அருகர்களின் பாதை 3 – மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா

மூடுபிதிரியில் காலை நாலரை மணிக்குத் தூங்கி எழுந்தோம். இங்குள்ள ஆலயங்கள் எல்லாமே இருளில் திறப்பதில்லை. இருந்தாலும் காலையில் மூடுபிதிரியை அறியலாமென்று குளித்துவிட்டு ஒரு நடை கிளம்பினோம். மூலைத்தெருவில் ஒரு கடையில் டீ இருந்தது. நான் இரவில் பழங்கள் மட்டும் சாப்பிடுபவன் என்பதனால் பசித்தது. விடிகாலையிலேயே இட்லி சாப்பிட்டேன். மூடுபிதிரியின் கோயில்களில் கோட்டைச்சுவர்கள் எல்லாமே மண்ணில் இருந்து வெட்டி எடுத்த மண்பாறைகளால் ஆனவை. அவற்றின் மேல் மழைக்காலத்தில் முளைத்த புல் காய்ந்து ஆட்டுத்தாடி போல செம்மறி ஆட்டின் உடல் போலப் பரவியிருந்தது. அந்த செம்பழுப்பு நிறம்  மாலை வெயிலில் அற்புதமாக ஒளிவிடக்கூடியது.  கோயில்கள் நிறைந்த அந்தத் தெருவில் இருளில் நடந்தோம். பெரும்பாலான கோயில்கள் மூடிக்கிடந்தன என்றாலும் உள்ளே நுழைந்து சுற்றிவந்தோம்.

சமண காசி என்று அழைக்கப்படும் மூடுபிதிரி மூடு, பிதிரி என்ற இரு சொற்கள் கலந்து உருவானது. கிழக்குமூங்கில்நாடு என பொருள்வரும். மூடுவேணுபுரம் என்று கல்வெட்டுக்களில் சொல்லப்படுகின்றன.  மூடுபிதிரியில் கிட்டத்தட்ட 300 சமணக்கோயில்கள் உள்ளன. பதினான்காம் நூற்றாண்டு முதல் இருநூறு வருடங்கள் மூடுபிதிரி வளர்ந்துகொண்டே இருந்தது. மூடுபிதிரியில் 18 சமண ஆலயங்கள் முக்கியமானவை. அவற்றில் குருபஸதி, திரிபுவன திலக சூடாமணி பஸதி, அம்மானவார பஸதி ஆகிய மூன்றும் மிகத் தொன்மையானவை. எங்கள் விடுதிக்கு நேர் முன்னால்தான் ஆயிரங்கால் பஸதி. ஆனால் ஏழு மணிக்குத்தான் திறக்கும் என்றார்கள். பதினெட்டு பஸதிகள் வரிசையாக அமைந்த தெருவில் பல பஸதிகள் கிட்டத்தட்டக் கைவிடப்பட்ட நிலையில் இருந்தன. சுற்றிவந்தபோது காய்ந்த புல்லும் தொட்டால்சிணுங்கியும் காலைக்குத்தின.  ஆச்சரியமாக குருபஸதி திறந்திருந்தது.

