அருகர்களின் பாதை 1 – கனககிரி, சிரவண பெலகொலா

ஈரோட்டுக்கு பன்னிரண்டாம் தேதி நள்ளிரவிலேயே வந்துவிட்டேன். கிருஷ்ணன் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார். நேராக விஜயராகவனின் வீட்டுக்குச் சென்றோம். அங்கே பிரகாஷ் சங்கரன் வந்திருந்தார். செக் குடியரசில் உயிரியலில் ஆய்வுசெய்கிறார். சோழவந்தான்காரர். இணைய வாசகர். என் தளத்தில் அவரது நிறைய கடிதங்கள் வெளியாகியிருக்கின்றன. குடுமி வைத்துக்கொண்டு வித்தியாசமாக இருந்தார். இரவு முழுக்கப் பேசிக்கொண்டிருந்தோம். நான் கொஞ்சம் பிந்தித்தான் தூங்க முடிந்தது.

காலையில் எழுந்ததும் கம்பராமாயணம் பற்றி மலையாளத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்தது. ஆற்றூர் ரவிவர்மா கம்பராமாயணத்தில் இருந்து தேர்வு செய்த பாடல்களை மொழியாக்கம்செய்து ஒரு நூல் கொண்டுவருகிறார். அதற்கு ஒரு முன்னுரை. பலகாலமாக சொல்லிக்கொண்டிருந்தார். நான் மறந்தே விட்டேன். சட்டென்று கூப்பிட்டுக் கட்டுரை உடனே வேண்டும் என்றார். பயணத்துக்கு முன்னரே எழுதினால்தான் என்று தோன்றியது. காலை ஆறு மணிக்கு  செல்பேசியில் எழுப்பியை வைத்து எழுந்து எழுத ஆரம்பித்தேன். அந்த மனநிலைதான் காரணம் என்று தோன்றியது, சட்டென்று எழுத முடிந்தது. சரசரவென்று பதினாறு பக்கத்துக்கு எழுதிவிட்டேன். கட்டுரையின் அமைப்பும் மொழியும் கச்சிதமாகவே அமைந்துவிட்டது. ஆற்றூருக்கு அனுப்ப ஏற்பாடுசெய்தேன்.

பகல் முழுக்க நண்பர்களுடன் அளவளாவுவதிலேயே போயிற்று. நண்பர்கள் வந்தபடியே இருந்தார்கள். விஜயராகவனின் வீடு காலியாக இருந்தமையால் பேசுவதற்கு வசதியாக இருந்தது. ஈரோடு வலைப்பதிவர் சங்கத் தலைவர் தாமோதர் சந்துரு வந்து அவரது மகன் திருமணத்துக்கு அழைப்புக் கொடுத்தார். அப்போது நாங்கள் ராஜஸ்தானில் இருப்போம் என்று சொன்னோம். மனம் முழுக்கப் பயண நினைவுகளாக இருந்தது. பேசிக்கொண்டே இருந்தோம். மதியம் கடலூர் சீனு வந்து சேர்ந்தார். மாலையில் கெபி வினோதும் முத்துக்கிருஷ்ணனும் வந்தார்கள். முத்துக்கிருஷ்ணன் ஜெர்மனியில் கணிப்பொறித்துறையில் பணியாற்றுகிறார்.  அன்றும் தூங்குவதற்கு நெடுநேரமாகியது.

