கவிதையின் அரசியல்– தேவதேவன்

தேவதேவன்

 

 

எங்களூரில் தினம் ஒரு இடத்தில் ‘தகடு எடுப்பு’ நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம் ”அண்ணாச்சி தகடு ஆரு வீட்டுக்கு?”என்று கேட்டபடி வேடிக்கைபார்க்கும் கும்பல் பின்னால் போகும்.

அந்தி கறுத்ததும் வீட்டுக்கு தென்மேற்கு மூலையில் நுனிவாழை இலை விரித்து, பச்சைமட்டைக்கீற்றில் தேங்காயெண்ணை ஊற்றி சுருட்டிய துணித்திரியில் பந்தம் கொளுத்தி, நான்குபக்கமும் நட்டு, நடுவே கல்லில் சாமி ஆவாகனம் பண்ணி நிறுத்தி ,மஞ்சள்பொடிகலந்த அரிசிப்பொரியும் உடைத்த தேங்காயும் தெச்சி செவ்வரளிப்பூவும் படைத்து, பூசாரி உடுக்கு முழக்கி அமர்வார்

ஒருகட்டத்தில் இருந்தபடியே மெல்ல ஆடி ”ஹிய்யே!!!” என்று அலறி எழுந்து சன்னதம் கொண்டு ஆடுவார். ”நான் மாதி வந்திருக்கேண்டா… ரெத்தம் குடுடா!” என்று கூவி ஆடி ஆடி வீட்டுத்தோட்டத்தின் சில மூலைகளில் சென்று நின்று காலால் தட்டிக் காட்டுவார். அந்த இடத்தில் வீட்டு உரிமையாளர்கள் மண்ணை தோண்டுவார்கள். தோண்டி தோண்டி இளக்கிய இறுகிய மண்ணில் இருந்துச் சட்டென்று ஒரு செம்புச்சுருள் அகப்படும். தகடு!

செய்வினைசெய்து மந்திரம் பொறித்த இந்த தகடு பூசாரியின் காலில் இடுக்கப்பட்டிருக்கும் என்றும், இடுக்கியபடியே அவர் ஊரிலிருந்தே கிளம்பி வருவார் என்றும் எனக்கு என் சொந்த பெரியப்பா மகன் இதேவேலையைச் செய்ய ஆரம்பித்த போதே புரிந்தது.

நெடுங்காலமாக நம் இலக்கியச்சூழலில் இலக்கியப்படைப்பில் அரசியலைக் கண்டடையும் பணியும் இந்த ரீதியில்தான் நடந்துவந்திருக்கிறது. பூசாரி கூலிவாங்கி கும்பிட்டு போய்விடுவார்.அதன் பின் படைப்பு கிடந்து அலமுறையிடவேண்டும், நான் அது அல்ல என்று. கவிதையில் அரசியலைக் கண்டடைவது ஓர் அரசியல் செயல்பாடு மட்டுமே. இலக்கியத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. பெரும்பாலும் அரசியல்வாதிகளால் அவர்களின் அப்போதிய தரப்புக்கு ஏற்ப விருப்புவெறுப்புகளுக்கு இணங்க அது செய்யப்படுகிறது. அரசியலை மட்டுமே காண்பது மூடர்களின் வேலை

ஏறத்தாழ இருபதுவருடங்களுக்கு முன்பு கவிதையின் அரசியல் பற்றி ஒரு ஆர்வமூட்டும் விவாதம் நடந்தது. அன்று கருத்துலகில் முற்போக்கினர் ஒரு வலுவான தரப்பாக விளங்கி வந்தார்கள். அனைத்தும் அரசியலே, அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற கூவலை இலக்கியத்தில் ஓங்கி ஒலித்தனர். இன்றும் அதே குரல் அழகியலுக்குப் பதில் அரசியல் என்ற மழுங்கிப்போன ஒலியாக கேட்கத்தான் செய்கிறது.

அப்போது தம் கவிதைகளைப்பற்றி பேசிய பிரமிள் அவை அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்றார். அரசியல் என்ற சொல்லால் சுட்டப்படும் உலகியல் சார்ந்த, அதிகாரம் சார்ந்த சிந்தனைகளுடனும் செயல்பாடுகளுடனும் அவற்றுக்கு தொடர்பில்லை என்றும் அவற்றுக்கு அரசியல் உண்டென்றால் அது கவிதையின் அரசியலே என்றும் சொன்னார்.