கிபி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குருபஸதி, சித்தனாத பஸதி என்றும் ஹலே பஸதி [பழைய பஸதி]என்றும் சொல்லப்படுகிறது. இருபத்து மூன்றாம் தீர்த்தங்கரரான பார்ஸ்வநாதருக்கு உரியது இந்தக் கோயில். மூன்றரை மீட்டர் உயரமான அழகிய சிலையாக அவர் கருவறையில் நிற்கிறார்.  12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அபூர்வமான சமண நூல்களின் ஏடுகள் இந்த ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்டன. அவை தவள கிருதிகள் எனப்படுகின்றன. கோயிலுக்குப் பக்கவாட்டில் ஒரு தனிக்கோயிலில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர்கள் கன்னங்கரிய பளபளப்புடன் நின்று கொண்டிருந்தார்கள். இருபத்துநான்கு கருப்பு வைரங்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு சமணப் பூசாரி கோயிலில் மையமாக இருந்த பார்ஸ்வநாதருக்குப் பூசை செய்துகொண்டிருந்தார். சம்ஸ்கிருதத்தில் துல்லியமான உச்சரிப்புடன்  மந்திரத்த்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். இந்து ஆலயங்களில் பெரும்பாலும் அனுஷ்டிப்பு சந்தத்தில் தான் மந்திரங்களைச் சொல்கிறார்கள். உச்சரிப்பு  மழுங்கியதாக இருக்கும். கேரளத்து ஆலயங்களில் அபூர்வமாக நல்ல சம்ஸ்கிருத உச்சரிப்புள்ள  பூசைகளைக் கேட்டிருக்கிறேன். ஒருமுறைகூடத் தப்பித்தவறிக்கூட சம்ஸ்கிருதம் அழகாக உச்சரிக்கப்பட்ட ஒரு தருணத்தை சந்தித்ததில்லை. இங்கே சமணர்களின் மந்திரங்களில் சம்ஸ்கிருதம் வேறு உச்சரிப்பில்  வேறு சந்தத்தில் [சார்த்தூல விக்ரீடிதம்]  கேட்டபோது அந்தக் காலையில் ஒரு மன எழுச்சி ஏற்பட்டது.

குருபஸதியைச்சுற்றி வந்தோம். இருளில் இருந்தது கோயில். கல்லால் ஆன மாபெரும் கோயிலில் செங்கல்லால் ஊடு சுவர்கள் கட்டி சன்னல்கள் வைத்திருந்தார்கள். துவாரபாலகர் சிலைகளுக்குப் பதிலாக இரு ஓவியங்கள். துவாரபாலகர்கள் கையில் சங்கு சக்கர கதாயுதங்களுடன் இருந்தது ஆச்சரியமளித்தது. இக்கோயில்களில் சாதாரணமாகக் கிருஷ்ணன் சிலைகளைத் தூண்களில் காணமுடிவதும் ஆச்சரியமளித்தது. பல்லாண்டுகளுக்கு முன் இங்கே வந்த முதல் சந்தர்ப்பத்திலேயே இதைக் கவனித்திருக்கிறேன், எழுதியிருக்கிறேன். உண்மையில் இந்தியாவில் மிக அபூர்வமாக நிகழ்ந்த மத மோதல்களைத் தவிர்த்து, இந்து மதமும் சமண பௌத்த மதங்களும் சர்வசாதாரணமாக இணைந்தும் கலந்தும்தான் இருந்துள்ளன. குறிப்பாக சமணத்துக்கும் வைணவத்துக்கும் நெருக்கமான உறவுண்டு. இங்கே மதமோதல்களை பூதாகாரப்படுத்தி வரலாறு எழுதும் முற்போக்கு ஆசாமிகள் எங்கும் எப்போதும் இங்கே அன்றும் இன்றும் இருந்துவரும் சமரசத்தை, இணைவைப் பொருட்படுத்தியதே இல்லை. இந்தியா பற்றியும் இந்து மதம் பற்றியும் இவர்கள் உருவாக்கும் முன்முடிவுள்ள சித்தரிப்பை அடியோடு தகர்ப்பவை இவை.

குருபஸதியைத் தாண்டி மூடிக்கிடந்த கோயில்களின் முற்றங்கள் வழியாக நடந்தோம். மாபெரும் அரச மரங்கள் தூங்கி எழுந்து காலையை அள்ளிக்கொண்டிருந்தன. காற்று சிலுசிலுக்கும் இலைகளில் இருந்து சொட்டிய அமைதி மனமெங்கும் நிறைவது போலிருந்தது. இருபதாண்டுக்காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது இந்த ஊர். அதே பழைய கட்டிடங்கள். அதே நிறைவும் அமைதியும் பழமையும் சூழ்ந்த தெருக்கள். நூற்றாண்டுக்கு முந்தையதோ என்ற பிரமை எழுப்பும் செந்நிறமான தூசி.