காலை நான்குமணிக்கு எழுந்தோம். இரவு இரண்டரைமணிக்கே கோவையில் இருந்து அரங்கசாமி காரில் கிளம்பி வந்துகொண்டிருந்தார். அவரது மாமியார் பொங்கல் முறுக்கு செய்து கொடுத்தனுப்பியிருந்தார்கள். திருப்பூர் வாசக நண்பர் சந்திரகுமாரும் மூன்று நாட்களுக்குப் போதுமான அளவுக்கு உணவு செய்து கட்டிக் கொடுத்திருந்தார். எல்லோருக்கும் தேவையான உடைகளும் வாங்கியனுப்பியிருந்தார். எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு அரங்கா காலை நாலரை மணிக்கு வந்துசேர்ந்தார். ஐந்து மணிக்கு சரியாகத் திட்டமிட்டபடி கிளம்பிவிட்டோம். இன்னோவா வண்டி. மொத்தம் ஏழுபேர். அரங்கசாமி, நான், கிருஷ்ணன், சீனு, முத்துக்கிருஷ்ணன், ராஜமாணிக்கம், வினோத். ஓட்டுநர் ஓர் இளைஞர்.

அதிகாலை குளிரில் பேசிக்கொண்டே சென்றோம். நடுவே காலை விடிய ஆரம்பித்தபோது சத்தியமங்கலத்தை அடைந்தோம். கர்நாடக எல்லைக்குள் புகுந்து மஞ்சள் ஒளியைப் பார்த்தபடி சென்றோம். முதல் இலக்கு கனககிரி. சாம்ராஜ்நகர் அருகே மலையூர் என்ற சிற்றூரில் உள்ளது இந்தச் சிறிய குன்று. கனககிரிக்குக் கர்நாடக வரலாற்றில் முக்கியமான இடமுண்டு. கர்நாடகத்தின் மிகப் புராதனமான சமணத் தலங்களில் ஒன்று. தமிழ்நாட்டுக்கு வரும் சமண வணிகப்பாதைகள் சத்தியமங்கலம் மலையிடைவெளியை நோக்கி வரும் வழியில் அமைந்துள்ள இந்த இடம்  ஒருகாலத்தில் முக்கியமான மத மையமாக  இருந்திருக்கக்கூடும். புராதன சமண வரலாற்றாசிரியரான நகோபோம ஷைலா இந்த இடத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். பல தொன்மையான சமண நூல்களில் கனககிரி பற்றிய குறிப்பு இருக்கிறது. தமிழக வரலாற்றுடன் சம்பந்தப்படுத்தி இந்த ஊரை எவரும் பார்த்ததாகத் தெரியவில்லை. குறிப்பாகத் தமிழகத்துக்குக் களப்பிரர் வந்த பாதை இது என ஒரு கருத்து நிலவுகிறது. கனககிரியின் பொற்காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை. அதாவது களப்பிரர் காலகட்டத்தில்தான்.

இங்கே மறைந்த சமண முனிவர்களின் பாதங்கள் செதுக்கப்பட்ட தடங்களும் சமாதி மண்டபங்களும் உள்ளன. பலவகையான தொன்மையான இடிபாடுகள்.  களப்பிரர் காலகட்டத்து ஆலயம். அது குள்ளமான சிறிய ஆலயம்தான்.  வட்டமாகக் கடையப்பட்ட தூண்கள். கனமான தாழ்ந்த கல் கூரை. கருவறைக்குள் பார்ஸ்வநாதர். இந்தக்கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டிலும் பின்னர் பதினாறாம் நூற்றாண்டிலும் மீண்டும் எடுத்துக்கட்டப்பட்டிருக்கிறது. சமீபமாக மீண்டும் கட்டுமான வேலைகள் நிகழ்கின்றன. மலைமீதிருந்த சமண அடிகள் சிலைகளை எல்லாம் சிறு சிறு கோயில்களாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் கோயிலைச்சுற்றி ஒரு சின்ன கோட்டைச்சுவரைக் கட்டியிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய ஓர் இடத்தை அந்த ஆளில்லா கிராமச்சூழலில் மொட்டை மலைமேல் நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. தமிழக வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த இந்தக் கோயிலையும் இந்த ஊரையும் தமிழக வரலாற்றாசிரியர்கள் கண்டுகொண்டதேயில்லை.

