இன்று காலை வரங்காவில் கண்விழித்தேன். எல்லாரைப்பற்றியும் அப்படிச் சொல்ல முடியாது. பலர் கண்மூடவே இல்லை. திறந்தவெளி போன்ற கல்யாண மண்டபம். அதன் மீது பல சாளரங்கள் திறந்தே கிடந்தன. ஆகவே கடுமையான குளிர். இரவிலேயே நான் வெளியே சென்று குளிரும் என்று ஊகித்துச் சொல்லியிருந்தேன். ஆனால் எல்லாருமே ‘எங்களுக்கெல்லாம் குளிரே அடிக்கலை’ என்று சொல்லிப் படுத்தார்கள். நான் எனக்காக முத்துக்கிருஷ்ணன் வாங்கிவந்த ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு படுத்தேன். ஓரளவு தூங்கிவிட்டேன். இதன் நடுவே ராஜமாணிக்கம் கை தவறுதலாக வைத்த செல்பேசி எழுப்பி நள்ளிரவில் அடித்து எல்லாரையும் தூங்காமல் பார்த்துக்கொண்டது. நான் எழுந்தபோது ஒவ்வொருவரும் பேஸ்த் அடித்த கண்களுடன் இருந்தனர்.
குளிரிலேயே நடந்து வரங்காவின் ஏரிக்கோயிலுக்குச் சென்றோம். ஏரிமேல் காலைக்குளிரின் நீராவிப்படலம் எழுந்துகொண்டிருந்தது, சூடான காபிக் கோப்பை மீதிருந்து எழுவது போல. மீன்கள் பல்லாயிரம் கண்கள் போல நீருக்குள் துடித்தன,இமைத்தன.எங்களுக்காகப் பூசாரி வந்து காத்து நின்றிருந்தார்.படகில் ஏற்றி மறுகரைக்குக் கொண்டுசென்றார்.சூரியன் உதிக்கும் முன்புள்ள காலையின் வெளிச்சத்தை எங்களூரில் மணிவெளிச்சம் என்பார்கள். அந்நேரத்தில் எல்லா நிறங்களும் நன்றாகத் துலங்கித்தெரியும். புறாக்களின் குரல்களைக் கேட்டுக்கொண்டு அங்கே நின்றோம். முந்தையநாள் அங்கே திறந்த வெளியில் படுத்துக்கொள்ளலாமே என்று கருத்துத் தெரிவித்திருந்த ராஜமாணிக்கத்தை வாஞ்சையுடன் பார்த்தேன், மனிதர்கள் எவ்வளவு தெளிந்தவர்களாக இருக்கிறார்கள்!
வரங்காவில் உள்ள நேமிநாதரின் பஸதி கிட்டத்தட்ட கர்க்களா அளவுக்கே பெரியது. வெளியே நின்று பார்த்தால் அதன் பிரம்மாண்டம் கண்ணுக்குப்படாது. கனராபாணி கோயில். பெரிய கனத்த தூண்கள் மீது கூரையாக சாய்த்து அமைக்கப்பட்ட கற்பலகைகள் கொண்டது. உள்ளே சென்று அந்த மௌனமான கோயிலைச் சுற்றிவந்தோம். மூடியிருந்தது, நூற்றாண்டுகளுக்கு அப்பால் நாமறியாத ஒரு ஆழத்தில் இருப்பது போல.
பக்கத்து வீட்டில்தான் பூசாரி தங்கியிருந்தார். 60 வயதானவர். அவரே வந்து கோயிலைத்திறந்து தீபாராதனை காட்டினார். வரங்காவின் காலைநேரம் எங்கோ ஒரு காலத்தில் நிகழ்வது போலிருந்தது. ஒரு புனைவுக்குள் இருப்பது போல் இருக்கிறது என்றார் சீனு.
சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். நேராகக் குந்தாதிரி செல்வதாகத் திட்டம். ஆகும்பே சென்று அங்கிருந்து குந்தாதிரிக்கு வழி கேட்டுக் கேட்டுச் சென்றோம். குந்தாதிரி ஒரு சின்னக் குன்று. ஆனால் மலை உச்சியில் உள்ளது. கார் உச்சிவரை செல்லும். அதன் பின் கொஞ்சம் படிகள். மேலே பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு சமண பஸதி. அது பின்னர் புதுப்பிக்கப்பட்டிருந்தது.ஆழமான இரு நீராழிகள். நீருக்குள் கத்தை கத்தையாக மீன்கள். அந்த மலையுச்சி மேலிருந்து கீழே விரிந்து கிடந்த பிரம்மாண்டமான பச்சை வெளியைப் பார்ப்பது மனதை விரியச்செய்யும் அனுபவம்.
தொலைதூரத்தில் இருந்து மெல்லிய மனிதக்குரல்கள் கேட்டன. மனிதக்குரலில் அப்படி ஒரு ஏக்கமும் மென்மையும் கலக்க முடியுமென நினைத்திருக்கவேயில்லை. சுற்றியுள்ள காடும் காடுநடுவே உள்ள கிராமங்களும் இன்னும் மோட்டார் நாகரீகம் சூடுபிடிக்காதவை என்று தோன்றியது.
குந்தாதிரியில் இருந்து ஹும்பஜ் கிளம்பினோம். மதிய வெயில் ஏற ஆரம்பித்தாலும் காற்று குளிராகவே இருந்தது. இருபக்கமும் வனம். அடர்ந்த மரக்கூட்டங்கள். நடுவே அவ்வப்போது ஒரு ஆறு தலைகாட்டிக்கொண்டே இருந்தது. மதியம் ஒரு மணிக்கு ஹும்பஜ் மடாலயத்தைச் சென்றடைந்தோம்.
கும்ச்சா என்றும் இந்த ஊர் சொல்லப்படுகிறது. ஹம்ஸாவதி என்றும் இந்த ஊருக்குப் பெயர் இருக்கிறது. ஷிமோகா மாவட்டத்தில் உள்ள சின்ன கிராமம் இது. இந்த ஊரின் முக்கியமான அம்சம் இங்குள்ள பத்மாவதி யட்சியின் ஆலயம். பத்மாவதி யட்சி இருபத்து மூன்றாம் தீர்த்தங்கரரான பார்ஸ்வநாதரின் காவல்தேவதை. அந்த ஆலயம் இப்போது புதுப்பிக்கப்பட்டுப் புத்தம்புதியதாக உள்ளது.
இங்கே ஹும்பஜ் மடம் அமைந்துள்ளது. ஹும்பஜ் மடம் மேஷ பாதஷ கச்சா என்னும் பட்டாரகர் மரபைச்சேர்ந்தது. பட்டாரகர் என்ற அமைப்பு சமண மதத்தின் கோயில் அறங்காவலர் மரபாகும். அல்லது மடாதிபதி மரபு என்றும் சொல்லலாம். இவர்கள் காவி ஆடை அணிவார்கள். சமணக் கோயில்களை நிர்வாகம் செய்வார்கள். துறவிகள், ஆனால் முற்றும் துறந்தவர்கள் அல்ல.
கும்ச்சாவின் பட்டாரக பீடம் எட்டாம் நூற்றாண்டு வாக்கில் அமைந்திருக்கலாமென சொல்லப்படுகிறது. இதை சந்தார் வம்சத்தை நிறுவிய ஜினதத்த ராயர் அமைத்திருக்கலாம். 1048ல் மகாமண்டலேஸ்வரர் சந்திரராயர் இந்த மடாலயத்துக்கு நிவந்தங்கள் அளித்திருக்கிறார். அந்தக் கொடை பற்றிய தகவல் பனவாசியில் உள்ளது.