இன்னொரு டீ சாப்பிட்டுவிட்டு பெரிய பஸதி என்றும் ஆயிரங்கால் பஸதி என்றும் அழைக்கப்பட்ட கோயிலுக்குச் சென்றோம். ஒற்றைப்பார்வையில் இது ஒரு மாபெரும் சீன பௌத்த ஆலயம் என்ற எண்ணம் ஏற்படும். மூன்று அடுக்குகள் கொண்ட பகோடா வடிவமான மரமுகடு. அதற்குக் கீழே கருங்கல்லால் ஆன கோயில். இந்த பாணிக் கோயிலை கனராவுக்கு வெளியே காண முடியாது. பெரிய கல்தூண்களுக்கு மேலே கோபுரமில்லாத கற்பலகைக்கூரை. கூரை விளிம்பு சரிவாக மரக்கூரை போலவே நீண்டிருக்கும். உண்மையில் பிரம்மாண்டமான ஒரு மரக்கோயிலை மந்திரத்தால் அப்படியே கல்லால் ஆனதாக மாற்றியதைப்போலிருந்தது அது. ஒரு கோயிலுக்குள் இருந்த பூசாரி அன்பாக வரவேற்று கோயிலைப்பற்றி சொன்னார். நீங்களும் நாங்களும் ஒரே மதம், கிட்டத்தட்ட ஒரே தெய்வம், சின்னச்சின்னவேறுபாடுகள்தான் என்றார். அதை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார். நெடுந்தொலைவில் இருந்து நாங்கள் வந்தது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது.

திரிபுவன சூடாமணி பஸதிதான் இங்கிருக்கும் ஆலயங்களில் பெரியது.  கர்நாடகத்தின் சமண ஆலயங்களில் மிக அழகான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டதும் இதுவே.  இது ஆயிரங்கால் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாபெரும் கல் கோயில் 1430 வாக்கில் கட்டப்பட்டது. இதில் இரண்டரை மீட்டர் உயரமுள்ள சந்திரநாத தீர்த்தங்கரரின் சிலை மையமாக உள்ளது.  மூன்றடுக்குள்ள இந்த மாபெரும் கல் கட்டிடம் சமணக் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமாகச் சொல்லப்படுகிறத. இந்த ஆலயத்தின் திறந்த முகமண்டபம் மிக அழகானது. இதன் தூண்கள் கருங்கல் செதுக்கலின் உச்சகட்ட சாத்தியங்களைக் காட்டுகின்றன, ஒரு தனித்தூணையே ஒரு பெரும் கலைப்படைப்பாகச் சொல்லலாம். சில ஐரோப்பியநாடுகளில் இந்த ஆலயத்தின் ஒரே ஒரு தூண் இருந்தால் அதை அவர்களின் தேசியக் கலைச்சின்னமாகச் சொல்லிப் பெரும் நிகழ்வாக முன்னிறுத்துவார்கள் என்று சொன்னேன்.

பைரவராஜா மன்னரின் மனைவி நாகலாதேவி இந்த ஆலயத்தின் முன்னாலுள்ள மாபெரும் ஒற்றைக்கல் கொடிக்கம்பத்தை உருவாக்கினார். ஐம்பதடி உயரமுள்ளது இது. அவளைப்பற்றிய  கல்வெட்டு அதில் உள்ளது சமண ஆலயங்களுக்கு முன்னால் உள்ள ஸ்தம்பங்கள் மிகப்பெரிய ஆச்சரியங்கள். ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட இந்தத் தூண்களின் மேலே பெரும்பாலும் ஒரு யட்சனோ யட்சியோ இருப்பார்கள். அடியில் காவல்தேவதை அமர்திருப்ப்பார். யட்சிகளில் மீண்டும் மீண்டும் கூஷ்மாண்டினியும் பத்மாட்சியும்தான் இருக்கிறார்கள்.