கனககிரி

இது கிமு ஒன்றாம் நூற்றாண்டு முதலே இருந்துவரும் சமணத் தலம். ஹேமாங்க தேஷா போன்ற புராதன சமணநூல்களில் இந்தத் தலம் பற்றிய குறிப்புகள் உள்ளன என்கிறார்கள். இதுபோன்ற நூல்களைத் தமிழகத்தின் ‘இருண்ட’ காலமான களப்பிரர் காலகட்டத்துடன் ஒப்பிட்டு விரிவான ஆராய்ச்சிகளைச் செய்யவேண்டியிருக்கிறது. இருபத்துமூன்றாம் தீர்த்தங்கரரான மகாவீரர் இங்கே வந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அவரது சாமவசரானா என்ற திருவுரை இங்கே நிகழ்ந்தது என்கிறார்கள். கனககிரி தென்னிந்தியாவின் ஒரே சித்தேஸ்வரம். சமண தீர்த்தங்கரர் முக்தியடைந்த இடம்.

இங்கே சமணப் படுக்கைகளும் காலடிச்சுவடுகளும் உள்ளன. கிபி நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பூஜ்யபாதாச்சாரியர் என்ற சமணமுனிவர் வாழ்க்கையுடன் பிணைந்த இடம் இது. இங்கேதான் அவர் சமாதியானார்.  பூஜ்யபாதாச்சாரியார்  மாபெரும் மருத்துவர். தத்வார்த்தசூத்ரா, சர்வார்த்தசித்தி போன்ற தொன்மையான சமணநூல்களுக்கு உரை எழுதியவர். ஜைனேந்திர வியாகரண என்ற இலக்கணநூலையும் எழுதியிருக்கிறார். சமண சம்ஸ்கிருதத்துக்கான ஆதாரமான இலக்கணநூல் இதுவே.

இங்குள்ள மையக்கோயிலில் பார்ஸ்வநாதர் சிலை உள்ளது. காயோத்சர்கா நிலையில் அவர் இருக்கிறார். பார்ஸ்வநாதர் ஹொய்சள மன்னர்களின் இஷ்ட தெய்வமாக வழிபடப்பட்டவர்.  பார்ஸ்வநாதரின் யட்சியான பத்மாவதி தேவி அருகே இருக்கிறார்.  கிபி ஐந்தாம் நூற்றாண்டில் கங்கமன்னர்களால் கட்டப்பட்ட கோயில் இது என்று சொல்லப்படுகிறது. சந்திரசாகரர் என்ற சமணமுனிவர் சென்ற நூற்றாண்டில் கனககிரியில் வாழ்ந்து இதற்குத் திருப்பணி செய்திருக்கிறார்.

கோயிலுக்கு வெளியே உயரமான பார்ஸ்வநாதர் சிலை வெட்டவெளியில் நிற்கிறது. கீழே பத்மாவதி யட்சியின் சிலை. நுட்பமான சிற்பவேலைகள் கொண்ட சிலை அது. பெரும்பாலான சமணக் கோயில்களைப் போல இங்கும் சமண நூல்நிலையமும் சமண முனிவர்கள் வந்தால் தங்குவதற்கான தவச்சாலையும் உள்ளது. சமணர்கள் வந்தால் தங்குவதற்கான போஜனசாலையும் இங்கே உள்ளது. இங்கேயே கொண்டுவந்த உணவை சாப்பிடலாமென முடிவெடுத்தோம். சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி மைசூர் சென்றோம்.

மைசூரை அடையாமல் சுற்றிக்கொண்டு கோமத்கிரி சென்றோம்.   மைசூரில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது கோமத்கிரி. இங்கேதான் முதன்முதலாக நாங்கள் பாகுபலி சுவாமியை தரிசிக்கிறோம். செங்குத்தான ஒற்றைப்பாறைமீது வெட்டப்பட்ட படிகள் வழியாக ஏறிச் சென்றால் மேலே உள்ள சிறுகோயில்தான் கோமத்கிரி பாகுபலிசுவாமி கோயில். சமணர்களின் முக்கியமான வழிபாட்டிடமாக இருந்துள்ளது.  கிபி இரண்டாம் நூற்றாண்டில் களப்பிரர் காலத்தில் உருவான சமண மையமான கோமத்கிரி இன்றுவரை தொடர்ச்சியாக வழிபாட்டிடமாகவே இருந்து வந்துள்ளது.