கவிதையில் பிரமிளின் நேர்மாணவராகவும் தொடர்ச்சியாகவும் வந்தவர் தேவதேவன். தேவதேவன் கவிதைகளுக்கு பிரமிள் எழுதிய முன்னுரைகளிலும் கவிதைக்குரிய இந்த தனி அரசியலை சுட்டிக்காட்டியுமிருக்கிறார். பின்னர் தேவதேவன் ‘கவிதைபற்றி’ என்ற தன் சிறு நூலிலும் பல உரையாடல்களிலும் இதைப்பற்றி பேசியிருக்கிறார்.

இங்கு தேவதேவன் சுட்டிக்காட்டிய ஒரு உதாரணத்தைமட்டும் நினைவூட்ட விழைகிறேன். தன் கவிதைகளை பிரமிள் ரத்தினங்கள் என்றார். அது இடதுசாரி விமரிசகர் ஒருவரை எரிச்சலடையச் செய்தது. அப்படியானால் அவர் கவிதைகளுக்கு ரத்தினங்களைப்போல பயன்மதிப்பு ஏதும் இல்லையா, அவை வெறும் அலங்காரப்பொருட்களும் ஆடம்பரப்பொருட்களும் மட்டும்தானா என்று கேட்டார்.

பிரமிள் சார்பாக அதைப்பற்றி சிந்திக்கும் தேவதேவன் ரத்தினங்களைப்போலவே கவிதையின் பயன்மதிப்பும் குறியீட்டுரீதியானதே என்கிறார். அன்றாடவாழ்க்கை சார்ந்து பயன்படுத்திக் கொள்ள முடியாததால் ரத்தினங்கள் உலகியலுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன. உலகியலால் ரத்தினங்களை மதிப்பிட்டுவிட முடியாது. அவற்றின் மதிப்பு அவை சுட்டிநிற்கும் அபூர்வமான ஒரு அழகியலின், அது சார்ந்த மனஎழுச்சியின், அதன் மூலம் உருவாகும் குறியீட்டுத்தன்மையின் விளைவாக உருவாகி வருவது.

அதுபோலவே கவிதையும் என குறிப்பிடும் தேவதேவன் இபப்டிச் சொல்லி முடிக்கிறார் ”ஆம், உலகியலை கவிதை மதிப்பிடுகிறதே என கவிதையை உலகியல் மதிப்பிட்டுவிட முடியாது’

மிக அபூர்வமான ஒரு வரி இது. உலகின் சிறந்த கவிதைகளில் தோய்ந்த ஒருவருக்கு இது மிக எளிமையான அடிப்படைக்கூற்றாக தென்படும். ஆனால் கவிதையை உணர்ந்திராத ஒருவருக்கு எத்தனை ஆயிரம் சொற்களால் விளக்கினாலும் சற்றும் புரியவைக்க இயலாது.

ஏறத்தாழ முப்பதுவருடங்களாக எழுதிவரும் தேவதேவனின் கவிதைகளைப் புரிந்துகொள்ள இவ்வரியையே திறவுகோலாகக் கொள்ளலாம். ‘உலகியலால் மதிப்பிட முடியாத உலகியலை மதிப்பிடும் கவிதைகள்’ அவை.