மூடுபிதிரி எங்கும் நூற்றுக்கணக்கான சிறிய சமண ஆலயங்கள் உள்ளன. தொடர்ச்சியாக நடந்து நடந்து ஒருவாரம் அலைந்தால்தான் மூடுபிதிரியைப் பார்த்து முடிக்கமுடியும். இங்குள்ள சில சமண ஆலயங்களில் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. பெரும்பாலான ஆலயங்கள் ஷெட்டி என்று இங்கே சொல்லப்பட்ட செட்டி வணிகர்களால் கட்டப்பட்டவை. சோழநாட்டு செட்டிகளும் கட்டியுள்ளனர். சோழ இளவரசி குந்தவையால் கட்டப்பட்ட பஸதி ஒன்றும் உள்ளது. இவையெல்லாம் இன்னும் தமிழக வரலாற்றாசிரியர்களால் ஆராயப்படவில்லை.

காலை எட்டு மணிவாக்கில் கிளம்பி வேணூர் சென்றோம்.  காலை வெயிலில் சென்று பச்சைப்பசேலென்று சோலைசூழ்ந்த சாலை வழியாகப் பயணம்செய்து வேணூரை அடைந்தோம். வேணூர் ஃபால்குனி என்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இது சமணர்களின் ஆன்மீகத் தலைநகரமாக இருந்துள்ளது. தர்மஸ்தலா வேணூரின் கட்டுப்பாட்டில் இருந்தது.  இந்த ஊரின் நடுவே உள்ள சமண ஆலயத்திற்குள் 38 அடி உயரமான பாகுபலிசுவாமியின் சிலை உள்ளது. இது 1604ல் அஜில வம்சத்தைச் சேர்ந்த சமண மன்னர் திம்மண்ணாவால் அமைக்கப்பட்டது. இதை அமரசில்பி என அழைக்கப்பட்ட ஜக்கண்ணாச்சாரி செதுக்கினார். வேணூரின் பழைய பெயர் குருப்பூர். இது சமண மடம் அமைந்த ஊர் ஆனதனால் இந்தப்பெயர். இப்போது இங்கே மடம் ஏதும் இல்லை.

அஜில வம்சம் 1154 முதல் 1786 வரை வேணூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டுவந்தது.  வேணூரில் அஜில மன்னர்கள் சில சமணக் கோயில்களையும் ஒரு சிவன் கோயிலையும் கட்டியிருக்கிறார்கள். அஜில வம்சத்து மன்னர்களின் சாதனை என்றே இந்த மகத்தான சிலையைச் சொல்லலாம். 2012ல் வேணூர் பாகுபலி தேவருக்கு மகா மஸ்தகாபிஷேகம் நிகழ்கிறது. நானும் வசந்தகுமாரும் 2006இல் சிரவணபெலகொலா கோமதீச்வரருக்கு செய்யப்பட்ட மகா மஸ்தகாபிஷேகத்தைப் பார்த்தோம்.   அற்புதமான அனுபவம் அது. சிலை கண்ணெதிரே ஒரு பெரும் கனவு போல வண்ணங்கள் மாறிக்கொண்டே இருப்பதை ஒரு கலைநிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும். மங்களூர் வரை ரயிலில் வந்தால் ஒருமணிநேரத்தில் வேணூர் வர முடியும். வர முயல வேண்டும் என நினைத்துக்கொண்டேன். வேணூர் நாங்கள் வந்தபோதெல்லாம் சிற்றூராக அமைதியில் கிடந்தது. இப்போது கோயிலில் திருப்பணிகள் நிகழ்கின்றன. கோமதீச்வரர் சிலைக்குப்பின்னால் பிரம்மாண்டமான சாரம் அமைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன.

