திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
உங்கள் எழுத்துக்களின் வன்மையில் இலக்கியம், தத்துவம், மதம் போன்றவற்றை தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். என் மானசீக குருவாக உங்களை மதிக்ககிறேன்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இருந்தபோது நானும் ஒரு பெண்ணும் இரண்டு வருடங்கள் காதலித்தோம். பிரச்சனைகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் அவளைப் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. எனக்கு சமீபத்தில் திருமணம் ஆகிவிட்டது. அவளுக்கு இன்னும் ஆகவில்லை. இந்த மூன்று வருடங்களி்ல் அவள் எனக்கு மாதம் ஒரு முறையாவது மின்னஞ்சல் அனுப்புவாள். ஒன்றிற்குக் கூட நான் பதில் அனுப்பியதில்லை. பல முறை எழுத ஆரம்பித்து பின்பு விட்டு விடுவேன். முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் என்று.
மின்னஞ்சல்களின் மூலமும் அவள் பற்றிய என் கணிப்பின் மூலமும் அவள் இன்னும் என்னை மறக்கவில்லை (அல்லது மறக்க முடியவில்லை) என்றே நினைக்கிறேன். எனக்கு திருமணமானதை என் வலைப்பூ அல்லது ஆர்குட் வழியாக தெரிந்து கொண்டாள் என்று நினைக்கிறேன். வாழ்த்து அனுப்பியிருந்தாள். அதற்கும் நான் பதில் அனுப்பவில்லை. என் வலைப்பூவில் பதிவுகளை படித்து விட்டு என்னைப் பாராட்டுகிறாள். நான் அவளது மின்னஞ்சல்களை படிப்பதில்லை என்று கருதியோ எனக்கு பிடிக்காது என்றோ இவையனைத்தும் ஓரிரு வரிகளில் மட்டுமே உள்ளன.
மூன்று வருட உணர்வுகளை மூன்று பத்திகளில் சொல்ல முடியவில்லை. மனநல மருத்துவர்கள் சொல்வதைப் போல பேசி சுமூகமாகப் போகக் கூடிய விஷயமாக நான் நினைக்கவில்லை. நீங்கள் கூறிய ‘காம குரோத மோகம்’, இவை மூர்றும் என்னுள் ஊறித் திளைத்து, துளைத்தெடுக்கிறது.
தற்போது என் திருமண புகைப்படம் ஒன்றை கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறாள். என் எண்ணமெல்லாம் இதுதான். அவள் ஏன் இப்படி தன்னைத் தானே வருத்திக் கொள்ள வேண்டும். ஓரிரு ‘பொதுவான’ மின்னஞ்சல்களை நான் அனுப்பினால் அது அவளுக்கு நன்மை பயக்குமா?
நிறைய எழுதி உங்கள் ஆஸ்திரேலிய பயண வேலைகளை தடை செய்ய விரும்பவில்லை. உங்கள் எண்ணங்களை பகிர முடியும் தருணத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- ஜெ
பி.கு.: இதை தங்கள் வலைப்பதிவில் வெளியிடும் பட்சத்தில் என் பெயர், இணையதள முகவரி இவற்றை தெரிவிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்அன்புள்ள ஜெ
உங்கள் கடிதம்.
உங்கள் கடிதத்தில் சொல்லியிருக்கும் உறவின் சிக்கல் மிக சாதாரணமான ஒன்று. இதை நாம் எல்லா விஷயங்களிலும் பார்க்கலாம். நீங்கள் ஒன்றை மறுத்துவிட்டால் மீண்டும் கொஞ்சநேரம் அந்த விஷயம் உங்கள் மனதுக்குள் எஞ்சியிருக்கும். தொலைக்காட்சியை அணைத்தபின் எஞ்சும் பிம்பம் போல.