இத்தனை வருடங்களில் தமிழ் சூழலில் இருந்து தேவதேவனைப்பற்றி வந்த பெரும்பாலான அபிப்பிராயங்கள் எளிய உலகியல் நோக்கை அவரது கவிதைகள் மேல் போட்டு அவரை வகுக்கும் முயற்சிகள். மரம் மட்டை பறவை பூ என்று கவிதை எழுதும் அழகியல்வாதி என்ற மனப்படிமமே பொதுவாக உள்ளது. அழகியல் கோட்பாட்டாளர்கள் அவரை ‘படிமக்கவிஞர்’ என்று சொல்லக்கூடும். தத்துவ நோக்கில் அவரை ‘மீபொருண்மையியல் கவிஞர்’ [மெட·பிஸிகல் பொயட்] என்று வகுத்திருக்கிறார்கள். சமூக மாற்றத்துக்க்குக் குரல்கொடுக்காத ‘அகவய’க் கவிஞர் அவர் என்று அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவற்றால் அளவிடப்படாமல் இவற்றையெல்லாம் அளவிடும் தன்மையுடன் அவரது கவிதைகள் நின்றுகொண்டிருக்கின்றன. அவரது கவிதைக்காலகட்டத்தில் பல அழகியல், திறனாய்வுக் கோட்பாடுகள் வந்து சென்றுவிட்டிருக்கின்றன. காலத்தால் மேலும் மெலும் ஒளிபெற்று நாம் வாழும் காலகட்டத்தின் மகத்தான கவிஞராக அவர் இன்று நுண்ணியவாசகர்களால் கணிக்கப்படுகிறார். எந்த பெரும் கவிஞனையும்போல அவரும் எதிர்காலத்தின் படைப்பாளி.

தன்னையே களைந்து விட்டு இயற்கையின் பிரம்மாண்டம் முன் நிற்பதே தேவதேவனின் கவிதையின் முதல் இயல்பாகும். அது ஒருவகை நிர்வாணம். தன் அடையாளங்களை, தன்னிலையை, தான் என்ற பிரக்ஞையை படிப்படியாகத் துறந்து தானே அதுவாக ஆகி நிற்கும் பெருநிலையைச் சென்றடைகிறார்.

இந்தப்படிநிலைகளில் ஏதேனும் ஒன்றில் நின்றபடி தன்னைக் கவிஞர் என அவர் உணரலாம் . அப்போது தன் வாழ்க்கையை தம்மவர் வாழ்க்கையை அவர் திரும்பிப்பார்க்கக் கூடும். அவை அறச்சீற்றமாக, ஆவேசமாக, கையறுநிலையாக வெளிப்படவும்கூடும்.

நாம் அரசியல் எங்கே இங்கு பொதுவாகச் சொல்வது நமது உலகியல் சூழலுக்கான நேரடி எதிர்வினையை மட்டுமே. நமது தன்னிலையால், நமது தேவைகலால் உருவாவது இது. அந்த அரசியலுக்கும் தன்னிலையை அழித்து அடையும் கவிதையின் அரசியலுக்கும் பெரும் வேறுபாடு உண்டு.

ஆகவேதான் தன் அரசியல் என்பது மண்ணில் வேறு எங்குமுள்ள அரசியல் அல்ல, அது கவிதையின் அரசியல் மட்டுமே என்று தேவதேவன் சொல்கிறார். ஒரு கவிஞனாக மட்டுமே உணரும் நிலையின் குரலே அவரது கவிதைகள். எந்த நிலைப்பாடுக்கும் எந்த இறுதிக் கோட்பாட்டுக்கும் கட்டுப்படாத சுதந்திரத்தின் கவிதைகள் அவை. எந்த தரப்பும் அவற்றை சொந்தம் கொண்டாட முடிவதில்லை. அவர் நிற்பதற்கு அன்றாட வாழ்க்கையில் பீடமே இல்லை.

தன்னை ஓர் எளிய மனிதனாக, தான் வாழும் காலம்- இடம்- வரலாற்றுச்சூழலுக்கு கட்டுப்பட்டவனாக தேவதேவன் உருவகித்துக் கொள்வதில்லை. ”எல்லாவற்றையும் மனிதன் பாவம் அங்குலப்புழுவைப்போல தன்னைவைத்தே அளந்துகொள்கிறான். அவன் எல்லையின்மையைத்தொடும் ஒரு பேராளுமையாக தன்னை கண்டடைந்து கொள்ளாதவரை அவனது பார்வையும் படைப்பும் குறைவுபட்டதாகவே இருக்கிறது” என்று சொல்லும் தேவதேவன் [முழுத்தொகுப்புக்கான முன்னுரை] தான் தனக்கென தேவதேவன் என்ற பேரை சூட்டிக் கொண்டதே தன் முதல் கவிதை என உணர்வதாகச் சொல்கிறார்.

இரைபொறுக்கவும்
முட்டையிடவும் மட்டுமே
மண்ணுக்குவரும்
வான்வெளிப்பறவை ஒன்று

என தன்னை உணர்தலே அவரது சுயம்.

