அருகர்களின் பாதை 2 – சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி

 

பதினைந்தாம் தேதி அதிகாலையிலேயே எழுந்துவிட்டோம். முந்தையநாள் இரவு பயணக்குறிப்புகளை எழுதி இணையத்தில் ஏற்றிவிட்டு பதினொரு மணிக்குத்தான் படுக்கச்சென்றேன். அதிகாலை நான்குமணிக்கே கிருஷ்ணன் வந்து எழுப்பினார். தக்காணப்பீடபூமிக்குரிய கடுமையான குளிர். குழாயில் தண்ணீரும் வரவில்லை. நண்பர்கள் முன்பக்கம் இருந்த ஒரு குழாய்க்குச் சென்றார்கள். நான் சென்றபோது வாட்ச்மேன் வருவதைப் பார்த்தேன். அவரிடம் தண்ணீர் வரவில்லை என்றதும் அவர் சென்று குழாயைத் திறந்து நோக்கி நீர் இல்லை என்பதை உறுதி செய்தபின் மோட்டார் போடுவதற்காகச் சென்றார். அப்போதுதான் நான் ஒன்றைப் புரிந்துகொண்டேன், நான் அவரிடம் இந்தியில் அதைச்சொல்லியிருக்கிறேன்!

image.png

கடுமையான குளிரில் குளிர்ந்த நீரில் குளிப்பதற்கு ஒரு திறமைதான் தேவை, கணநேரம் யோசனையை ஒத்தி வைப்பது. குளித்தபின்னர்தான் குளித்திருக்கிறோம் என்ற தகவலே நம் மூளைக்குத் தெரியவேண்டும். குளித்தபின் உடம்பு அறைவெப்பநிலைக்குத் திரும்புவதனால் கொஞ்சம் கதகதப்பாகக்கூட உணர்வோம். உடைமாற்றிக்கொண்டு கிளம்பும்போது ஐந்து மணி. இருளில் நடந்து சென்று சந்திரகிரி மீது ஏறினோம். விந்தியகிரி அளவுக்கு உயரமானதல்ல. ஆனால் இதுவும் ஒற்றைப்பாறை மலை. பாறையில் வெட்டப்பட்ட புராதனமான படிக்கட்டுகள் வழியாகச் சென்றோம். விந்தியகிரி மலையில் உள்ள எந்தக்கோயிலும் அப்போது நடைதிறந்திருக்கவில்லை. ஆகவே மலை உச்சியில் பாறைமேல் சென்று நின்றுகொண்டு சூரிய உதயத்தைப் பார்த்தோம்.

பயணங்களில் நான் எப்போதும் கடைப்பிடிக்கும் நெறி என்பது ஒருபோதும் சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் தவறவிடக்கூடாதென்பதே. அப்போது ஏதாவது ஓர் ஊரில்தான் இருக்கவேண்டும். அப்போதுதான் நம்மால் ஓர் ஊரின் உண்மையான அழகை, அந்த வாழ்க்கையை உணர முடியும் என்பது என் அனுபவம். அதிலும் புனிதநகரங்களில் புராதனமான ஊர்களில் விரிந்த நிலக்காட்சிகள் முன் அந்தியும் காலையும் அவற்றை நம் அகத்தில் ஆழமாக நிலைநாட்டக்கூடியவை. உதயம் இன்று மகத்தானதாக இருந்தது. மௌனம் விளைந்து பொன்னிறமாக அறுவடைக்குக் காத்திருக்கும் மாபெரும் நிலவெளி எங்களைச்சுற்றி. நிலம் ஒரு நில ஓவியமாகச் சுருங்கும் உயரத்தில் இருந்தோம். பதிக்கப்பட்டக் கண்ணாடிகள் போல ஏரிகள், வழியும் கண்ணாடிப்பாம்புகள் போல ஓடைகள். கருங்கூந்தல் பின்னல் போல தார்ச்சாலைகள். மரக்கூட்டங்கள், நீர்ப்படலத்தில் அசையாது மிதந்து நிற்கும் வெல்வெட் பாசிப்பரப்புக்கள் போல மரக்கூட்டங்கள்.