உதாரணமாக உங்களுக்கு ஒரு வேலைக்கு அழைப்பு வருகிறது. நீங்கள் அதை மறுத்துவிடுகிறீர்கள். ஆனால் உங்கள் மனம் சிலநாட்கள் அந்தவேலையை நீங்கள் செய்வதுபோலவே கற்பனைசெய்துகொள்ளும். அந்தவேலையில் நீங்கள் கண்ட குறைகள் உண்மையில் இல்லை என்று எண்ணிக்கொள்ளும். அதில் வெற்றிகளைக் கற்பனைசெய்துகொள்ளும். நீங்களாகவே மறுத்த ஒன்றைப்பற்றிய ஏக்கமே உங்களை விட்டுச்செல்ல கொஞ்ச நாள் பிடிக்கும். அது மனதின் மாயை
ஏன்? மனம் என்பது ஆசையால் ஆனது. பௌத்த மரபில் அதை திருஷ்ணை என்கிறார்கள். இருப்பதற்கான ஆசை, நுகர்வதற்கான ஆசை, வெல்வதற்கான ஆசை என அதை பௌத்த மரபு வகைபிரிக்கிறது. நாம் இருநாற்காலிகளைக் கண்டால் ஒன்றில் அமர்கிறோம். நம் மனம் இரண்டிலும் அமர்ந்து பார்க்கிறது. மனிதனுக்கு உலகையே வென்றாலும் இச்சை நிறைவுறாது. மனிதன் கோருவது இப்பிரபஞ்சத்தையே என்று சொல்லலாம்.
நம் ஆசைகளுடன் எப்போதுமே அகங்காரமும் இணைந்து கொள்கிறது. நீங்கள் மறுத்த வேலையை இன்னொருவன் செய்தால் அவன் சரியாகச்செய்யக் கூடாதென உங்கள் மனம் விழையும். அது தீய எண்ணத்தால் அல்ல. மாறாக அவ்வேலையை இன்னொருவன் திறம்படச்செய்வதென்பது உங்கள் இருப்பை மறுப்பதாகும். மனிதர்கள் ஒவ்வொரு கணமும் விழைவது தங்கள் இருப்பை. தங்கள் இருப்பின் இன்றியமையாமையை.
ஆரோக்ய நிகேதனம் நாவலில் கதாநாயகனாகிய ஜீவன் சிறுவயதில் மஞ்சரி என்னும் பெண்ணை மணம்புரிய விழைகிறான். அவள் பூபேன் என்னும் ஒரு ஜமீன்தார் மகனை மணந்துகொள்கிறாள். ஜீவனுக்கு அது பெரும் அவமானமாக ஆகிறது. அவளை அடைவதல்ல அவன் பிரச்சினை, அந்த நிராகரிப்பைதாண்டிச்செல்வது என்பதே. அந்தப்பெண்ணால் நிராகரிக்கத்தக்க ஒருவனா நான் என்ற அகங்காரத்தின் எரிதலே அவனை நிம்மதியற்றவனாக ஆக்குகிறது
ஜீவன் மணம்செய்துகொள்கிறான். மஞ்சரியைவிட பேரழகியான ஆத்தர்பௌ எனும் பெண்ணை. அவளை நகையால் மூடி கொண்டுபோய் மஞ்சரிமுன் காட்டவேண்டும் என்பதே அவன் கனவு. ஆனால் மஞ்சரி ஊரைவிட்டுச் சென்றுவிட்டாள். இந்த விஷயம் ஆத்தர் பௌவிற்கு தெரிகிறது. அவள் மனம் ஆழமாகப் புண்படுகிறது. இன்னொருத்தியின் நிழலாக வாழ நேரும்போது ஏற்படும் அகங்கார அடி அது. அவர்கள் வாழ்க்கை அரைநூற்றாண்டுக்காலம் நீளும் சித்திரவதையாக ஆகிறது.
தோல்வியடைந்த உறவுகளில் உள்ள முக்கியமான பிரச்சினை இழப்பு அல்ல. இழப்பை மனிதன் தாங்கிக்கொள்ள முடியும். ஏனென்றால் வாழ்க்கை என்பதே ஒரு தொடர் இழப்புதான். நிராகரிப்பு மூலம் அகங்காரம் புண்படுவதே முக்கியமான பிரச்சினை. நிராகரிக்கத்தக்கவனா நான் என்னும் கொந்தளிப்பு. அதை எளிதில் தாண்டிவிடமுடியாது.