இவ்வாறு தன்னை அதுவாக, பிறிதிலாததாக, முடிவிலியாக உருவகித்துக் கொண்ட ஒருவனின் அரசியல் எதுவோ அதுவே தேவதேவனின் கவிதைகளின் அரசியல். அந்தப் பெருநிலையை அவர் கவிதைகளில் கண்டடைந்தவர்கள் அதை புரிந்துகொள்வதில் சிரமமேயில்லை.

முன்பு ஒரு முறை ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் சொன்னார். ” ‘கேளடா மானுடா!’என்று பாரதி பாடுகிறானே அவன் என்ன மானுடன் அல்லவா? தேவனா? என்ன அகங்காரம் இது?” நான் சொன்னேன் ”சற்றும் மிகையகங்காரம் இல்லாமல் சாதாரணமாக ஒருவன் ஏய் மானுடச்சாதியே என்று கூவ முடியுமென்றால் மட்டுமே அவன் கவிஞன். கவிதை நிகழும் அக்கணத்தில் மானுடனாக இருப்பவன் கவிஞனே அல்ல” என்று

கவிதையின் அரசியல் என்றால் இதுதான், மண்ணில் நிகழும் அதிகாரப்பூசல்களில், கோட்பாட்டு விவாதங்களில், சமர்களில் ஒரு தரப்பின் குரலாக நிற்பதல்ல அது. மண்ணில் வாழும் அனைத்து உயிர்களின் மேலும் பொழியும் பெருங்கருணையின் குரலாக நிற்பது.

ஒரு தரப்பின் குரலாக ஒலிக்கும் படைப்புகள் வாதாடுகின்றன. தாக்குகின்றன. வசைபாடுகின்றன. மெல்ல மெல்ல வெறுப்பையே ஆயுதமாகக் கொள்கின்றன. அவற்றின் அறசீற்றமும் நீதியுணர்வும்கூட மெல்லமெல்ல எதிர்மறையானதாக மாறிப்போகிறது.

நராயணகுருவை பிற இந்திய சமூக சீர்திருத்தவாதிகளிடம் இருந்து முற்றாக மாறுபடுத்திக் காட்டும் அம்சம் இதுவே. அவர் மெய்ஞானி, சமூக சீர்திருத்தக் குரலாக ஒலித்தவர். ஏறதாழ ஐம்பது வருடம் மாபெரும் மக்களியக்கங்களை நிகழ்த்திய அவர் எந்நிலையிலும் எதிர்மறையாக எதுவுமே சொன்னதில்லை என்று வரலாறு சொல்கிறது. வெறுப்பற்ற ஒரு நேர்மறை இயக்கம் அது. அது ஞானியின் அரசியல்.

அதற்கு இணையானதே கவிதையின் அரசியல். எழுதுகையில் கவிஞன் ஞானியே. அவனால் தொடகூடாத உச்சம் என ஏதும் இல்லை. அந்த மெய்நிலையில் நின்று ஈரமுலராத பேரன்பை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு நிற்கும் ஆக்கங்கள் தேவதேவன் படைப்புகள்

எத்தனையோ தேவதேவன் கவிதைகளை இத்தருணத்தில் நான் நினைவுகூர்கிறேன்.

‘அன்றைய அற்புதக் காட்சியாய்
சாலையின் நடுவே முளைத்து நின்றது ஒரு புல்!’

என்ற பெருவியப்பின் வெளியில் அலையும் தேவதேவனை நமக்குக் காட்டும் கவிதைகள் ஒருபக்கம் என்றால்

ஆயிரம் மனிதர்களோடு நான் அமர்ந்திருக்கையில்
மொத்த உலகத்தீமையின் ஆயிரத்தில் ஒருபங்கு
என் தலையை அழுத்தியது

என்று கொந்தளிக்கும் தேவதேவனைக் காட்டும் கவிதைகள் மறுபுறமுமாக விரிகின்றது அவரது கவியுலகம். அந்த அதிதூய முழுமைநிலையில் நின்றபடியே இந்தக் கொந்தளிப்பும் நிகழ்கிறதென்பதே தேவதேவதேவன் கவிதைகளின் அரசியலாகும்.