சமண மதத்தின் மிக விரிவான பட்டாரக மரபு என்பது மூலசங்க நந்திசங்க பலார்காரகண சரஸ்வதி கச்சா மரபாகும். இது சுருக்கமாக MNBS எனப்படுகிறது. இதன் பீடங்கள் சூரத், இடார், ஆஜ்மீர், ஜெய்பூர், சித்தூர், நாகூர், குவாலியர், சந்தேரி போன்ற பல ஊர்களில் உள்ளன. இந்த மரபைச்சேர்ந்த பட்டாரகர்கள் பலர் பேரறிஞர்களாகவும் பெரும் ஞானிகளாகவும் இருந்துள்ளார்கள்.
MNBS மரபின் மையம் ஹும்பஜ்தான். இப்போது பட்டாரக தேவேந்திர கீர்த்தி தலைவராக இருக்கிறார். இந்த மரபில் எஞ்சும் ஒரே பட்டாரகர் இவரே. பிற பீடங்கள் அழிந்துவிட்டன. மடாலய வாசலில் தமிழ்நாட்டில் இருந்து வந்த சிலரைச் சந்தித்தோம். விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்ச்சமணர்கள். தங்களூரில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு ஜைன ஆலயம், பார்ஸ்வநாதருக்குக் கட்டுவதாகவும், குருவின் ஆசி வாங்குவதற்காக வந்திருப்பதாகவும் சொன்னார்கள்.முழுக்கமுழுக்கத் தமிழ்நாட்டைச்சேர்ந்த தமிழ்ச்சமணரகள்.
மடத்தின் போஜனசாலைக்குச்சென்று சாப்பிட்டோம். வந்ததில் இருந்து நாங்கள் வெளியே சாப்பிடும் முதல் மதியச்சாப்பாடு. சூடான சோறும் சாம்பாரும் மோரும். தொட்டுக்கொள்ள கடலைக்கறி. கூட பரிமாறப்பட்ட சிறுபயறுப்பாயசம் அபாரமான ருசியுடன் இருந்தது. இருமுறை கேட்டு சாப்பிட்டோம்.
பட்டாரகரைச் சந்தித்தோம். இளைஞர், நாற்பது வயதுக்குள் இருக்கும். இப்போதுதான் பதவிக்கு வந்திருக்கிறார் என்றார்கள். அருகே மலைமேல் ஒரு பளிங்குக்கல் பார்ஸ்வநாதர் சிலை இருந்தது. அதைச்சென்று பார்க்கலாம் என்றும் அருகே உள்ள ஐந்து அடுக்கு பஸதியைப் பாக்கலாம் என்றும் சொன்னார். அவரிடம் எங்கள் பயணம் பற்றிச் சொன்னோம், ஆசி அளித்தார்.
மலைமேல் இருந்த பார்ஸ்வநாதர் சிலை இருபதாண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது.கொஞ்சநாள் கைவிடப்பட்டுக் கிடந்து இப்போது செப்பனிடப்பட்டு வருகிறது. சுமாரான சிலை. இருபதடி உயரம் இருக்கும். ஆனால் அருகே தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சமுக பஸதி நாங்கள் இந்தப்பயணத்தில் பார்த்தவற்றிலேயே மகத்தானது. அற்புதமான சிற்பங்கள். கருவறைக்குள் சென்றே சிற்பங்களைப் பார்க்கமுடியும் என்பதனால் பிரமிப்பும் பரவசமும் அதிகரித்தபடியே இருந்தன.
வெளியே சும்மா போட்டு வைக்கப்பட்டிருந்த ஜ்வாலாமாலினி யட்சியின் சிலை முழுமையாக இருந்தது. ஒவ்வொரு துளியிலும் பார்க்கப்பார்க்கத் தீராத நுட்பங்கள் கொண்ட பெரும் கலைப்படைப்பு. அரைமணிநேரம் வரை அந்த ஒரு சிலையையே பார்த்துக்கொண்டிருந்தோம். ஹளபீடு சிலைகளின் பாணியிலான பெரிய மலர்க்கிரீடமும் மணிகள் தொங்கும் சல்லடமும் ஆடைகளும் அணிந்திருந்தாள். நகைகள் பொன்னகைக்கு நிகரான நுட்பத்துடன் கருங்கல்லில் செதுக்கப்பட்டிருந்தன.