உங்கள் தோழியின் சிக்கல் இதுவே. அவளால் உங்களை இழக்க முடியும். ஆனால் அவள் இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது அளிக்கும் அகங்காரக் காயத்தை தாங்க முடியவில்லை. அதை அன்பென்றும், மிஞ்சும் பாசம் என்றும் மனம் கற்பனைசெய்துகொள்ளும். ஏனென்றால் நாம் எப்போதுமே நம் உணர்ச்சிகளை சிறந்தவை என்றுதான் கற்பனைசெய்துகொள்ள விரும்புவோம்.
தூரம் ஒன்றே அந்த அகங்காரச்சிக்கலில் இருந்து விடுவிக்கும். காலம் இடம் இரண்டுமே தூரத்தை உண்டு பண்ணுபவை. நம்மை எரியச்செய்யும் ஓர் உணர்வு சற்றே விலகியதும் இல்லாமலாகிவிடும். அந்தப் பெண்ணைப்பொறுத்தவரை உங்களிடமிருந்து விலகுவது மட்டுமே இப்போது அவளுக்கு விடுதலை அளிக்கும். ஒரு புள்ளியில் நீங்கள் சிறியதாகி கடந்த காலத்துக்குள் புதைந்து மறைவீர்கள்.
ஆகவே உங்களைச் சந்திக்காமல் இருப்பதும் தொடர்பு கொள்ளாமலிருப்பதுமே அவளுக்கு நல்லது. மனிதவாழ்க்கை எப்போதும் முன்பக்கம்தான் இருக்கிறது. பின்பக்கம் இருப்பது வாழ்க்கையின் எச்சங்கள் மட்டுமே. உடல் அளவில் நாம் நம்மை ஒருவரிடமிருந்து விலக்கிக் கொண்டோமென்றால் பெரும்பாலும் நாம் மன அளவிலும் விலக முடியும். இது மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஆசி. மனிதன் ஒரு மந்தைமிருகம். எந்த மந்தையில் இருக்கிறதோ அதற்கேற்ப மாறும் மனம் கொண்டவன்.
அந்தப்பெண் தனக்குரிய இடத்தையும் சூழலையும் வேறெங்காவது கண்டடைய வேண்டும். அதுவே முறையானது. நீங்கள் அவளிடமிருந்து முழுக்க முழுக்க சொல்லாலும் நினைவாலும் விலகிவிட முயலவேண்டும். அதுவே ஒரே வழி. இயல்பான வழி.
இம்மாதிரி தருணங்களில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு விஷயம் உண்டு. நம் மனதுக்கு துயரங்களை வளர்த்துக்கொள்ளும் ஒரு வழக்கம் உண்டு. முள்ளைத்தின்ற ஒட்டகம் தன் ரத்தத்தையே சுவைக்க ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள் அதுபோல. துன்பங்களை வளர்த்துக்கொண்டு, மனமுருக்கும் பகற்கனவுகளில் மூழ்கி, விதவிதமான தன்னிரக்கநிலைகளை அடைந்து அதில் ரசிப்பது. பெண்களுக்கு அந்த மனநிலை மேல் ஒரு மோகம் உண்டு
அந்த மனநிலை வாழ்க்கை மீது இருளைப் பரவச்செய்துவிடும். அதிலிருந்து விடுபட ஒரே வழி அதை நேருக்குநேராக பார்ப்பதுதான். இதோ நான் என் துயரங்களை மிகைப்படுத்திக்கொள்கிறேன், இது தேவையில்லை என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்வதன் மூலமே நாம் வெளிவந்துவிட முடியும்.
மேலான உறவுகளை நேர்மையான உணர்வுகளால், நம்பிக்கையால், சமநிலையான கொடுக்கல்வாங்கலால் மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடியும். கற்பனைகள், நெகிழ்வுகள் மூலம் உண்மையான உறவுகளை ஒருபோதும் உருவாக்கிக்கொள்ள முடியாது
ஜெ
தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’
– Show quoted text –
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 21, 2009