இங்குள்ள பாகுபலி சுவாமி சிலை, 700 வருடம் தொன்மையானது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இது உருவாக்கப்பட்டது. இந்த மலை ஷ்ராவண குட்டா என்று அழைக்கப்படுகிறது.  விஜயநகர அரசின் தொடக்க காலகட்டத்தில் அமைக்கப்பட்டது இந்த ஒற்றைக்கல் சிலை.  ஒற்றைக்கல்லில் ஓங்கி நிற்கும் சிலை அன்றி இங்கே வேறு ஏதும் சிலைகள் இல்லை. சிலையைச்சுற்றி சிறிய ஒரு மண்டபம். அருகே சமண முனிவர்களின் பாதங்கள் பொறிக்கப்பட்ட கற்களை நிறுவி வழிபடும் பல சிறு கோயில்கள்.

பாகுபலி சுவாமியின் கதை  சமண பௌத்த முனிவர்களின் கதைகளில் வருவதுதான். பாகுபலி பற்றிய கதையும் சிலைகளும் தென்னகத்தைச் சேர்ந்தவையாகவே உள்ளன. அதிகமும் கர்நாடகத்தில் வடஇந்தியாவில் இவை அநேகமாக இல்லை. சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் மகன் இவர் என்பது புராணம். ரிஷபதேவர் போடன்பூர் என்ற நாட்டின் மன்னராக இருந்தார். இவரது கதை சமணநூலான ஆதிபுராணத்தில் உள்ளது. பத்தாம் நூற்றாண்டுக் கன்னடக் கவிஞரான ஆதிகவி பாம்பா உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்[சம்ஸ்கிருதத்தில் சம்பு] என்ற வடிவில் கோமதேஸ்வரின் கதையை எழுதியிருக்கிறார். இந்தக்கதையில் இருந்து ஊகிக்கக்கூடிய ஒன்றுண்டு. அதாவது நாம் நினைப்பது போல சமணம் ஒரு வட இந்திய மதம் அல்ல. அதன் பல தீர்த்தங்கரர்கள் தென்னிந்தியர்கள். எப்படி கன்னடநாடு முழுக்க ரிஷபதேவர் வழிபடப்படுகிறாரோ அதேபோலத் தமிழகம் முழுக்க பார்ஸ்வநாதர் வழிபடப்படுவதைக் காணலாம். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். வர்த்தமான மகாவீரர்தான் இருபத்துமூன்று தீர்த்தங்கரர்களையும் வரிசைப்படுத்தி சமண மதத்தை உருவாக்கியவர். அவர் வட இந்தியர். அவரது அந்தத் தொகுப்புப்பணி என்பது இந்தியாமுழுக்க இருந்த ஒரு பெரும் ஞானமரபை ஓர் அமைப்பாகக் கட்டமைத்தது மட்டுமே என்று தோன்றுகிறது. சமண தீர்த்தங்கரர்கள்தான் ஆசீவக மதத்துக்கும் தீர்த்தங்கரர்கள். ஆசீவகம் சமண மதத்துக்கு மூத்தது. அது தமிழகத்தில் சமணம் வருவதற்கு முன்னரே வலுவாக இருந்தது. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது முழுமையாகவே ஆசீவகக் கருத்துக்களைச் சொல்லும் பாடல். அதாவது சமணம் தமிழகத்துக்கு வந்த மதம் அல்ல. சமணத்தின் உருவாக்கத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது.