கதம்ப வம்சத்து மன்னர்களால் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய பார்ஸ்வநாதரின் கோயில் ஒன்று வளாகத்தில் பக்கவாட்டில் இருந்தது. ஐந்துமுக பஸதி, 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னர் பல காலங்களிலாக சில கட்டுமானங்கள் கட்டி இணைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கருவறைக்குள்ளும் சென்று பேருருவத்துடன் அமர்ந்திருந்த தீர்த்தங்கரர்களை அருகே சென்று பார்த்தோம். இருளுக்குள் செல்பேசி வெளிச்சத்தில் பார்த்ததனால் அவை ஒரு கனவுக்குள் இருந்து எழுந்து வருபவை போல் இருந்தன.
மனோவிகாரிகள் என சமண சிற்பவியல் சொல்லும் ஆசாபாசங்களின் தேவதைகளால் சூழப்பட்டு அவர்களின் சபலத்துக்கு ஆளாகாமல் அமர்ந்திருந்த பார்ஸ்வநாதரை நெருங்கி நின்று பார்த்தேன். மனிதன் எட்டக்கூடிய உயரங்களின் சின்னம். மனிதன் என்ற கருத்துருவத்தின் இலட்சிய வடிவம். உடலில் முழுமையான சாமுத்ரிகா இலக்கணம். ஒவ்வொன்றிலும் முழுமை. ஆமாம், மனிதன் தன்னுள் இருக்கும் மனிதம் என்ற ஒன்றை வணங்குவதே தீர்த்தங்கரர் வழிபாடு.
அருகே ஷிமோகாவில் இருந்து எங்கள் நண்பரும் வாசகருமான ரவி காரில் தேடிவந்திருந்தார். பழங்களும் எங்களுக்கெல்லாம் ஆளுக்கொரு கம்பளிப் போர்வையும் வாங்கிவந்திருந்தார். முந்தையநாள் நாங்கள் குளிர் பற்றி எழுதியிருந்ததை வாசித்ததாகச் சொன்னார்.
நாங்கள் செல்ல வேண்டிய இடம் கதக் அருகே உள்ள மூல்கண்ட். அங்கே செல்ல 220 கிமீ தூரம். அதை முடிந்தவரை கடக்க முடிவெடுத்தோம். நல்ல சாலை. இருபக்கமும் காடு. ஒரு இடத்தில் ஒரு செந்நாய் கூட சாலைக்குக் குறுக்கே ஓடியது. மாலை மயங்க ஆரம்பிக்கையில் பிரம்மாண்டமான ஓர் ஏரிக்கரைக்கு வந்தோம். மிகப்பிரம்மாண்டமான ஏரி. லிங்காணமக்கி ஏரி. வீராணம் அளவுக்கிருக்கும். பல கிலோமீட்டர் தொலைவுக்கு நீர் வந்துகொண்டிருந்தது.
ஏரிக்கரையில் இறங்கி நின்று விரிந்த நீர்வெளிக்கு அப்பால் உயரம் குறைந்த மலைகளில் சூரியன் அணைவதைப் பார்த்து நின்றோம். இன்றைய அஸ்தமனம். இன்றைய செவ்வொளிப் பெருக்கு. இன்றைய முழுமை.
இரவில் மீண்டும் தூசிக்கு நடுவே பயணம் செய்து எட்டு மணிக்கு ரானேபென்னூர் என்ற சின்ன ஊரை அடைந்தோம். ஒரு சின்ன விடுதியில் எல்லாருக்கும் ஒரே அறை போட்டோம். ஒருவர் தரையில் படுக்க வேண்டும். குளிர் இருக்குமென்று தோன்றியது.
இதுவரை வந்த நாட்களில் இன்றுதான் சார் கலையனுபவம் உச்சகட்டமாக இருந்தது என்றார் கிருஷ்ணன். ஒவ்வொரு நாளும் மாலையில் ஏதேனும் ஒரு காரணத்தால் அந்த நாள்தான் மகத்தானது என்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
மேலும் …
படங்கள் இங்கே https://picasaweb.google.com/