்திருந்தார். அப்போது நான் எட்டாம் வகுப்பு மாணவன். பாடப்
புத்தகக்களை கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தேன்.

 

தீராநதியில் ஒரு நேர்காணலில் இளைஞர்கள் நிறைய வாசிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தீர்கள் . இப்பொழுது என் வாசிப்பின் விசாலத்தை நான் உணர்கிறேன் .                            

                              என் பெயரையும் , உயிரோசையில் வெளிவந்திருந்த , என் கவிதைக்கான வலை முகவரியையும் தங்களின் வலைதளத்தில் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றி .

நன்றியுடன்,
பிரவின்ஸ்கா .  

 

http://pravinska.blogspot.com

 

 

 

 

அன்புள்ள பிரவின்ஸ்கா,

 

உங்கள் கவிதைகளைப் பார்த்தேன். நவீனக்கவிதைக்கான கவிமொழி அமைந்திருப்பதும் அபூர்வமான படிமங்கள் சில வாய்த்திருப்பதும் மகிழ்ச்சியை அளித்தன. வழ்த்துக்கள். கவிதையை விடாமல் தொடர்ந்து எழுதுங்கள். கவிதையாக என்ன அமைகிறது என்பதும் அவற்றைஎ ழுதுவதனால் என்ன கிடைக்கப்போகிறது என்பதும் இரண்டாம்பட்சமானவிஷயங்கள். நாம் கவிதைஎ ழுதுபவராக இருப்பதென்பது நம்மை நுண்மையாக, மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அதுவே அதன் பெரிய பயன்

ஜெ

 

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருபவர்களில் நானுமொருவன்.
இந்த அறிபுனை கவிதைகளை உங்களிடம் காண்பிக்க வேண்டுமென்று
தோன்றியது.
நேரமிருப்பின் பதிலிடுங்கள். இல்லையேல் “delete” பொத்தானை அழுத்திவிடுங்கள் :)

 

நன்றி,
நிலாரசிகன்.

 

 

 

1.
வழிந்து ஓடுகின்ற வெப்பத்தின்
அளவு உயர்ந்துகொண்டேயிருந்தது.
சொற்களால் விவரிக்க இயலாத
நிறத்தில் மலையென
குவிந்திருந்தது சாம்பல்.
கரும்புகை சூழ்ந்திருக்க
பற்றி எரிந்தது நீலக்கடல்.
வீசும் காற்றில்
அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தது
நெருப்பின் சுவாலைகள்.
எந்திரப்பெண்ணின் மார்பில்
முகம்புதைத்தழுதபடி
எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி
வாழ்ந்த புவியிது என்றுரைத்தான்
செவ்வாய்க்கு புலம்பெயர்ந்தவன்


2.
காதோரம் நடனமிடும்
செவ்விதழ்களின் ஸ்பரிசத்தில்
லயித்திருக்கும்போது
வேகமாய் தட்டப்பட்டது
அறைக்கதவு.
உள்நுழைந்த எந்திரன்
தோள்சாய்திருந்தவளைக் கண்டு
புன்னகைத்தான்.
இன்னும் நான்கு நொடியில்
மரணிக்கப்போகிறேன்
என்பதை உணர்த்தியது
மணிக்கட்டில் கட்டியிருந்த
கடிகாரத்தின் சிவப்பு விளக்கு.

3. மழையென்பது கடந்தகாலத்தில்
புழங்கிய சொற்களிலொன்று.
மனிதனென்பவன் எப்போதோ
வாழ்ந்து மரித்த உரியினங்களில்
ஒருவன்.
அணுக்களால் உருவான
உலகை அணுகுண்டுகள்
தின்றுமுடித்து நூற்றாண்டுகள்
கடந்துவிட்டன.
அழிந்த உலகைபற்றி
எழுதியதற்காக என்னை
விசாரித்த எந்திரம்
பெயர்சொல் என்றது.
இரண்டாம் ஆதாமென்றேன்.

நிலாரசிகன்

அன்புள்ள நிலா ரசிகன்

 

புதியவகைக் கவிதைக்கான உங்கள் முயற்சி முக்கியமானது. வாழ்த்துக்கள். நான் ரசித்து வாசித்தேன். இரண்டு கருத்துக்களை மடும் சொல்ல விரும்புகிறேன்

 

1. அறிவியல்கவிதைகளில் ரோபோ, வான்வெளி , எதிர்கால அச்சம் போன்ற வழமையான கருக்கள் மட்டும் வந்தால் போதாது. அறிவியல் உருவாக்கும்  ஆழமான தத்துவச்சிக்கல்கள் உள்ளன. அவற்றில் இயல்பிலேயே கவித்துவம் உள்ளது. உதாரணமாக நிறம் என்பது ஒரு பிரபஞ்ச இயல்பல்ல மூளையின் சிறப்பியல்பு என்று நரம்பியல் சொல்லும்போது நாம் காணும் பிரபஞ்சம் என்பதே மூளைதானா என்னும் ஐயம் ஏற்படுகிறது.மெதிர்காலத்தி மூளையை தொழில்நுட்பம் மூலம் மார்றிக்கொண்டு மிக வித்தியாசமான பிரபஞ்சத்தை மக்கள் காண ஆரம்பித்தான் என்ன ஆகும்? உதாரணமாக கண்கள் புற ஊதாக்கதிர்களையும்  பார்க்க ஆரம்பித்தால்? அப்படியானால் பிரபஞ்சமென்பது என்ன? இம்மாதிரி கேள்விகளுக்குள்செல்லும்போதெ கவிதைகள் உண்மையான ஆழத்தை அடைகின்றன

 

2. கவிதைகளுக்கு  ஆழ்பிரதியை உருவாக்க முழுக்க சொல்லிவிடுவதை தவிர்க்கலாம். ஊகிக்க வைக்கலாம். உதாரணமாக செவ்வாய்க்குப் புலம்பெயர்ந்தவன்  இல்லாமலிருந்தால் அக்கவிதை மேலும் நுட்பமானதாக ஆகிறதல்லவா?

 

ஜெ

முந்தைய கட்டுரைகெட்டவார்த்தைகள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇசை:கடிதம்