ரிஷபதேவர் நாட்டை மைந்தர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு காடுசென்று தவம்செய்து தீர்த்தங்கரராக ஆனார் . பாகுபலியின் அண்ணனின் பெயர் பரதன். பாகுபலி இளமையிலேயே அழகும் அறிவும் கொண்டவராக இருந்தார். மக்கள் அவரையே விரும்பினார்கள். ஆகவே அண்ணனுக்கு அவர்மேல் பொறாமை ஏற்பட்டது. தந்தை அவர்கள் இருவருக்கும் நாட்டைப் பங்குபோட்டுக்கொடுத்தார்.  ஆனால் அண்ணன் தம்பியின் பங்கையும் அபகரிக்க நினைத்துப் படைதிரட்டினார். போரில் பலர் மாள்வதைத் தடுப்பதற்காக பாகுபலியும் பரதனும் ஓர் மல்யுத்தத்தில் ஈடுபடுவதாக ஏற்பாடுசெய்யப்பட்டது. திருஷ்டியுத்தம் ஜலயுத்தம் மல்யுத்தம் ஆகிய போர்களில் அவர்கள் ஈடுபட்டார்கள்.  பாகுபலி என்றால் வலிமையான புஜம் கொண்டவர் என்று பொருள்.

ஆகவே எளிதில் பரதனை பாகுபலி வென்றார். போரில் அண்ணனைக் கடைசியாக அடித்துக் கொல்லவேண்டும். ஆனால் அதற்குப்பதிலாகத் தன் தலைமயிரைத் தானே பறித்துவீசி சமணத் துறவியாகக் கிளம்பிச்சென்றார்.  ஞானம் தேடி சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவரை அணுகி சீடரானார். அண்ணனுக்கே நாட்டைக் கொடுத்துவிட்டார். பரதன் மனம் திரும்பினார். கொஞ்சநாள் அவர் மன்னராக இருந்தபின் அவரும் துறவுபூண்டு ரிஷபதேவரின் சீடராக ஆனார். அவரிடம் தியானம் பயின்று கேவலஞானத்தை அடைந்தார். பாகுபலி நின்றுகொண்டே தவம் செய்து முக்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. அவரது உடலில் கொடிகள் முளைத்தேறின. அவரது கால்களைச் சுற்றிலும் புற்று உருவானது.

பாகுபலியைப்பற்றி ஒருகதை உள்ளது. நெடுங்காலம் தவம்செய்துகொண்டிருந்த பாகுபலி முக்தியடையவில்லை.  அதைப்பற்றி அவரது தங்கைகள் பிராம்மி, சுந்தரி இருவரும் ஆதிநாதரிடம் கேட்டார்கள். பாகுபலி யானைமேலிருந்து இறங்காதவரை முக்தியில்லை என்று ஆதிநாதர் சொன்னார். உடனே பாகுபலியைக் காணவந்த அவரது சகோதரி அவர் ஓர் யானைமேல் நின்றுகொண்டிருப்பதைக் கண்டார். ‘அண்ணா யானைமேல் நின்றா தவம்செய்கிறாய்?’ என்று கேட்டார். அப்போதுதான் பாகுபலிக்குத் தெரிந்தது, நான் கடும்தவம்செய்கிறேன் என்ற அகங்காரம்தான் அவரது கடைசித்தடை. அவர் அதன் மீதுதான் நின்றுகொண்டிருந்தார். அதை உதறியபின் அவருக்கு ஞானம் கிடைத்தது.