சூரியன் உள்ளே இருந்தான். போர்வைக்குள் சுருண்டு தூங்கும் பொன்னிறமான குழந்தை. அவன் ஒளி வானிலும் மண்ணிலும் இருந்தது. மேகங்கள் ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. ஒளி சிவந்து சிவந்து வர திரைகள் விலகி வாசல்கள் திறந்து பொன்னிறமான பேருருவம் கிழக்கில் எழுந்தது. ஒளி பரவியதும் நூற்றுக்கணக்கான சிறிய பூச்சிபிடிக்கும் பறவைகள் வானில் விசிறப்பட்டவை போலப் பறந்து கண்ணுக்குத்தெரியாத நீர்ச்சுழலில் முக்குளியிட்டு எழுந்து கும்மாளமிட்டன. கீழே நிலத்தில் இருந்து எழுந்துகொண்டிருந்த நீராவி மீது ஒளிபட்டு அவை பொன்னிறமான மேகங்களாக ஆகி மேலெழுந்தன. சூரியன் மண் மீது பரவும்போது ஒவ்வொன்றும் துலங்கி பின் மங்கலாகி மஞ்சள் நிற ஒளியில் கரைந்து மிதப்பவை போலத் தெரிந்தன. மௌனம் உள்ளும் புறமும் ஒலிக்கும் எல்லா ஒலிகளையும் பிரம்மாண்டமானதாக ஆக்கிவிடுகிறது.

சந்திரகிரி முழுக்க ஏராளமான சமண ஆலயங்கள் உள்ளன. இந்தத் தலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு முதலே உள்ளது. மகதப்பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரிய மன்னர் அவரது குருவான பத்ரபாகு என்பவரால் சமண மதத்தைத் தழுவி துறவு பூண்டு இந்தக் குன்றுக்கு வந்து இங்கேயே சல்லேகனை [ உண்ணாநோன்பு ] இருந்து உயிர்துறந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சி பல சமண நூல்களில் விவரிக்கப்படுகிறது. சந்திரகுப்த மௌரியர் கண்ட பதினாறு கனவுகள்தான் அவர் அந்த முடிவை எடுப்பதற்குக் காரணம் என்கிறது சமண மரபு. இந்நிகழ்ச்சியை இங்குள்ள பார்ஸ்வநாதர் கோயிலின் சாளரத்தில் கல்லால் செதுக்கியிருக்கிறார்கள்.

காலை முழுக்க சந்திரகிரிக்குன்றின் மீதுள்ள கோயில்களைப் பார்த்தபடி நடந்தோம். பிரம்மாண்டமான பார்ஸ்வநாதர் கருமை பளபளக்க நிற்கும் கருவறைக்கு முன்னால் மனம் சற்று நேரம் இடத்தையும் இருப்பையும் இழந்தது. அழகிய சிறிய கோயில்கள். உருட்டி செதுக்கப்பட்ட தூண்களும் சதுரவடிவ முகமண்டபமும் கொண்ட கோயில்கள் இவை. பெரும்பாலான மூலச்சிலைகள் கரிய சலவைக்கல்லில் செதுக்கப்பட்டவை. கருமைக்கு அபூர்வமான அழகு ஒன்று உள்ளது. அது ஆழத்தை நினைவுறுத்துகிறது. கரிய தீர்த்தங்கரர் சிலைகள் எல்லாமே அனைத்தையும் தன்னுள் இழுத்துக்கொண்டு அலையிலாமல் கிடக்கும் காட்டுச்சுனைகள் போலத் தோன்றின. அவற்றைத் தொட்டால் சில்லென்றிருக்கும் எனற பிரமை. கால்தவறி விழுந்தால் அடியற்ற ஆழத்துக்குள் குளிர்ந்து குளிர்ந்து சென்று அமைதியில் அடங்கி அழுத்தத்தில் அணுவாகச்சுருங்கி அமையவேண்டியதுதான் என்னும் அச்சம்.

image.png

நிர்வாணச்சிலைகள். நிர்வாணம் என்பதே இயல்பான நிலை என உணரச்செய்து உடைகளுக்காக ஆழந்த வெட்கமொன்றை நெஞ்சுக்குள் நிரைக்கும் சிலைகள். பார்ஸ்வநாதர், ஆதிநாதர், சாந்திநாதர், வர்த்தமானர், சந்திரபிரபாநாதர் ஆகியோருக்குத்தான் அதிகமான கோயில்கள் இருக்கும். இங்கே மஞ்சுநாதர், மல்லிநாதர் போன்ற தீர்த்தங்கரர்களுக்கும் பெரிய கருவறைகள் கொண்ட கோயில்கள் இருந்தன. பெரும்பாலும் வாசல்களில் கூஷ்மாணினி தேவி [மலர் ஏந்தியவள் என பொருள்] அமர்ந்திருந்தாள், கையில் மலருடன். சில கோயில்களில் விழிகள் வெள்ளியில் பதிக்கப்பட்ட பத்மாட்சி யட்சி.[தாமரை விழிகொண்டவள்]