இந்த தூய அழகியல்வாதியே மனிதாபிமானமும் அறச்சீற்றமும் பொங்கும் கவிதைகளை எழுதியிருக்கிறார் என்பதை இப்படித்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அக்கவிதைகளில் உள்ள அடிவயிற்றுச் சீற்றத்தை நாம் ஒருபோதும் நம் தொழில்முறைப்புரட்சியாளர்களிடம் கண்டுகொள்ள முடியாது

சிலவருடங்கள் முன் திண்ணியம் என்ற ஊரில் தலித்துக்களை மலம் தின்ன வைத்த போது தேவதேவன் எழுதிய தீவிரமான கவிதைகள் சிலரை ஆச்சரியப்படச் செய்தன. இவர் மலர்களையும் வண்ணத்துப்பூச்சியையும் பற்றி எழுதுபவர் அல்லவா என்ன ஆயிற்று என்று கேட்டார்கள். தேவதேவனை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்கு அக்கவிதைகள் எந்த வியப்பையும் உருவாக்கவில்லை. என்றுமே அந்த உக்கிரமான அறச்சீற்ற நிலையில்தான் அவர் இருந்திருக்கிறார். அவ்வரிசையில் வைக்கத்தக்க பல கவிதைகளை அவரில் நாம் காணலாம் .அச்சமயம் அந்நிகழ்வுடன் அவரது கவிதை இணைந்துகொண்டது அவ்வளவுதான்.

அவரது சீற்றம் எளிய அரசியல் கோபம் அல்ல. ஏன் அது நீதியுணர்வின் வெளிப்பாடுகூட அல்ல. அது அதைவிட மேம்பட்ட ஒன்று. அது தன்னை மண்ணில் வாழும் அனைத்துயிரிடமும் கண்டுகொண்டு ஒரு பெருங்கருணையாக உணரும் ஒரு கவிஞனின் குரல். அறக்கோபம் எரிந்த திண்ணியம் கவிதைகளின் அதே குரலையே நாம் ‘யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்?’ என்ற கவிதையிலும் ஆரத்தழுவும் பேரன்பாகக் காண்கிறோம். கைவிடப்பட்டவனை, தெருவில் வாழ்பவனைக் கண்டு கவிமனம் கொள்ளும் உணர்வு அது ‘–யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்?” அக்கவிதைக்கும் இந்த திண்ணியம் கவிதைகளுக்கும் அடிபப்டை மன எழுச்சி ஒன்றே.

நித்ய சைதன்ய யதியை சொல்லாமல் நான் முடிக்க இயலாது. நடக்கப்போகும்போது ஒரு அழகிய சிறு இறகு தரையில் கிடந்தது. நித்யா அதை எடுத்து தன் மென்விரல்களினால் மெல்ல வருடினார். ”விண்ணின் ஒரு சொல். ஒளியாலும் காற்றாலும் எழுதப்பட்ட ஒரு கடிதம்…”என்றார்

அது சற்று கற்பனாவாதச் சாயலுடன் ஒலித்ததாக அப்போது எனக்குப் பட்டது. ”அது ஒரு எளிய பறவையின் ஒரு மயிர். அதற்கு பறக்க உதவாதபோது உதிர்க்கபப்ட்டது”என்றேன்

”விண்ணிலிருக்கும் பறவை தன்னை தனித்தறிவதில்லை. ஆகவே அதுவும் விண்ணும் வேறு வேறல்ல…”என்றார் நித்யா. தேவதேவனின் இக்கவிதைகள் முடிவிலா விசும்பின் கடிதங்கள் என்றே எண்ணுகிறேன். அதில் ஒரு துளியென தன்னை அழித்தவனால் ஆக்கபட்டவை என்பதனால்

[30-1-2008 அன்று திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரி தமிழ் துறை சார்பில் தேவதேவன் விளக்கு விருது பெற்றதை கௌரவிக்கும் முகமாக நடத்தப்பெற்ற ‘தேவதேவன் கருத்தர’ங்கில் ஆற்றிய உரை]

 

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jan 8, 2008

முந்தைய கட்டுரைஅமெரிக்க சிற்றூரில் ஜனநாயகம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 39