கோமதீஸ்வரர் இருப்பதனால் கோமத் கிரி என்று இந்தமலைக்குப் பெயர். இங்குள்ள கோமதீஸ்வரர் சிலை 20 அடி உயரமானது. இதற்கும் சிரவணபெலகொலா போன்றே 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமஸ்தகாபிஷேகம் செய்யபடுகிறது. கோமத்கிரியிலும் போஜனசாலையும் தர்மசாலையும் உண்டு. சுற்றிலும் திறந்து விரிந்து கிடக்கும் தக்காணபீடபூமி. உயரமற்ற  மரங்களும் வயல்களும் கொண்ட நிலம் இது. கோமத்கிரியில் இருந்து சிரவணபெலகொலா சென்றோம். செல்லும் வழியில் கொஞ்சம் வழிதவறி நாற்பது நிமிடம் தாமதமாக ஐந்து மணிக்கு சிரவண பெலகொலாவை அடைந்தோம். அங்கே தர்மசாலையில் நானூறு ரூபாய்க்கு எட்டுப்பேரும் தங்க இடவசதி கிடைத்தது. நான் அவசரமாகக் குளித்தேன். வேகமாக நடந்து இருட்டுவதற்குள் கோமதீஸ்வரரை தரிசிக்கச் சென்றோம்.

கோமதீஸ்வரர் இருக்கும் விந்தியகிரி அல்லது இந்திரகிரி என்ற மலை இங்குள்ள இரட்டை மலைகளில் உயரமானது. ஐநூறு படிகளுக்குமேல் இருக்கும்.  பிரம்மாண்டமான ஒற்றைப்பாறை மலை இது. பாறையில் செதுக்கப்பட்ட படிகள். அந்தப் பாறைமேல்தான் கோமதீஸ்வரரின் கோயிலும் பிரம்மாண்டமான சிலையும் உள்ளது. சிரவணர்களின் வெள்ளைக் குளம் என்று பொருள்படும் இந்த ஊர். சில கல்வெட்டுகளில் சஸ்கிருதத்தில் தவளசரோவரம் என இந்த ஊர் சொல்லப்பட்டுள்ளது.

1983ல் இந்த ஊருக்குத் தனியாக நான் முதலில் வந்தேன். 1986ல் மீண்டும் வந்தேன். 2006 ல் நானும் வசந்தகுமாரும் யுவன்சந்திரசேகரும் சண்முகத்தின் காரில் மீண்டும் வந்தோம். அப்போது மகாமஸ்தகாபிஷேகம் நடைபெற்றது. அதைப்பார்த்தபின் காரிலேயே தென் கனராவின் சமணநிலையங்களைப் பார்த்தோம். அன்று இச்சிலையின் மகாமத்தகம் – பெரும் சிரம் – மீது குங்குமமும் மஞ்சள்பொடியும் சந்தனமும் விபூதியும் பாலும் கொட்டப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டபோது சிலையின் வண்ணம் மாறிக்கொண்டே இருந்த காட்சி  என் கனவுகளில் மீண்டும் மீண்டும் வந்திருக்கிறது. பாகுபலி சுவாமியின் இச்சிலை 17 மீட்டர் [ 57 அடி] உயரம் கொண்டது. இது சவுண்டராய என்பவரால் கிபி 988 ல் அமைக்கப்பட்டது. இவர் கங்கமன்னர் ராச்சமல்ல சத்யவாகரின் அமைச்சராக இருந்தார்.  இதுதான் உலகின் உயரமான ஒற்றைக்கல் சிலை என்று சொல்லப்படுகிறது.

கோமதேஸ்வரர்

கோமதீஸ்வரரின் முன் இருட்டும் வரை அமர்ந்திருந்தோம். சுற்றும்விரிந்த நிலத்தில் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. அமைதியான நகரம் இது. வழிபாடு என்ற பேரில் ஓலங்கள் இல்லை. வணிகக் கூக்குரல்களும் இல்லை. ஆறரை மணிக்குக் கோயிலை மூடுவார்கள். பூசாரி எங்களை வெளியே போகச்சொல்லும்வரை மேலேயே இருந்தோம். பின்னர் அங்கேயே படிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஏழரை மணிக்குக் கீழிறங்கி விடுதிக்கு வந்தோம்.

மேலும்…

முந்தைய கட்டுரைபயணம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரையானைடாக்டருக்கு ஒரு தளம்