கீழே இறங்கி வந்தபோது ஒரு சின்ன பூசல். முந்தையநாள் மேலே தாமதமானதனால் செருப்புகள் வைத்திருந்த இடத்தைப் பூட்டிவிட்டார்கள். காலையில் வந்து செருப்பைக் கேட்டால் ஒரு கிழவர் பெரிய ரகளை செய்தார். கடைசியில் நூறு ரூபாய் லஞ்சம் கேட்டார். ரூபாயைக்கொடுத்து செருப்பை வாங்கினோம். ஆனால் இதை புகார் செய்யவேண்டும் என்றேன். நம் மனநிலையை கெடுத்துக்கொள்ளவேண்டாமே என்ற எண்ணம் கிருஷ்ணனுக்கு. ஆனால் இந்த மாதிரி செய்கைகளை இப்படியே விடக்கூடாது என்பது என் தரப்பு. காரணம் நூற்றில் ஒருவர்கூட புகார்செய்யமாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் இவர்கள் செயல்படுகிறார்கள். பலரது மொத்தப் பயணத்தையே இந்த மாதிரி ஆசாமிகள் மனமகிழ்ச்சியற்றதாகச் செய்துவிடுவார்கள். ஆகவே அலுவலகத்தில் சென்று சொன்னோம். அங்கிருந்தவர் முகுந்த் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தார். சமணர்களின் இடத்தில் இப்படி நடக்கவே நடக்காது சார் என்று மன்னிப்பு கோரினார். உடனே அந்த ரூபாயை திருப்பிக்கொடுத்தார். அந்த நபர் மீது எழுத்துமூலம் புகாரும் எழுதிவாங்கிக்கொண்டார்.

சில நூல்களை அங்கிருந்து வாங்கிக்கொண்டு கிளம்பினோம். இந்தப் பயணத்தில் முதல் நெடுந்தூரப்பயணம். கிட்டத்தட்ட 200 கிமீ. மேற்குமலைத்தொடர்வரிசையை குறுக்காகக் கடந்தோம். இருபக்கமும் அடர்ந்த காடு. ஒரு இடத்தில் ஒரு நீலநதி. அதன் பெயர் குண்ட்யா. அந்த நதியில் இறங்கிக் குளித்தோம். குளிர்ந்த சுத்தமான நீர். மிக அபூர்வமாக நிகழும் அற்புதமான குளியல்களில் ஒன்று. கங்கையில் குளித்த அனுபவம் நினைவுக்கு வருகிறது என்று அரங்கசாமி சொன்னார். அங்கேயே புளிசாதம் சாப்பிட்டோம்.

மாலை நான்குமணிக்கு தர்மஸ்தலா வந்தோம். தர்மஸ்தலாவுக்கு நான் தொடர்ந்து பலமுறை வந்திருக்கிறேன். காசர்கோட்டில் வேலைபார்த்த நாட்களில் 1984ல் முதன்முறையாக. அதன்பின் கடைசியாக வசந்தகுமாரும் நானும் யுவன் சந்திரசேகரும் ஷண்முகமும் வந்தோம். தர்மஸ்தலா இப்போது தென்னகத்தின் முக்கியமான புண்ணியஸ்தலமாக ஆகிவிட்டது. அன்றெல்லாம் மிக அமைதியான மலைவாச இடமாக இருந்தது. சட்டென்று அய்யப்ப பக்தர்கள் வர ஆரம்பித்தார்கள். இப்போது ஒரே கூட்டம். சத்தம் சந்தடி. தர்மஸ்தலாவில் ஆயிரம்பேர் வரை தங்க இடமிருக்கும். ஆனால் அறை எல்லாமே முடிந்துவிட்டது என்றார்கள். அங்கே இலவச உணவுண்டு, அதுவும் கிடைக்காது என்று பட்டது. ஆகவே அங்குள்ள சமண மையமான ரத்னகிரியை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பிவிடலாமென முடிவு செய்தோம்.

image.png

தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாத ஸ்வாமி கோயில் கேரள கட்டிடப்பாணி கொண்டது. கூம்பு வடிவமான வட்டக்கூரை. ஓடுபோடப்பட்டது. அங்கே செல்லவில்லை. சென்றால் இன்று முழுக்க வரிசையில் நிற்கவேண்டியதுதான். உண்மையில் இந்தத் தலமானது புராதனமான சமணத் தலம். பெயர் சொல்லப்படுவதுபோலவே இது ஓர் உணவுச்சாலை. இதன் தொன்மை கிமுவுக்கு முன்னர் செல்கிறது என்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்த ஊர் குடுமா என்றும் மல்லார்மடி என்றும் சொல்லப்பட்டுள்ளது. [குடுமியான் மலை நினைவுக்கு வருகிறது] இதனருகே உள்ள ஊர் பெல்தங்காடி. வெள்ளைச்சந்தை என்று பொருள். அந்த சந்தை முக்கியமான வணிகத்தலம். வடக்கிலிருந்து சேரநாட்டுக்குச் செல்லும் சமண வணிகப்பாதையின் திறப்புப் பாதை இதுவே.