வேணூரில் இருந்து கர்க்களா சென்றோம். மதியவெயில் இருந்தாலும் காற்று குளிர்ச்சியாகவே இருந்தது . கர்க்களா  ஊருக்கு முன்னாலேயே கர்க்களா ஆலயங்கள் ஆரம்பிக்கின்றன. அது தெரியாமல் சென்ற நாங்கள் சாலையோரமாக ஒரு பெரிய குளத்தின் நடுவே ஒரு கோயில் நின்றதைப்பார்த்து இறங்கிச்சென்றோம். அல்லி மலர்ந்து கிடந்த பிரம்மாண்டமான குளம். நடுவே செல்லப் பாதை இருந்தது. ஓடு வேயப்பட்ட பெரிய பஸதி. அது மூடிக்கிடந்தது. கொஞ்சம் பராமரிப்பில்லாத நிலை. கோயிலில் அமர்ந்து குளத்தைப்பார்த்தபடி அமர்ந்திருந்தபோது அந்த அனுபவம் உண்மையில் நிகழ்கிறதா, இல்லை ஒரு பகற்கனவின் காட்சியா என்று கூட ஐயமாக இருந்தது. வெண்கொக்குகளும் சாம்பல்நிறமான மடையான்களும் குளமெங்கும் பறந்தன. ஒரு பெரிய பருந்து நீரில் இருந்து பாம்பு ஒன்றைக் கவ்விச்சென்றதை நண்பர்கள் கண்டு கூச்சலிட்டார்கள், நான் பார்க்கவில்லை. சமணர்கள் மீன்களைப் பிடிப்பதை அனுமதிப்பதில்லை. ஆகவே குளங்கள் முழுக்கப் பறவைகள். அந்தக் குளத்தின் பெயர் ராமசமுத்திரம். அஜிலமன்னர்களால் உருவாக்கப்பட்டது.

கர்க்களா மூடுபிதிரியில் இருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கிறது. இது சமணர்களுக்கும் இந்துக்களுக்கும் புனிதமான இடமாகும். பத்தாம் நூற்றாண்டில் இருந்தே இந்த ஊரைப்பற்றிய கல்வெட்டுகளும் இலக்கியச் சான்றுகளும் கிடைக்கின்றன. சமண வரலாற்றில் இது கிபி இரண்டாம் நூற்றாண்டு முதலே குறிப்பிடப்படுகிறது. கர்க்களா என்றால் கரிய கல் என்று பொருள். கரிக்கல்லு என்ற சொல் அப்படி மருவியிருக்கிறது. கிபி இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் தமிழ் இங்கே புழங்கியிருக்கக்கூடும் என்பதற்கான பல ஆதாரங்களில் ஒன்று இது. கர்க்களாவின் முக்கியமான இடங்கள் அருகருகே அமைந்த இரு குன்றுகள். ஒன்றின்மீது  பாகுபலி சுவாமியின் சிலை உள்ளது . 42 அடி உயரமான கோமதீச்வரர் சிலை உள்ளது. இதுவும் ஒற்றைக்கல் சிலைதான். கர்நாடகத்தில் சிரவண பெலகொலாவுக்குப் பின்னர் பெரிய சிலை இதுவே. சிரவணபெலகொலாவின் சிலை ஒரு மகத்தான கலைப்படைப்பு. அதன் அழகையும் பரிபூரணத்தையும் வேறு எந்த சிலைகளும் அடைய முடியவில்லை. ஆனால் அதற்கடுத்தபடியாக அழகான சிலை இதுவே.

நாங்கள் செல்லும்போது கோயில் பூட்டியிருந்தது. கல்படிகளில் ஏறிவந்து கம்பி வழியாக சிலையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். அப்போது நாங்கள் ஏறிச்செல்வதைப் பார்த்து பூசாரி ஏறிவந்தார். திறந்து உள்ளே செல்லவைத்தார். சிலையைச் சுற்றிவந்து தரிசித்தோம். பிரம்மாண்டம் கண்ணுக்கும் மனசுக்கும் பழகிவிட்டது. இப்போது பாகுபலி சுவாமி ஒரு ஆழ்மனபிம்பமாக ஆகிவிட்டிருந்தது. கடலூர் சீனு அவரது கனவில் பாகுபலி சிலைகளாக வருகிறது என்று சொன்னார்.