காலப்போக்கில் இந்த இடம் அழிந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் இந்த ஊரின் அருகே பெல்தங்காடியை ஆண்டுவந்த உள்ளூர் ஆட்சியாளர் பிர்மண்ண பெர்கடேயைத் தேடிவந்த சமண சாது ஒருவர் இந்த இடத்தைப்பற்றிச் சொல்லியிருக்கிறார். இங்கே அறம் வளர்க்குமாறு அவர் சொன்னதை ஒட்டி பிர்மண்ண பெர்கடேயும் அவர் மனைவி அம்மு பல்லத்தியும் இங்கே மீண்டும் அன்னசாலையை நிறுவினார்கள். அவர்களின் குடும்பம் நெல்லியாடி வீடு எனப்படுகிறது. அவர்கள்தான் இந்த ஊரின் அறங்காவலர்கள். இப்போது வீரேந்திர ஹெக்டே அறங்காவலராக இருக்கிறார்.

பெர்கடே காலத்திலேயே பல உள்ளூர் தெய்வங்களும் இங்கே நிறுவப்பட்டுவிட்டன. பெர்கடே இங்கே களராகு, கலர்காயி, குமாரசாமி, கன்யாகுமரி தெய்வங்களை நிறுவி வழிபட்டுவந்தார். பின்னர் அவர் பிராமணர்களை பூஜைக்காக அழைத்தபோது அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இங்கே சிவலிங்கம் அமைக்கப்பட்டது. இதை உள்ளூர் காவல்தெய்வமான அன்னப்பா என்ற தெய்வமே கொண்டுவந்து அறங்காவலர் ஹெக்கடேக்கு அளித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த லிங்கம் அருகே உள்ள கதரி என்ற ஊரைச்சேர்ந்தது.

பதினாறாம் நூற்றாண்டில் அறங்காவலர் தேவராஜ ஹெக்டே அழைப்பின் பேரில் இங்கே வந்த உடுப்பி மடாதிபதி வாதிராஜ சுவாமியால் அந்த லிங்கம் ஆலயமாக இங்கே நிறுவப்பட்டது. அதுவே மஞ்சுநாத ஸ்வாமி கோயிலாக உள்ளது. இது இலவச உணவளிக்கும் அன்னசாலையாக இன்று வரை உள்ளது. தினம் ஐந்தாயிரம்பேர் வரை சாப்பிடுகிறார்கள். ரத்னகிரி மீது கோமதீஸ்வரரின் சிலை உள்ளது. இது கர்நாடகாவில் உள்ள கோமதீஸ்வரர் சிலைகளில் மூன்றாவதாக உயரமானது. சிரவணபெலகொலா சிலையைவிட ஒரு மீட்டர் உயரம் குறைவு. பிரம்மாண்டமான இச்சிலை 1966ல் திட்டமிட்டு செதுக்கப்பட்டு 76ல் முடிந்தது. 1982ல் இங்கே கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டது. வீரேந்திர ஹெக்டே இதை நிறுவ முன் முயற்சி எடுத்துக்கொண்டார். சிலை பிரம்மாண்டமாக ஓங்கி நின்றது. அதன் முன்னால் நின்று மீண்டும் துறவு எல்லா உடைமைக்கும் மேலாக எழுந்து நிற்பதன் மகத்துவத்தை நினைத்துக்கொண்டேன்.

மூடுபத்ரேக்கு சென்று அங்கே தங்கலாமென முடிவெடுத்தோம். செம்மண் தூசி பறக்கும் சாலையில் வந்தோம். செம்மண் தூசிமேல் அந்திச் சூரியன் தீக்கனல் போல எரிந்துகொண்டிருக்க மூடுபத்ரேவுக்கு ஏழு மணி வாக்கில் வந்து சேர்ந்தோம். இங்குள்ள தர்மசாலையில் தங்க இடம் கிடைத்தது. சமண ஆலயங்கள் எல்லாமே ஆறு மணிக்கு மூடிவிடும். ஆகவே இனிமேல் நாளைக்குத்தான் கோயில்களைப் பார்க்கவேண்டும்.

மேலும்…

முந்தைய கட்டுரையானைடாக்டருக்கு ஒரு தளம்
அடுத்த கட்டுரைமடிக்கணினி