பதினெட்டு சமண ஆலயங்கள் அமைந்துள்ள இடம் கர்க்களா. இந்து ஆலயங்களில் அனந்த பத்மநாபர் ஆலயம் முக்கியமானது. நாங்கள் அந்த ஆலயங்களை எல்லாம் பார்க்க முற்படவில்ல்லை. சமண ஆலயங்களில் சதுர்முகபஸதியை மட்டும் சென்று பார்த்தோம். அது இன்னொரு குன்றின்மேல் உள்ளது. ஒற்றைப்பாறைக்குன்று. பாறைவெட்டுப் படிகள். மேலே பிரம்மாண்டமான பஸதி. நான்குபக்கங்களிலும் ஒரே போன்ற மண்டப முகப்பு. கனமான உயரமான தூண்கள். நான்கு பக்கமும் திறக்கும் நான்கு கருவறைகளில் ஒரு கருவறையில் மூவர் வீதம் பன்னிரண்டு தீர்த்தங்கரர் சிலைகள் நின்ற கோலத்தில். கன்னங்கரிய சலவைக்கல் சிலைகளில் ஒளி பிரதிபலித்தது. ஒரு பெண்மணி மட்டும் அங்கே இருந்தார்கள். அவர்களால் முடிந்த இந்தியிலும் கன்னடத்திலும் எங்களுக்குக் கோயிலைப்பற்றி சொன்னார்கள்.

கிருஷ்ணன் கர்க்களாவிலேயே தங்கலாமென சொன்னார். ஆனால் எங்கள் பயணம் நீண்டது. இந்தியாவே தலைக்குமேல் நிற்பது போல் ஓர் உணர்வு. கிளம்பலாம் என்றேன் நான். ஆகவே வரங்காவுக்கு கிளம்பிச் சென்றோம். வரங்கா, கர்க்களாவைத் தாண்டி உள்ள சின்னஞ்சிறு ஊர். ஆகும்பே என்ற ஊருக்குச் செல்லும் வழியில் பக்கவாட்டில் திரும்பிச் செல்லவேண்டும். இங்கே ஒரு சமண மடம் உள்ளது. இது ஹும்ச்சா சமண மடாலயத்தின் உள்ளூர்க் கிளை. இந்தக் கிளைமடம் ஒரு பழைமையான கட்டிடம். கேரளக் கட்டிடங்களை நினைவுறுத்தியது. ஆனால் மிகத் தொன்மையானது இது. இங்கே கிடைத்துள்ள பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று  இந்தமடத்தை மிகத்தொன்மையானது என்று குறிப்பிடுகிறது.

ஆச்சாரிய குந்தகுந்தரின் வழிவந்த மூல குந்துகுந்தன்வய கிரனுர்கணா வழி வந்த  மேஷ பாதஷ கச்சா மரபைச்சேர்ந்த மடம் இது. இந்த மடம் கிபி நான்காம் நூற்றாண்டு முதலே இங்கிருக்கலாம் என சொல்லப்படுகிறது. மடத்திற்குச்சென்று தங்குமிடம் கேட்டோம். அங்கே ஒரு சமணப் பெண்துறவி, வயதானவர், தங்கியிருப்பதனால் சமணரல்லாதவர் தங்கமுடியாதென்று சொன்னார்கள். வரங்காவை நாளைக்குத்தான் முழுமையாகப் பார்க்கவேண்டும்.

 மடத்துக்கு அருகே ஒரு பெரும் ஏரிக்குள் ஒரு பஸதி உள்ளது. உண்மையில் இது ஒரு ஸ்தம்பம். அதன் நான்கு பக்கமும் தீர்த்தங்கரர் சிலைகள். அச்சிலைகளைச் சுற்றி ஒரு பஸதியைக் கட்டியிருக்கிறார்கள். படகில்தான் அங்கே செல்லமுடியும். நீரில் அந்த பஸதி பிரதிபலிப்பதைக் கரையில் நின்று பார்த்தோம். பின்பக்கம் உயரம் குறைந்த மலை, அதில் பசுமையான காடு. நீரில் பாசி நிறைந்திருந்தாலும் மிகத்தெளிந்திருந்தது. சில்லென்ற நீர் என்பது காற்றிலேயே தெரிந்தது.  நீர் கொதிப்பதுபோல மீன்கள் அடர்ந்து துள்ளிக்கொப்பளித்தன.

பூசாரிதான் படகுக்காரர். எங்களைக் கோயிலுக்குக் கொண்டு சென்றார். சுற்றிலும் தாமரைக்குளம் கொண்ட ஒரு கோயில் அளிக்கும் அழகியல் நிறைவு சொல்லறச்செய்வது. நிறைய பறவைகள் மறுகரையில் சேற்றில் ஒரு மாநாடு போல அமர்ந்திருந்தன. கோயிலைச்சுற்றி வந்து வணங்கினோம். பூசாரி விரிவாக மந்திரம் சொல்லிப் பூசை செய்தார்.

அவரிடமே இங்கேயே தங்க முடியுமா என்று கேட்டோம். அருகே ராமர்கோயிலில் கூப்பிட்டுச் சொல்கிறேன் என்றார். ராமர்கோயிலுக்குச் சொந்தமான கல்யாணமண்டபத்தில் இலவசமாக இடம் அளிக்க ஏற்பாடு செய்தார். திரும்பி வரும்போது நான், அரங்கா, கிருஷ்ணன், வினோத், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் நீரில் குதித்துப் படகுடன் நீந்தி வந்தோம். நான் அந்த அளவுக்கு நீந்தி பத்துப்பதினைந்து வருடம் இருக்கும் என்று தோன்றியது. கொஞ்சம் மூச்சிளைத்தது. ஆனால் கரை ஏறியபோது புதியதாகப் பிறந்ததாக உணர்ந்தேன்.

கல்யாணமண்டபத்தில் இரவு தங்கல். அங்கே ஒரு சின்ன சாலைச்சந்திப்பு. அங்கே உள்ள இரு ஓட்டல்களில் ஒன்றில் மட்டும் தோசை இருந்தது, ஏழுமணிக்குக் கடை பூட்டிவிடுவோம் என்றார். எல்லாரும் சாப்பிட்டோம். வரங்கா ஒரு சின்ன கிராமம். அந்த மடத்தையும் மூன்று சமணக்கோயில்களையும் சுற்றி அமைந்துள்ள சில வீடுகள். இரவில் அந்த ஏரிக்கரையில் சென்றமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். துல்லியமான வானம் முழுக்க நட்சத்திரங்கள். சட்டென்று மின்சாரம் இல்லாமலானபோது அவை இன்னும் அதிக ஒளி கொண்டன. நட்சத்திரங்களும் மலையும் ஏரியும் கோயிலும் எல்லாமே இருளின் அழுத்த வேறுபாடுகளால் ஆனவையாகக் கண் முன் விரிந்து கிடந்தன. இருள் எவ்வளவு அற்புதமானது என உணரும் தருணமாக இருந்தது. மௌனமாக அங்கே கொஞ்சநேரம் அமர்ந்திருந்தோம்.

கல்யாண மண்டபத்தில் இரவு தங்கினோம்.  பிரம்மாண்டமான மண்டபக்கூடம். பெட்டிகளை வண்டிமேல் வைத்துக் கட்டிய தார்ப்பாயை விரித்துப் படுத்துக்கொண்டோம். பெரிய குளிர் இல்லை. விடியற்காலையில் குளிரும் என நினைக்கிறேன். இதுவரை இவ்வளவு பெரிய அறை கிடைத்ததில்லை என்று சொன்னேன்.

மேலும் …

முந்தைய கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது
அடுத்த கட்டுரைஅணுவும் அறிவும் – ஒரு கடிதம்